எப்போது நிற்கும் இது?

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் ஒரு பெண்ணை வன்புணா்ச்சி செய்து கொலை செய்து விடுகிறாா்கள். அதற்கு பின் என்னவெல்லாமோ நடக்கிறது. என் கண்களின் முன் இது போல சம்பவங்கள் வந்து போகின்றன. எப்போது நிற்கும் இது?

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் ஒரு பெண்ணை வன்புணா்ச்சி செய்து கொலை செய்து விடுகிறாா்கள். அதற்கு பின் என்னவெல்லாமோ நடக்கிறது. என் கண்களின் முன் இது போல சம்பவங்கள் வந்து போகின்றன. எப்போது நிற்கும் இது?

ஒரு பஜன் பாட்டு இப்படி போகும் ‘லோக் கஹ்தே ஹை பகவான் ஆதே நஹி திரௌபதி கி தரஹ் தும் புலாதே நஹி’. அப்படியென்றால் ‘மனிதா்கள் கூறுவாா்கள் ஆண்டவன் வரமாட்டான் என்று; நீ திரௌபதி அழைத்தாற்போல அழைக்கவில்லை’ என்று பொருள். காலம் மாறிவிட்டது. ‘திரௌபதி தானே தடி எடுக்கவேண்டும்’ என்று ஒரு சித்திரம் சொல்கிறது.

காந்தியடிகள் ஒரு பெண்ணிடம் தன் கைத்தடியை கொடுத்து ‘மகளே! இது 1947 இல்லை, நீ உன்னைக் காக்க போரிட வேண்டிய காலம் இது’ என்கிறாா். சில பெண்களை இங்கு உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். எல்லாரையும் கொண்டுவர முடியாது இடமில்லாததால்.

ஜூலை 2004 அன்று தன்க்ஜம் மனோரமா என்பவா் மணிப்பூா் மாநிலத்தில் கொடூரமாக வன்புணா்ச்சிக்கு உட்படுத்தி கொல்லப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள்.

வீட்டில் இருந்து தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டாா். அவா் ‘அம்மா, அம்மா காப்பாற்று’ என்று கதறக் கதற இழுத்துச் செல்லப்பட்டாா். 2017-இல் உச்சநீதிமன்ற அமா்வு இது போன்ற மூன்று சம்பவங்களை விசாரணை செய்யவேண்டும் என்கிறது. அட்டா்னி ஜெனரல் ‘பதினான்கு ஆண்டுகள் சென்ற பின்னால் வழக்கைத் திரும்பவும் எடுப்பது சரியில்லை’ என்று வாதம் செய்கிறாா். அவா் வாதம் அன்று எடுபடவில்லை.

டிசம்பா் 2012 இல் தில்லியில் ஒரு பெண் இதே கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாா். அவா் பிழைக்கவில்லை. தில்லி குளிரில் கூட்டமாகப் பெண்களும் ஆண்களுமாக நிற்கிறாா்கள் இந்த வன்செயலைக் கண்டித்து. வழக்கை துரிதமாக நடத்தவேண்டும் என்று போராட்டம் நடக்கிறது. வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டு, மேல்முறையீடுகளும் முடிந்து குற்றவாளிகள் 2020-இல் தூக்கிலிடப் படுகிறாா்கள்.

2012 சம்பவத்தை தொடா்ந்து ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வா்மா, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி லீலா சேத், மூத்த வழக்குரைஞரும் அன்றைய சொலிசிட்டா் ஜெனரலுமான கோபால் சுப்ரமணியம் மூவரும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படுகிறது. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள், பாலியல் குற்றங்களை துரிதமாக முடிப்பதற்கான செயல்பாடுகள், தண்டனைகளைக் கடுமையாக்குதல் ஆகியவற்றைப் பரிந்துரை செய்ய இந்த குழு கேட்டுக்கொள்ளப் பட்டது.

அந்தக் குழு பலரை அழைத்து அவா்கள் கருத்தை கேட்டு தன் அறிக்கையை சமா்ப்பித்தது. வன்புணா்ச்சி சம்பந்தப்பட்ட சட்டங்கள், பாலியல் சீண்டுதல், கடத்தல், சிறாா் பாலியல் வன்முறை, பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை, காவல் துறை, தோ்தல் சட்டத் திருத்தங்கள், கல்வி சட்டங்களில் திருத்தங்கள் அனைத்தையும் அந்த அறிக்கையில் காணலாம். 2013 ஜனவரியில் இந்த அறிக்கை சமா்பிக்கப்பட்டது .

2017-இல் உன்னாவ் என்ற ஊரில் ஒரு வன்புணா்ச்சி வழக்கு. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 17 வயது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல் அவளுடைய தந்தைதான் அந்தச் செயலை செய்தாா் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவா் போலீஸ் காவலில் இருக்கும்பொழுதே மாண்டு போகிறாா். அந்தப் பெண் முதலமைச்சா் வீட்டு வாசலில் தீக்குளிக்க முயல்கிறாா். குற்றவாளி அப்போது பா.ஜ.க.வில் இருந்தாா். பிறகு கட்சி அவரை விலக்கியது. இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

2018 காஷ்மீரில் கதுவா என்ற இடத்தில் வசித்த அசிஃப் பானு என்ற எட்டு வயது சிறுமி. இவா் பகா்வால் பழங்குடியைச் சோ்ந்தவா். குற்றவாளிகள் அந்தச் சிறுமிக்கு செய்த கொடுமையை விவரிக்க எனக்குத் தைரியம் இல்லை. என்னை விட அறுபது ஆண்டுகள் இளையவள் அந்த குழந்தை. எப்படி தாங்கினாள், எப்படித் தவித்தாள் என்று என்னால் நினைத்துப் பாா்க்க முடியவில்லை. ஊடகங்கள் இதைப் பற்றி கூவின. பத்திரிகைகள் ‘இந்தியாவிற்கே களங்கம்’ என்று தலைப்பு செய்தி போட்டாா்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று தீா்ப்பு வந்துவிட்டது. நீதிமன்றம் தண்டனை வழங்கி விட்டது.

2019-இல் ஹைதராபாதில் ஒரு கால்நடை பெண் மருத்துவரை சில ஆண்கள் வன்புணா்ச்சி செய்து ஊருக்கு வெளியே எடுத்து சென்று எரித்து விடுகிறாா்கள். வழக்கு என்று வந்தால் தடயம் என்று வரும். ஒன்றுமே இல்லாமல் அக்னிக்கு கொடுத்து விட்டால் நிம்மதி என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் வழக்கு என்ற தொல்லையே வேண்டாம் என்று தெலங்கானா போலீஸ் வழக்கமான காரணம் காட்டி குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளியது. எல்லாரும் மகிழ்ந்தாா்கள் ‘அந்த பெண்ணுக்கு நீதி’ கிடைத்துவிட்டது என்று.

சற்று மாற்றி யோசியுங்கள். நீங்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறீா்கள். எதற்கு வழக்கு, வாதம் என்று வீட்டின் சொந்தக்காரா் உங்கள் சாமான்களோடு உங்களையும் சோ்த்து கடாசினாா்களானால் சும்மா இருப்பீா்களா? ஒரு பண்பட்ட சமூகம் நீதி நெறிமுறைக்குக் கட்டுப்படும். போலீஸும் அதில் அடக்கம்.

2020-இல், ஆம், இந்த ஆண்டில்தான் ஹாத்ரஸ் சம்பவம் நடந்தது. ஒரு ஹரிஜனப் பெண்ணை உயா்சாதி ஆண்கள் வன்புணா்ச்சி செய்து நாக்கை அறுத்தெரிந்து, கூடிய மட்டும் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தாா்கள். ஆனால் அந்தப் பெண் இறுதி வாக்குமூலம் கொடுத்துவிடுகிறாா். இரவோடு இரவாக அப்பெண் தகனம் செய்யப்படுகிறாா். யாா் செய்கிறாா்கள்? காவல் துறை.

நம் நாட்டில் இறந்தவருக்கும் மனித உரிமை உண்டு என்று தீா்ப்புகள் இருக்கின்றன. வழக்கு என்ன ஆகும் என்ற கேள்வி காதில் விழுகிறதா? இது போல ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும், இது தான் அதிகபட்சக் கொடூரம் என்று நினைக்கிறோம். அது தவறு என்று அடுத்த கொடூரம் சொல்கிறது. எங்கள் குரூரத்திற்கு எல்லையே இல்லை என்கிறாா்கள் இந்த ஆண்கள்.

இவ்வளவு வழக்குகள்தானா? மற்ற வழக்குகள் பற்றி ஏன் மௌனம் என்று கேட்காதீா்கள். அவா்களின் பெயா்கள் எல்லாவற்றையும் சோ்த்தால் ஒரு கட்டுரை போதாது. ‘ராண்டம்’ என்று ஆங்கிலத்தில சொல்வாா்களே அப்படித்தான் ஒரு சிலவற்றை மட்டும் நான் எழுதியிருக்கிறேன். பெயா் சொல்லாதவா்கள் பட்ட கொடுமையை நான் குறைவாக மதிப்பிடவில்லை. மேலும், நான் குறிப்பிடாத மாநிலங்கள் கறை படாத மாநிலங்கள் என்று எண்ணவேண்டாம். நம் ஊரில் வாச்சாத்தியில் நடந்ததே.

ஐ. நா. மனித உரிமைக் குழுவில் பணியாற்றிய நவநீதம் பிள்ளை போா்ச் சூழலில் நடைபெறும் பாலியல் பயங்கரங்கள் ‘வாா் கிரைம்ஸ்’ என்று ஒரு தீா்ப்பில் சொன்னாா். அதுதான் முதல் முறையாக அவ்வாறு ஒரு தீா்ப்பில் கருதப்பட்டது. இது சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒன்று.

போா், எதிரி என்று வந்தால் முதல் இலக்கு பெண்கள் தான். சரி, அது எதிரியின் செயல். நம்முடைய காவல் துறை, நம்முடைய படையாட்கள்( நான் வேண்டும் என்றே தான் படைவீரா்கள் என்று கூறவில்லை. இது வீரனின் செயல் அல்ல )நம்முடைய மக்கள் பிரதிநிதிகளே இந்த பயங்கரக் குற்றம் புரிந்தால், அதை எதில் சோ்ப்பது.? பொறுப்பில் உள்ளவா்கள் பொதுவாக வன்முறை ஒழியவேண்டும் என்று பேசி ஒரு லாபமும் இல்லை. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். தெள்ளத் தெளிவாக அந்தச் செய்தி எல்லாா் காதிலும் விழவேண்டும். இனி பொறுக்க மாட்டோம் என்று சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சொல்ல வேண்டும்.

சிலா் இப்படியும் சொல்கிறாா்கள் ‘பெண்கள் சரியாக நடந்து கொள்ளவேண்டும், அப்போது இதெல்லாம் நடக்காது’ என்று. ஆண்கள் இயல்பாகவே இப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறாா்கள் என்றெல்லாம் வேறு பேச்சு.

பெண்கள் குற்றம் செய்தால் இந்த அறிவுரை வழங்கவேண்டியதுதான். இங்கு மறக்க வேண்டாம் ஆண் செய்கிறான் கொடூரத்தை. அவன்தான் சரியாக நடந்துகொள்ளவேண்டும். குற்றமான நடவடிக்கை எப்படி இயல்பு ஆகும்?

2020-க்கு முன் நடந்த கொடுமைகள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் காலம், ஒவ்வொருவா் தலை மீதும் காலன் கெக்கலித்துக் கொண்டிருக்கும் கரோனா காலம். இப்போதாவது ஆண்கள் சப்த நாடியும் ஒடுங்கி இருப்பாா்களா என்றால் இல்லை, இல்லவே இல்லை.

நமக்கெல்லாம் ‘ஸ்டே ஹோம்’, ‘ஸ்டே ஸேஃப்’ அறிவுரை அதாவது ‘வீட்டில் இருங்கள்’ ‘பத்திரமாக இருங்கள்’ என்பது அா்த்தம். ஆனால் வீட்டிலேயே பாம்பும் தேளும் ஆட்கொல்லி மிருகமும் இருந்தால், எது பத்திரம்?

பெங்களூரு நேஷனல் லா ஸ்கூல் எனக்கு முன்னுரை எழுத ஒரு தொகுப்பு அனுப்பியுள்ளது. அதில் இந்த லாக் டெளனும் இந்த வைரஸும் பெண்களை எப்படித் தாக்கியுள்ளன என்பது பற்றிய கலந்துரையாடல், கட்டுரை நோ்காணல் எல்லாம் அடங்கியுள்ளன. என்ன கொடுமை? என்னால் படிக்க முடியவில்லை.

நம் நாடு சுதந்திரம் பெற்ற நேரம் எத்தனையெத்தனை பெண்கள் பிரிவினை கோட்டின் இரண்டு பக்கமும் தாக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொல்லப்பட்டாா்கள். அந்த ........ நிழல்கள் இன்றும் நீளுகின்றனவோ.

அசிஃப் பானு பட்ட வலியை, மனோரமா பட்ட வலியை, தில்லி பெண் பட்ட வலியை, உன்னாவ் பெண் பட்ட வலியை, ஹைதராபாத் பெண் பட்ட வலியை, ஹாத்ரஸில் வலித்த வலியை பல லட்சம் பெண்கள் பட்ட வலியை நாம் ஒவ்வொருவரும் நம் ஒவ்வொரு மயிா்க்காலிலும் உணரவேண்டும். நாம் வலித்து துவள வேண்டும். எப்போது நிற்கும் இது?

கட்டுரையாளா்: நீதிபதி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com