சைபர் அரசியல்வாதிகள்!

எங்கெங்கு என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை கைவிரல் அசைவிலே, நொடிப் பொழுதில் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எங்கெங்கு என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை கைவிரல் அசைவிலே, நொடிப் பொழுதில் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதுவே பல்வேறு நிலைகளில் எதிர்மறையான முடிவுகளை எடுக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதற்கு முன்பிருந்த காலத்தில் எங்கோ வெளியூரில் இருக்கும் உறவினர் குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்பட்டால் அச்சம்பவம் குறித்து கடிதம் மூலம் அறிந்து, சம்பந்தப்பட்டவர் முடிவெடுப்பதற்கு முன்பே, அங்கு பிணக்குகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்பட்டு விடும். ஆனால், தற்போது நொடிக்கு நொடி மேற்படி சம்பவங்களை, சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்வதால் தானாகவே பிணக்குகள் தீர்ந்துவிடும் முன்பே, தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்துவிடுகிறது.  இதனால் வாழ்நாள் பகை ஏற்பட்ட சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன.
கணநேரத்தில் தகவல்களைப் பெறத்தக்க வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வரமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் சாபமாகவே உள்ளன. சண்டை போடுபவர்களை ஊக்குவிப்பதற்காகவே ஒரு மைதானம் திறக்கப்படுவதாக காமெடி காட்சி ஒரு திரைப்படத்தில் வரும். ஆனால், அதெல்லாம் பழைய காட்சி. தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால், சண்டை போடுபவர்களுக்கான களமாக  முகநூல், சமூக ஊடகம் அமைந்துவிட்டது.
முன்பு முகநூல் சமூக ஊடகத்தில் பலர் தங்களைப் பற்றிய பிம்பத்தை மேம்படுத்திக் காட்டியும், தங்களின் செயல்பாடுகளைப் பதிவேற்றம் செய்து, தானும், தன்னுடன் முகநூலில் இணைந்த நண்பர்களையும், உறவினர்களையும் மகிழ்வித்தும் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். பலர் சமூக பொறுப்புள்ளவர்களாக காட்டிக் கொள்ளவும் முகநூலில் கணக்குகளைத் தொடங்கினர். ஆனால், தற்போதைய நிலையே வேறுமாதிரி ஆகிவிட்டது. ஆம், மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட இவ்வேளையில் அரசியல் கட்சிகள் தங்களுக்கென்றே பிரத்யேகமாகத் தொடங்கிய முகநூல் கணக்குகளில், தங்கள் கட்சிகளின் கோரிக்கைகள், களப்பணிகளை பதிவேற்றம் செய்கின்றனர். அதைவிட அதிகமாக, தங்களுக்கு எதிரான கட்சிகளின் குறைபாடுகளைப்  பதிவேற்றி வருகின்றனர். இதற்கும் மேலாக ஒருபடி மேலே போய், தங்களுக்கு எதிரான கட்சிகளின் பிம்பத்தைத் தகர்க்க முற்படுவதாக நினைத்துக் கொண்டு, எதிரான கட்சிகளின் பெயரில் போலியான கணக்குகளைத் தொடங்கி உள்ளிருந்தே அவதூறு பரப்பும் செயல்களும் நடந்தேறி வருவதைக் காணமுடிகிறது.
இவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களை,  நண்பர்களும் அவர்களுக்கேற்ப சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், முகநூலில் நண்பர்களாக இணைந்த அனைவருமே அரசியல் சார்ந்து ஒத்த கருத்துடையவர்களாக இருந்து விடுவார்கள் எனக் கூறிவிட முடியாது. இதன் விளைவால் விருப்பு, வெறுப்பானஅனைத்துத் தகவல்களையும், ஒவ்வொரு நண்பரிடமிருந்தும் பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இவர்களும், இவர்களுக்கு அவர்களும் எதிர்மறையான பதில்களைக் கொட்டித் தீர்த்துவிடுகின்றனர்.
கேள்விக்கான பதில்களும், பதில்களுக்கான கேள்வியும் உடனுக்குடனேயே தெரிந்துகொள்வதால்தான் முகநூல் சமூக ஊடகம் சண்டைக்கான களமாக அமைந்துவிட்டது. இந்த முகநூல் மூலம்  அவரவர்களின் உண்மை முகங்களை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி கட்செவி அஞ்சல் செயலியிலும் ஒருவருக்கொருவர் கேள்விக் கணைகளால் துளைத்து எடுப்பதையும், வக்கிரமான பதிலை பதிவிடுவதையும் காணமுடிகிறது. இதன் விளைவாக முகநூல், கட்செவி  அஞ்சல் நண்பர்களிடத்திலிருந்து பலர் தானா விலகிய கூட்டம் என நிற்கின்றனர். பலர் நீக்கப்படுகின்றனர்.
இதிலிருந்து அரசியல் என்பது ஜாதி, மதம், உறவு, நட்பு வட்டாரங்களைத் தாண்டியது என்பதை பல்வேறு முகநூல், கட்செவி நண்பர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்தபோது அறிய முடிகிறது. சுமார் 5.82 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழ்நாட்டில், சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே அரசியல் கட்சிகள் முகநூலை தங்களின் பிரசார தளமாகப் பாவிக்கின்றன.
ஆனால், ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. முகநூலில் அரசியல் பதிவுகளை பகிரும் நண்பர்களில் பெரும்பாலானோர் முழுநேர அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல என்பது. அவரவரும் தொழில், குடும்பம் என ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கையில் பயணிப்பவர்கள். கடந்த மாதம் வரையிலும் குடும்ப விழாக்களையும், அன்றாட சுவராசியங்களையும் முகநூலில் பதிவேற்றியவர்கள். அதுதவிர குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்டவும், மாதாந்திர கடன் தொகையைச் செலுத்தவும், குடும்பச் செலவுகளுக்காக மாதக் கடைசியில் கடன் வாங்குபவர்களாகவும், ஊதியத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களும்தான்.
மக்களவைத் தேர்தல் எதிர்பார்ப்பு, புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்த சம்பவங்களையடுத்து, வாழ்க்கையின் யதார்த்த நடைமுறைகளை மறந்தபடி அவரவர் சார்ந்த அரசியல் கட்சிகளுக்காகப் பதிவேற்றங்களைத் தொடர்கின்றனர். பொதுமக்களில் பலர் அவரவர் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கின்றனர் அல்லது நண்பர்கள் உறவினர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் வாக்களிக்கின்றனர். அதற்காக வாக்களிக்கும் பொதுமக்களைஅரசியல்வாதி எனக் கூறிவிட முடியாது. அதுபோல சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களில் பலர், அவர் சார்ந்த கட்சியில் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்பதே நிதர்சனம். இருப்பினும் களம் கண்ட அரசியல்வாதியை விஞ்சும் வகையில் முகநூல் நண்பர்கள் தங்களின் வன்மமான அரசியல் பகடிகளை  விஞ்ஞான ரீதியில் பதிவேற்றுவதை காணும்போது  இவர்களை சைபர் அரசியல்வாதிகள் என அழைக்காமல் வேறென்ன சொல்ல?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com