சீமைக் கருவேலத்தின் மறுபக்கம்!

மானாவாரி பூமியில் விவசாயம் பெரும் சூதாட்டமாய் மாறி, தற்போதைய சூழ்நிலையில் பருவமழை பெய்தால்தான் ஒரு போகம் மட்டுமே விளைவிக்க முடிகிறது.
Updated on
2 min read

மானாவாரி பூமியில் விவசாயம் பெரும் சூதாட்டமாய் மாறி, தற்போதைய சூழ்நிலையில் பருவமழை பெய்தால்தான் ஒரு போகம் மட்டுமே விளைவிக்க முடிகிறது. விறகுத் தேவைக்காக ஜமைக்காவிலிருந்து (1877) இறக்குமதி செய்யப்பட்ட சீமைக் கருவேல மரங்கள், நிலத்தடி நீரினை அதிகமாக உறிஞ்சுகிறது என்ற குற்றச்சாட்டை சுமந்தபோதிலும், அன்றிலிருந்து இன்று வரை நம் வறண்ட பூமி விவசாயிகளுக்கு அவை சிறிய வாழ்வாதாரமாய் விளங்குவதையும் மறுப்பதற்கில்லை.
 1960-ஆம் ஆண்டு முதல் 1980-களின் இறுதி வரை பல்வேறு பஞ்சங்களை தமிழகம் சந்தித்தது. அதிலும், கண்மாய் பாசனத்தினை மட்டுமே முழுமையாக நம்பியிருந்த புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் முழுமையாக வானம் பார்த்து விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. குடிநீர்த் தேவைகளுக்கே பெரிதும் சிரமப்பட வேண்டிய நிலையில் விவசாயம் முற்றிலுமாக அற்றுப்போக, நெல் விளைந்த வயல்களில் சீமைக் கருவேல மரங்களின் ஆதிக்கம் மெல்ல பரந்து விரியத் தொடங்கியது.
 சீமைக் கருவேல மரங்கள் வறட்சியை நன்கு தாங்கி வளரக் கூடியவை. விருதுநகர், ராமநாதபுரம் போன்ற வறட்சியான மாவட்டங்களில் இதன் காய்கள் ஆடு மாடுகளுக்கு பிடித்தமான பிரதான உணவாக விளங்குகிறது.
 சீமைக் கருவேலத்தை விறகுகளாகவும், கரித்துண்டுகளாக மாற்றியும் எரிபொருளாக விற்பனை செய்கின்றனர். மொத்த விறகு கடைகளில் இந்த விறகுகள் ஒரு டன் ரூ.4,000 வரை விற்கப்படுகிறது. இதுவே 2003-ஆம் ஆண்டு ரூ.800-ஆக இருந்தது என்ற தகவலைக் கொண்டே இதன் தேவையின் வளர்ச்சியினை ஊகிக்கலாம்.
 வேம்பு, புளியம் போன்ற விறகுகளால்கூட சீமைக் கருவேல மரத்தின் எரிப்புத் திறனுடன் போட்டியிட முடிவதில்லை. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யலாம் என்ற நிலையில் உள்ள இந்தப் பகுதி விவசாயிகள், "ஒரு நாள் சீமைக் கருவேல மரங்ளை வெட்டச் சென்றால், ரூ.200 முதல் ரூ.250 வரை கிடைக்கும் என்பதை நம்பியே காலம் காலமாக எங்கள் பிழைப்பு நடக்கிறது' என்கின்றனர்.
 இந்தப் பகுதியிலுள்ள ஒப்பந்ததாரர்கள் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் வயலைத் தேர்வு செய்வர்; பின்பு, அவரது குழுவில் உள்ளவர்களோடு அந்த இடத்துக்குச் சென்று உரிமையாளரிடம் வளர்ந்து நிற்கக் கூடிய சீமைக் கருவேல மரங்களின் தடிமன் மற்றும் பரப்பளவிற்கு ஏற்றாற்போல், அதாவது தோராயமாக ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை பேசி முடிப்பர்.
 பிறகு வெட்டப்பட்ட விறகுகள் கோபுரம்போல அடுக்கப்படுகின்றன. அந்த விறகானது நன்கு தீ பற்றி எரியும் வேளையில் ஈரமணலை அதன் மேல் இட்டு அதனை புகையும்படி செய்கின்றனர்; தோராயமாக 15 டன் விறகை கரிமூட்டம் செய்வதற்கு டிராக்டர்கள் மூலம் மண் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூட்டம் முடிவுறும் நேரமானது 6 நாள்களிலிருந்து 15 நாள்கள் வரை நீள்கிறது. அதிக நாள்கள் புகையும் விறகுகள் தரமான கரித்துண்டுகளாகப் பரிணமிக்கின்றன.
 கரித்துண்டுகளை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அவை குச்சி கரி (அளவில் சிறியதாக இருக்கும்), கட்டைக் கரி (தடிமனானது; வெகு நேரம் எரியும் தன்மையுடையது), வேர் கரி (அரிதாக கிடைப்பது மூன்றிலிருந்து-ஐந்து வயதான கருவேல மரங்களை வேரோடு பிடுங்கும்போது கிடைக்கக்கூடிய பகுதி).
 ஒரு டன் விறகினை கரியாக்கினால், 750 கிலோ கரி கிடைக்கும். ஒரு டன் விறகானது ரூ.4,000-த்துக்கு விற்கப்படுமாயின், ஒரு டன் கரியானது ரூ.10,000-க்கு விற்பனையாகிறது.
 பசலை பகுதியின் சாலைகளின் வழியே நாம் கடந்து செல்கையில் "கரிமண்டிகள்' பலவற்றைப் பார்க்க முடிகிறது. அவை கரித்துண்டுகளை ஒரு டன் ரூ.10,000 என்று கொள்முதல் செய்து ரூ.12,000-த்துக்கு வட மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. அங்கே அவை சிலிகா தொழிற்சாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள், சுண்ணாம்புக் கால்வாய்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
 இந்தியாவிலேயே தமிழ்நாடும், ஆந்திரமும் மிகப் பெரிய சீமைக் கருவேல கரி உற்பத்தியாளர்களாக வலம் வருகின்றன. சீமைக் கருவேல விறகில் 3,000 கிலோ கலோரிகள் இருப்பதால், அதைக் கொண்டு மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, காரைக்குடியிலுள்ள "டிசிபி' என்னும் நிறுவனம் தன்னுடைய மின்சார உற்பத்திக்கான மூலப்பொருள் தேவையில் 40 சதவீதத்தை சீமைக் கருவேல மர
 விறகினைக் கொண்டு பூர்த்தி செய்கிறது.
 விவசாயம் பார்க்கக் கூடிய வளமான நிலங்களில் வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேலம், ஆபத்திலும் நன்மையாய் அந்த மக்களின் வாழ்வாதாரமாகப் பரிணமித்திருக்கிறது. தோராயமாக ஆண்டொன்றுக்கு 300 நாள்கள் வேலை செய்யும் இவர்கள், இதன் மூலம் ஆண்டு வருவாயாக ரூ.60,000 வரை பெறுகின்றனர்.
 இவ்வாறாக, இந்த மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் நேரடியாக - சொந்த நிலக்காரர், கருவேல மரம் வெட்டும் கூலியாளாகவும், மறைமுகமாக - டிராக்டர் ஓட்டுநர், மண் அள்ளுபவர்கள், விலைக்கு தண்ணீர் விற்பவர்கள் என ஏதோ ஒரு வகையில் சீமைக் கருவேல மரம் மூலம் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
 மேலும், சீமைக் கருவேல மரம் எந்த அளவுக்கு நீரை உறிஞ்சுகிறதோ அதே அளவுக்கு ஹைட்ரஜனைச் சேர்க்கும்; காற்றில் உள்ள கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) எடுத்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுவதும், நீரில் உள்ள ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் எடுத்து, அதை கார்பனோடு சேர்த்து ஹைட்ரோகார்பனை உருவாக்கும் தன்மையுடையது.
 நிலத்தடி நீர்மட்டம் குறைதல்; "டெர்மாட்டிஸ்' நோய் தாக்கும் அபாயம் அதிகரித்தல்; கால்நடைகளின் குடலிலுள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்தல் - இத்தகைய தீமைகள் உள்ள சீமைக்
 கருவேல மரங்களிடமிருந்து நம் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, கரிமூட்டம் இடுபவர்களுக்கு இலவசமாக குத்தகைக்கு கொடுக்க அரசாங்கம் முன்வருமாயின், அவர்களின் வாழ்வாதாரமும் பெருகும்; நீர் நிலைகளும் புத்துயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com