கரோனா தடுப்பில் கேரளம் முன்மாதிரி...

நம் நாட்டில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று எனப்படும் உயிர்க்கொல்லி தீவிரமாக நாடு முழுவதும் பரவும் முன்பே கேரளம் தயாரானது.

நம் நாட்டில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று எனப்படும் உயிர்க்கொல்லி தீவிரமாக நாடு முழுவதும் பரவும் முன்பே கேரளம் தயாரானது. அதாவது, தேசிய பொது முடக்கத்தை கடந்த மார்ச் 25-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பே கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள கேரள மாநிலம் ஆயத்தமாகி விட்டது.
 கேரள அரசின் இந்த நடவடிக்கைகள் பல நன்மைகளை அந்த மாநிலத்தில் உருவாக்கியது. அதன் முழு விவரங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியுள்ளது.
 இன்று வரையிலும், நம் நாட்டின் அனைத்து மாநிலங்களின் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பையும் கணக்கிட்டால், கேரள மாநிலத்தில்தான் இந்த நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த அளவிலான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நிலவரப்படி கரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,922; ஆனால், கேரள மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 2,407 பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாயினர் என்பது கவனிக்கத்தக்கது.
 அது மட்டுமின்றி, அந்த மாநிலத்தில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நிலையிலும், அங்கே முதன்முறையாக சுகாதாரத் துறையின் அமைச்சராகப் பணியாற்றும் கே.கே.ஷைலஜா, அவருடன் சேர்ந்து இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த கடினமாகப் பணி செய்த காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பணி செய்த அரசு ஊழியர்கள் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 கேரள சுகாதாரத் துறை அமைச்சர், ஆசிரியை ஷைலஜா என்று அழைக்கப்படுகிறார். காரணம், அவர் அமைச்சராவதற்கு முன் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். அவரின் சிறந்த அமைச்சர் பணியினால், இப்போது அவரை அனைவரும் "கரோனா தீநுண்மியின் கொலையாளி' என அழைக்கின்றனர். தினமும் காலை 7.30 மணிக்கு தன் பணியைத் தொடங்கும் அமைச்சர் ஷைலஜா, மறுநாள் அதிகாலை 2 மணி வரை தனது அலுவலக வேலையைத் தொடர்ந்து செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
 மக்களின் சுகாதாரம், பெண்களின் முன்னேற்றம், வயது முதிர்ந்தோர், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டோர், பாலின பாகுபாடற்றவர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகிய பணிகள் ஷைலஜாவின் அமைச்சரவைக்கு உட்பட்ட செயல்கள்.
 மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அமைதியாக, மிகவும் துணிச்சலாக, எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் பணியாற்றுவது அமைச்சர் ஷைலஜாவின் பழக்கம். கேரள மாநிலத்தில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொண்டு கட்டுப்படுத்தியதால் அவருக்கு அறிவியலில் இருந்த ஆர்வம், புரிதல் தெரிந்தது. தனது பாட்டியிடம் இருந்துதான் கற்றுக்கொண்ட பாடத்தினால், தனக்கு சமூக சேவையில் ஆர்வம் உண்டானது எனக் கூறுகிறார் அவர்.
 அந்த முதிய பெண் கல்வி கற்றவர் அல்ல, ஆனால் கிராமப்புறத்தில் ஒரு சமூகத்தின் தலைவராக வலம் வந்தாராம். அந்த கிராமத்தில் பெரியம்மை நோய் பரவியபோது, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்வது, அவர்களுக்கு உணவு அளிப்பது முதலான செயல்களை சர்வ சாதாரணமாக செய்பவர் தனது பாட்டி எனக் கூறுகிறார் அமைச்சர். இது போன்ற சேவைகளை கிராமத்தின் பல பகுதிகளில் செய்த பாட்டி, அருகிலுள்ள ஒரு குளத்தில் குளித்து தன் உடலைச் சுத்தம் செய்த பின்னரே வீடு திரும்புவார் எனக் கூறுகிறார் அமைச்சர் ஷைலஜா. நோய்த்தொற்று தனது வீட்டில் இருப்பவர்களுக்கு பரவிவிடக் கூடாது என்ற எண்ணமே இதற்கு காரணம்.
 தனது பாட்டியின் துணிச்சலான வாழ்க்கையைப் பாராட்டும் அமைச்சர் ஷைலஜா, இதுபோன்ற துணிச்சலான பெண்கள் பலர் கேரள மாநிலத்தில் உள்ளனர் எனக் கூறுகிறார். 2018-ஆம் ஆண்டில் பரவிய நிபா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கம், கேரள மாநிலத்தில் 18 பேரைப் பலி வாங்கியது. தற்போது உருவாகியுள்ள கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கம், நோய்த்தொற்றின் மீது தீவிரமான எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற படிப்பினையை தனக்கு உருவாக்கியுள்ளது எனக் கூறுகிறார் அமைச்சர் ஷைலஜா.
 இவர் கேரள மாநிலத்தில் நிபா தீநுண்மி நோய்த்தொற்றைக் கையாண்ட விதம் பரவலாகி, 2019-ஆம் ஆண்டில் "வைரஸ்' எனப்படும் மலையாள திரைப்படத்தை உருவாக்கியது எனவும், அதில் ரேவதி நடித்துள்ளார் எனவும் கூறுகிறார். வெளிநாட்டில் பரவிய கரோனா தீநுண்மி நோய்த்தொற்று இந்தியாவிலும் பரவுமாஎன கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி மருத்துவர்களைக் கேட்டுள்ளார் ஷைலஜா. பரவும் என அவர்கள் பதில் அளித்தவுடன் மிகவும் துரிதமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் அமைச்சர் ஷைலஜா.
 கேரளத்தின் 14 மாவட்டங்களில் மருத்துவப் பணிக் குழுக்களை அமைத்து, 10 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 500 படுக்கைகளை உருவாக்கி, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியபடி மருத்துவ சோதனை நடத்தி, நோயாளிகளைத் தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டிய பணிகளையும் ஆயத்தம் செய்துள்ளார்.
 கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி, வூஹான் நகரிலிருந்து கேரளம் வந்த கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதித்த நோயாளியைத் தொடர்ந்து பலர் வருவார்கள் என்ற தகவல் பரவியதால், கேரளத்தின் நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நோய்க் குறியீடு உள்ளவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நோய்க் குறியீடு உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 இதுபோன்ற பல நடவடிக்கைகளினால், கடந்த மார்ச் மாத முடிவில் 1,34,000 பேர் கேரளத்தின் 620 அரசு மருத்துவக் கண்காணிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் இடமில்லை என்ற நிலையில் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க 40,000 மருத்துவ உதவிப் பணியாளர்களை அரசு பணியமர்த்தியது.
 தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டிய வயது முதிர்ந்தோர், உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிறப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மருத்துவப் பணியில் தீவிரமாக உள்ளவர்கள், அரசுப் பணியாளர்கள் போலீஸôருக்கும், நோயாளிகளைக் கவனிக்கும் பணியாளர்களுக்கும் முழு மருத்துவக் கவனம் செலுத்தப்பட்டது.
 வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் கேரள மாநிலத்துக்குத் திரும்பிய மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். காரணம், இவர்கள் வெளியிடங்களில் பணி செய்து, கேரளத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்துடன் சில மாதங்கள் வந்து வசித்து, திரும்ப பணி செய்யும் வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் என்பது அந்த மாநிலத்தின் வழக்கமான நடைமுறை. இவர்கள் அனைவருக்கும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் பணி மிகவும் கட்டுக்கோப்பான முறையில் நடத்தப்பட்டது.
 நாடு முழுவதும் போக்குவரத்தை கட்டுப்பாட்டுக்குள் மத்திய அரசு கொண்டுவருவதற்கு இரண்டு நாள்கள் முன்பே, கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்தை முதல்வர் பினராயி விஜயன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன, பொதுக் கூட்டங்கள், ஆலய வழிபாடுகள் என அனைத்தும் தடை செய்யப்பட்டன.
 ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்க பல பொது இடங்கள் அரசால் உருவாக்கப்பட்டன. சுமார் 1,50,000 வேறு மாநில, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று வேளை இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இவர்களில் குணமடைந்தவர்களுக்கும், நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகள், ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
 மலையாள மொழியில் நிறைய தகவல்கள் விளம்பரப்படுத்தப்படுவதால் அனைத்து மக்களும் புரிந்துகொள்ளும் நிலை நெடுங்காலமாக அந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் வறுமை விகிதம் 1.7% என மத்திய அரசின் கணக்கீட்டில் குறியிடப்பட்டு, இந்த அளவு அகில இந்தியாவிலும் குறைந்த வறுமை அளவு விகிதம் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.
 இன்றைய நிலையில், இந்த மாநிலத்தின் நன்மைகள் பலவற்றை உருவாக்கிய அமைச்சர் ஷைலஜாவை பலரும் பாராட்டுவது கவனிக்கத்தக்கது. உலகின் வேறு பல நாட்டின் பெண் தலைவர்களின் தரமான ஆட்சியுடன், ஷைலஜாவின் செயல்பாட்டைப் பலர் ஒப்பிட்டுள்ளனர். இன்றைய கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், வங்கதேசம், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, நியூசிலாந்து, தைவான் நாடுகளிலும் பெண் அமைச்சர்களின் பணி பாராட்டப்படுவதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 கட்டுரையாளர்:
 ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com