நயத்தக்க நாகரிகம்

Updated on
4 min read

 'திங்களொடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், பொங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்' என்றார் பாரதிதாசன். இதனால்தான் இவருடைய ஆசிரியர் மகாகவி பாரதியார், "தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்' என்றார்.
 இத்தகைய தொல்மொழி தமிழ் பிறந்த அன்றே இதனைப் பேசியவர்கள் புகழாய்ந்த தமிழர்கள். "மக்கள், நாட்டில் வாழ்ந்தால் என்ன? காட்டில் வாழ்ந்தால் என்ன? நிலம் பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? எங்கே நல்ல வழியில் ஆடவர்கள் வாழ்கிறார்களோ அங்குள்ள நிலம் செழிப்பாக இருக்கும்' என்ற பொருளில் "நாடா கொன்றோ காடா கொன்றோ' என்று தொடங்கி "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று முடிப்பார் தமிழ் மூதாட்டி ஒளவையார்.
 ஆனாலும், இந்த மாந்தர்களின் மாட்சி மிக்க பெருமையை வியந்து பேச மாட்டோம். அதற்காக, சிறியோர்களை பழிக்கவும் மாட்டோம் என்ற கருத்தில் "மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்று பாடினார் கணியன் பூங்குன்றனார்.
 இவ்வகையில், நற்பண்பு இல்லாதவர்கள் எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும் அவர்கள் மேன்மையானவர்கள் இல்லை. எத்தகைய கீழ் நிலையில் இருந்தாலும் இழிந்த குணம் இல்லாதவர்கள் கீழ் மக்கள் இல்லை என்பதை வள்ளுவப் பேராசான் "மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும் கீழ் அல்லார் கீழ் அல்லவர்' என்று மொழிந்தார்.
 ஆக, ஒவ்வொரு மனிதனின் அன்றாட நடவடிக்கைகளே அவனை நாகரிக மனிதனாக அடையாளப்படுத்தும். நிறைமொழி பெருமை நிலத்து மறைமொழியான அவர்களது சொற்களே காட்டி நிற்கும். இத்தகைய நாகரிக மாந்தர்கள் "நாகரிகம் காக்க நஞ்சையும் உண்டு மகிழ்வர்' என்கிறார் பொதுமறை ஆசிரியர்.
 ஒருவர் வாழைப்பழம் வாங்க கடைக்குச் சென்றார். அங்கே கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த வாழைப்பழ தாரை உற்று நோக்கினார். பின்னர் கடைக்காரரிடம், "இது எந்த ஊர் பழம்? தாரில் கீழே உள்ள பழங்கள் எல்லாம் நசுங்கியுள்ளன; தாரின் இடையே உள்ளவை காயாகவே உள்ளன; மேலே உள்ள பழங்கள் மிகவும் கனிந்து இருக்கின்றனவே' என்றார்.
 கடைக்காரர், "உனக்கு வேண்டிய பழத்தை எடுத்துக்கொள். அதை விடுத்து முழு வாழைப்பழ தாரையே ஆய்வு செய்து தேவை இல்லாமல் கேள்வி கேட்காதே' என்றார்.
 பழம் வாங்க வந்தவர் "நான் வாங்க இருக்கும் பொருளில் குறை இருந்தால் சொல்லத்தான் செய்வேன், இதற்கு அதிகமாகப் பேசுகிறாயே' என்று சொல்ல வார்த்தைகள் தடித்த உருவம் கொள்ள, கைகலப்பில் காட்சி நிறைவுபெற இருந்த நிலையில், அங்கே வந்த முதியவர் இருவரிடமும் சொற்போரை நிறுத்தி விவரம் கேட்டறிந்தார்.
 பின்னர், பழம் வாங்க வந்தவரிடம் "உனக்கு எத்தனை பழம் வேண்டும்?' என்றார். அவர் "இரண்டு' என்றார். முதியவர் "இந்த வாழைப்பழ தாரில் சுமாராக இருநூறு பழங்கள் இருக்கும். உனக்கு தேவை இரண்டு பழம்தான். அதை இதிலிருந்து தேர்வு கொள். அதை விடுத்து தேவைக்கு மீறி பேசி விவாதம் செய்வது நம் நோக்கத்தை சிதைக்கும்' என்றார்.
 இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, சில நாகரிகக் காட்சிகள் மனத்தில் மலர்ந்தன. "கடவுள் இல்லை' என்று வாழ்நாள் முழுமையும் உரக்கக் கூவிய ஈ.வெ.ரா., தான் தொடங்கிய "குடியரசு' பத்திரிகையை "சைவப் பெருநாவலர்', "ஆன்மிகப் பெரியார்' திருப்பாதிரிபுலியூர் ஞானியாரடிகளைக் கொண்டு தூப தீப ஆராதனை செய்து தொடங்கினார் என்பது வரலாறு.
 ஈ.வெ.ரா. ஒரு முறை குன்றக்குடி ஆதீன மடத்திற்குச் சென்றார். அப்போது குன்றக்குடி அடிகளார் அவருக்குத் தந்த திருநீற்றுச் செல்வத்தை "ஆண்டவன் இல்லை' என்று முழங்கி வந்த ஈ.வெ.ரா. தட்டி விடவும் இல்லை; வாங்கியபின் கீழே கொட்டி விடவும் இல்லை. அதனைத் தம் நெற்றியில் அணிந்து கொண்டார்.
 பின்பு ஒரு முறை வடலூர் சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபைக்குச் சென்ற ஈ.வெ.ரா. ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றபின், அங்கே இருந்த அறிவிப்புப் பலகையில் "இதற்கு மேல் புலால் உண்ணும் அன்பர்கள் செல்லக் கூடாது' என்று எழுதியிருந்ததைக் கண்டார்.
 "நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவேன்; நான் விரும்பியதையெல்லாம் சாப்பிடுவேன். நீ யார் எனது உணவுப் பழக்கத்தை வைத்து என்னைத் தடுப்பதற்கு?' என்று எதிர்த்து முழங்கவோ, தன் தோழர்களோடு வெளியில் நின்று போராட்டம் நடத்தவோ இல்லை. சத்திய தர்ம சாலையில் எழுதியதை ஏற்றுக்கொண்டு அன்று திரும்பினாரே அதுதான் நாகரிகக் காட்சி என்று இன்றும் வரலாறு பேசுகிறது.
 ஈ.வெ.ரா. உயிருடன் இருந்தபோதே அவரது தோழர்கள் திருச்சியில் அவருக்கு முழு உருவச் சிலையை வைக்க விரும்பி, நிதி திரட்ட முனைந்தபோது, அவர் திருச்சியில் இருந்த வைணவ சிரோமணி, இந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் அ.வெ. ரா. கிருஷ்ணசாமி ரெட்டியாரை அழைத்து அவரை அந்த நிதி சேகரிக்கும் குழுவுக்கு தலைவராக இருக்கும்படி வேண்டினார்.
 அ.வெ. ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் பன்மொழி அறிஞர். ஆதிசங்கரரின் "செளந்தரிய லகரி'யை தமிழில் மொழி பெயர்த்தவர். ஈ.வெ.ரா-வின் அன்பாணையை ஏற்று பணி முடித்து கணக்கைத் துல்லியமாக ஒப்படைத்தார். ஒருவர் பழுத்த நாத்திகர்; பிறிதொருவர் பழுத்த ஆத்திகர். ஆனாலும் நாகரிக வளமிக்க நாணயமான நட்பு.
 ஈ.வெ.ரா தனது முதுமை பிராயத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது, அவரது நீண்ட நாளைய நண்பரான ராஜாஜியை திருவண்ணாமலையில் சந்தித்து தன் நிலையை விளக்கி அவரின் இசைவு பெற்ற பின் திருமணம் செய்து கொண்டார் என்பதும், அதே ராஜாஜியின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு இடுகாட்டில் அவரது மறைவை சகிக்க இயலாது ஈ.வெ.ரா குலுங்கி குலுங்கி அரற்றினார் என்பதும் நட்பு நாகரிகத்தின் அழியா அடையாளங்கள்.
 ஒரு சமயம் திருச்சி தேவர் ஹாலில் ஈ.வெ.ரா. முன்னிலையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவரது பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்து சாடி பேசினார். கூட்டம் முடிவுறும் சமயத்தில் ஜெயகாந்தனுக்கு பலத்த கண்டனங்கள், ஆவேச குமுறல்கள் தென்பட்டன. அப்போது ஈ.வெ.ரா. தன் தோழர்களிடம் சொன்னாராம், "அவர் அவரது கருத்தில் தெளிவாக உள்ளார்; தைரியமாக பேசுகிறார். இதில் தவறு இல்லை' என்று கூறி சமாதானப்படுத்தினார் என்பதும் நயம் தரும் நாகரிக விழுமியம்தான்.
 ஈ.வெ.ரா. ஒரு சித்தர் மாதிரி. பொதுவாக, சித்தர்களின் மொழிகள் எளிதில் புரியாது. அவரது செயல்களும் எல்லார்க்கும் விளங்காது. ஈ.வெ.ரா.வின் பிள்ளையார் சிலை உடைப்பிற்குப் பிறகுதான் பல்லாயிரம் பிள்ளையார் கோயில்கள், பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் என்று இன்று அமர்க்களப்படுகிறது.
 ஈ.வெ.ரா. பார்ப்பனர்களை எதிர்த்தார். அரசின் கொள்கை வழி ஜாதி அடிப்படையில் தகுதி இருந்தும் அவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். ஒரு காலத்தில் பிராமணர்கள் கடல் தாண்டக் கூடாது என்றிருந்த வேத விதியை மீறி கடல் தாண்டி சென்று தம் தகுதியால் பத்துக்கும் மேற்பட்ட உலக நிறுவனங்களின் தலைவர்களாக உயர்ந்து உள்ளனர்.
 அமெரிக்க வல்லரசு நாட்டின் துணை அதிபர் பதவிக்கே நம்மூர் பிராமண வம்சாவளி அம்மணி தேர்வாகி உள்ளார். இதெல்லாம் எதிர்மறை நல்ல வினையாற்றல் போலும் என்றால் அதுவும் சரிதான்.
 ஒரு காலத்தில் ராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று கிளம்பியவர்கள் இன்றைக்கு கம்பன் கழகங்களை நடத்துவதும், நாடெங்கிலும் கம்பன் கழகங்கள் அருகுபோல் வேரோடி ஆல்போல் தழைப்பதும் நினைவுகூரத்தக்கது.
 அர்ச்சகர் திருமகள் ஆதி திராவிடத் திருமகனைக் கரம் பிடிக்கும் இந்நாளில், பண்டைய நாள் சத்திரிய குலத்தோன்றல் மனுவை இந்நாளில் விமர்சிக்கத் தோன்றுவது வியப்புக்கு உரியது மட்டுமல்ல; நகைப்பிற்கும் உரியது.
 பொதுவாக மனிதரில் இருவகை உண்டு. நம் குடும்ப உறுப்பினர்கள், பிற உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரிடத்தும் பேசும்போதும், பழகும்போதும் இதனை நாம் கவனிக்கலாம்.
 சிலர், சூழ்நிலை கெடாதவாறும், இருக்கின்ற நட்பு, உறவு நலன் முறியாமலும் இனிமையாகப் பழகுவார்கள். வேறு சிலரோ, உறவினர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், "நீ அன்றைக்கு இதைச் சொன்னாய்', "உன் அப்பா அன்று அதைச் செய்தார்கள்' என்று அண்ணன், தம்பி, சகோதரி எல்லோரையும் இழுத்துப் பேசி பகையைத் தொடங்குவார்கள்.
 இது போல்தான் அரசியலில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும் சிலர் செய்கிறார்கள். இதில் இவர்கட்கு ஒரு அலாதி பிரியம் போலும்.
 ஒரு நீர்நிலையில் தண்ணீர் குடிக்க ஆடு ஒன்று வந்தது. அதை கவனித்த ஓநாய் ஒன்று, அந்த ஆட்டிடம் "நான் குடிக்க இருந்த நீரை நீ எச்சில்படுத்திவிட்டாய்' என்றது. ஆடு "நான் இன்னும் தண்ணீரே குடிக்கவில்லையே' என்றது. அதற்கு ஓநாய் "நீ குடிக்காவிட்டால் என்ன? உன் அப்பா, அம்மா முன்பே குடித்து எச்சில் படுத்தி இருப்பார்கள்' என்று சொல்லி அந்த ஆட்டைக் கொன்று சாப்பிட்டதாம்.
 மனிதர்கள் இந்த விலங்கினைப் போல இல்லாது, நீரோடு கலந்த பாலைப் பருக நினைக்கும் அன்னப்பறவை, நீரை விலக்கி பாலைச் சுவைப்பது போல எல்லோருக்கும் நன்மை அளிக்கும் விதத்தில் பேச எண்ணுபவர்கள் நயத்தகு நாகரிகம் மிக்கவர்கள்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com