ஆலயங்களுக்குச் செல்லும்போது...
By வாதூலன் | Published On : 04th January 2019 02:56 AM | Last Updated : 04th January 2019 02:56 AM | அ+அ அ- |

கர்நாடக மாநில சாம்ராஜ் நகர் மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் மாரம்மா கோயிலில் நடந்த பூமி பூஜையில் அண்மையில் அசம்பாவிதம் நேர்ந்திருக்கிறது.
விழாவில் வழங்கப்பட்ட தக்காளி சாதத்தை உட்கொண்டதால், 13 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள். அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், கோயில் நிலத்தைக் கைப்பற்றுவதற்காக நிகழ்ந்த போட்டியில், ஒரு குழு பூச்சி மருந்தைப் பிரசாதத்தோடு கலந்து விட்டதென்ற செய்தி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்பாவி பக்தர்களைக் கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெறத் தக்கவர்கள் அந்தக் குழு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், கோயில் பிரசாதத்தினால் பக்தர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது புதிதல்ல. கிட்டதட்ட ஓர் ஆண்டும் முன்பு, கோவை காரமடை அருகில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களில் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் குணம் அடைந்தனர்.
அங்கு நடந்தது என்னவென்றால், விளக்கு ஏற்றுகிற எண்ணெயினால் பிரசாதம் தயாரிக்கப்பட்டிருந்ததாம். எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. நான்கு ஆண்டு
களுக்கு முன், ஒரு நாள் மாலை மனைவி வாந்தியும், வயிற்றுப் போக்குமாக அவதிப்பட்டார். மருத்துவமனையில் சோதனை செய்த குடும்ப டாக்டர், அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்த உடனேயே நோய்த்தொற்று நிறைய இருக்கிறதே? ஏதாவது கோயில் பிரசாதம் சாப்பிட்டாரா என்று கேட்டார்.
சற்று தயக்கத்துக்குப் பின், வீட்டில் விருந்தினர்கள் வந்ததால் கடையிலிருந்து தோசை மாவு வாங்கி பயன்படுத்தியதாகச் சொன்னார். டாக்டர் புன்னகையுடன் அதில்தான் தவறு இருக்கிறது. உங்களுக்கு ஏற்கவில்லை என்று சொன்னதும், ஓரிரண்டு தினம் மனைவி மருத்துவமனையில் தங்கி குணமானதும் வேறு விஷயம்.
பொதுவாகவே, விசேஷ நாள்களில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் பிரசாதம் நிறையவே தயாரிக்கப்படுகிறது. அத்தகைய தருணங்களில் தவறுகள் நேர வாய்ப்பு அதிகம்; இது தவிர, சில மிகப் பிரபலமான கோயில்களில், ஒப்பந்தம் மூலம் உரிமம் பெற்று, தின்பண்டங்களை விற்கிறார்கள்.
இதற்கு வெளி ஆள்களைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய தின்பண்டங்களின் தரம் சரியாகவே இருப்பதில்லை என்று சில ஏடுகள் அடிக்கடி வலியுறுத்தி எழுதுகின்றன. ஆனால், எதிர்பார்த்த பலன் காணோம்.
பழைய காலம் போன்று இல்லாமல், இப்போது முதியவர்கள் பக்திச் சுற்றுலாவில் நிறைய ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கென்றே பல மையங்கள் உள்ளன. ஆனால், பக்தர்களுக்கு உரிய வசதிகளைத் தருவதில் மெத்தனமே நிலவுகிறது.
நான் அறிந்த ஒரு வங்கி ஊழியர் கேதார்நாத்துக்கு மனைவியுடன் சென்றார். அங்கு குளிர் தாங்காது, மூச்சுமுட்டி தக்க மருத்துவ வசதி தரப்படாததால் இறந்து போனார். இதில் இன்னொரு கொடுமை, உடலை திரும்பக் கொண்டு வருவதற்குக் குடும்பத்தினர் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
நகரங்களின் வளர்ச்சி காரணமாக, பல இடங்களில் ஆலயங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர், கோயில் நிர்வாகிகளுக்குப் புது மோகம் துளிர் விட்டிருக்கிறது. பழைய கல் தரையை நீக்கி விட்டு, வழவழப்பாக பளிங்குக் கற்களைப் பதிக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்தும், வேறு பல மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்களைக் கவர இது ஒரு காரணியாக இருக்கக்கூடும்.
அதே சமயம் நடைமுறையில், பக்தர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்துகிறது. சிறிய மழைத்தூறல் போட்டால்கூட, வயதானவர்கள் வழுக்கி விழுகிறார்கள். பெரிய மழை கொட்டும்போது, வரிசையாக மிதியடிகளை அடுக்கி வைத்தாலும், காலடி பட்டு பட்டு, அவை கோணல் மாணலாகி விடுகின்றன. எனக்குப் பரிச்சயமான ஒரு பிரபல சங்கீத வித்துவான் இதனால் சறுக்கி விழுந்து சில நாள்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டார்.
கடைசியாக ஒன்று. இதைப் பதிவு செய்ய சற்று தர்மசங்கடமாக உள்ளது. ஆனால், அது உண்மை. நாள்பட்ட நோய் குணமாகவோ, குழந்தைப் பேற்றுக்காகவோ சிறிய கிராமத்தில் கோவில் பூசாரியை நாடுகையில், சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு விடுகிறார்கள்.
பெரிய நகரத்துக் கோயில்களில், வக்கிர புத்தியுள்ள அர்ச்சகர்களின் பாலியல் சீண்டல் வேறு மாதிரி. பிரசாதம் தருகிற போதோ, தீபாராதனை காட்டும் போதோ, வேண்டுமென்றே பெண்களைத் தொடுகிறார்கள். நான் அடிக்கடி செல்லும் கோயிலில், இந்தக் காரணத்தாலேயே ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனாலும், ஆலயம் தொழுவது சாலவும் நன்றுதான். மக்களின் தீவிரமான, அசையாத பக்தியின் சின்னங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. உள்ளத்தில் உள்ளானடி அது நீ உணர வேண்டுமடி என்ற கவிமணியின் வாக்கைப் பின்பற்றுவது அனைவருக்கும் சாத்தியமில்லாதது.
ஆலயங்களின் அவசியத்தை தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் பொருத்தமான உபமானத்துடன் சொல்லியிருக்கிறார். குடும்பம், வேலை முதலிய தொல்லைகள் இருக்கும் போது, இந்தப் பரந்த உலகில் எந்த இடத்திலும் மனம் ஒன்றி நிற்பதில்லை. எங்கெங்கோ ஓடுகிறது. ஆனால், கடவுளை வணங்க ஓர் இடம் என்று குறிப்பிட்டுவிட்டால், அங்கு செல்லும் போதெல்லாம் ஜன்னல் வழியாய் தெருவைப் பார்க்கிற மாதிரி மனம் ஒன்றி லயிக்கிறது. கடவுளிடத்து தங்குகிறது.
ஆக, ஆலயம் சென்று வழிபடுவது மனத்துக்கு அமைதி தருகிறது. அதேசமயம் தொலைதூர தலத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, கூட்டம் நிறைய இருக்கும் விசேஷ நாள்களில் பக்தர்கள் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.