அரசுப் பள்ளிகள் கபளீகரம் ஆகிறதா?

தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் அண்மையில் அரசு எடுத்த ஓர் முடிவு அரசுப் பள்ளிகளின் பணியாற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் அண்மையில் அரசு எடுத்த ஓர் முடிவு அரசுப் பள்ளிகளின் பணியாற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுவாக தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டால், அதில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆசிரியர்களை, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்வார்கள்.

தமிழகத்தில் சுமார் 1,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்ததால், அந்தப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டும் பணியாற்றும் நிலைமை ஏற்பட்டது. முதலில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துமாறு அதன் ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு நிர்ணயித்தது.

ஆனால், அதன் பிறகும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை. இதனால், அந்தப் பள்ளிகளை அருகில் உள்ள வேறு பள்ளிகளுடன் இணைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை. இதனால் கூடுதல் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்தான், கூடுதல் ஆசிரியர்களை அங்கன்வாடி ஆசிரியர்களாக மாற்றும்  முடிவை அரசு எடுத்தது. 

ஏற்கெனவே மத்திய அரசுக்கு நிகரான ஊதியம், பழைய ஓய்வூதியத்திட்டம் போன்ற தங்களின் கோரிக்கைகளுக்காக போராடிவரும் ஆசிரியர்கள் தற்போது அரசின் இந்த முடிவையும் எதிர்த்துப் போராடுகின்றனர்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவானது ஏன் என்ற கேள்விக்கு விடைதெரிந்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது.  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேசிய அளவிலான ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துக்கொள்வோம். நாடு முழுதும் மாநில வாரியாக அரசுப் பள்ளிகள், உள்ளாட்சிகளின் கீழ் இயங்கும் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் என பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

எழுத்தறிவு அதிகம் பெற்ற பெரிய மாநிலங்கள் என்ற வகையில் கேரளம் முதலிடத்தில் (94%) உள்ளது. மகாராஷ்டிரம் 82%, தமிழகம் 80% என்ற நிலையில் உள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை நிலவரம் பின்வருமாறு உள்ளது.

கேரளத்தில்  அரசு தொடக்கப் பள்ளிகள் 38%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 57%, சுயநிதிப்பள்ளிகள் 4%. மகாராஷ்டிரத்தில் அரசுப்பள்ளிகள் 1.4%, உள்ளாட்சிகளின் கீழ் வரும் பள்ளிகள் 85%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 5.7%, சுயநிதிப் பள்ளிகள் 7.5%. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் 5.6%, உள்ளாட்சிகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் 75%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 18 %, சுயநிதிப் பள்ளிகள் 0.5%.

இதில் மகாராஷ்டிரத்திலும் தமிழகத்திலும்  மிகவும் குறைவாக அரசுப் பள்ளிகள் இருப்பது தெரியவரும். குறிப்பாக தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகள் கணிசமான அளவில் இருப்பதைக் காணலாம். இங்கே அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது, அரசுப் பள்ளிகளால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை குறைகிறது.

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு அதன் பயன்சென்று சேருகிறது. சாதாரண மக்களும் கல்விக் கட்டணம் செலுத்தி படிக்கும் நிலைக்கு உள்ளாகின்றனர். ஆக, அரசின் பணமும் மக்களின் பணமும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. இது ஆபத்தான பாதையல்லவா?

எப்படி இருந்தாலும் எழுத்தறிவில் நாம் பின்தங்கிவிடவில்லையே என்ற கேள்வி எழலாம். அதில் மாற்றம் இல்லை. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 73% சதவீதமாக இருந்த எழுத்தறிவு நிலை, 2011-இல் 80% -ஆக உயர்ந்திருக்கிறது. இதற்காக சாதாரண மக்களின் கல்வி உரிமை பறிக்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?    

அரசுப் பள்ளிகள் நலிவடைவதில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், பள்ளி அமைந்துள்ள கிராமத்தினர் முதலில் ஆதரவளிக்க வேண்டும். அடுத்து, பள்ளி ஆசிரியர்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.

இதில் ஒன்று சரியாக இருந்தால்கூட பள்ளியில் பாதிப்பு ஏற்படாது. இரண்டும் சரியில்லாமல் போகும்போது அந்தப் பள்ளியை அப்படியே அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி கபளீகரம் செய்யத் தொடங்கி விடுகிறது. அதன் ஆசிரியர்கள் எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்வதாக கூறுகின்றனர்.

இதற்கு ஓர் உதாரணம். ஓர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலிருந்து திடீரென ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிடுகிறது. ஏன், ஒரே மாணவர்தான் என்ற நிலைக்கு வந்துவிடுகிறது. அவர்கள் எங்கே போனார்கள்? இலவச வேன் பயணம், இலவச கல்விக் கட்டணம் எனப் பல ஆசை வார்த்தைகளைக் கூறி அப்படியே அள்ளிக்கொண்டுவிட்டது அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று.

பெற்றோர்களிடம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கெஞ்சியும் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில், ஊர்த் தலைவரிடம் முறையிட்டனர். அவர் வீராவேசமாக மாணவர்களை மீண்டும் அழைத்து வருகிறேன் என கூறிச்சென்றார். பின்னர் அமைதியாகிவிட்டார். இப்போது அந்தப் பள்ளியில் ஆசிரியரும் ஒருவர் மாணவரும் ஒருவர் என்ற நிலை நீடிக்கிறது. இது போன்று தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இருக்கக்கூடும். 

அரசுப் பள்ளிகளை இழப்பதால் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு பெரிய இழப்பு என்பது தற்போது அவர்களுக்கு தெரியவில்லை.

இத்தனை நிலவரங்களும் அந்தப் பகுதி கல்வி அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? அவர்கள் மனது வைத்தால்கூட அரசுப் பள்ளியை இழப்பிலிருந்து மீட்க முடியும். தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்தால் அரசுப் பள்ளிகள் மட்டும் அழிவதில்லை. அந்தப் பகுதி மக்களின் பொருளாதாரம் மற்றும் உரிமைகளும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com