பனி படர்ந்த மலையின் மேலே...

படுத்திருந்தேன் சிலையைப்போலே...என்ற பாட்டை கேட்கும் போதெல்லாம் எனக்கு ஜார்ஜ்  மாலெரி நினைவுதான் வரும். பனி படர்ந்த மலையில்
Published on
Updated on
3 min read


படுத்திருந்தேன் சிலையைப்போலே...என்ற பாட்டை கேட்கும் போதெல்லாம் எனக்கு ஜார்ஜ்  மாலெரி நினைவுதான் வரும். பனி படர்ந்த மலையில் ஒருவரால் எத்தனை காலம் படுத்திருக்க முடியும்? ஜார்ஜ் மாலெரி சுமார் 75  ஆண்டுகள் படுத்திருந்தார். இமய மலையின் கொட்டும் உறைபனியில்தான். ஆனால், சடலமாக.
75 ஆண்டுகள் ஒரு பாதிப்பும் இல்லாமல், சும்மா படுக்கையில் படுத்திருப்பதைப்போல அவர் உடல் இருந்தது. பனி அவர் உடலைப் பாதுகாத்தது. எந்தச் சிதைவும், மூப்பும் இல்லாமல். புறப்பட்டபோது இருந்த அதே வயதுடன் அத்தனை ஆண்டுகள் படுத்திருந்தார் சிலையைப்போல.
யார் ஜார்ஜ் மாலெரி? வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாய் இடம்பிடித்திருக்க வேண்டியவர். ஒரு முறை விழுந்ததனால் எழுந்திருக்காமல் போனவர்.
இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்தவர்.  ஆசிரியராகவும், உலகப் போரில் வீரராகவும் பணிபுரிந்தவர். ஆள் அபாரமான அழகன். படத்தைப் பாருங்கள்!  (ஆரம்ப கால )  கமல்ஹாசன், அரவிந்த் சாமியெல்லாம் அப்புறம்தான். அத்தனை அழகானவர். மனைவி ரூத். மனைவியிடம் ரொம்ப அன்பு அவருக்கு.  ஆனாலும், அவருக்கு இன்னொரு காதலி  இருந்தாள்.
பள்ளி நாள்களில் இருந்தே  அவர் நேசித்தவள்.  அந்தக்  காதலி அவரை அழைக்கும்போதெல்லாம் கிளம்பிப் போய் விடுவார். ஆம்!  நெடி துயர்ந்த மலைகள்தான் மாலெரியின்  காதலிகள். மலை ஏறுவதுதான் அவரின் தாகம், சுவாசம், காதல், ஆன்மாவின் அழைப்பு...இன்னும் என்னென்னவோ...
ஏன்  சிலருக்கு சாகசத்தில் அத்தனை வெறி? ஏன்  நயாகரா அருவிக்கு நடுவில் கம்பி கட்டி நடக்கிறார்கள்? ஏன் சூயஸ் கால்வாயை நீந்திக் கடக்கிறார்கள்? கின்னஸ் சாதனைக்காக பின்னோக்கி நூறு மைல் நடக்கிறார்கள்? மனித இனம் தோன்றிய நாள்களில் இருந்தே சாகசங்களின் மோகத்தில் விழுந்தவர்களால் சாதாரண மனிதர்களைப்போல் இருக்கமுடியாது.  எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு முறை வாஸ்கோடகாமாவைப் பற்றிஎழுதினார். அவன் வீட்டுக்கு வந்த பிறகு அவனாலே தூங்கவே முடியாது இல்ல? சீறும் அலையும் கடலும்தான் திரும்ப திரும்ப நினைவில்  வரும்.
எது அவர்களை அழைக்கிறது?  ஏன் அந்த அழைப்புக்கு அவர்களால் மறுப்புச் சொல்ல முடியவில்லை? ஏன்  நம் போன்ற சாதாரண மனிதர்களால்  அந்த அழைப்பை புரிந்துகொள்ள  முடியவில்லை? மாலெரியும்  அப்படி ஒரு சாகச விரும்பி.  சாகசங்கள் அழைக்கும்  குரல் கேட்டு, சாதனைகளின்  விளிம்பில் போய் நின்றவர்.
போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு எத்தனையோ வசதிகளைச் செய்து கொடுத்தது. அவற்றைப் பெற்றுக்கொண்டு, மனைவி  ரூத் மற்றும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு மனிதர் ஆனந்தமாக இருந்திருக்கலாம்.
விதி யாரை விட்டது?  திடீரென்று, அவர் பல நாளாய் காத்திருந்த அழைப்பு வந்தது.   ஒரு மலையேறும் பயணக் குழுவில் அவர் அழைக்கப்பட்டார்.அவரின் இளம் பருவத்திலிருந்தே அவர் நேசிக்கும்  காதலி-அணுகவே முடியாத அந்தப் பேரழகி, மெளனமும் ரகசியங்களும்  நிரம்பிய சகிக்க முடியாத செளந்தர்யம் கொண்டவள். எப்போது பிறந்தவள் என்று யாரும்  உணர முடியாத அகாலமானவள். அனாதியாக கால வெள்ளத்தில் தனித்து உறைபவள். வெள்ளை நிறத்து ஆகாச வாணி. இமய மலையின் கொடுமுடியில் கொலு வீற்றிருக்கும் எவரெஸ்ட் சிகரம் என்னும்  பயங்கரி. சோமோலுங்மா என்று மலைவாழ் திபெத்தியர்கள் அழைக்கும் தெய்வம். ஆம்! எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத்தான் அந்த அழைப்பு.
எவரெஸ்ட் சம்மிட் (மலை சிகரங்களை சம்மிட் என்றுதான் மலையேறிகள் சொல்வார்கள்) ஏறும்  முயற்சியில்  இரண்டு  முறை மாலெரி   ஈடுபட்டார். இரு முறையும்  தோல்விதான். எவரெஸ்ட் சிகரத்தின் ஆக்ரோஷம் மிகுந்த பனியும், காற்றும் , வானிலையும் அவர் குழுவிற்கு தோல்வியையே தந்தன.  27,000  அடி என்றால் சும்மாவா?
வேண்டாம் சாமி என்று மலை ஏற்றத்திற்கு  முழுக்குப் போட்டு அவர் பாட்டுக்கு ஆசிரியர் வேலை  செய்யும்போதுதான் மூன்றாம் அழைப்பு  வந்தது...இதே மார்ச் மாதம்,  ஆண்டு 1924.மாலெரிக்கு அப்போது வயது 39.  ரூத் அப்போது கர்ப்பமாக இருந்தாள். வேண்டாம் என்று முடிவு செய்த மாலெரியை அவள்தான் அனுப்பிவைத்தாள். போகா விட்டால் வாழ் நாள் முழுக்க வருந்துவாய் - போய் வா என்றவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, தன்னுடைய  ( கருப்பு-வெள்ளை) சட்டமிட்ட  புகைப்படத்தை கணவரிடம் கொடுத்தாள்-சம்மிட்டை அடைந்ததும் என் படத்தை அங்கே வைத்து  விட்டு வரவேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன்.
மார்ச்  1924. பிரிட்டனில் இருந்து  கப்பலில் அன்றைய பம்பாய் வந்து, புது தில்லிக்குப் பயணம் செய்து, நேபாளம் போய், குழு மலை ஏற ஆரம்பித்தது. ஜூன் 6-ஆம் தேதி. 27,300  அடி உயரத்தில்  கூடாரமடித்துத் தங்கியது குழு. இன்னும் சில அடிகள்தான். அடுத்த நாள் ஒருவேளை பனிப்புயல் வந்தால்  இருவர் மட்டும் போவதாகவும், இல்லாவிட்டால் மொத்தக் குழுவும் ஏறுவதாகவும் ஏற்பாடு. குழுவில் மாலெரியின் நண்பரும், பின் நாளில் கேரள மாநிலத்தில் காலரா ஒழிப்புக்குத் துணை செய்தவருமான டாக்டர் ஹோவர்ட் சாமர்வெல் இருந்தார்.
அடுத்த நாள் (ஜூன் 7). காலை எழுந்ததுமே  கடுமையான பனிப் புயல். திட்டப்படி ஜார்ஜ் மாலெரியும் அவரின் நண்பர் ஆண்ட்ரு  இர்வினும் கிளம்பினர். அவர்களின் கேம்ப்பில் இருந்து சம்மிட்  வெறும் 900 மீட்டர் மேலேதான் இருந்தது. மாலெரியும் இர்வினும் போவதை குழு பதற்றத்துடன் பார்த்தது. உலகின் உச்சியைத்  தொட்ட முதல்  மனிதன் என்ற சாதனைக்கும் மாலெரி-இர்வினுக்கும்  நடுவே 900 மீட்டர்தான்; அவர்கள் திரும்பவில்லை; திரும்பவேயில்லை; போனவர்கள் போனவர்கள்தான்.
அவர்களுக்கு என்ன ஆனது என்று அடுத்த 75  ஆண்டுகளுக்கு யாருக்குமே தெரியாது. இதனிடையில் 1954-இல் ஹில்லரியும் டென்சிங்கும்  எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி விட்டனர். முதலில் சிகரம் தொட்டவரைத்தானே உலகம் நினைவில் வைத்திருக்கும். அதனால், மாலெரியை  உலகம் கிட்டத்தட்ட மறந்து விட்டது.
1999-ஆம் ஆண்டு மே 1.  அமெரிக்கரான கொன்ராட் அங்கர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றபோது,  மாலெரியின் சடலத்தைப் பார்த்தார்.  மலை ஏறுகிறவர்களின் உலகம் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்த உண்மை, அங்கே உறைபனியில் படுத்திருந்தது. சிறிது  தொலைவில் இர்வின் பயன்படுத்திய ஐஸ் உடைக்கும் கடப்பாரை எவரெஸ்ட் சிகரப் பாதையின் பகுதியில் குத்தி  வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து தொங்கிய கயிற்றை வயிற்றில் சுற்றிக்கொண்டுதான் மாலெரியும் இர்வினும் இறங்கியிருக்க வேண்டும். ஆம். இறங்கியிருக்க வேண்டும்.  இறங்கும்போது கயிறு அறுந்து, பனிக் காற்றில் சிக்கி, இர்வினின் உடல் சிதறியிருக்க வேண்டும். மாலெரியின் உடல், கால சாட்சியாய் அங்கேயே விழுந்திருக்க  வேண்டும்.
ஒரு நிமிஷம் இருங்கள். இறங்கும்போது என்று எப்படித் தெரியும் என்கிறீர்களா? அந்த ஐஸ் கடப்பாரை செருகப்பட்ட கோணம், கயிறு அறுந்த தடம், உடல் விழுந்த இடம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர்கள் எவரெஸ்ட் மீது ஏறிவிட்டு, திரும்பும்போதுதான் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அப்படியென்றால்? எவரெஸ்ட்டில் ஏறிய முதல் மனிதர் மாலெரிதானா?
சாட்சி உண்டா? தூங்கும் பனிச் சிகரங்களைத் தவிர வேறு சாட்சி யார்? ஆனால், ஒரு சாட்சி இருந்தது; எவரெஸ்ட்டில் ஏறிய முதல் மனிதர் ஜார்ஜ் மாலெரி என்பதற்கு. அவரின் உடலோடு இருந்த அவரின் முதுகுப் பையின் பொருள்களைச் சோதனை போட்டார்கள். மலையேறிகளின் பொருள்களின்  பட்டியல்  எப்போதும்  கீழே இருக்கும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். அது அவர்களின் மீற முடியாத விதி. மாலெரி என்னென்ன எடுத்துப் போனார்? பட்டியல்படி எல்லாம் இருந்தது.  தீப்பெட்டி,  நகம் வெட்டும் கட்டர், எத்தனை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என்ற கணக்கு எழுதிய தாள்... பேனாக் கத்தி, சிறு சுத்தியல்,  பர்ஸ்... எல்லாம் இருந்தது - ஒன்றே ஒன்று தவிர. 
ஆம்! ரூத்-தின் புகைப்படம் அந்தப் பையில்  இல்லை. இளம் வயதில் ஆல்ப்ஸ் சிகரத்தில் ஒரு முறை தனியே ஏறிய சமயம் -மாலெரியின் குறிப்பு -ஏறி விட்டேன் . எதிரியை ஜெயித்து விட்டேன். ஆனால், நான் ஜெயிக்க வேண்டிய எதிரி யார் - என்னைத் தவிர? வென்று விட்டேன். ஆனால், இந்தத் தனிமையின் பவித்திரத்தில் வெற்றி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?
ஏன் இமயத்தில் ஏறப் போகிறீர்கள்? என்று கிளம்பும் முன் பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். அப்போதுதான் மாலெரி அந்த பிரசித்தி பெற்ற வாசகத்தைச் சொன்னார் - அது அங்கே இருப்பதால்.
சாகசக்காரர்களின் ஒற்றை வரி தேசிய கீதமாய் அந்த வரி காலத்தில் நின்று விட்டது! 

கட்டுரையாளர்:
பட்டிமன்றப் பேச்சாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com