அவசரத் தேவை அரசு கல்வியியல் கல்லூரிகள்

ஒரு நாட்டின் முன்னேற்றம், அந்த நாட்டின் கல்வி, சமூகப் பொருளாதார மேம்பாடுகளைக் குறியீடுகளாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.

ஒரு நாட்டின் முன்னேற்றம், அந்த நாட்டின் கல்வி, சமூகப் பொருளாதார மேம்பாடுகளைக் குறியீடுகளாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. பிரிட்டிஷ் இம்பீரியல் அரசிடம் 1910, 1912, 1913 எனத் தொடர்ச்சியாக பல முறை இந்தியர் அனைவருக்கும் இலவச ஆரம்பக்கல்வி தேவை என்று கோபால கிருஷ்ண கோகலே போராடிக் கொண்டே இருந்தார். ஆனால், 2010 ஏப்ரல் 1 அன்றுதான், அனைவருக்குமான இலவச ஆரம்பக் கல்வியை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.   
இன்று சுதந்திர இந்தியாவில் ஆரம்பக்கல்விகூட கிடைக்கப் பெறாமல் பல  குழந்தைகள் காகிதம் சேகரிப்போராகவும் இன்னும் பல நிலைகளில் உரிய வளர்ச்சிப் படிநிலைகளை அடைய முடியாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையை அகற்ற வேண்டும் என்பதற்காகவே பல கல்விக் குழுக்களை  மத்திய அரசு அமைத்து அவற்றின் பரிந்துரைகள் பலவற்றை நிறைவேற்றி இந்தியாவை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்கிறது. இருந்தாலும் 1964-66-இல் உருவாக்கப்பட்ட டாக்டர் டி. எஸ். கோத்தாரி கல்விக் குழு, இன்றைய அவசரத்தேவை கல்விச் சீர்த்திருத்தம் என்றது. 
மேலும், இந்தக் கல்விச் சீர்த்திருத்தம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களை சமூகத்தின் சக்தி வாய்ந்த கருவிகளாய் மாற்றி சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற தேசியக் கல்வி நோக்கத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
இவ்வாறு நவீன இந்தியாவின் உண்மையான வளர்ச்சி, கல்வியின் மூலம்தான் என டாக்டர் கோத்தாரி கல்விக் குழு கூறியது; மேலும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் உடல், மன பாதிப்பு அடைந்துள்ள குழந்தைகள் என அனைவருக்கும் சமமான வாய்ப்பு மிக்க கல்வியினை இந்தியா முழுவதும் பிராந்திய, மாநில வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களுக்குமான கல்வியே நாட்டின் அவசரத் தேவை என்று டாக்டர் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் அனைத்து கல்விக் குழுக்களுமே தேச வளர்ச்சிக்கான பல்வேறு பரிந்துரைகளைக் கொடுத்துள்ளன. அவை ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அரசால் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு மிக்க கல்வியை வழங்குவதுமே ஆகும்.
இன்றைய தமிழகத்தில் செவிலியர் கல்லூரிகள் 186, மருந்தியல் / மருந்தாளுநர் கல்லூரிகள் 57. பொறியியல் கல்லூரிகள் சென்னை மண்டலத்தில் 171, கோவை மண்டலத்தில் 204, திருச்சி மண்டலத்தில் 86, மதுரை மண்டலத்தில் 46, திருநெல்வேலி மண்டலத்தில் 72 ஆக மொத்தம் 533. அரசு கல்வியியல் கல்லூரிகள் 7, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் 14, சுயநிதி தனியார் கல்வியியல் கல்லூரிகள் 697. ஆக, மொத்தமுள்ள 718 கல்வியியல் கல்லூரிகளும் தமிழக அரசால் 2008-இல் நிறுவப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளாகச் செயல்படுகின்றன. இதில் குறைந்தபட்சம் பல கல்வியியல் கல்லூரிகளில் ஆண்டு இறுதித் தேர்வு மட்டுமே எழுதினால் போதும் என்ற நிலைதான் உள்ளது. 
ஆசிரியர்கள்தான் உலகின் ஒட்டுமொத்த மனித வளர்ச்சிக்கும் முக்கியக் காரணம். ஆசிரியர்களே அனைவரையும்  உருவாக்குபவர்கள். இவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கும் ஆசிரியர்களை நமது தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளே அதிகமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு உருவாக்குகின்றன.  
தமிழ்நாட்டில் உள்ள மொத்த வருவாய் மாவட்டங்கள் 32. ஆனால், இதில் அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ள மாவட்டங்களோ மொத்தம் ஆறு. சென்னையில் மட்டும் 2 கல்லூரிகள் உள்பட மொத்தம் 7அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன.    
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர்களாகப் பணியாற்ற தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை உருவாக்க அரசால் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்ட மாவட்ட  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தற்போது 16 நிறுவனங்களில் மட்டுமே வெறும் சொற்ப எண்ணிக்கையில் பட்டய ஆசிரியர் பயிற்சிக்கு (டி.டி.எட்.) மாணவர் சேர்க்கை நடை
பெற்று இயங்கி வருகின்றன. பிற மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையின்மையினால் தற்காலிகமாக முடங்கியுள்ளன. 
தமிழகத்தில் தனியார் கல்வியியல் கல்லூரிகள் மட்டுமே 718 (நிகர்நிலை கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள் தவிர்த்து) உள்ளன.
இந்தக் கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பி.எட்., எம்.எட்., பி.எஸ்சி., பி.எட். பட்டங்களை வழங்குவதற்காகவே தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தித் தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் படிக்க முடியாத திறமைமிக்க ஏழை, கிராமப்புற மணவர்களின் ஆசிரியராகும் கனவு இதன் மூலம் தடைபடுகிறது. 
வளர்ந்த பல மேற்கத்திய நாடுகள் கல்வியை முழுமையான உயர்தரமான சமமான கல்வியைக் கட்டணமின்றி குடிமக்கள் அனைவருக்கும் வழங்குகின்றன. மேலும், அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் அந்நாடுகளில் முழுமையாக அரசே நடத்துகிறது.
எனவே, கல்வியியல் கல்லூரி கல்வியில் அரசு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்தி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமமாக, தேவைக்கு ஏற்ப பி.எட்., எம்.எட்., பி.எஸ்சி., பி.எட்., பி.ஏ., பி.எட். பட்டங்களைத் தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் மூலமும், புதிய கல்வியியல் கல்லூரிகளை ஏற்படுத்தி அரசு ஆசிரியர்களை உருவாக்கி, வளரும் தலைமுறையினரை அறிவுசார் சொத்தாகக் காத்திட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com