வீழ்ச்சியடைந்த சமத்துவபுரங்கள்!

இந்தியா முழுவதும் சமத்துவபுரங்களை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த 6.4.19 அன்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வாக்குறுதி அளித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்தியா முழுவதும் சமத்துவபுரங்களை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த 6.4.19 அன்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வாக்குறுதி அளித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அவரது அந்த வாக்குறுதியானது, தமிழ்நாட்டில் சமத்துவபுரம் திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டதால், அதை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தைக் கட்டமைக்க முனைகிறது. ஆனால், உண்மை அதுவல்ல என்பதை திட்டத்தின் பயனாளிகளும், நடுநிலையான பார்வையாளர்களும் தொடர்ந்து உறுதி செய்து கொண்டிருக்கின்றனர்.
1996-2001 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, தமிழகம் முழுவதும் சமத்துவபுரக் குடியிருப்புகளை அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். உடனடியாக 22.10.1997-ஆம் நாள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இந்தத் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல் சமத்துவபுரக் குடியிருப்புப் பகுதியை மதுரை திருமங்கலத்துக்கு அருகே மேலக்கோட்டையில், 1998-இல் திறந்து வைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இது என் கனவுத் திட்டம் என்றும் ஜாதி பேதங்களற்ற சமத்துவ சமுதாயமே எனது லட்சியம் என்றும் அங்கே அவர் உரையாற்றினார். 
அப்போதும் (1996-2001), அதற்குப் பிறகுமான அவரது ஆட்சிக் காலத்தில் (2006-2011), தமிழகம் முழுவதும் மொத்தம் 240 சமத்துவபுரக் குடியிருப்புகள் மின்னல் வேகத்தில் நிர்மாணிக்கப்பட்டன. 
அவையனைத்துக்கும் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயரிடப்பட்டது.
தலா 3 சென்ட் நிலப்பரப்பில் மொத்தம் 100 வீடுகள் என்று வரையறை செய்யப்பட்ட குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 40%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25%, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25%, இதர பிரிவினருக்கு 10% எனும் கணக்கில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 
ஆனால், தொடக்க விழாக்களுக்குப் பிறகான சமத்துவபுரங்களின் நிலைதான் எந்த வகையிலும் சரியில்லாமல் போய்விட்டது. அவையனைத்தும் சீரழிந்தும், புதர் மண்டியும், விரிசல்கள் கண்டு இடிந்தும், மக்கள் வாழத் தகுதியற்றவையாக மாறிப் போயின. அவற்றின் இன்றைய இந்த நிலைக்கு அடுத்துவந்த ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று இப்போது ஒரு பதில் உரத்துச் சொல்லப்படுகிறது. அதுவும் உண்மைதான். எனினும், அதுமட்டும்தான் உண்மையா?
சமத்துவபுரக் குடியிருப்புப் பகுதிகளின் வீடுகள் கட்டப்பட்ட சிறிது காலத்துக்குள்ளாகவே விரிசல்கள் விட்டுக் கலகலத்துப் போய்விட்டன. அவற்றின் மேம்பாட்டுக்கான நிர்வாக நிதியாதாரங்கள் முறையாக உறுதி செய்யப்படவில்லை. எந்த நிதியைக் கொண்டு உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்கு அரசு வழிகாட்டவில்லை; பஞ்சாயத்து நிதியில் வாய்ப்பிருந்தால் பிறகு பார்க்கலாம் என்று அடிப்படைத் தேவைகளுக்காகப் புலம்பிய சமத்துவபுரவாசிகளிடம் அரசு அதிகாரிகள் கைவிரித்தனர். 
மழைக்காலங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற பொட்டல் வெளிகளிலும், ஒதுக்குப்புறங்களிலும் சமத்துவபுரங்கள் என்னும் பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பாலைவனப் பசுஞ்சோலைகளை திடீர் திடீரென உருவாக்கிவிட முடியுமா? அப்படியே ஒருவேளை உருவாக்க முடிந்தாலும், அவற்றைத் தரமாகப் பராமரித்துப் பாதுகாத்து மேம்படுத்தும் அக்கறையும், பணி நேர்மையும் நமது நிர்வாக அமைப்புகளுக்கு இருக்கின்றனவா என்பன போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உரிய தொலைநோக்குக் கூறுகளோடு பார்க்கப்படவில்லை. 
தற்போது தமிழகத்தில் மொத்தம் உள்ள சமத்துவபுரங்களின் வீடுகளில் பெரும்பாலானவை, குடியிருக்கத் தகுதியற்றவையாகி கைவிடப்பட்டு விட்டன. ஆண்களும் இளைஞர்களும் நகர்ப்புறங்களுக்கு வேலைவாய்ப்பு காரணமாக இடம்பெயர்ந்து விடுவதால் சிறுவர்களும், பெண்களும், முதியவர்களுமே அவற்றில் முகாம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும்கூட தங்களது குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகளைக் கேட்டுப் போராடுவதே அன்றாட வேலையாகிவிட்டது. பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் 30 ஆண்டுகள் வரை வாழ வேண்டும் என்ற அரசுத் தரப்பின் நிபந்தனைக்கு ஏற்ப வீடுகளும், அவற்றைச் சூழ்ந்த அடிப்படையான தேவைகளும் அங்கு அமையப் பெறாததால் அவர்களால் சில ஆண்டுகள்கூட அந்த வீடுகளில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
எஞ்சிய வீடுகளின் பயனாளிகள், சொந்த முயற்சியால் தங்களது வீடுகளைச் செப்பனிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மேலும், சமத்துவபுரங்களின் வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் செல்வாக்கு மேலோங்கியிருப்பதாகவும், அங்கீகரிக்கப்பட்ட சில பயனாளிகள் தங்களது வீடுகளை மறைமுகமாக வாடகைக்கு விடுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. எது எப்படியிருப்பினும், சமத்துவபுரங்களின் வீடுகளில் வசதியாக வாழலாம் என்கிற இன்பக் கனவுகளோடு குடியேறியவர்கள், அங்கு அப்படி வாழவில்லை என்பதே கசப்பான உண்மை.
சமத்துவபுரங்கள் எந்தெந்த ஊர்களில் எப்படி இருக்கின்றன என்பதையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பின் வாயிலாக முழுமையாக இப்போது ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், இத்திட்டம் சந்தித்துவரும் மோசமான பின்னடைவுகளை முழுமையாக அறிய முடியும். சில சமத்துவபுரங்களில் சிறு சிறு கோயில்கள் கட்டப்பட்டபோது சில வெளி அமைப்புகள் போராடி அப்படிப்பட்ட முயற்சிகளைத் தடுத்து நிறுத்தின. ஆனால், அங்கு வாழும் மக்களுக்கான அடிப்படையான வாழ்வாதாரத் தேவைகளுக்காக அதுபோன்ற அமைப்புகள் போராடியதாகத் தகவல்கள் இல்லை.
சமத்துவபுரம் திட்டம் என்பது ஜாதி ஒழிப்புத் திட்டமா அல்லது வீட்டு வசதித் திட்டமா என்னும் கேள்விக்கு இரண்டும்தான் விடை என்றால், அந்த இரண்டில் ஒன்றுகூட சமத்துவபுரங்களால் நிறைவேறவில்லை என்பதே உண்மை. ஜாதி வேறுபாடுகளை அரசாங்கமே நிரந்தரமாகவும் மறைமுகமாகவும் நினைவூட்டுவதுபோன்றும், பொதுச் சமூகத்தின் இரக்கப் பார்வைகளுக்கு உரியவையாகவும், ஊர்களுக்கு வெளியே அரசாங்கமே உருவாக்கிய புதிய புதிய காலனிகளைப் போலவும் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
ஊர்கள், பேரூர்கள் மற்றும் நகரங்களில் நிலவுகின்ற ஜாதி, சமய நல்லிணக்கத்தைப் போலப் பல மடங்கு நல்லிணக்கம், சமத்துவபுரங்களில் நிலவுவதாக இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. தனது நாடு முழுவதுமே ஒற்றைப் பெருஞ்சமத்துவபுரமாக மாற்றுவதற்குரிய  நலத்திட்டங்களே ஒரு மக்கள்நல அரசின் திட்டங்களாக இருக்கமுடியும். மாறாக, பொட்டல் வெளி ஒதுக்குப்புறங்களில் திட்டுத் திட்டாக சமத்துவத்தை உருவாக்குகின்ற முயற்சியில் ஓர் அரசு இறங்குமேயானால், அது சமூக அறிவியலுக்கும், மானுட அறவியலுக்கும் புறம்பான செயலாகவே அமையும்.
குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளும், வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளும், பல்லாயிரக்கணக்கான அடுக்ககங்களும், குடியிருப்புகள் அடர்ந்திருக்கின்ற சிறிய-பெரிய நகரங்களும் மக்களின் ஜாதிய உணர்வுகளை நீர்த்துப்போக வைக்கிற வேலையை மிகவும் இயல்பாகச் செய்து கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கிராமப்புற வீட்டு வசதிக் குடியிருப்புத் திட்டப் பணிகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
நெடுங்காலமாக லட்சக்கணக்கான மக்கள் வாழுகின்ற குடியிருப்புப் பகுதிகளிலேயே இன்றளவும் சாத்தியப்படுத்த முடியாத குடிநீர், வடிகால் வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை, திடீர்க் குடியிருப்புகளாகத் தோற்றுவிக்கப்படுகின்ற சமத்துவபுரங்களில் சாத்தியப்படுத்திவிட முடியுமா என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமலேயே சமத்துவபுரங்கள் தோற்றுவிக்கப்பட்டுவிட்டன. 
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே சோலார் புத்தேரி கிராமத்தில் வேறொரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 200 தொகுப்பு வீடுகள் 2015-ஆம் ஆண்டு மழையில் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகிப் போனதால், அதே ஊரில் காலியாகக் கிடந்து சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிப் போயிருந்த சமத்துவபுர வீடுகளையாவது எங்களுக்குக் கொடுங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர்மல்க அரசுக்குக் கோரிக்கை வைத்த அவலமும் நேர்ந்தது. 
ஏழைகளுக்கான அரசின் குடியிருப்புத் திட்டங்கள் இப்படித்தான் பாழ்பட்டுப் போகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் வலிந்தும், வேகமாகவும், அரசுகள் நிறைவேற்றும் திட்டங்களை, அரசுக்கு அப்பாற்பட்டு, பயனாளிகளின் கோணத்தில் இருந்து ஆய்வு செய்து அம்பலப்படுத்துகின்ற அதிகாரமும், அங்கீகாரமும் கொண்ட நேர்மையான அமைப்புகள் நமது சமூகத்தில் இல்லை.
மனித உரிமை மீறல்களின்போது களமிறங்குகின்ற உண்மை அறியும் குழுக்களைப் போலவே அரசு நலத்திட்டங்களுக்கும் உண்மையறியும் குழுக்களும் அவற்றின் நேரடியான கள ஆய்வு அறிக்கைகளும் இன்றைய காலக்கட்டத்துக்குக் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன.    
சமத்துவபுரம் திட்டம் 100% வெற்றி பெற்றிருந்தால்கூட அதன் மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,20,000 பேர் மட்டுமே இருந்திருக்க முடியும்.  இந்த நிலையில் இத்திட்டம் மேம்படுத்தப்படாமல் போனதன் விளைவாக, தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தின் இப்போதைய பயனாளிகளின் எண்ணிக்கை வெறும் 60,000 பேர் என்னும் அளவில்  சுருங்கிவிட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை இனிமேல் சுருங்காது என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. எனவே, அரசு இப்போதாவது அக்கறையோடு செயல்பட்டு சமத்துவபுரங்களின் தர நிலையை உயர்த்தி அங்கு வாழும் மக்களின் அனைத்து விதமான வாழ்க்கைத் தேவைகளையும் முறையாக நிறைவு செய்ய வேண்டும்.
கல்வி, அனைத்துத் துறைகளிலும் முறையான வேலைவாய்ப்பு, நல்ல வேலைவாய்ப்புகளின் விளைவான பொருளாதார ஏற்றம் போன்றவற்றின் வாயிலாகவும், காலப்போக்கிலும், தலைமுறைகளின் பயணத்திலும்தான் ஜாதிகளும், ஜாதிய உணர்வுகளும் நிர்மூலமாகிப் போகும். இதை உணர்ந்து இந்த நிலையை எட்டுவதற்கான நலத்திட்டங்களையே தொலைநோக்குப் பார்வையோடு அரசு முன்னெடுக்க வேண்டும். திடீர்க் குடியிருப்புகளின் வாயிலாகச் ஜாதிகளை ஒழிப்பது சாத்தியமாகாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழி மாங்காய் அடிப்பதற்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். அது மக்கள் நலத் திட்டங்களுக்குப் பொருந்தாது. மக்களின் வரிப் பணத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்க முனைகிற அரசியல் தலைவர்கள் இதை உணரவேண்டும். 

கட்டுரையாளர்:  
கவிஞர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com