காசேதான் கடவுளோ?

உலகத்திலேயே மிகவும் அழுக்கான பொருள் எது என்று கேட்டால் உடனே நினைவுக்கு வருவது பணம்தான்.


உலகத்திலேயே மிகவும் அழுக்கான பொருள் எது என்று கேட்டால் உடனே நினைவுக்கு வருவது பணம்தான். பல கைகளிலும் பல பைகளிலும் புழங்குவதால் புற அழுக்குப் படிவதுடன், பல தீய செயல்களுக்கும் துணை புரிவதால் அக அழுக்கும் சேர்ந்து பணம் அழுக்கின் குறியீடாகவே மாறிப் போகிறது.

திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் படிக்காசு தந்த இறைவன் அதில் திருஞானசம்பந்தருக்கு மட்டும் குற்றமுடைய காசினைத் தந்து விட்டாராம். அதனாலேயே அந்தத் திருப்பதிகம் "வாசிதீரவே காசு நல்குவீர்' என்றே தொடங்குகிறது. இறைவன் தந்த காசிலேயே அழுக்கு இருந்திருக்கிறது என்றால் என்ன சொல்வது? அரிமர்த்தன பாண்டியன் குடிமக்களிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு படை பலத்தைப் பெருக்குவதற்காக அயல் தேசத்துக் குதிரைகளை வாங்குவதற்காகத்தான் திருவாதவூரராகிய மாணிக்கவாசகரை அனுப்பி வைத்தான். ஆனால், இறைவனோ திருவிளையாடல் புரிந்து அந்தப் பணத்தை மக்களுக்கே சென்று சேரும் வகையில் சமுதாய மையமாகிய கோயிலைக் கட்டும்படி செய்து விட்டார். 

கள்ளப் பணமாக வேண்டியதை நல்ல பணமாக்கிய முதல் முயற்சி அது.

பண்ட மாற்றுக் காலத்தில் இல்லாத இடர்ப்பாடு, இப்போது பணப் பரிவர்த்தனை வந்த பின்னால் உழைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. எதையும் பணத்தால் வாங்கிவிட முடியும் என்றால், எல்லோரிடமும் பணம் இருக்குமென்றால், பொருளை யார் உற்பத்தி செய்வது? இதில் பெரிதும் பாதிக்கப்படுவது உழவர்கள்தான். உழவின் பெருமையை மறைத்திருக்கிறது பணம். பணத்தை நிலத்தில் கொட்டினால் பயிர்கள் விளைந்து விடாது. பசிக்கும் வயிற்றுக்கு இலையில் பணத்தைக் கொட்டினால் வயிறு நிறைந்து விடாது.

ஆனாலும், பொருளாதாரம் என்றால் பணத்தை மட்டுமே நம்புகிற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மூலாதாரமான இயற்கை அழிந்து கொண்டிருக்க, அதையெல்லாம் அழித்தும் ஒழித்தும் பெட்டி பெட்டியாகப் பணத்தை (அச்சடிக்கப்பட்ட காகிதத்தை) குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையே நாமும் பின்பற்றுவதற்கு விரும்புகிறோம்.

எல்லாமே வணிகமயமாகிப் போன சூழலில் மனிதாபிமானம் மட்டும் விலை கேட்காதா என்ன? பசிக்கு உணவிடும் பரிவும், தாகத்துக்கு நீர் தரும் தயையும் பணத்தினாலல்லவோ வியாபாரம் பேசுகிறது. "ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின்' என்றார் திருமூலர். விருந்தோம்பலில் செழித்தோங்கியிருந்தது தமிழ் மரபு. இன்று உணவு விடுதிகளால் நிறைந்து போயிருக்கிறது. "குடிக்க நீர் கேட்டால் குவளையிலே பால் தருவோம், தலைக்கு அணை கேட்டால் பஞ்சணையை முன்விரிப்போம்' என்று பரிவு காட்டிய தமிழகம்தான் தண்ணீரை நெகிழிக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது. 

காரணம் பணம்தானே!

பணம் கொடுத்தால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் யாரும் நீர்நிலையை மதிக்கவில்லை. பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காது என்ற நிலைவந்தால் பணத்தை மதிப்பார்களா? நீர்நிலைகளைக் காப்பார்களா? பொருளை முதன்மைப்படுத்தும் சமூகத்தில் அறத்துக்குத் தனித்த மதிப்பு கிட்டப் போவதில்லை. "எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை' என்றார் பாரதியார். ஆனால், எல்லாரும் ஓர்நிறை நின்று எதையும் ஒருவிலைக்கு விற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் நம்மையும் சேர்த்தே.

இந்தியச் சமூகத்தின் பழம்பெரும் மரபான வேளாண் தொழில் சிதைந்ததோடு மட்டுமில்லாமல் வேளாண் குடும்பங்களும் சிதைந்து போயின. காரணம் பணத்தாலே."உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாத' அளவுக்குத் தன்னையே தந்துவிடும் அர்ப்பணிப்பு வாழ்வின் அடையாளமாக இருந்த உழவனுடைய வாழ்க்கையை நாசமாக்கியது பணம்தானே.

உண்மைக்கும் ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் தந்து தன் வாழ்க்கையையே வருங்காலத் தலைமுறையை உருவாக்குவதற்காகத் தியாகம் செய்து கொண்ட ஆசிரியர்களை- "சம்பள உயர்வு கேட்டுப் போராட்டத்தில் குதித்தார்கள்'  என்று சமூகத்தைக் குற்றஞ்சாட்ட வைத்ததும் பணம்தானே.

எங்கு நோக்கினும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் காரணம் என்ன? எல்லாத் துறைகளிலும் புரையோடிப் போயிருக்கும் எல்லா முறைகேடுகளுக்கும் எதுகாரணம்?  பணம்தானே? ஏழையென்றும் செல்வரென்றும் மனிதரைப் பிரித்து உழைப்பவரைத் தாழ்த்தி, தன்னை வைத்திருப்பவரை உயர்த்திப் பேதங்களை உண்டாக்குவது எது? பணம்தானே?
இந்தச் சின்னத்தனங்களையெல்லாம் உருவாக்குவது பணம் என்பதனால்தான் "பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று' கவிதா தேவியிடம் பாரதியார் சரணடைகிறார்.

"பணம் பத்தும் செய்யும்', "பணம் பாதாளம் வரை பாயும்', "பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும்' என்று கிராம வழக்கில் சொல்லப்படுகிற பழமொழிகள் பணத்தின் இழிவையே உணர்த்துகின்றன. "கருவறையிலிருந்து கல்லறை செல்லும் வரையில் சில்லறை தேவை' என்று அனுபவமொழிகள் தோன்றியதோடு மட்டுமின்றி இறைவன் உறையும் கருவறைக்குள்ளும் காசு கொடுத்தால் மாலை மரியாதைகளோடு "முதல் தரிசனம்' என்றும், காசு இல்லாதவர்களுக்குக் கால் கடுக்க நின்று "தர்ம தரிசனம்' என்றும் கடவுளையே பேரம் பேச வைத்ததும் இந்தக் காசுதானே? 

ஆனால், இந்தப் பணமில்லாமலும் வாழ்க்கை இல்லை. "பணமில்லாதவன் பிணம்' என்கிற பழமொழியைத் திருவள்ளுவர் அன்றைய நிலையில் வேறு வகையாக, "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை' என்கிறார். உலகத்துத் துன்பங்களிலெல்லாம் கொடிய துன்பம் வறுமையும்  ஏழ்மையுமே என்பதால் "இன்மையில் இன்னாததில் என்றும் இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன்று எடுத்த தாய் வேண்டாள்- செல்லாதவன் வாயிற் சொல்' என்றும் குறிப்பிடுவதைப் பொருத்திக் காண்க.

கொடுமைகளுக்கெல்லாம் அடிவேரான வறுமைதான் பணத்தைத் தேடச் செய்கிறது என்றால், அளவுக்கு மேல் சேர்த்த பணமோ மீண்டும் கொடுமை
களையும் முறைகேடுகளையும் உருவாக்கி விடுகிறதே. இருக்கிறவன் உயிருக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான்.

ஆனால், இல்லாதவன் எந்த விலைக்கும் தன்னுயிரையே விற்றுவிடத் தயாராக இருக்கிறான். இருவருக்கும் இடையில் நின்று கொண்டு ஏளனம் செய்வது பணம்தானே? உலகத்தில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள் உண்டு. நிறத்தாலும், பலத்தாலும், குணத்தாலும் என அவை நீண்ட

போதும் பணத்தால் வருகிற ஏற்றத்தாழ்வுகள்தான் சமுதாயத்தின் எல்லாத் தீமைகளுக்கும் முதல் காரணமாக விளங்குகின்றன.

மரீஇத்தாம் கொண்டாரைக்
கொண்டக்கால் போலாது,
பிரியும்கால் பிறர்எள்ளப்
பீடுஇன்றி புறம்மாறும்
திருவினும் நிலைஇல்லாப்
பொருளையும் நச்சுபவோ?
என்று பாலைக்கலியில் பெருங்கடுங்கோ பணத்தின் இழிவைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
பாடுபட்டுத்தேடிப் பணத்தைப்
புதைத்து வைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
- கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரே
அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்

என்று பாவிகள் சேர்த்த பணத்தின் நிலையினை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டிப் பொருமுகிறார் ஒளவையார்.

இதையே சுவாமி விவேகானந்தரும் "பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல' என்று வழிமொழிகிறார். (இதற்குக் காரணம் உண்டு. எதையும் முற்றிலும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் இயல்புடையவர்  சுவாமி விவேகானந்தர்.)

தன் குருவாகிய இராமகிருஷ்ண பரமஹம்சரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதே பணத்தை அளவீடாகக் கொண்டுதான். பணத்தையும் பெண்ணையும் துறந்தவர்களால்தான் கடவுளை அடைய முடியும் என்று சொல்கிறார் இராமகிருஷ்ணர்; அவர் எப்படிப் பணத்தை மதிக்கிறார் என்பதைச் சோதிக்க விரும்பிய விவேகானந்தர் அவர் இல்லாத வேளையில், 
அவருடைய படுக்கையில் தலையணைக்கடியில் பணத்தை மறைத்து வைத்து விட்டுக் காத்திருந்தார். சற்று நேரத்தில் அறைக்குத் திரும்பிய இராமகிருஷ்ணர் தலையணையில் சற்றுச் சாய்ந்தார். உடனே ஏதோ தீண்டியதைப் போலத் துள்ளிக் குதித்து எழுந்து தலையணையை எடுத்து  "எனக்கு ஒவ்வாத பொருள் ஏதோ அடியில் உள்ளது'  என்று உதறினார். அந்தப் பணம் துள்ளி விழுந்தது. விவேகானந்தருக்கு குரு தரிசனம் கிடைப்பதற்குப் பணமே காரணமாக அமைந்து விட்டது.

திருவள்ளுவர் அறத்தை முதலில் வைத்து விட்டு, நடுவில் வைத்த பொருளைச் செயல்வகையாகக் குறிப்பிடும்போது, "பொருளல்லவரையும் பொருளாகச் செய்து விடும்' என்று ஏளனத்தோடு குறிப்பிடுகிறார். "அருளாலும் அன்பாலும் முறையாகப் பெறப்படாத பொருளை தீயவர்கள் கரத்திலேயே புரள விடுக' என்று சினக்கிறார். இன்றைக்குப் புரள்கிற புரட்டுகள் யாவரும் அறிந்ததுதானே?

ஆனால், அவர் குறிப்பிடுகிற பொருளின் இன்னொரு வகையும் உண்டு. அது பொருளென்னும் பொய்யா விளக்கம். அது தூய்மையானது. உழைப்பின் வியர்வையில் பூத்த பொன் போன்றது. அறத்தால் வரும் நல்ல இன்பத்தைத் தரும் அந்தப் பொருள் திறனறிந்து தேடிப் பெற்ற நற்பொருள். "அந்தப் பொருளைச் செய்க' என்று நமக்கு ஆணையிடுகிறார்.

கொள்ளையடிக்கவோ, சம்பாதிக்கவோ கூட அல்ல "செய்க' என்று அழுத்தமாகவே குறிப்பிடுகிறார். செய்தல் என்பது விற்பனையோ, வணிகமோ அல்ல. உற்பத்தி, விளைவிப்பு. புறப் பொருள்கள் விளைந்து கிடக்கிற சந்தையாகக் கிடக்கிற நம் நாட்டில் அகப் பொருள்களாகிய அறமும் ஒழுக்கமும் விளையுமானால் இந்த ஈனப் பணத்தினால் என்ன செய்ய முடியும் என்பதாகத் திருவள்ளுவர் அந்தப் பொருளைச் "செய்க' என்கிறார்.நமது எதிரிகளின் செருக்கினை அறுப்பதற்கு அதனை விடவும் கூர்மையான ஆயுதம் வேறு இல்லை என்று நற்பொருளையே குறிப்பிடுகிறார்.

நீரைப் போல தான் சேர்ந்த இடத்தைப் பொருத்து புனிதத்தையும் அழுக்கையும் பணம் எய்துகிறது. பணம் தேவைதான். பணம் மட்டும்தான் தேவை என்றால் யாவும் பொய்யாகும்? வேண்டாமை அன்ன விழுச்செல்வம் வேறு உண்டா? காசுதான் கடவுளா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com