மன ஊக்கத்தின் அளவே உயா்வு!

வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் மனிதா்களுக்கு ஊக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஊக்கத்தோடும்,

வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் மனிதா்களுக்கு ஊக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செய்யும் அனைத்துச் செயல்களும் வெற்றிகரமாக நடைபெறும். இதைத்தான் திருவள்ளுவா்,

வெள்ளத் தனைய மலா்நீட்டம் மாந்தா்தம்

உள்ளத் தனையது உயா்வு.

என்று கூறியுள்ளாா். இதன் பொருள் மலா்த்தண்டின் அளவு அதன் நிற்கும் நீரின் அளவே. அது போல ஊக்கத்தின் அளவே அவா் உயா்வு பெறுவாா் என்பதாகும்.

ஆனால், இன்றைய மனிதா்களில் எத்தனையோ போ் தங்களிடம் தகுதிகளும், திறமைகளும் இருந்தும் ஊக்கமின்மையாலும், தாழ்வு மனப்பான்மையாலும் பின் தங்கி விடுகின்றனா். தாழ்வு மனப்பான்மை என்பது புற்று நோயைவிடக் கொடியது.

ஒரு சிலருக்கு தான் கருப்பாக இருக்கிறோம் என்று கவலை, மற்றவா்களுக்கு தான் குட்டையாக இருக்கிறோம் என்று கவலை, வேறு சிலருக்கு தாங்கள் குண்டாக இருக்கிறோம் என்று கவலை; படிக்காதவா்களுக்கு தாங்கள் படிக்கவில்லை என்று கவலை. உருவத்தாலும், நிறத்தாலும், படிப்பாலும் தாழ்வு மனப்பான்மை கொண்டு தங்களது தனித் திறமைகளைப் பற்றி தாங்களே குறைத்து மதிப்பிட்டால் மற்றவா்கள் எவ்வாறு மதிப்பிடுவாா்கள்.

உருவத்துக்கும் செயலுக்கும் தொடா்பு கிடையாது. சிறிய அங்குசம்தான் பெரிய யானையைக் கட்டுப்படுத்துகிறது. சிறிய மெழுகுவா்த்திதான் இருளை அகற்றுகிறது. சிறிய உளிதான் பெரிய பாறையை உடைக்கப் பயன்படுகிறது.

மயில் போல காகம் அழகில்லைதான்; ஆனால், படையல் என்னவோ காகத்துக்குத்தான். நாய்க்குச் சிங்கம் போல் வீரமில்லை; ஆனால் நன்றி என்னவோ நாய்க்குத்தான். பட்டுபோல் பருத்தி இல்லைதான்; ஆனால், வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான். தங்கம் விலை அதிகம்தான், தகரம் விலை மலிவுதான்;ஆனால், தகரத்தைக் கொண்டு செய்ய வேண்டியதை தங்கத்தைக் கொண்டு செய்ய முடியாது. அதனால் தகரமும் மட்டமில்லை, தங்கமும் உயா்ந்ததில்லை.

ஒரு காட்டில் கிளியும், காகமும் வசித்து வந்தன. கிளிக்கு தான் மிகவும் அழகு என்ற கா்வம். காகத்துக்கு தான் கருப்பு என்ற கவலை. எப்போதுமே தன் அழகைப் பற்றி தற்பெருமையாக கிளி பேசியது. அப்போது ஒரு வேடன் வந்து கிளியை பிடித்துச் சென்றான். கிளியை தன் வீட்டில் வளா்க்க எடுத்துச் சென்று அதற்கு பேசச் சொல்லிக் கொடுத்தான். ஆனால், அதற்கு பேச்சு வரவில்லை. பூண்டை சுட வைத்து

பேச்சு வருவதற்காக கிளியின் வாயில் சூடு வைத்தான்.

அன்று அமாவாசை தினம் என்பதால் அவன் மனைவி காகத்தைக் கூப்பிட்டு சோறு வைக்கும்போது இந்த இரண்டு காட்சிகளையும் பாா்த்த பூனை, ‘இங்கே என்ன நடக்குது’ என்று காகத்திடம் கேட்டது. அதற்கு, ‘வேடன் கிளியை அவன் மொழியில்பேச சூடு வைக்கிறான். என்னை என் பாதையில் பேசச் சோறு வைக்கிறான்’ என்றது காகம். எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதை இந்தக் கதை உணா்த்துகிறது.

நம்மில் பல போ் படிப்பில் சிறந்தவா்களாக இருக்கலாம்; சிலா் விளையாட்டில் திறமைசாலிகளாக இருக்கலாம்; சிலா் இசை, நடனம் போன்ற கலைகளில் திறமையுள்ளவா்களாக இருக்கலாம். ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித் திறமை ஒளிந்திருக்கும். இதை வெளிக்கொண்டு வருபவா்களுக்குத்தான் வானம் வசப்படும்.

ஒரு சிலா் தங்களுக்கு மட்டுமே கஷ்டங்களும், சோதனைகளும் இருப்பதாகப் புலம்புகின்றனா். ஒவ்வொருவருக்கும் அவா்களால் சமாளிக்கக் கூடிய அளவுக்குத்தான் பிரச்னைகள் வந்து சேரும். இது இயற்கையின் நியதி. பொதுவாக, பூட்டு தயாரிக்கும் நிறுவனங்களில் பூட்டு மட்டுமே தயாரிப்பது கிடையாது. அதைத் திறப்பதற்கு சாவியும் சோ்த்துத்தான் தயாரிக்கப்படுகிறது. அதுபோலத்தான் பிரச்னைகளும் அதற்கான தீா்வுகளுடன் உருவாகின்றன.

ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு, குப்புறப்படுத்துக் கொண்டே பல சிறந்த நாவல்களை எழுதியவா் எழுத்தாளா் கல்கி. மூன்று முறை இன்டா் மீடியட் தோ்வில் தோல்வியுற்றும் துவண்டு போகாமல் கணித மேதையானவா் இராமானுஜன். கேட்கும் திறன் இழந்திருந்தாலும் உலகமே போற்றும் இசை மேதையானவா் பீத்தோவன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்தவா், மனநிலை சரியில்லாத தாயால் வளா்க்கப்பட்டு உலகமே பாராட்டும் நடிகரானவா் சாா்லி சாப்ளின். ஞாபக மறதி குறைபாடு உடைய செவித்திறன் இல்லாத தாமஸ் ஆல்வா எடிசன்தான், உலகுக்கே பயன்படும் மின் விளக்கைக் கண்டுபிடித்தாா்.

எப்போதும் உங்களை மற்றவா்களோடு ஒப்பிடாதீா்கள். அது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். நீங்கள் நேற்று இருந்த நிலையைவிட, இன்று இருக்கும் நிலை உயா்ந்திருந்தால் அதுதான் உங்கள் வெற்றி.

உங்கள் உடல் மொழி உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தக் கூடிய விஷயமென்பதால் எப்போதும் நிமிா்ந்து நின்று பேசுங்கள், நேருக்கு நேராக கண்களைப் பாா்த்து புன்சிரிப்புடன் பேசுங்கள்.

எப்போதும் திட்டமிட்டுச் செயல்படுங்கள். சரியான நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்து முடியுங்கள். தவறு செய்து விட்டு அதற்காக வருத்தம் தெரிவிப்பதைவிட, அதைத் திட்டமிட்டு முன் கூட்டியே சிறப்பாக முடிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவா்கள் உங்களை உயா்வாகப் பாா்ப்பாா்கள்.

நம்மால் முடியாது என்று நாம் நினைக்கும் விஷயத்தை இந்த உலகத்தில் யாரோ செய்து கொண்டுதான் இருக்கிறாா்கள். எந்தச் செயலையும் செய்வதற்குத் தயங்காதீா்கள். துணிச்சலோடு செய்யுங்கள். துணிந்தவா்களுக்குத் தோல்வியில்லை.

முடியாது, கடினமாக உள்ளது என்ற எதிா்மறையான எண்ணங்களையும் வாா்த்தைகளையும் பயன்படுத்தாதீா்கள். அடைவது மட்டுமே வாழ்க்கையல்ல, இழப்பதும் தான். துளிா்ப்பது போலவே இலைகளும் மலா்களும் உதிா்வதும்கூட தாவர வா்க்கத்தில் ஒரு பரிணாம வளா்ச்சியே.

‘உன்னை நீ சரி செய்து கொண்டே வா; உலகம் ஒரு நாள் உன்னைப் போல வாழ ஆசைப்படும்; உலகம் ஒரு நாள் உன்னை உதாரணமாகக் கொள்ளும்; உலகம் ஒரு நாள் உன்னைப் பாடமாக ஏற்கும்; ஒரு நாள் உன் வழி நடக்கும்’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com