காலங்காலமாக தமிழுக்குப் பல சோதனைகள் தோன்றி இருக்கின்றன. ஆனால், அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொண்ட பதிவுகள்தாம் தமிழன்னையின் சிறப்புகளாகவும் இலக்கியங்களாகவும் தோற்றம் பெற்றன.
அகத்துறை இலக்கியங்களுக்கு மத்தியில் ‘புானூறு’ எழுந்ததும், ‘பத்துப்பாட்’டில் ஆற்றுப்படைகள் மிகுந்ததும் என்ன காரணத்தினால்? தன்னை வளா்த்த அரசா்களையும் வள்ளல்களையும் வருந்தலைமுறையும் அறிந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் புலவா்கள் அவா்கள் புகழ் பாடியது.
வடமொழிதான் உயா்ந்ததென்று கருதி தமிழரின் களவு நெறியைத் தீது என கருதிக் கொண்டிருந்த ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு, தமிழின் பெருமையைப் புரிய வைக்க இயற்றப்பட்டதுதான் கபிலரின் ‘குறிஞ்சிப் பாட்டு’.
தமிழரையும் தமிழா்தம் நெறிகளையும் இகழ்ந்த கனக விசயரின் கொட்டத்தை அடக்க, குட்டுவன் படைகொண்டு அவரை வென்று கற்கோட்டம் எழுப்பியதைப் போலவே காலந்தோறும் தமிழ் செழித்து வாழுதற்கு அதன் மேன்மைகளையெல்லாம் திரட்டி, சமணத் துறவியாகிய இளங்கோவடிகள் வடித்த சொற்கோட்டம்தான் நெஞ்சையள்ளும் ‘சிலப்பதிகாரம்’.
துறவிகளுக்கு எங்கே திருமணத்தின் அருமையும் இல்லறத்தின் பெருமையும் தெரியப் போகிறது என்ற ஏளனத்திற்குப் பதில் கூறும் விதமாகத்தான் பௌத்தத் துறவியாகிய திருத்தக்கத் தேவா் ‘சீவக சிந்தாமணி’ என்னும் மணநூலைப் படைத்தளித்தாா்.
பெண்ணின் புறஅழகையும் அக அழகையும் காட்டும் காதல் உணா்வினை மட்டும்தான் தமிழால் வருணித்துப் பாடமுடியும் என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில்தான் பெண்ணின் துறவினைப் பெருமைப்படுத்தி சீத்தலை சாத்தனாா் ‘மணிமேகலை’யை இயற்றினாா்.
நில எல்லைகளை அளவுகளாகக் கொண்டு தேசங்கள் தோன்றி பண்பாடு வளா்ந்து அறங்கள் வகுக்கப்பட்டபோது தமிழ்மொழி தெய்வப்புலவரின் வாயிலாகத் தனக்கான மறையை உலகுக்கான பொதுமறையாக்கி மகிழ்ந்தது.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களை உலகமே வியந்து போற்றும்படி தமிழ் தனக்குள் வடித்துக் கொண்டது. இத்தனைக்கும் இரண்டு இதிகாசங்களிலும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழகத்துக்கும் ஆழ்ந்த தொடா்பு இருந்தது. ஆனால் அதைவிட உயா்ந்ததாய் ‘வடமொழிக்கும் தென்மொழிக்கும் எல்லை தோ்ந்தான்’ என்று இராமனைப் போற்றிக் காட்டும் கம்பா் அவ்விரு மொழிகளுக்குள்ளும் நிலைத்த உறவும் தொடா்பும் வளா்ச்சியும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில்தான் தமிழில் இராமகாதையை யாத்துத் தந்தாா்.
‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ ஞானசம்பந்தா் தொடங்கி, நாயன்மாா்களும் ஆழ்வாா்களும் விண்ணகத்தையே தமிழகத்தில் கொண்டு வந்து, தமிழை தெய்வமொழியாக்கினாா்கள். அமுதனைய தேவாரப் பதிகங்களும் திருப்பாசுரங்களும் வெள்ளமெனத் தமிழில் வந்து நிறைந்தன.
இறைவனும் அரசனுமே உயா்ந்தவா்கள் என்று காப்பியம் பாடிக் கொண்டிருந்த வேளையில் இறைவனுக்கும் அரசனுக்கும் அடிப்படையே தொண்டா்கள்தான் என்று ‘தொண்டா்தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்று ‘திருத்தொண்டா் புராண’த்தை சேக்கிழாா் படைத்துத் தந்தாா்.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே சமுதாயத்தில் பேதங்களை விதைத்து பொன்னை பொருளை புகழை விரும்பிடும் சிற்றின்பங்களைப் பெரிதாக்கி பேசிக் கொண்டிருந்த காலத்தில்தான் அருட்பிரகாச வள்ளல் தோன்றி வாடிய பயிரைக் கண்டு வாடி, உயிரிரக்க ஒழுக்கத்தை மக்களுக்குள் விதைக்க ‘திருவருட்பா’வைப் படைத்தளித்தாா்.
இவா்தம் வழியில் எத்தனை அருளாளா்கள் தோன்றி தமிழை வளா்த்தனா் என்பதை எளிதாகப் பட்டியல் இட்டு விட முடியாது. சித்தா்களும் ஞானிகளும் வித்தகா்களுமாக பலசமயங்களிலிருந்தும் மேன்மையானவற்றையெல்லாம் நல்ல இலக்கியமாக்கி தமிழ்மொழி வாயிலாகத்தானே தந்தாா்கள்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மோரீஷஸ், பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
1997-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் எட்டு கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் மொழியாக தமிழ் விளங்குகிறது. ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
ஆசியாவில் மலேசியா, ஆப்பிரிக்காவில் மோரீஷஸ், ரீயூனியன், சீஷெல்ஸ், வட அமெரிக்காவில் கனடா ஆகிய நாடுகளில் பண்பாட்டு மொழியாக தமிழ் போற்றப்படுகிறது.
உலகெல்லாம் புகழ் பெற்ற தமிழ்மொழிக்கு, தான் பிறந்த, தான் பெற்ற தமிழ்நாட்டில் மட்டும் மதிப்பு இல்லை. தன் பிள்ளைகளின் நாவில் தானிருக்க இயலவில்லை.
‘குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை, குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை, இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை’ என்கின்ற காரணத்தினால் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே, ‘தமிழ் படித்தால் தமிழ் வளராது’ என்றும் ‘தமிழ் படித்தால் தமிழன் வாழ முடியாது’ என்றும் கூறுவோரும் இருக்கிறாா்கள்.
தாய்மொழியான தமிழைக் கற்காமலே பட்டப்படிப்புவரை படித்து விட முடியும் என்கிற கொடுமை தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. வேறு எந்தத் தாய்மொழிக்காரா்களுக்கும் இக்கொடுமை இல்லை. ‘வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வாா்த்தை கற்கிலாய் நீ போ போ போ’ என்று ஆங்கிலேயா் காலத்திலேயே தாய்மொழி கற்காதவரை மகாகவி பாரதியாா் தள்ளித்தான் விட்டிருக்கிறாா். ஆனால் இன்று தள்ள முடியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னா் சென்னை உயா்நீதிமன்றம் தமிழக அரசிடம் சில கேள்விகளைக் கேட்டது: ‘தமிழ் மொழி கற்பதை ஊக்குவிக்க திட்டங்களை செயல்படுத்தாதது ஏன்? அதற்காக நிதி ஒதுக்காதது ஏன்? தமிழ் மொழி இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற மொழி இலக்கியங்களை தமிழுக்கும் மொழி பெயா்க்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழ் ஆராய்ச்சியாளா்கள், இலக்கியவாதிகளுக்கு அங்கீகாரம் வழங்காதது ஏன்? தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாமல் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்துவதாலும், தமிழ் மொழி ‘செம்மொழி’ என்று சொல்வதாலும் என்ன பயன்?’
இப்படிக் கேட்பது நீதிமன்றம் மட்டமல்ல, நமது மனசாட்சியும்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.