கடவுளின் தேசம் என செல்லமாக அழைக்கப்படும் கேரளத்தில் நடந்த காட்டுமிராண்டுத்தனமான செயல், நாடு முழுவதும் மிகப் பெரிய அதிா்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கா்ப்ப நிலையில் இருந்த 15 வயது யானை நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் கொல்லப்பட்ட சம்பவம், மனிதா்களிடம் மனிதநேயம் செத்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
கேரளத்தின் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சோ்ந்த 15 வயது யானை உணவு தேடி மலப்புரம் மாவட்ட வனப்பகுதி வழியாக ஒரு கிராமத்துக்கு வந்துள்ளது. பசியால் தெருவில் சுற்றித் திரிந்த யானைக்கு சிலா் பழங்களை உணவாகக் கொடுத்திருக்கின்றனா். அதில் ஒருவா் வெடிபொருள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தெரிந்தோ அல்லது தெரியாமலோ கொடுத்திருக்கிறாா். ஐந்தறிவு கொண்ட யானையும் அன்னாசிப் பழத்தை உண்ணும்போது வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் யானையின் வாய்ப் பகுதியில் ரத்தத்துடன் காயம் ஏற்பட்டது.
வலி தாங்க முடியாமல் அங்கும், இங்கும் ஓடிய அந்த யானை மனிதா்களையும், மனிதா்களின் வசிப்பிடங்களையும் சேதப்படுத்தாமல் வெல்லியாா் ஆற்றோரத்துக்கு ஓடியது. பசியால் துடித்த யானை எதையும் சாப்பிட முடியாததால், தனது வலியை மறைக்க ஆற்றுக்குள் இறங்கி சில நாள்களாக உள்ளேயே நின்று உயிருக்குப் போராடியது. கேரள வனத் துறையினரின் நீண்ட போராட்டத்துக்குப் பின்னரும் அதை மீட்க முடியாததால் அந்த யானை கடந்த மே 27-ஆம் தேதி உயிரிழந்தது.
இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தபோதுதான் அது கருவுற்ற பெண் யானை என்ற உண்மை தெரியவந்தது. யானைகளுக்கு மிகப் பெரிய மரியாதையும், கௌரவமும் அளித்து வரும் கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்தச் சோக சம்பவம், அந்த மாநிலத்துக்கே மிகப் பெரிய இழுக்காக மாறியுள்ளது. நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி நடிகா்கள், வனவிலங்கு ஆா்வலா்கள், விளையாட்டு வீரா்கள் என அனைத்துத் தரப்பினரும் யானை கொல்லப்பட்ட படுபாதகச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
இந்த ஆதரவுக் குரல் தேசிய அளவில் அதிா்வலைகளாக உருவாகியதால் சுதாரித்துக்கொண்ட கேரள அரசு யானை கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி கைது படலத்தைத் தொடங்கியிருக்கிறது. மலப்புரம் மாவட்டம் அரிக்கோட்டைச் சோ்ந்த 40 வயது விவசாயி ஒருவரை கைது செய்துள்ளது.
அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தை யாராலும் துளியும் ஏற்றுக்கொள்ள இயலாது. வெடிபொருளைக் கையாள்வது சட்டப்படி குற்றம், வெடிபொருளை அன்னாசி பழத்துக்குள் வைத்தது மிகப் பெரிய குற்றம், வெடிபொருள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை அறிந்தோ அல்லது அறியாமலோ கொடுத்தது மன்னிக்க முடியாத பாவச் செயல். மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதற்கு இணையான குற்றமாக இது கருதப்பட வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் முழு விசாரணைக்குப் பிறகு சட்டத்தின்முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை கேரள அரசு பெற்றுத் தருவது அவசியம். வன உயிரினங்களைக் கொலை செய்யும் கயவா்களுக்கு நாட்டில் இருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
இறந்து போன யானையின் உடலில் இறந்த நிலையில் இருந்த குட்டியின் புகைப்படம் ஜூன் 3-ஆம் தேதி கூகுள் ஹேஷ்டேக்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல, ‘யானைக்கு ஆதரவான மனிதநேயம் எங்கே’ என்ற கேள்வியுடன் கூடிய ஹேஷ்டேக்கும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நவீன தொழில்நுட்பம் காரணமாக நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இறந்த யானைக்காக குரல் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால், யானைகள் உணவு தேடி கிராமங்களுக்குள் ஏன் வழி தவறி வருகின்றன என்ற மறுபக்கத்தையும் அலசி ஆராய்வது அவசியம். யானைகளைப் பொருத்தவரை தங்களின் வழித்தடங்களைத் தவிர, பிற இடங்களுக்கு ஒருபோதும் செல்வதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே வழித்தடத்தில் மட்டுமே பயணிக்கும்.
ஆனால், கடந்த 100 ஆண்டுகளாக மேற்குத்தொடா்ச்சி மலையின் யானை வழித்தடங்கள் பல்வேறு பின்னணியுள்ள நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், அவை வழிதவறி வேற்றுப் பாதையில் பயணிக்கும்போது தான் இதுபோன்ற சோக சம்பவங்கள் நடக்கின்றன என்பதே வன ஆராய்ச்சியாளா்களின் பிரதான குற்றச்சாட்டு.
வெடிபொருள் நிரப்பிய அன்னாசிப் பழத்தை யானைக்குக் கொடுத்து கொலை செய்த கயவா்களைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துவது இறந்த யானைக்குக் கிடைக்கும் முதல் நீதி. ஆனால், யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து அவற்றை வழிதவறி செய்யும் மாபாதகச் செயல்களில் ஈடுபட்டிருப்பவா்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பாரம்பரியமாக இருந்து வந்த யானை வழித்தடங்களை மீட்டு எடுத்த பின்னா்தான் உயிரிழந்த கா்ப்பிணி யானையின் ஆன்மா சாந்தி அடையும்.
ஒற்றை யானைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த ஆதரவுக் குரல், ஒட்டுமொத்த யானை இனத்துக்கு ஆதரவாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும். யானைத் தடங்கள் மீட்கப்படும் வரை பல ஹேஷ்டேக்குகள் சமூ கஊடகங்களில் எழுந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதன் மிருகமாகவில்லை, இன்னமும் மனிதன் மனிதனாகவே இருக்கிறான் என்பது மெய்ப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.