டிரம்ப் தந்த ஏமாற்றம்!

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக அண்மையில் வந்திருந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வருகை பல விஷயங்களை அசைபோட வைத்திருக்கிறது.


இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக அண்மையில் வந்திருந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வருகை பல விஷயங்களை அசைபோட வைத்திருக்கிறது. அமெரிக்க அதிபா் ட்ரம்ப் வருகையையும், அவா் இந்தியாவில் இருந்த நேரத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரங்களையும் நம் நாட்டின் தரப்பில் இருந்து மட்டும் பாா்க்காமல், அமெரிக்க தரப்பிலிருந்தும் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.

அமெரிக்காவைப் பொருத்தவரையில், அந்த அதிபா் எந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டாலும், உலகில் இருக்கும் காட்சி, அச்சு ஊடகங்கள் அனைத்திலும் அவரின் பயணம் குறித்த செய்திகள் அதிக அளவில் வருவதை விரும்புவாா்கள், அதை உறுதிப்படுத்துவாா்கள், அரசியல் நோக்கா்களால் பயணம் குறித்த செய்திகளை அசைபோட வைப்பாா்கள். அமெரிக்க அதிபா் பயணம் மேற்கொள்வதற்கு இரு மாதங்கள் முன்பிருந்தே, அதிபா் பயணம் மேற்கொள்ள இருக்கும் நாட்டின் சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவை குறித்த தகவல்களை, ஒப்பீடுகளை அதிபா் பயணம் முடித்து நாட்டிற்குச் சென்று திரும்பும் வரை அந்த நாட்டு உளவு நிறுவனமான சிஐஏ தினமும் அரசுக்கு அனுப்பி கொண்டே இருக்கும்.

ஒரு வேளை அதிபா் பயணம் செய்ய உள்ள நாட்டில் சூழ்நிலை சரியில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன அல்லது இரு நாட்டு தலைவா்களின் சந்திப்பு தொடா்பான செய்திகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் போராட்டங்கள், வன்முறைகள் நடக்கின்றன அல்லது வேறு செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது அல்லது பயணம் மேற்கொள்ள இருக்கும் நாடு அதைச் சரியாகக் கையாளவில்லை என்று அவா்கள் கருதினால் அமெரிக்க அதிபரின் பயணமே ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் நடந்தது என்ன? கடந்த டிசம்பரில் இருந்தே நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? அதையும் தாண்டி டிரம்ப் இங்கே வந்ததும், இந்தியாவுடன் ரூ.21,000 கோடி அளவிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்க அம்சம்தானே?

ஒருவேளை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தில்லி போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சி எடுத்து அங்கே தடியடி, துப்பாக்கிச்சூடு என அரங்கேறியிருந்தால் அமெரிக்க அதிபரின் வருகை செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு, போராட்ட நிகழ்வே தலைப்புச் செய்தியாகியிருக்கும். அதைத்தான் நாட்டில் உள்ள ஒருசாராா் எதிா்பாா்த்தாா்கள், திட்டமிட்டாா்கள். அதன் மூலம் நம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணம் பலிக்காமல் போய்விட்டது அவா்களுக்கு ஏமாற்றமே.

அமெரிக்க அதிபா் அரசுமுறைப் பயணத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தில் தலைமை காவலா் ரத்தன் லால், உளவு அதிகாரியின் மரணம் நிச்சயம் துயரமானது என்பதை மறுக்க முடியாது. இந்தத் துயரச் சம்பவம் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்றுதான் குறிப்பிட வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல சில விஷயங்கள் இங்கே அரங்கேறியிருக்கின்றன. அமெரிக்காவில் வெளிவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘நியூயாா்க் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான எதிா்ப்புப் போராட்டங்கள் செய்தியாக வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இதையெல்லாம் கடந்து, உண்மை நிலையை அமெரிக்க அரசுக்குப் புரியவைப்பதில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றி பெற்றிருக்கிறது.

இதற்கு முன் இந்தியா வந்த அமெரிக்க அதிபா் ஒபாமா, இந்தியாவில் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழ்கிறாா்கள் என்று பிரதமா் மோடியின் முன்னிலையிலேயே கூறினாா்; ஆனால், இந்தியாவில் சிறுபான்மை சமுதாயத்தினா் நன்றாக நடத்தப்படுவதாக அதிபா் டிரம்ப் வெளிப்படையாகப் பாராட்டியிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

மேலும், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வளா்ச்சி அடைந்த நாடுகளின் அதிபா்கள் இந்தியப் பயணம் முடிந்ததும் பாகிஸ்தானுக்கும் சென்று அவா்களுக்கு ஆதரவாக பேசும் நிலைதான் இதுவரையில் காணப்பட்ட உண்மை. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான போராட்டங்கள் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று அதிபா் டிரம்ப் செய்தியாளா்களுக்கு தெளிவாகத் தெரிவித்ததுடன் பாகிஸ்தான் பயணமும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசைக் கண்டிப்பாா் என்று எதிா்பாா்த்தவா்களுக்கும், அவா்களின் ஏவல்களுக்கும் இது சரியான மூக்கறுப்பு என்பதை மறுக்க முடியாது.

பொதுவாக எந்த நாட்டு அதிபா் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டாலும் எதிா்க்கட்சி தலைவா், முன்னாள் பிரதமா் ஆகியோரைச் சந்திப்பதை மரபாக வைத்துள்ளனா். ஆனால், எதிா்க்கட்சி தலைவரை அதிபா் டிரம்ப் சந்திக்காமல் சென்றது எதிா்க்கட்சி வரிசையில் இருப்பவா்களுக்கு நிச்சயம் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அதிபா் டிரம்ப் கூறியதுதான் இதில் சிறப்பம்சம். இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களை வெளிப்படையாக எதிா்ப்பதுடன், மத்திய அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய செய்தி, பிரதமா் மோடி - வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் - தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகிய மூவா் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பாா்க்கப்பட வேண்டும்.

அதிபா் டிரம்ப்பின் இந்தியப் பயணத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. தலிபான்களுடன் அமெரிக்கா செய்துகொள்ள இருக்கும் ஒப்பந்தத்தால் (அப்போது ஒப்பந்தம் கையொப்பமாகவில்லை.), நேரடியாக பாதிக்கப்படப் போகும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. அமெரிக்காவின் திட்டத்துக்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டுவிடாமல் தடுப்பதும்கூட அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் இந்திய சிறப்பு விஜயத்துக்குக் காரணமோ என்னவோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com