இந்த உலகத்தில் கேள்வியின் நாயகர்கள் குழந்தைகள்தாம். அவர்களிடம் கேள்வி கேட்டுப் பதில்கள் பெறுவதைவிட, அவர்களைக் கேட்கவிட்டுப் பதில்கள் தேடினால் கிடைக்கும் சிந்தனைச்சுகம் வேறு எதிலும் இல்லை என்பது அனுபவம்.
அப்படித்தான் ஒரு சிறுமி என்னிடம் கேட்டாள். "இந்த உலகத்தைவிடப்
பெரியது எது?'
"இந்த உலகமே பெரியதுதானே?'
"அது தெரியும். அதுக்கும் மேலே பெரியது எது?'
மூளைக்குள் பாதாள கரண்டி போட்டுத் தேடும் சிந்தனைக் கயிற்றை இறக்கிவிட்டு, அந்தப் பாப்பாவும் சிந்திப்பதுபோல, பாவனை புரிந்தாள்.
ஏற்கெனவே சிந்தித்துச் சிறந்திருக்கிற திருவள்ளுவர் இருக்கப் பயமெதற்கு?
எதுவெல்லாம் பெரிது? கடப்பதற்கு அரிதாக ஒரு காலத்தில் இருந்த கடல். மலைக்கவைக்கும் மலை. எல்லாவற்றையும் உள்ளடக்கிய உலகம். உலகின் மேல் கவிந்த வானம், இவற்றையெல்லாம்விடப் பெரியதாக இருப்பது எது?
இன்னார்க்கு இன்னது செய்தால், இன்னது கிடைக்கும் என்று பயன் கருதாமல் செய்யும் நன்மை இருக்கிறதே, அது கடலைவிடப் பெரியதாம்.
பயன்தூக்கார் செய்த உதவி, நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.
யோசித்துப் பார்த்தால் கடலின் செயலே பயன் கருதாது இயங்கிக்கொண்டே உதவும் பணிதானே? அதனையும் சிறிதாக்கிவிடுகிறது மனிதச் செயல், இல்லையில்லை மனிதாபிமானமிக்க செயல். அடுத்தது மலை. "நான் அதைச் செய்துவிட்டேன் இதைச் செய்துவிட்டேன்' என்று கடுகளவு செய்ததை, மலையளவு கருதிப் பெருமை பீற்றிக்கொள்ளாமல், மலையளவு செய்தாலும் துளியளவும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிற தன்னடக்கம் இருக்கிறதே, அது மலையினும் மாணப் பெரிதாம்.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
இதில் "திரியாது' என்ற சொல்லை எழுதுகிறபோது நிச்சயம், திருவள்ளுவரின் தாடிக்குள் ஒரு குறுநகை மின்னலாய்த் தோன்றி மறைந்திருக்கக்கூடும். "திரிதல்' என்பது மேலோட்டமாய், கண்டபடி சுற்றித் திரிதலையும், நுட்பமாய், இயல்பு நிலையில் இருந்து "திரிந்த'தையும் சுட்டும். பால் திரிவதுபோல. "திரிந்து'விட்டால், மீண்டும் இயல்புக்கு வரமுடியாது. அதற்குத்தான் மலையைக் காட்டி எச்சரிக்கை செய்கிறார் திருவள்ளுவர். மலையில் தெய்வத்தைக் காட்டித் தெளிவுபடுத்தியிருக்கின்றனர் நம் முன்னோர். எல்லாச் சமயத்தார்க்கும் மலையானது, இயல்பை உணர்த்தும் தெய்வ ஆற்றல் உடையது.
கடலும் மலையும் நிலையாய்த் தன்னுள் இருக்கவைத்துத் தாங்குகிற இந்த உலகத்தைவிடவும் பெரியது எதுவென்று தேடுகிற அவருக்குப் படீரென்று கிடைத்த பதில், "காலத்தால் செய்த உதவி'.
அந்தந்த நேரத்து அனுபவங்களில் இருந்துதான் இந்தப் பதிலின் அடர்த்தியைப் புரிந்துகொள்ள முடியும். அது மிகச் சிறிதாகக்கூட இருக்கலாம். ஆனால், அதன் தேவை மிகப் பெரிது. பல் இடுக்கில் மாட்டிக்கொண்ட உணவுத்துகளை வெளிக்கொணர முடியாமல் அல்லாடும் நாக்குக்கு உதவியாய்க் கை பரபரத்து அலையுமே, சிறு துரும்பு தேடி.. அந்த நேரத்தில் ஒரு துரும்பு கிடைத்துவிட்டால் மலையே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி வருமே. அந்தக் கணத்தில் பிறந்ததுதான் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்ற பழமொழி. அது அதனை மட்டுமா உணர்த்துகிறது?
உதவிக்கு யாரும் வரவே மாட்டார்களா என்று துடித்துக்கொண்டிருக்கும்போது உதவ முன்வரும் எவரும் கடவுள்போலவே தோற்றம் அளிப்பார்கள் அல்லவா? அவர்களையே கண்கண்ட தெய்வம் என்று போற்றுகிறோம் இல்லையா, அவ்வாறு காலத்தால் செய்த உதவிதான், இந்த உலகத்தைவிடவும் பெரிதாக இருக்கிறது. ஒரு காலத்தில் செய்யப்பெற்ற உதவி, காலந்தோறும் உதவிக்கொண்டே இருப்பதால், இந்த உலகினும் பெரிதாய் உயர்கிறது.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
என்று உலகை வசப்படுத்தும் உன்னதத் தொழில்நுட்பத்தை எடுத்து உரைக்கிறபோதே வானத்தையும் வசப்படுத்த அந்த வள்ளுவஉள்ளம் விரிகிறது. அது வள்ளுவம் நமக்கும் செய்யாமல் செய்த உதவியாகவும் தெரிகிறது.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்றல் அரிது.
"தனக்குமுன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது' என்று நேரடி விளக்கம் தந்த பரிமேலழகர் "கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின' என்று நுட்பவிளக்கமும் அளிக்கிறார்.
கடலும் மலையும் வானமும் இந்த வையகமும் பிறர் செய்கிற எதையும் எதிர்பாராமல் செய்துகொண்டே இருக்கிறது. "செயல் செயல் செயல்' அது ஒன்றே இயற்கையின் தாரக மந்திரம். இயக்கத்தின் மூலமந்திரம். இந்தியாவின் எழுச்சிக்கு இதனையே உருப்போடச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர். "செய் அல்லது செத்துமடி' என்கிற உத்வேகம் அண்ணல் காந்தியடிகளுடையது.
உயிருடைய எல்லாமும் செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உயிர்களில், செய்கிற செயலோடு சிந்திக்கிற செயலையும் இணைத்துச் செய்வதால்தான், மனித உயிர் ஏனைய உயிர்களினும் மகத்தானதாகியிருக்கிறது. இந்தச் சிந்தனைச் செயல்தான், வள்ளுவருக்குப் பின்னாலும் வளர்கிறது. இடைக்கால ஒளவையார், வினா, விடை, வினா எனத் தொடர்ந்து சிந்தனை இயக்கமே செய்துவிடுகிறார். தன் காலத்துப் புராண, இதிகாசக் கருத்துகளையெல்லாம் இணைத்து ஒரு பட்டியலையே தயார் செய்துவிடுகிறார்.
இந்த உலகம் பெரியது. இந்த உலகத்தைப் படைத்தவன் பிரம்மா. எனவே, அவன் பெரியன். அவனோ, திருமாலின் உந்திக்கமலத்தில் உதித்தோன். அவனினும் இவன் பெரியன். திருமாலோ பாற்கடலில் துயில்கிறான். எனவே, கடல் பெரிது. அலைகடலையே தனது கலசத்தில் அடக்கிக்காட்டியவன் அகத்தியன். எனவே, அலைகடலினும் பெரியது, அந்த மண் கலசம். எனவே, மண் பெரிது. இந்த மண்ணகத்தை ஒரு பாம்பு தாங்கியிருக்கிறது. எனவே, பாம்பு பெரிது. பாம்பையே தன் சிறுவிரல் மோதிரமாக அணிந்தவள் சக்தி. அவள் பெரியள். அவளோ, சிவனில் ஒரு பாதி. எனவே, சிவன் பெரியன். சிவனோ, தொண்டர்களின் உள்ளங்களில் ஒடுங்கியிருக்கிறான். எனவே, தொண்டர்தாம் பெரியர். அவர்களைக் காட்டிலும் பெருமை அந்தத் தொண்டுக்குத்தான்.
எனவே, "பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்' என்று தொடங்கி, "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்று முடிக்கிறார். தர்க்கவியல் அடிப்படையில், விரியும் இந்தத் தேடல் காலந்தோறும் தொடர்வதால் சிந்தனைத்தளத்தில் புத்தம்புது அலைவரிசை தோற்றம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. செயல்தளமும் விரிகிறது. ஆராய்ச்சி எத்துணை தோல்விகளைத் தழுவிக்கொண்டாலும், மேலும் மேலும் தோற்றுவித்துக் கொள்கிற ஆற்றலை அது வளர்த்துச் செல்கிறது.
இந்த இடத்தில்தான் அறிவியல் நிலைப்பாட்டோடு அறம் சார்ந்த இன்னொரு உண்மையையும் இந்தச் சிந்தனையாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். பணமும், பதவியும், ஆட்சியும், அதிகாரமும் பெரியன என்று காலந்தோறும் கண்டபடி அலைந்து "திரிந்து', "சம்பாதிக்கும் வெறிகொண்டு அல்லாடுகிற மனித உள்ளத்தை, இடையில் நிறுத்தி, வள்ளுவர் கேட்கிறார். "உடலுக்கு ஊதியம், உணவும் உடையும். உயிருக்கு?'
"ஈதல், இசைபட வாழ்தல்' அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.' அது அவர் காலத்தில். ஈதலையும், இசைபட வாழ்தலையும் நெறியாகக்கொண்ட காலம் அவரது. பின்னர் அதுவே வெறியாக மாறி, பேருக்கும் புகழுக்கும் அலைகிற பிரபல வெறியான பிறகு, இந்த உண்மை இன்னொரு உண்மையிடம் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.
திருநாவுக்கரசர் சொல்கிறார், "தொண்டுதான் உயிர்க்கு ஊதியம்'. "தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை' என்பது அவர்தம் அனுபவ வாக்கு. அவர் ஒத்த அருளாளர்களின் வரலாற்றை எடுத்துரைத்த சேக்கிழாரின் "திருத்தொண்டர்புராணம்' "பெரிய'புராணம் என்றே பெயர் விளங்கி ஒளிர்கிறது. கம்பராமாயணமும் இதே கருத்தை, இராமன் சொல்வதுபோலச் சொல்கிறது.
பின்னும் தம்பியை நோக்கி, பெரியவன்,
"மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு, இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லைஇல் இன்பத்தை
உன்னு, மேல் வரும் ஊதியத்தோடு என்றான்.
கேள்வியில் விளைகிற சிந்தனைகூட ஒருவகையில் தொண்டுதான். தனக்காகச் சிந்திப்பதுபோல் தோன்றினாலும் விளைவு உலகிற்குத்தான். சிந்தித்தும் செயல்பட்டும் நம் முன்னோர் செய்த தொண்டுகளால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. உலகினை இயக்கும் நெம்புகோல், இந்தத் தொண்டு. அதுவே உயிர் வளர்க்கும் ஒரு செயலாக உயர்கிறது. இன்றைக்குத் தொண்டுகூடக் கண்துடைப்பாய், விளம்பர வெளிச்சத்திற்குரிய ஒரு நடிப்பாய்ப் போய்விட்ட சோகம். இதுபோல், தேவையற்ற எதையெதையோ ஊதியம் என்று தேடநேர்ந்த மோசமான காலம் இது.
இன்றைக்கு மானுடத்தின் நிலைப்பாடு என்ன? ஊதியத்திற்காக உடலைக் கெடுத்து, உயிரை வதைத்துச் சேர்த்ததையெல்லாம் மருந்துக்காகச் செலவிடுகிறது. "மருந்தல்லது ஊதியம் இல்லை மனித உயிர்க்கு' என்ற நிலைதான் இப்போது. இந்த மருந்துக்கெல்லாம் மாற்று மருந்து தன்னலமற்ற தொண்டு ஒன்றுதான் என்று சிந்திக்கவைத்த சிறுமியின் கேள்விக்கு நான் கண்டுணர்ந்த பதில் இது. அவள் என்ன சொன்னாள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அனைவரும் சேர்ந்து இன்னும் பெரிதாகச் சிந்திக்க, மகாகவி பாரதி சொன்ன தொடர், "பெரிதினும் பெரிது கேள்.'
கட்டுரையாளர்: பேராசிரியர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.