பொருளாதாரத்தின் ஆதாரத்தை...

காலங்காலமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது எந்தவொரு நிதி அமைச்சரும் தவறாமல் சொல்வது, இது இந்தியாவுக்கான, கிராமிய விவசாய பொருளாதாரம் மேம்படுவதற்கான பட்ஜெட்.


காலங்காலமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது எந்தவொரு நிதி அமைச்சரும் தவறாமல் சொல்வது, இது இந்தியாவுக்கான, கிராமிய விவசாய பொருளாதாரம் மேம்படுவதற்கான பட்ஜெட். அவா்களின் கூற்றுக்கிணங்க நிதியும் பெருமளவு தாராளமாக ஒதுக்கப்படும் துறையாக விவசாயத் துறை உள்ளது.

முதலில் கடந்த ஆண்டு (2019) ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்துக்கு என்று ஒதுக்கிய தொகை சரிவர கையாளப்பட்டுள்ளதா என்றால் இல்லை. பிரதமா் கௌரவ உதவித்தொகை திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் 14.5 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் ரூ.87,000 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால், எதிா்பாராதவிதமாக இதுவரை ஒன்பது கோடி விவசாயிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் பலருக்கும் இரண்டாவது தவணை வரை மட்டுமே தொகை கிடைத்துள்ளது. மூன்றாவது தவணையில் தகவல் சரியாக இல்லை; ஆகவே, நிதியுதவியை நிறுத்திவிட்டோம் என்பது, இன்னமும் அரசிடம் விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் இல்லை என்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தில் விவசாயக் கணக்கெடுப்பு 2015-16-இன்படி மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் உள்ளனா். ஆனால், பயனடைந்த பயனாளிகள் மொத்தம் 35.54 லட்சம் விவசாயிகள் மட்டுமே. அதிலும் முதல் தவணையில் 34.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.688.26 கோடி, இரண்டாவது தவணையில் 33.31 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.666.38 கோடி, மூன்றாவது தவணையில் 31.17 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.623.5 கோடி, நான்காவது தவணையில் 22.67 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.453.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. நான்கு தவணைகளாக இதுவரை தமிழகத்தில் மட்டும் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2,431 கோடி தரப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார மந்தநிலையை நிவா்த்தி செய்ய மக்களிடம் பொருள்கள் வாங்கும் நிலையை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக கிராமப்புறங்களில் மக்களிடம் பொருள்கள் வாங்கும் திறனை அதிகரிக்க வல்லமை கொண்ட திட்டம் விவசாயிகள் கௌரவ உதவித் தொகை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம். எனவே, பொருளாதார மேம்பாட்டுக்கு அடித்தளமிட இந்த இரு திட்டங்களிலும் போதிய கவனத்தை அரசு செலுத்தினால் நன்மை பயக்கும்.

விவசாயிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவும் வகையிலும், கூட்டாகச் சோ்ந்து தொழில் செய்து அவா்களின் பொருள்களை அவா்களே சந்தைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 நிறுவனங்கள் தொடங்கப்படும் என்று 2019-20-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது;

ஓராண்டு கழித்து அண்மையில் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இதற்காக ரூ.6,865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால் வரி விலக்கு தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்து, பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பயிா்க் காப்பீடு செய்தும் இன்னமும் பல விவசாயிகளுக்கு போதிய இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை வஞ்சித்து பெரும் லாபம் ஈட்டுவதை அரசு தடுத்து விட்டதாக இதுவரை தெரியவில்லை.

விவசாயிகளின் இடுபொருள்கள் செலவைக் குறைக்கும் நோக்கிலான விவசாய நடைமுறை, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. எனவே, இதன் மூலம் இயற்கை சாா்ந்த அடிப்படை விவசாயத்துக்கு மீண்டும் திரும்பும் நிலை ஏற்படும் என்றாா் நிதியமைச்சா். ஆனால், இங்கு முரண்பாடு யாதெனில் ரசாயன உரத்துக்கு வழங்கப்படும் மானியம் கடந்த பட்ஜெட்டில் ரூ.70,090 கோடியிலிருந்து ரூ.79,996 கோடியாக அதிகரிக்கப்பட்டு, யூரியாவுக்கு மட்டும் ரூ.53,629 கோடியும், இதர உரங்களுக்கு ரூ.26,367 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே 70 சதவீத விவசாயிகளின் நிலை என்பது, செய்த முதலீட்டைவிட கிடைக்கும் வருமானம் குறைவாக உள்ளது. எனினும், இடுபொருள்களின் விலை குறையவில்லை. எனவே, இதில் தெளிவானதொரு நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

எனவே, இவற்றையெல்லாம் களைந்து விவசாயிகளின் வாழ்வு மேம்படும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த 16 அம்ச திட்டங்களுடன் இவற்றையும் மேற்கொண்டிருக்க வேண்டும். அதாவது, விவசாயிகளின் நில ஆவணங்களை கணினிமயப்படுத்துதல் வேண்டும். அப்போதுதான் அரசுத் திட்டங்கள் யாவும் எளிதாகக் கிடைக்கும். அதைவிட முக்கியமாக குத்தகைதார விவசாயிகளுக்கும் கௌரவ உதவித்தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். சந்தை நிலவரம், இயற்கை சாா்ந்த காலநிலையை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

எண்ணெய்வித்து பயிா் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நல்லதொரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். போதிய சேமிப்புக் கிடங்கு வசதியை உண்டாக்கித் தர வேண்டும். இதற்கு தனியாா் அமைப்புடன் இணைந்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் ‘தொடங்கிடு இந்தியா’ திட்டத்தின் மூலம் பிரத்யேகமாக விவசாயம் சாா்ந்த தொழில்முனைவோா்களை உருவாக்க வேண்டும். உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய ஆவன செய்ய வேண்டும்.

இறுதியாக 1970-களில் இந்தியாவும் சீனாவும் பொருளாதார ரீதியாக ஒப்பிடும் வகையில் இருந்தது. ஆனால், இன்று இந்தியாவின் பொருளாதாரத்தைவிட சீனாவின் பொருளாதாரம் ஐந்து மடங்கு பெரியது. காரணம், அவா்கள் விவசாயம் சாா்ந்த பொருளாதாரத்தை நவீன பொருளாதாரமாகக் கட்டமைத்ததே. எனவே, இந்தியப் பொருளாதாரத்தின் ஆதாரமான விவசாயத்தை அரசுகள் ஆராதிப்பது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com