சுத்தம் சோறு போடும்!

"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்' என்றார் திருவள்ளுவர்.
Updated on
2 min read

"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்' என்றார் திருவள்ளுவர். புறந்தூய்மை நீரால் அமையும் என்பதில் உடல் சுத்தமல்லாது சுற்றுச்சூழலின் சுத்தத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.  சுற்றுச்சூழலின் சுத்தத்தைப் பேணிக் காப்பதில் மழைக்குப் பெரும் பங்குண்டு என்பதாலேயே புறந்தூய்மை நீரால் அமையும் என்று பரந்த நோக்கில் படைத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

இந்தியாவில் சுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்துவோர் 28 சதவீத மக்களே என்கிறது ஒரு புள்ளிவிவரம்.  மேலும் 65 சதவீத மக்கள் இன்றும் முழுமையான கழிப்பறை வசதிகளைப் பெறவில்லையெனவும், 50 சதவீத மக்கள் இன்றும் திறந்த வெளியில்தான் மலம்  கழித்து வருவதாகவும் அந்தப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.  மேலும், கழிவறை வசதியிருந்தும் கூட அதை முறையாக 40 சதவீதம் பேர் பயன்படுத்துவதில்லை.

மக்கள் புழங்கக்கூடிய பொது இடங்களில் மிக முக்கியமானது பேருந்து நிலையங்கள். அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் கூடக்கூடிய சுகாதாரமற்ற இடமாக உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளின் மூலம் மிகப் பெரிய கொடிய நோய்கள் மக்களை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.  வயிற்றுப்போக்கு,  சுவாச நோய்கள், நிமோனியா, டெங்கு,  சிக்குன்குனியா போன்ற நோய்களை ஏற்படுத்துபவையாக பொது இடங்களின் கழிப்பறைகள் உள்ளன என்றால் மிகையில்லை.
ஒரு நகரத்தின் தூய்மையை அதன் தூய்மையை வைத்துக் கணித்துவிட முடியும். மேலும், அதை நிர்வகிக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டு விடமுடியும்.   நகரங்களின் தூய்மைப் பணி மேற்கொள்ளக்கூடிய ஊழியர்களின் தியாகத்திற்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது. கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் அவர்கள் பணி செய் யவேண்டியுள்ளது.
ஊழியர்களை அதிகாரிகள் திட்டுவது, பணிச்சூழலை மாற்றி அவர்களை இம்சிப்பது போன்றவை அல்லாமல் அவர்களை அரவணைத்துப் பணி செய்வதில் அக்கறை செலுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும். ஊழியர்கள் அனைவரையும் வாரம் ஒரு முறை ஒருங்கிணைத்து தகுந்த மேற்பார்வையோடு பேருந்து நிலையங்களைச் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் ஏன் மேற்கொள்வதில்லை?
கட்டணக் கழிப்பறைகள் என்ற பெயர்ப்பலகையோடு நகரங்களில் கழிப்பறை வைத்திருப்பதே மிகப் பெரிய முரண்பாடாகும். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீரையும், கழிப்பறை வசதியையும் செய்து கொடுக்க வேண்டியது ஓர் அரசின் பிரதானப் பணியாகும். கட்டணக் கழிப்பிடங்களில் கட்டணம் செலுத்தி விட்டுச் செல்லும் இடமாவது தூய்மையாக உள்ளதா என்றால் அதுவுமில்லை.
இதற்குக் காரணமென்ன? கட்டணக் கழிப்பறை ஒப்பந்தங்கள் யாருக்குத் தரப்
படுகின்றன? என்ற பல வினாக்கள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அதிகார மட்டங்களில் வேண்டப்பட்டவருக்குத் தரப்படும் இந்த ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் வேண்டுமென்றே இலவசக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யாமல் தடுக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலவசக் கழிப்பிடங்கள் என்ற பெயரில் ஓர் அருவருக்கத்தக்க இடத்தை வைத்திருந்தால்தான் மக்கள் தானாகவே  சற்று சுகாதாரமான இடம் நோக்கி கட்டணக் கழிப்பிடத்திற்கு வருகை தருவார்கள் என்பதை சரியாகப் புரிந்து அவர்கள் செயல்படுகின்றனர். கட்டணக் கழிப்பிடங்களை முழுவதுமாக ஒழித்துவிட்டு இயற்கை உபாதைகளுக்கு இலவச சுகாதாரமான கழிப்பிடங்களை அதிக அளவில் ஏற்படுத்துவதே சிறந்தது.
நோய்கள் அச்சமூட்டும் நேரத்தில் மட்டும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் பிரசார நடவடிக்கைகள் உச்சம் பெறுவது வழக்கமாக உள்ளது. அப்போது மட்டும் சில ஊழியர்கள் வீடுகளில் நீர் தேங்கியுள்ளதா? தென்னை மட்டை, டயர்  போன்றவற்றில் நீர் தேங்கியுள்ளதா எனக் கேட்டு வருகின்றனர். அந்தநேரத்தில் தூய்மை பேணாதவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரத்தின் தலையாய இடத்தில் இவ்வளவு தூய்மைச் சீர்கேட்டை வைத்துக்கொண்டு சாமானிய மக்களுக்கு அபராதம் விதிப்பது எவ்வளவு முரண்?
நீர்ச் சுத்தம், நிலச் சுத்தம் ஆகியவை இன்றைய உலகின் அடிப்படைத் தேவைகளாகியுள்ளன. இயற்கைப் பேரிடர்களைத் தவிர்த்து சுகாதாரமின்மை காரணமாக ஏற்படும் நோயின் பொருட்டு மக்கள் உயிரிழப்பை ஏற்க முடியாது. விருந்தினர் அறை எப்படிச் சுத்தமாக இருக்கிறதோ அதே போன்று கழிப்பிடமும் சுத்தமாக இருக்க வேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்கிலிருந்து இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டாராம் மகாத்மா காந்தி.
"பதருபி காந்தி' என்ற நூலில் அனுபந்தோபத்யாயா குறிப்பிடும் இந்தக் கருத்து அனைவரும் பின்பற்றத் தகுந்தது. சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் பேருந்து நிலையங்களை நிர்வகிப்பதில் மக்களின் விழிப்புணர்வும், அக்கறையும் மிகவும் அவசியமானதாகும். மதுப் பிரியர்கள், கெடு செயல்களில் ஈடுபடுவோர், மனம்போன போக்கில் நடந்து கொள்வோர் அவசியம் திருந்த வேண்டும்.  இல்லையேல் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர்களைத் திருத்த வேண்டும். ஏனெனில், பேருந்து நிலையக் கழிப்பிடங்களில்தான் குப்பைத் தொட்டிகளை விடவும் கூடுதலாக மதுப் புட்டிகளும், சிகரெட் துண்டுகளும் சிதறிக் கிடக்கின்றன.
பேருந்து நிலையத்தைத் தூய்மை நிறைந்த இடமாக மாற்ற வேண்டும். பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியிலோ அல்லது மையத்திலோ அழகிய பூங்காவை அமைத்துப் பராமரிக்க வேண்டும். அதற்குள் ஒரு சிறிய நூலகத்தை அமைக்கலாம். சுவர்களில் 
அழகிய ஓவியங்கள், சங்க இலக்கியக் காட்சிகள், தமிழின் மேன்மைகள், அறக் கருத்துகள் இடம் பெறச் செய்யலாம். எச்சிலைக் கண்ட இடத்தில் துப்புதல் போன்ற செயல்களுக்குக் கடுமையான எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்து, பொது மக்கள் அவற்றைத் தவிர்க்கும்படி செய்ய வேண்டும்.
 பேருந்து நிலையங்களை மண்ணுலகச் சொர்க்கமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுத்தம் சோறு போடும் என்ற தமிழ் மரபின் பிள்ளைகள் நாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com