தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்?

இந்திய மாநிலங்களில் தனித்துவம் பெற்று விளங்கும் தமிழகத்தில் அடிக்கடி நிகழும் பெரும் போராட்டமாக விளங்குவது தண்ணீர் பிரச்னை.

இந்திய மாநிலங்களில் தனித்துவம் பெற்று விளங்கும் தமிழகத்தில் அடிக்கடி நிகழும் பெரும் போராட்டமாக விளங்குவது தண்ணீர் பிரச்னை. எந்த ஓர் ஆண்டும் மழை முழுமையாகப் பொய்ப்பதில்லை. மாறாக, மழை அளவு குறைந்தும், சராசரியாகவும், அதிகரித்தும்  காணப்படுகிறது. ஆண்டுதோறும் பூமியில் (நிலப்பரப்பு (29%) கிடைக்கும் மொத்த மழையின் அளவு நிலையானது. 
ஆனால், அந்த மழையளவு இடத்துக்கு இடம் மிக அதிக அளவில் வேறுபடுகிறது. அதாவது, பல நேரங்களில் பூமியில் பொழிய வேண்டிய பெருமளவு மழை, கடலில் பொழிந்து விடுகிறது. இதனால்தான், 71% உலக நிலப்பரப்பைக் கொண்ட கடல் பரப்பு எப்போதும் அதிக மழையைப் பெறுகிறது.
ஐந்து ஆண்டுகள் கொண்ட பூமியின் சுழற்சியில் ஓர் ஆண்டு மிக நல்ல மழைப் பொழிவையும், மற்றோர் ஆண்டு மிகவும் வறட்சியானதாகவும், மீதமுள்ள மூன்று ஆண்டுகள் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதாகவும் இருக்கும் என அரை நூற்றாண்டுக்கு முன்பே நானாவதி மற்றும் அஞ்சாரியா என்ற பொருளியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக, சென்னையில் 2015 இறுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது; 2016-இல் வறட்சி நிலவியது; 2017-இல் ஓரளவு மழை பதிவானது. ஆனால், 2018 ஏப்ரலில் தொடங்கிய வறட்சி, தற்போது 2019-இல் கடுமையாகி அனைவரையும் வாட்டி வதைக்கிறது.
 கடந்த 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. இந்தத் தாக்கத்தின் பிடியில் சென்னையும் சிக்கியது. 2004 ஜனவரி முதல் நவம்பர் வரை சென்னையின் குடிநீர் ஏரிகளான பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகியவை முழுமையாக வறண்டன. நெய்வேலியிலிருந்து ரயில் மூலம் நீர் பெறப்பட்டு, சென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
அதே குடிநீர்ப் பஞ்சம் இப்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மிக வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப (1951-இல் 36.11 கோடி; 2019-இல் 136.13 கோடி), மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் பெருமளவு தன்னிறைவு பெற்றுள்ளோம். எனினும், எப்போதெல்லாம் வறட்சி நிலவுகிறதோ, அப்போதெல்லாம் மக்களைக் கடுமையாகப் பாதித்து வரும் தண்ணீர்ப் பஞ்சத்தை முழுமையாகப் போக்கி எந்த ஆண்டிலும் வறட்சியே இல்லாத நிலையை உருவாக்க, மக்களாலும் அரசுகளாலும் ஏன் இதுவரை முடியவில்லை என்பதைத் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. 
வேளாண்மையின் அதிக மகசூலுக்கு அடிப்படை நீர் வளம். இதனால், முதல் இரு ஐந்தாண்டுத் திட்டங்களில் அதிக முதலீடு செய்யப்பட்டு பேரணைகள் உருவாக்க வழிவகுக்கப்பட்டன. அதன் பிறகு அந்த வேகம் குறைந்து, மாநில அரசுகளின் நீராதார இருப்பு முன்னுரிமைப்படி அவற்றை மேம்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயலாக்கப்பட்டன. இதன் பயனாக, நிலநீர் ஆதாரங்கள் (ஆற்றுப் பாசனம்) அதிகமிருந்த பல மாநிலங்கள் மத்திய அரசின் நிதியால் பயனடைந்தன. குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களில் முந்தைய ஆந்திரப் பிரதேசம், கர்நாடகமும் இதில் அடங்கும். தமிழகம், கேரளம் எவ்விதப் பயனும் அடைய இயலாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், இங்கு நிலநீர் ஆதாரங்கள் மிகக் குறைவே. 
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் (1965), பசுமைப் புரட்சி வித்திடப்பட்டு இந்தியா முழுமையும் உணவுத் தானிய பெருக்கத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல்படி நிலத்தடிநீரை அதிகம் பயன்படுத்தி, நீர் விரயத்தைக் குறைத்து, அதிக மகசூல் பெறுவதே. இதன் அடிப்படையில், இந்தியா முழுவதும் நிலத்தடிநீர் உபயோகம் தறிகெட்டுப் பெருகியது. 1960-70 பத்தாண்டுகளில் 87 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலத்தடிநீர்ப் பாசனப் பரப்பு, 2000-2010 பத்தாண்டுகளில் 3.54 கோடி ஹெக்டேராக அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு நிலை ஏற்பட்டது. ஆனால், இதே 50 ஆண்டு காலத்தில் இந்தியாவில் ஏரிப் பாசனப் பரப்பு 44.5 லட்சம் ஹெக்டேரில் இருந்து 19.7 லட்சம் ஹெக்டேராக பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது. தமிழகத்தில் இது 9.1 லட்சம் ஹெக்டேரில் இருந்து 5.1 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. ஏரிப் பாசனம் தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில்தான் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. 
ஆக, ஏரிப் பாசனத்தின் தற்போதைய நிலையிலிருந்து தமிழக ஏரிகளின் அவல நிலையை நன்கு அறியலாம். இந்த ஏரிகளின் சீரழிவால் ஆயிரக்கணக்கான தமிழக கிராமங்களில் விவசாயம் பொய்த்துப்போய், ஆங்காங்கே இருந்த கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி மக்கள் குடிநீருக்கே தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர்த் தேவையில் ஏறத்தாழ 70-80% பூர்த்தி செய்பவை குடிநீர் ஏரிகளே. எனினும், கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருந்த அரசுகள் அனைத்தும் குடிநீர் ஏரிகளின் மேம்பாட்டில் முழுமையான கவனம் செலுத்தவில்லை. சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் தற்போது கடுமையான விபத்தில் சிக்கியுள்ளது. மழையின்மை என்னும் இயற்கை ஏற்படுத்தியுள்ள இந்தப் பெரிய விபத்தின் விளைவு தொற்றாகப் பரவி சென்னை மக்களையும் பெரிதும் பாதித்து வருகிறது. ஆட்சியாளர்களின் சீரியச் செயல்பாடின்மையால் தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் உலக வங்கி மூலம் ஏரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனினும், உலக வங்கி கூறியுள்ளதுபோல் ஏரி மேம்பாட்டில் நீர் பயனீட்டாளர்களின் பங்கு சிறிதளவும் இல்லை. ஏரிகள் மேம்பாடு அடைய வேண்டும் என அரசு கருதினால், தமிழக அரசால் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்டுள்ள தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000 (சட்டம் எண் 7/2001) உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளின் பங்கினை ஏரிப் பாசனத்தில் உறுதிப்படுத்த வேண்டும். இந்தச் சட்டம், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இணையான அந்தஸ்தினை ஏரிப்பாசன சங்கத் தலைவர்களுக்கு  வழங்கியுள்ளது. இந்தச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டால், ஏரிகளைச் சூறையாடுபவர்களைச் சூறையாடிவிட முடியும். இந்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாமல் இருப்பதே ஏரிகளின் அழிவுக்கு அடிப்படையாகும்.  
வறட்சியும் வெள்ளமும் இந்தியாவின் இரு கண்கள் போன்றவை. இவை இரண்டுமே ஆண்டுதோறும் நாட்டில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, அரசு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு  நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது அவசியம். குறிப்பாக ஏரிகள், ஆறுகள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் உள்ள 41,127 ஏரிகளின் தற்போதைய கொள்ளளவான 45 மில்லியன் கியூபிக் மீட்டரிலிருந்து குறைந்தது 60 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவாவது நிச்சயம் உயர்த்தி, பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த ஏரிப்பாசன பரப்பான 10 லட்சம் ஹெக்டேர் பாசனம் பெற  முடியும். இதன் மூலம் விவசாயத்துக்கு மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர்ப் பிரச்னையையும் தீர்க்க முடியும். 
கிணற்றுப் பாசனமும் வளம் பெறும்.    
மழைநீர் சேமிப்பின் அருமை மற்றும் ஆறுகள் இணைப்பின் அவசியத்தை, தண்ணீர்ப் பஞ்சம் மிகுந்த கோடைக் காலத்தில்  அனைவரும் உணர வேண்டும். சென்னையைப் பொருத்தவரை அண்மைக்காலமாக டிசம்பரிலிருந்து மே மாதம் வரை தொடர்ந்து வறட்சியே நிலவுகிறது. இந்த 6 மாதங்களில், பல ஆண்டுகளில் குறிப்பாக, 2015 டிசம்பர் முதல் மே 2016 வரை, அந்தந்த மாதங்களில் பொழிய வேண்டிய சொற்ப மழைகூடப் பொழியவில்லை. இந்த ஆண்டும் இந்தக் காலகட்டத்தில்  மழை இல்லை. இதற்கு சுற்றுச்சூழல் மாறுபாடே காரணம்.
நமக்குத் தேவை ஏற்படும்போது நீரைக் கொடுக்க வானம் ஓர் வங்கி அல்ல. எனினும் பருவகாலங்களில் எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் முழு முயற்சியுடன் தனி மனிதர், தொண்டு நிறுவனங்கள் முதல், அரசுகள் வரை அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு, பெருமளவு மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பதே தண்ணீர்ப் பஞ்சத்தில் இருந்து விடுபடுவதற்கான அடிப்படையாகும். 
அதிக மழை பெய்யும்போது, அதைத் தேக்கி வைக்க சரியான இடங்களைத் தேர்வு செய்து, ஏற்கெனவே உள்ள ஏரி, குளங்களை நவீனமாக்கி, நன்கு ஆழப்படுத்தி, மழைக்காலத்தில் முனைப்பாகச் செயல்பட்டு வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மழைநீரைச் சேமித்து, மழைப் பற்றாக்குறை காலங்களில் நீர் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, ஒரு சில முக்கிய ஜீவ நதிகளை முறையாக இணைத்து, மழை நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்தால்,  தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து முழுமையாக இந்தியா விடுபடும். விவசாயம் செழிப்புறுவதோடு, நாடு முழுவதிலும் குடிநீர்ப் பஞ்சம் தீர்ந்து விடும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்,
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com