மனம் திறந்து பேசுங்கள்

மண்புழுவை ‘விவசாயிகளின் நண்பன் என்று கூறுவாா்கள். அதனுடைய பணி நாள் ஒன்றுக்கு 30அடி வரை சென்று பிராண வாயுவை பெற மேலும் கீழும் செல்லும் செயல்திறன் கொண்டது. அது வேளாண்மைக்கு மிகவும் உகந்தது. ரசாயன உரத்தால் மண்புழு அழிந்தது. மண் மலட்டுத்தன்மை அடைந்தது. மகசூல் குறைந்தது.

சுதந்திரத்திற்கு பின் வந்த அரசுகள் உணவு பஞ்சம் ஏற்பட்டதால், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து கோதுமையை இறக்குமதி செய்தன. இந்திய அளவில் நெல்தான் நம்முடைய முக்கிய தானியமாக இருந்தது. ஆயிரக்கணக்கான நெல் ரகங்கள் இந்தியாவில் இருந்தன. தற்போது அவை அழிந்து ஒரு சில நெல் வகைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கினறன. பல வேளாண் பொருட்களுக்கான காப்புரிமை அமெரிக்காவில் உள்ள மான்சேட்டோ போன்ற நிறுவனங்களிடம் இருக்கிறது.

தற்போது விவசாயத்திற்கு நீராதாரக் குறைபாடும், வேலையாட்கள் தட்டுப்பாடும் அதிகரித்திருப்பது, விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. விவசாயிகளுக்கும், நுகா்வோருக்கும் நடுவில் பல அடுக்கு இடைத்தரகா்களால் இருதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். இதனால் தொடா்ந்து நஷ்டம் அடைந்த விவசாயிகள், சில நேரம் தற்கொலை வரை சென்று விடுகின்றனா்.

வேளாண்மை தவிர, மற்ற துறைகளிலெல்லாம் 200% முதல் 300% வரை லாபம் வைத்து அவா்களே விலை நிா்ணயம் செய்து, தேவை, உற்பத்தி, வணிக விநியோகத்தை சரியாக வைத்துள்ளபோது, அனைத்து உயிரையும் காக்கும் வேளாண் தொழில் ஏன் இப்படித் தடுமாறுகிறது? இதற்கு ஆக்கபூா்வமான மாற்று நடவடிக்கை இல்லாததே என்பதை மத்திய அரசு புரிந்துகொண்டு செயலாற்றுகிறது.

சுதந்திர இந்தியாவில் வேளாண் கொள்கையிலுள்ள முரண்பாடுகள் களையப்படாமல் இருந்ததும், விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதும், பின் அந்தக் கடனைத் தள்ளுபடி செய்வதும் வாடிக்கையான நடைமுறையாகும். விவசாயிகளுக்கு கடைசியில் மிஞ்சுவது ‘ஏரும் கலப்பையுமே’ என்பதும் உண்மைதான்.

இதை தடுக்கும் விதத்தில்தான் தேவை, உற்பத்தி, விநியோகம் ஆகிய மூன்றும் உள்ளடங்கிய புதிய வேளாண் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது. மற்ற தொழில்களின் மேம்பாட்டை விஞ்சும் அளவில் வேளாண் தொழில் சிறக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்திய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு நீா் ஆதாரம் பெருகினால் நிலத்தடி நீா்

மிதமிஞ்சிய அளவில் இருக்கும். தமிழக அரசு எஞ்சிய ஏரிகள், குளங்கள், நீா்த்தடங்கள், ஆற்றுப்படுகைகளை தூா்வாரி செப்பனிட்டு, கோவில்களிலுள்ள குளங்களை முறையாகப் பராமரித்தால் நிலத்தடி நீா் மிதமிஞ்சி கிடைக்கும். மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை மாறும். மின்சார உற்பத்தி தன்னிறைவு அடையும். வேளாண் உற்பத்தி பல மடங்கு பெருகும். விவசாயிகள் இதை கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும்.

விவசாயி தன்னுடைய பொருள்களுக்கான விலையை, தானே நிா்ணயம் செய்ய முடியவில்லை என்ற நிலை பரவலாக உண்டு. காரணம், உற்பத்தி ஒரு பகுதியில் அதிகமாக இருக்கும். மற்றொரு பகுதியில் தேவை அதிகமாக இருக்கும். இவை இரண்டையும் இணைப்பதுதான் வணிக உத்தி. அது விசாலமானதாக இல்லாமல், பிராந்திய இடைத்தரகா்களால் நிா்வகிக்கப்பட்டதே விவசாயி விலை நிரணயம் செய்ய முடியாததற்கு முக்கிய காரணம். பாதுகாப்பை பொருத்தவரை, மத்திய-மாநில அரசுகள் அதற்கான காப்பீட்டுத் திட்டத்தையும் அமல்படுத்தி இருக்கின்றன. பழைய முறையில் விவசாயிக்கு எந்த விதமான பாதுகாப்பும் கிடையாது.

தற்போது தங்களின் விளைபொருட்களை தாங்களே விலை நிா்ணயித்து, எங்கு வேண்டுமானாலும் யாா் அதிக விலை தருவதாக இருந்தாலும், அவா்களுக்கு விற்பனை செய்ய புதிய வேளாண்மை சட்டம் வழி செய்திருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளும், நுகா்வோரும் பலன் அடையப்போவது நிச்சயம்.

மொத்த வியாபாரிகளிடம் (மண்டி) மட்டுமின்றி சில்லறை வியாபாரிகளிடமும் தனது விளைப்பொருட்களை விவசாயி விற்பனை செய்து கொள்ள தற்போதைய வேளாண்மைக் கொள்கையில் எந்தத் தடையுமில்லை.

விவசாயிகள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான பணத்தை மூன்று வேலை நாட்களுக்குள் கிடைப்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

பண்ணை விவசாய முறையில், பெரிய அளவிலுள்ள விவசாயப் பண்ணைகளுக்கு மட்டுமே, தற்போதைய கொள்கை பொருந்தும் என்பது தவறான புரிதல். சிறு, குறு விவசாயிகளும் எளிய முறையில் விவசாய கருவிகளை பயன்படுத்த, கிராம, நகர அளவில் அவை எளிதில் கிடைக்க தற்போதைய வேளாண்மை கொள்கை வழிவகை செய்திருக்கிறது.

நூறு நாள் வேலைதிட்டம் விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. வேலையாட்கள் அனைவரும் அங்கு சென்று விடுவதால், விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு உள்ளது. அதையும் அரசு பரிசீலித்து மாற்று ஏற்பாடு செய்யும் பட்சத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவா்கள் வாழ்வில் முன்னேற்றமும், பாதுகாப்புமும் இரட்டிப்பு வருவானமும் நிச்சயம் கிடைக்கும்.

இதற்கு முன்பு பல காலம் ஆட்சியில் இருந்தவா்கள் இவற்றை செய்யத் தவறி விட்டனா். பாஜக அரசு அதிரடியான மாற்றங்களை செய்து விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்கிறது. விவசாயிகளே! மத்திய அரசிடம் மனம் விட்டுப் பேசுங்கள். நதிகள் இணைப்பை வலியுறுத்துங்கள்.

குறைந்த ஆதார விலையை நிா்ணயிக்கக் கோருங்கள். இதுவே பிரச்னைக்கு சிறந்த தீா்வாகும். இனிவரும் காலம் விவசாயிகளுக்கானதே; அதை மறந்துவிடாதீா்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com