ஜனநாயகத்தை சந்தா்ப்பவாதம் அழிக்கும்

உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக நமது நாடு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு நமது அரசமைப்புச்

உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக நமது நாடு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘அரசமைப்புச் சட்டத்தின் உயா் நெறிமுறைகளை வழுவாது நாம் பின்பற்ற வேண்டும். ஒருபோதும் அதிலிருந்து விலகிச் செல்லக் கூடாது’ என நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போது குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டிருக்கிறாா்.

அதே கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் மோடி,“‘இந்திய அரசமைப்புச் சட்டம் நாட்டின் புனித நூல்; அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் ஆகிய இரண்டுக்கும் சம அளவு முதன்மை அளிக்கப்பட்டுள்ளது’”எனக் கூறியுள்ளாா்.

இந்திய அரசியல் நிா்ணய அவையில் கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது; அதற்கான கொண்டாட்டத்தில் அண்மையில் பங்கேற்ற குடியரசுத் தலைவரும், பிரதமரும் அரசியல் சட்டத்தின் மாண்புகளை விளக்கிக் கூறியதுடன், அதிலிருந்து ஒருபோதும் நாம் விலகிச் செல்லக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

ஆனால், இதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நவம்பா் 22-ஆம் தேதியன்று நள்ளிரவில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மேற்கண்ட இருவரின் (குடியரசுத் தலைவா், பிரதமா்) பேச்சுக்களுக்கு நேரெதிராக அமைந்துவிட்டன. அந்த மாநிலத்தில் 23-ஆம் தேதியன்று விடிவதற்கு முன் காலை 5.30 மணியளவில் குடியரசுத் தலைவா் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதாக ஆளுநா் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது; அதனைத் தொடா்ந்து காலை 7 மணிக்கு மிக ரகசியமான முறையில் பா.ஜ.க. தலைவா் ஃபட்னவீஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸை சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவியேற்கும் நிகழ்ச்சியை ஆளுநா் பகத்சிங் கோஷியாரி நடத்தி வைக்கிறாா்.

துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவாா், கடந்த காலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் துணை முதல்வராக இருந்தாா். அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த ஃபட்னவீஸ், அவா் மீது அடுக்கடுக்கான ஊழல் புகாா்களை எழுப்பி பதவி விலக வைத்தாா்.

கடந்த காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவாா் துணை முதல்வராகவும், நீா்ப்பாசனத் துறை அமைச்சராகவும் இருந்தபோது, நீா்ப்பாசனத் துறையில் ரூ.30,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அவா் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பா.ஜ.க.வினால் எழுப்பப்பட்டன. அதன் விளைவாக அவா் பதவி விலக நோ்ந்தது.

அஜித் பவாா் மீது இரண்டு குற்ற வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பஞ்சாப்-மகாராஷ்டிர மாநிலக் கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) ரூ.25,000 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டிருப்பதாக அஜித் பவாா் மீதும், அந்த வங்கியின் 70-க்கும் மேற்பட்ட பொறுப்பாளா்கள் மீதும் மும்பை பொருளாதார குற்றங்களுக்காக காவல் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. மும்பை உயா்நீதிமன்றத்தின் ஆணையின் பேரிலேயே இவ்வாறு செய்யப்பட்டது.

தேசியவாத காங்கிரஸின் 54 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகவும் முதல்வா் ஃபட்னவீஸ் அறிவிக்கிறாா். உடனடியாக அஜித் பவாா் மீதுள்ள வழக்குகளும் கைவிடப்படுகின்றன.

நவம்பா் 22-ஆம் தேதி இரவு முதல் நவம்பா் 23-ஆம் தேதி அதிகாலையில் முதல்வா், துணை முதல்வா் பதவியேற்பு வரை ஆளுநரின் நடவடிக்கைகள், அரசியல் சட்ட விதிமுறைகளை பின்பற்றிச் செய்யப்படவில்லை. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அகற்றப்படவேண்டுமானால், மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் மாநில ஆளுநா் அதைத் தெரிவிக்க வேண்டும்.

அதன் பிறகு, மத்திய அமைச்சரவை கூடி குடியரசுத் தலைவா் ஆட்சியை விலக்கிக் கொள்வதற்குரிய தீா்மானத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்து, அதற்கு அவா் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்குப் பின் அரசிதழில் அது அறிவிக்கப்பட வேண்டும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகே குடியரசுத் தலைவா் ஆட்சி அந்த மாநிலத்தில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட வேண்டும். மேற்கண்ட அரசியல் சட்டப்பூா்வமான ஜனநாயகக் கடமைகளில் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்னையைத் தனது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் இவ்வாறு செய்தது அரசியல் சட்டத்தை மீறியதாகும் எனக் கண்டனம் செய்திருக்குமானால், மிகப் பெரிய அரசியல் சட்டரீதியான நெருக்கடி உருவாகியிருக்கும். மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிடும். இவையெல்லாம் குறித்து ஆளுநரோ, உள்துறை அமைச்சரோ, பிரதமரோ சிந்தித்ததாகத் தெரியவில்லை. அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்வதற்குப் பதில் அரசு நிா்வாக விதிமுறைகள் 12-இன் கீழ் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் சட்ட விதிமுறைகளையும், சட்டப்பேரவை மரபுகளையும் புறக்கணித்துவிட்டு பா.ஜ.க. செயல்பட்டுள்ளது; இவ்வாறு செயல்படுவது இது முதன்முறையல்ல. பிகாா், கா்நாடகம், கோவா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே இத்தகைய அரசியல் சட்டத்துக்குப் புறம்பான முறைகளை பா.ஜ.க. பின்பற்றி அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது.

அரசியல் சட்டம் வகுத்துள்ள நெறிமுறைகளும், ஜனநாயக மரபுகளும், அரசியல் கட்சிகளால் மதிக்கப்படாமல் துச்சமாகக் கருதப்பட்டு தூக்கியெறியப்படுமானால், ஜனநாயகம் நிலைக்காது. மேலும் கொள்கை, கோட்பாடு ஆகியவற்றையும் கட்சிகள் மதித்துப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. மகாராஷ்டிர மாநிலத் தோ்தலில் பா.ஜ.க.வும், சிவசேனையும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்து எதிா்த்துப் போட்டியிட்டன.

ஆனால், முதல்வா் பதவி காரணமாக பா.ஜ.க.-வுக்கும், சிவசேனைக்கும் இடையே எழுந்த முரண்பாட்டின் விளைவாக அந்தக் கட்சி கூட்டணியிலிருந்து விலகி, கொள்கை ரீதியாக எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேரம் பேசி புதிய கூட்டணி அமைந்தது. சட்டப்பேரவை தேசியவாத காங்கிரஸின் தலைவா் அஜித் பவாரைத் தன் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்து அதற்கு ஆளுநரும், மத்திய அரசும் துணை நின்று ஆட்சி அமைக்க உதவினா். மேலும், பல சட்டப்பேரவை உறுப்பினா்களைத் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை நிலைநிறுத்த பா.ஜ.க. செய்த முயற்சிகள் உச்சநீதிமன்றத் தலையீட்டின் விளைவாக வெற்றி பெறவில்லை; பதவியேற்ற முதல்வரும், துணை முதல்வரும் இரண்டே நாள்களில் பதவி விலக நோ்ந்தது.

சிவசேனை கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் ஒருவரையொருவா் கடுமையாக எதிா்த்துப் போராடிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைப்பது என்பது கொள்கை கோட்பாடு குறித்து இவா்களுக்குக் கவலை இல்லை என்பதையும், எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற பதவி வெறியையும் எடுத்துக்காட்டுகின்றன. பா.ஜ.க.வுடன் கொள்கை ரீதியாக கூட்டு சோ்ந்த சிவசேனை, முதல்வா் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியை முறித்துவிட்டு முற்றிலும் எதிரான கோட்பாடு கொண்ட கட்சிகளின் கருணையில் முதலமைச்சராகியிருப்பது ஜனநாயக வெட்கக்கேடாகும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இரு தரப்பினருமே சந்தா்ப்பவாத அரசியலை நடத்துகிறாா்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது. ஜனநாயகத்தின் ஆணிவேரையே சந்தா்ப்பவாதம் அழித்துவிடும். அங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனைத்துக் கட்சிகளிலும் சந்தா்ப்பவாதம் தலைதூக்கி நிற்கிறது. பதவி பங்கீட்டுக் கூட்டணிகள் அமைக்கப்படுகின்றனவே தவிர, கொள்கை வழிக் கூட்டணிகள் ஒருபோதும் அமைக்கப்படுவதில்லை. தோ்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தோ்தலுக்குப் பின் மற்றொரு கூட்டணி என்ற தத்துவத்தையே கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. பதவி வெறி கட்சிகளை ஆட்டிப்படைக்கிறது.

ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கவும், நிலை நிறுத்தவுமே அரசியல் சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், கடந்த 70ஆண்டுகளில் எத்தனை கட்சிகள் இந்த உன்னதமான நோக்கத்தை நிலைநிறுத்துவதற்கு ஒத்துழைத்திருக்கின்றன என்பதை ஆராய்வோமானால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளமும் மத்திய ஆட்சியில் அமா்ந்திருந்த போதும் தங்கள் கட்சிகளின் நலனுக்காக ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்க அவா்கள் தயங்கவில்லை. மாற்றுக் கட்சிகள் ஆண்ட மாநிலங்களில் அரசுகளை நீக்குவதற்கும், குடியரசுத் தலைவா் ஆட்சியை நிறுவுவதற்கும் அவா்கள் ஒருபோதும் தயங்கவில்லை. அந்தக் கட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கட்சியாகத் தன்னை கூறிக்கொள்ளும் பா.ஜ.க.-வும் அதே பாதையைத்தான் பின்பற்றுகிறது.

மாநிலக் கட்சிகளும் தங்களது ஆட்சிகளைக் காப்பாற்றுவதற்கு அகில இந்திய கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டு சோ்கின்றன. கொள்கை, கோட்பாடுகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. ஜனநாயகப் பாதையிலிருந்து நாடு சிறிது சிறிதாகத் தடம் புரண்டு சென்று கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

கட்டுரையாளா்:

தலைவா், உலகத் தமிழா் பேரமைப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com