உலகம் போற்றும் பிரெஞ்சு அகாதெமி

பண்பாடு, நாகரிகம், பெருமிதம், அறிவார்வம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்ற ஆறு தூண்களும் எழுந்து அமைந்த எழில் நாடுதான் பிரான்ஸ். 
Updated on
2 min read

பண்பாடு, நாகரிகம், பெருமிதம், அறிவார்வம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்ற ஆறு தூண்களும் எழுந்து அமைந்த எழில் நாடுதான் பிரான்ஸ். 
எல்லோரும் சமம், எல்லோருக்கும் உரிமை, எல்லோரும் உடன் பிறந்தவர்கள் என்ற மூன்று மணிமொழிகளை மறை மொழிகளாக ஒலித்த பெருமை பிரெஞ்சு புரட்சியின் விளைவாகும். எப்கிரிகாயிர் என்பவரால் திட்டமிட்டு 25.10.1795-ஆம் ஆண்டு அமைக்கப் பெற்ற ஆய்வரங்கம்தான் பிரெஞ்சு கலைக்கழகம் ஆகும்.  இந்த நிறுவனத்தின் இலச்சினையாக ரோமானிய ஞானக் கலைமகள் மினர்வா வடிவம் இலங்குகிறது. மொழி, கலை, அறிவியல் தொல்பொருள் மேம்பாட்டுக்காகப் பிரெஞ்சு அரசின் அரவணைப்போடு அமைந்த இந்த நிறுவனத்தை உலக நாடுகளெல்லாம் நம் ஆய்வரங்கத்துக்கு இதுதான் தாய்க்கழகம் என்று சுட்டிக் காட்டுவார்கள்.
1968-இல் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் பிரெஞ்சு அகாதெமியைப் போல உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்குவோம் என்று  பேரறிஞர் அண்ணா முழக்கம் செய்தார். அந்தக் கனவுதான் சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்வது தொடர்பான நுண்ணாய்வுக் கூட்டத்துக்கு  அரசு முறைப் பயணமாக நான் அண்மையில் பிரான்ஸ் சென்றிருந்தபோது பிரெஞ்சு அகாதெமியைப் பார்வையிட்டு மகிழ்ந்தேன்.
எத்திசையும் புகழ்மணக்க இருந்த சீரிளமைத்திறம் குன்றாத தமிழணங்கே என்று நாம் போற்றுவது போலவே, பிரெஞ்சு மொழியைப் பேரழகு ததும்பும் பெண்ணரசியாக இலக்கிய வித்தகர் விக்டர் யூகோ எழுதியது வியப்பில் ஆழ்த்தியது. பிரெஞ்சு மொழி ஒரு பெண். இந்தப் பெண் மிக அழகானவள், மிக அடக்கமானவள், மிகத் துணிவானவள், மிக உணர்ச்சியானவள், கற்புள்ளவள், மிக உயர்வானவள், மிகப் பழக்கமானவள், மிக அறிவானவள்; அவளை நேசிக்கும் நாம், அவளுக்கு நன்றி ஊட்டுபவளாக ஒருபோதும் முயன்றதில்லை என்று அறிஞர் அனடோல் பிரான்ஸ் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.  
கோவேந்தர்களும், குறுநில மன்னர்களும், கோமான்களும், வேளிர்களும் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்திருந்த நாடு. பிரான்ஸில் காணும் இடமெல்லாம் அவர்கள் கட்டியிருந்த மாட மாளிகைகள், கூடக் கோபுரங்கள், அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், பால்நிலப் பளிங்கால் அமைத்த தரைகள் எனக் கற்களின் காவியங்களையே காண முடிகிறது.
இத்தகைய அரண்மனைகளும் மாளிகைகளும் நூலகங்களாகவும் ஆய்வு மாடங்களாகவும் சிந்தனையாளர் மேடைகளாகவும் அருங்காட்சியகங்களாகவும் தொல்பொருள் களஞ்சியங்களாகவும் இருபதுக்கும் மேற்பட்ட மாளிகைகள் பிரெஞ்சு அரசுக்குப் பரிசளிக்கப்பட்டு பிரெஞ்சு அகாதெமிக்கு உரிமையானவையாகும்.
தொடக்கத்தில் லூவரில் நிறுவப்பட்ட இந்தச் சான்றோர் சங்கம் 1805-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதலாம் நெப்போலியனால் தேசியக் கல்லூரி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அரைநிலா வடிவில் ரெயின் நதியை நோக்கி அமைந்த கட்டடமும் வெளிப்புறத்தில் வட்டமாகவும் உட்புறத்தில் நீள்வட்டவடிவிலும் அமைந்த இந்தக் கட்டடத்தின் இரட்டை மாடமும் லூயிஸ் லீவோ என்னும் கட்டடக் கலைஞரின் அளப்பரிய திறமைக்கு அடையாளமாகத் திகழ்கின்றன.  அங்கே அரண்மனைக்குள் இந்த நிறுவனம் மாற்றப்பட்டபோது மன்னரின் வழிபாட்டு அறையைக் கருத்தரங்கக் கூடமாக மாற்றினார்.  ஒலித்திறமை குன்றாமல் இருப்பதற்காக மரப்பலகைகளால் மாடங்கள் உருவாயின. அப்போதே 1,200 இருக்கை வசதிகள் அமைந்தன.   காலத்தால் 1950-இல் கட்டப்பட்ட கட்டடத்தில் சீர்குலைவு ஏற்பட்டாலும் பழைமையான கருத்தரங்க மாடம் ஈவாவின் தொழில்நுட்பத்தால் காக்கப்பட்டது.
1816-1832 ஆகிய ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில்  பிரெஞ்சு கலைக்கழகம் மறுசீரமைக்கப்பட்டது முதல், அதில் இடம்பெற்றுள்ள ஐவரும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பின் கீழுள்ள பொதுச் சட்டத்தின் கீழுள்ள சிறப்பு நிலை சட்டமுறை நபர்களாவர். எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாகத் தன்னைத் தானே நிர்வகித்துக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், மனிதநேயம், அறிவியல் மற்றும் கலைகளைச் செம்மைப்படுத்திப் பரப்பும் பணியைச் செய்கின்றன. வருவாயை ஈட்டும் செயலில் ஈடுபடும் நிறுவனம் அல்ல.  
லியோனர்டா டாவின்சி கைப்பட எழுதிய 12 அறிவியில் குறிப்பேடுகளை மாமன்னர் நெப்போலியன் இத்தாலியில் இருந்து கொண்டு வந்து இந்த ஆய்வரங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் படிப்பதற்காக வழங்கினார்.  
பிரெஞ்சு அகாதெமி நூலகத்தில் இதுகாறும் அறுநூறு ஆயிரம் அச்சு நூல்களும், ஏழாயிரம் இதழ்களும், பத்தாயிரம் அரிய கையெழுத்துச் சுவடிகளும், நாற்பதாயிரம் பழம்பெரும் ஒளிப்படங்களும், வரைபடங்களும், தனியார் சேகரித்த கதைக் கொத்துகளும், அறிவார்ந்த வரைவேடுகளும், ஓவியங்களும், பதாகைகளும் அணி செய்கின்றன.
மத்திய நிர்வாக ஆணையம், அந்த ஆணையத்தால் மூன்றாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேந்தரின் அதிகாரத்தின் கீழ் இந்த நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திலுள்ள கல்வியாளர்களுள் ஒருவர், ஓர் ஆண்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 
இந்த கலைக்கழகத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் நிறுவப் பெற்று ஆண்டுதோறும் பல கோடி யூரோ மதிப்பில், பரிசுகளும், கல்விச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.  பிரெஞ்சு அகாதெமியைப் போன்றே பிற்காலத்தில் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், ஜவாஹர்லால் நேரு தலைமையில் அறிவார்ந்த கலைப் படைப்புகளைக் கண்டறிந்து வெளியிடும் நிறுவனங்களாக சாகித்ய அகாதெமி, லலித் கலா அகாதெமி போன்றவை நிறுவப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com