தேர்தல் அறிக்கையும் ஜனநாயகமும்!

இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வாக்குப் பதிவுக்கு முன்பே வெளியிடவேண்டுமென்ற அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.


இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வாக்குப் பதிவுக்கு முன்பே வெளியிடவேண்டுமென்ற அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை என்பது சம்பிரதாயமா, சடங்கா அல்லது ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியின் வழிகாட்டு நெறிமுறைகளோடு அதில் சொல்லப்பட்ட உறுதிமொழிகளுடன் நடைமுறைக்கு வருமா என்பவை எல்லாம் விவாதத்தில் உள்ளன. 
தேர்தல் அறிக்கை என்பது,  தேர்தல்களத்தில் மக்களின் வாக்குகளைப் பெற மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று ஒரு அரசியல் கட்சி தேர்தலுக்கு முன்னர் தருகின்ற உறுதிமொழி சாசனம். மக்கள் நல அரசுக்கு ஒரு முக்கிய அடிப்படையாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல்காலத்தில் வெளியிடுகிறது. 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உறுதிமொழிகளை சில அரசியல் கட்சிகள் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றன. தேர்தல் அறிக்கையும், தேர்தல் சீர்திருத்தங்களும் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாகத் திகழ்கின்றன. இந்த தேர்தல் அறிக்கையின் வரலாறு என்ன என்று பார்த்தால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசியல் கட்சிகள் வெளியிட்டதுபோலத் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரிப்பன் பிரபுவின் 1882-இன் தீர்மானம், இந்திய கவுன்சில் சட்டம் 1892, மின்டோ-மார்லி சீர்திருத்தம் (1909) இதையொட்டி உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அமைப்பு முறை சட்டம், லக்னௌ ஒப்பந்தம் (1916), மாண்டேகு - செம்ஸ்போர்டு சட்டம் (1919), அதன்பின் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் 1919, முடிமான் விசாரணைக் குழு அறிக்கை (1924) என தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலின் உறுப்பினராக உரிமைகளை இந்தியர்களுக்கும் வழங்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷார் மேற்கொண்டனர். இந்த அடிப்படையில் 1920, 1923, 1926, 1930 என மாகாண கவுன்சிலின் தேர்தல்களும் நடந்தேறின.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்த அரசியலமைப்புகள் தேர்தல் களத்தில் இறங்கின. பிரிட்டிஷ் நாடாளுமன்ற அமைப்பு முறைப்படி நடந்த தேர்தலில், இந்திய அரசியலமைப்புகள் தங்களுடைய உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கைகளாக முதன்முறையாக வெளியிடத் தொடங்கின. காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 1920-இல் முதன்முறையாக பாலகங்காதர திலகர் தேர்தல் அறிக்கையினை இந்திய மண்ணில் வெளியிட்டார். 
இந்தியப் பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். அதேபோல, சுதேசிப் பொருள்கள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தொழிற்கல்வி, பொது சுகாதாரம், இலவசக் கல்வி போன்ற திட்டங்களை நாங்கள் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்துவோம் என்ற உறுதியை அந்த அறிக்கையில் திலகர் குறிப்பிட்டிருந்தார்.
ராஜாராம் மோகன்ராய், தாதாபாய் நெளரோஜி, மகாதேவ் கோவிந்த ரானடேவின் பொருளாதாரக் கொள்கைகள், ரமேஷ் சந்திர தத்தின் பொருளாதார அணுகுமுறைகள், கோபாலகிருஷ்ண கோகலேவின் அதிகாரம் பரவலாக்குதல், உத்தமர் காந்தியின் கோட்பாடுகள் என அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படை விஷயங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதன்பின் 1923, 1926-இல் சுயராஜ்ய கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான், தமிழகத்திலிருந்து நீதிக் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1923, 1926, 1930 தேர்தல்களில் வெளியிட்டது. அன்று சென்னை மாகாணம், ஆந்திரம், கேரளாவின் வடபகுதி, கர்நாடகத்தின் தென் பகுதிகளெல்லாம் இணைந்த சென்னை ராஜதானியாகத் தென்னகம்  விளங்கியது. இந்தத் தேர்தல் அறிக்கையில் பிராமணர்கள் அல்லாத மக்களின் நலனைப் பாதுகாக்கக் கூடிய வகையில் உறுதிமொழிகள் சொல்லப்பட்டன. மற்றொரு கட்சியான தேசிய ஐக்கிய கட்சி 1923, 1926 தேர்தல்களில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
பண்டித நேரு 1937 தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தார். இதேபோல, பிராந்தியக் கட்சிகளான கிரசக் பிரஜா கட்சி, தேசிய விவசாயிகள் கட்சி போன்ற கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை பிரிட்டிஷார் காலத்திலேயே  வெளியிட்டதெல்லாம் வரலாற்று உண்மைகள். கடந்த 1919-லிருந்து நாடு விடுதலை பெறும் வரை இந்த மாதிரி தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் தொடர்ந்து வெளியிட்டன. அவை யாவும் மூன்று அல்லது நான்கு பக்கங்களிலேயே அடங்கிவிடும் ஆவணமாக இருந்தன. அதேபோன்று கம்யூனிஸ சிந்தனை உள்ளவர்களும் தங்களுடைய தேர்தல் அணுகுமுறை மற்றும் உறுதிமொழி ஆவணங்களையும் வெளியிட்டனர்.
நாடு விடுதலை பெற்றபின், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் விரிவாக அன்றைய காலச் சூழ்நிலை மற்றும் அரசியல் சூழலுக்கேற்றவாறு, மக்களின் விருப்பங்களைக் கொண்டு தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கத் தொடங்கின. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு முதன்முறையாக திட்டக் குழுவை அமைத்தது. அதை ரஷிய மாதிரியைப் போன்று  தன்னுடைய நேரடிப் பார்வையில் ஜவாஹர்லால் நேரு  அமைத்தார். இன்றைக்கு மோடி அரசு அதை நீதி ஆயோக் என்று மாற்றிவிட்டது.
இந்தியாவின் 1951, 1952 தேர்தலில் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, முக்கியத்தேவைகள் மற்றும் அணுகுமுறைகளை மனதில் கொண்டே தேர்தல் அறிக்கை வெளிவந்தது. அதேபோல, 1951-இல் கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுவுடைமை சித்தாந்தத்தோடு தேர்தல் அறிக்கையை அந்தக் காலத்தில் வெளியிட்டது. இந்தச் சூழலில் துணை அறிக்கைகளாக காங்கிரஸ் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து 1948 ஜனவரியிலும், கம்யூனிஸ்ட் கட்சி பொருளதார அமைப்பு முறை குறித்து 1951-லும், சோஷலிஸ்ட் கட்சி தன்னுடைய திட்டங்களை 1947 அக்டோபர் மாதத்திலும், அன்றைய ஜனசங்கம் (இன்றைய பாஜக) தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1951 அக்டோபரிலும், சுதந்திரா கட்சி தன்னுடைய கொள்கைகள், திட்டங்கள் குறித்து 1959 ஆகஸ்ட்டிலும் வெளியிட்டன. 
இந்த ஆவணங்கள்தான் அந்தக் காலத் தேர்தல் அறிக்கையின் மையக் கருத்துகளாகும். தமிழகத்தைப் பொருத்தவரையில் பொதுத் தேர்தலில்  1957-இல் திமுக போட்டியிட்டபோது,  தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை அண்ணா வெளியிட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் வலியுறுத்திய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று திமுக கூறியது. அந்தத் தேர்தலில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. கட்சி தொடங்கப்பட்ட பதினெட்டே ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சிக் கட்டிலில் திமுக அமர்ந்தது. 
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் மாநில முதல்வராக பதவிக்கு வந்தவர் பிகார் மாநிலத்தின் மகாமய பிரசாத் சின்ஹா. இவரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டார். ராஜேந்திர பிரசாத்தின் சீடராக இருந்து காங்கிரஸில் இருந்து விலகி இறுதிவரை ஜனதா கட்சியிலும் இருந்தார்.
அதேபோல, நாட்டின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வராகக் கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்டபோது,  கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான பொதுவுடைமைக் கொள்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை கம்யூனிஸ்ட்டுகள் வெளியிட்டனர்.
காலப்போக்கில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆங்காங்குள்ள உள்ளூர்ப் பிரச்னைகளை மையப்படுத்தித் தொகுதி வாரியாக, தனித் தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். இது வடக்கே சோஷலிஸ்ட்  கட்சித் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் அணுகுமுறையாகும். பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவை தொடர்ந்து எதிர்த்துப் போட்டியிட்டவர் அவர். 
இதேபோன்று நான் 1989 தேர்தலில் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில்  போட்டியிட்டபோது, தமிழகத்தில் முதன்முறையாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே எனது தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டேன். இந்த மாதிரி தேர்தல் காலத்தில் உறுதிமொழிகளைக் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று மக்களுக்காக வாதாட வேண்டுமென நினைக்கும் மக்கள் பிரதிநிதிகள் நாளுக்கு நாள் அரிதாகிவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் வாக்குகளைப் பணத்திற்கு விற்ற பின்னும்கூட, தேர்தல் அறிக்கையின் ஆளுமையும், அதன் வீச்சும் சில நேரங்களில் அரசியல்  கட்சிகளுக்கு கைகொடுப்பதை மறுக்க முடியாது. தேர்தல் அறிக்கைகள் ஆவணங்கள் மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலம் என உள்ளார்ந்த உளவியல் காரண காரியங்களை உள்ளடக்கியது.
தேர்தல் அறிக்கைகள் என்பவை  நாளும் வாக்குறுதிகளை வாரி வழங்கும் பட்டியலாக இருக்கக் கூடாது. ஆக்கப்பூர்வ திட்டங்களும், கொள்கைப் பதிவுகளுமாக இருக்க வேண்டும். வருங்காலங்களில் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கக்கூட திறமைசாலிகள் அரசியல் கட்சிகளில் இருப்பார்களா  என்பது சந்தேகம்தான். ஜனநாயகம்  வலுவிழந்து வருவதன் வெளிப்பாடுதான் இது.
கட்டுரையாளர்:
செய்தித் தொடர்பாளர், திமுக
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com