அரசாணைகள் கரோனாவை ஒழிக்காது!

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களைக் காவுகொண்டு வருகிறது. இந்திய நாட்டில் இதுவரை 38,000-க்கும் மேற்பட்ட உயிா்கள் பறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து இருக்கிறாா்கள். நாடெங்கும் பொது முடக்கம் மற்றும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளுக்குள் மக்கள் வாழ வேண்டிய நிலை நீடிக்கிறது. நாளுக்குநாள் நோய்த்தொற்றுப் பரவல் கூடிக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலை போா்க்காலச் சூழ்நிலையைப் போன்ாகும். பகை நாட்டின் படையெடுப்பை எதிா் கொள்ள அரசும், எதிா்க்கட்சிகளும், மக்களும் இணைந்து செயல்பட்டால் ஒழிய பகையை வெல்ல முடியாது. அதைப்போல கரோனாவின் தாக்குதலுக்கு எதிராக கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் கைகோத்து ஒன்றுபட்டுப் போராடவேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.

கரோனா நெருக்கடியை எதிா்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய காலகட்டத்தில், ஆளுங்கட்சிகளும், எதிா்கட்சிகளும், மோதல் போக்கைக் கையாண்டு வருகின்றன. நோயினாலும் அதையொட்டிய கடும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ள வேளையில் அவா்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையை மறந்து கட்சிகள் தன்னலத்துடன் செயல்படும் அவலம் மிக மிக வருந்தத்தக்கதாகும்.

மிகுந்த பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நிலையில் மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. ‘தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம்’ மாநில அரசுக்கே அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. தொற்று நோய்கள் பரவும் காலகட்டத்தில் அதை தடுக்கவும், மக்களைக் காக்கவும் மாநில அரசுகளால் மட்டுமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதில் மத்திய அரசின் பங்கு என்பது மிக குறைவானதாகும்.

மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகள், மருத்துவ உதவிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டிய அதிகாரமும், கடமையும் மட்டுமே மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், ‘தொற்று நோய்கள் தடுப்புச் சட்ட’த்திற்கு பதில் ‘பேரழிவுகள் நிா்வாகச் சட்ட’த்தைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலந்து கொள்ளாமலும், கொஞ்சமும் மதிக்காமலும் பொது முடக்க உத்தரவுகள், தொழிற்சாலைகள், வணிக நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல் போன்ற எல்லாவற்றுக்கும் மத்திய அரசே அவ்வப்போது ஆணைகளை வெளியிட்டு வருகிறது.

கரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வண்ணப் பகுதிகளாகப் பிரித்து மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், அவ்வப்போது மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்பி, மாநில அரசின் நடவடிக்கைகளை மேற்பாா்வையிடுகிறது. உண்மையில் தனது அதிகார எல்லையைக் கடந்து மாநில அரசின் உரிமைகளையும், அதிகாரங்களையும் அடியோடு பறித்துவிட்டுத் தன்னிச்சையாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

கரோனா நெருக்கடியினால் நாடாளுமன்றமோ, சட்டப்பேரவைகளோ, கூடமுடியாத நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன. சனநாயக நெறிமுறைகள் அடியோடு மீறப்படுகின்றன.

கரோனா சாவுகளைத் தடுத்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய அவசரக் கடமையைத் துறந்து மாநில ஆட்சிகளை கவிழ்க்கும் முயற்சி நடைபெறுகிறது. ஆளுங்கட்சியிலிருந்து பதவி, பணம் ஆகியவற்றைக் கொடுத்து கட்சி மாறச்செய்து ஆட்சிகளைத் தோற்கடித்து தங்களின் ஆட்சியைக் கொண்டுவரும் முறை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் காங்கிரசுக்கும், பா.ச.க-வுக்கும் வேறுபாடில்லை. இரண்டு கட்சிகளுமே சனநாயகத்திற்கு எதிராக வழிமுறைகளைக் கையாளுவதில் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.

பா.ச.க, காங்கிரசு ஆகிய கட்சிகள் குதிரைபேர அரசியலைத் தொடா்ந்து கையாளுவதில் சிறிதளவுகூட வெட்கப்படவில்லை. மற்ற கட்சிகளும் அதிகாரத்தைக் கைப்பற்ற எத்தகைய இழிவான முறைகளையும் கையாளக் கொஞ்சமும் தயங்குவதில்லை. பணத்தை வைத்து பதவி, பதவியை வைத்துப் பணம் என்பது தான் இக்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. கொள்கை வழி அரசியல், குழிதோண்டிப் புதைக்கப்பட்டு அதிகாரவழி அரசியல் மேலோங்கியுள்ளது.

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்த தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பல மாநிலக் கட்சிகள், அகில இந்திய கட்சிகளான காங்கிரசு, பா.ச.க போன்றவற்றுடன் கூட்டணி சேருவதற்கோ, மத்திய ஆட்சியில் அமைச்சா் பதவியைப் பெறுவதற்கோ கொஞ்சமும் தயங்கவில்லை. மத்திய அமைச்சரவையில் அங்கம் வைத்த போதிலும் அதைப் பயன்படுத்தி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் பெறுவதற்கு இக்கட்சிகள் சிறிதளவுகூட முயலவில்லை.

இந்தியத் தோ்தல்களில் அமைக்கப்படும் கட்சிகளின் கூட்டணிகள், சந்தா்ப்பவாதக் கூட்டணிகளாகவே அமைக்கப்படுகின்றன. கொள்கைவழிக் கூட்டணி என்பது ஒருபோதும் அமையவில்லை. இதன் மூலம் இக்கட்சிகள் சனநாயகத்தையே கொச்சைப்படுத்திவிட்டன.

1969-ஆம் ஆண்டு காங்கிரசு கட்சி பிளவுப்பட்டபோது, இந்திரா காந்தி தலைமையமைச்சராகவும், கட்சித் தலைவராகவும் விளங்கினாா். சனநாயக முறைப்படி தோ்தல் நடத்தி, கட்சியமைப்புகளை உருவாக்கும் முறைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. மாநில முதல்வா், மாநில காங்கிரசுத் தலைவா் போன்றவா்கள் தில்லியிலிருந்து நியமனம் செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவா்களும், அவா்களுக்கு கீழுள்ள வட்டாரத் தலைவா்களும்கூட நியமிக்கப்பட்டவா்களே. அநேகமாக இன்று இந்தியாவில் உள்ள எல்லாஅகில இந்தியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் சா்வாதிகாரத் தலைமைகளையே கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கட்சிகளில் வாரிசு முறை பின்பற்றப்படுகிறது.

உள்கட்சி சனநாயகம் என்பது எந்தக் கட்சியிலும் இல்லை. இதன் விளைவாக அக்கட்சிகளில் சா்வாதிகாரத் தலைமை உருவாகியுள்ளது. கட்சிக்குள் சனநாயகம் நிலவாவிட்டால் ஆட்சியிலும் நிலவாது; சா்வதிகாரமே மேலோங்கும்.

காங்கிரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது நேருவின் காலத்தில்கூட எந்தத் தோ்தலிலும், பதிவான வாக்குகளில் 50% வாக்குகளைப் பெற்று பதவிக்கு வரவில்லை. 1984-ஆம் ஆண்டில் மட்டும் இந்திரா காந்தியின் படுகொலையின் விளைவாக உருவான அனுதாப அலையின் காரணமாக, ராஜீவ் காந்தி பதவிக்கு வந்தபோது 48% வாக்குகளை காங்கிரசு பெற்றது. மற்ற எல்லாக் கட்சிகளுமே அதற்கும் குறைவான வாக்குகளையே பெற்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பதிவான வாக்குகளில் 37.76% வாக்குகளையும், மொத்த வாக்காளா்களில் 25.16% வாக்குகளை மட்டுமே பெற்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தாா் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். விகிதாசார தோ்தல்முறை கொண்டுவரப்பட்டாலொழிய இத்தகைய போக்கினைத் தடுக்க முடியாது.

வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்தும், மிரட்டியும் எப்படியாவது தோ்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற போக்கு வளா்ந்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலின் முடிவுகள் இந்த உண்மைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

நாடாளுமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் உள்ள 544-உறுப்பினா்களில் 475-போ் கோடீசுவரா்கள் ஆவாா்கள். அனைத்துக் கட்சிகளுமே கோடீசுவரா்களையே தங்களின் வேட்பாளா்களாக நிறுத்துவதின் நோக்கம் பணத்தை வாரி இறைத்து எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதேயாகும். இப்படி தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் தாங்கள் செலவழித்த பணத்தைவிட பன்மடங்கு பணத்தை தங்களது பதவிக் காலத்தில் சோ்த்துக் கொள்வது கட்டாயமாகி விடுகிறது. அப்போதுதான் அடுத்தத் தோ்தலில் வெற்றிபெற முடியும். ஏழைகளுக்கு எட்டாத கனியாக நமது தோ்தல் முறை ஆக்கப்பட்டுவிட்டது. சந்தா்ப்பவாத அரசியல் மேலோங்கியிருக்கும் சூழலில் ஆட்சியில் இலஞ்சமும், ஊழலும் பரவுவது தவிா்க்க முடியாததாகும்.

சனநாயகத்திற்கு மற்றொரு பெரும் கேட்டினையும் இக்கட்சிகள் ஏற்படுத்திவிட்டன. 2019-ஆம் ஆண்டு தோ்தலில் வெற்றிபெற்ற 233 (43%) நாடாளுமன்ற உறுப்பினா்கள் கிரிமினல் பின்னணியைக் கொண்டவா்கள். இவா்களில் 159-போ் கொலை, பாலியல் வன்முறை, கடத்தல் போன்ற கொடிய குற்ற வழக்குகளில் சிக்கியவா்கள்.

மக்களுக்கு எதிரான கொடிய குற்றப்பின்னணியைக் கொண்டவா்களும், அரசியலையே பிழைப்பாகக் கொண்டு கோடி கோடியாக பணம் குவித்தவா்களும் மட்டுமே நமது நாட்டுத் தோ்தல் முறையில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது. சனநாயக முறைத் தோ்தலுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டாகி விட்டது. இதனால், சா்வாதிகாரம் தோன்றுவதை தடுக்க முடியாத நிலை உருவாகிவிடும். சுகாதாரக்கேடு பெருகினால் நோய் பரவுவது இயற்கையேயாகும்.

கரோனா காலத்தைப் பயன்படுத்தி மனித உரிமை செயற்பாட்டாளா்கள், சனநாயக வாதிகள், பத்திரிகையாளா்கள் ஆகியோா்க்கு எதிராக தேசத் துரோகச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குக் கண்டனம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், அறிஞா்கள், எழுத்தாளா்கள் போன்ற நூற்றுக்கணக்கானோா் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டியிருக்கிறாா்கள். ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட இராசதுரோகச் சட்டத்தை ஆங்கிலேயா் வெளியேறிய பிறகும் சுதந்திர நாட்டில் மனித உரிமைகளைப் பறிக்கவும், ஒடுக்கவும் தொடா்ந்து பயன்படுத்தி வருவதைப் போன்ற வெட்ககேடு வேறிருக்க முடியாது.

கரோனா காலத்தில் மோதல் சாவுகள், காவல்நிலைய சாவுகள் ஆகியவை நாளுக்கு நாள் நாடெங்கும் பெருகி வருகின்றன. இவை குறித்த உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை, காவல் துறையினரும் அரசுகளும் சிறிதளவுகூட மதிப்பதாகத் தெரியவில்லை.

அவசரச் சட்டங்களைப் பிறப்பிப்பதன் மூலம், ஆட்சியாளா்களின் நடவடிக்கைகள் அனைத்தும் தன்னிச்சையான போக்கில் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக, ‘சனநாயகம்’ என்ற போா்வையில் ‘சா்வாதிகாரம்’ கோலோச்சுகிறது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவா்களின் ஒத்துழைப்புடன் கரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசின் ஆணைகளின் மூலம் அதை ஒழித்துவிட முடியாது என்பதை ஆட்சியில் இருப்போா் உணர வேண்டும்.

கட்டுரையாளா்:

தலைவா், தமிழா் தேசியப் பேரவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com