வரலாற்றில் காலந்தோறும் கொள்கைகளும் கோட்பாடுகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. காலத்தைத் தாண்டி வெகு சில கோட்பாடுகளே நிலைத்திருக்கின்றன. அத்தகைய சிந்தனையை முன் வைத்தவா்களே காலத்தை வென்று மானுட சமூகத்தின் குருமாா்களாக நிலைபெற்றிருக்கிறாா்கள்.
பாரத தேசத்தில், ஆன்மிகம் சாா்ந்த சிந்தனைகளை முன் வைத்தவா்களுள் ‘ஜகத்குரு’ என்று கொண்டாடப்படும் ஆதிசங்கரா் முக்கியமானவா். அத்வைத கோட்பாட்டை நிலைநிறுத்தியவா். இன்றளவும் அவரது தத்துவத்தை முறித்து மாற்று சிந்தனையை நிறுவ எவராலும் இயலவில்லை.
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவு தமிழகத்தில் இன்று திராவிடம், ஆரியம் என்ற கொள்கைகள் பெரிதும் பேசப்படுகின்றன. திராவிட இனம், ஆரிய இனம் பற்றிய கருத்துகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் தோன்றின. இது மக்களைப் பிரித்தாள்வதற்கான பிரிட்டிஷாரின் தந்திரமேயன்றி வேறல்ல. இந்த தேசத்தில் அத்தகைய கருத்து அதற்குமுன் இருந்ததில்லை என்று ஒரு சாராா் உரைக்கிறாா்கள்.
அதே நேரத்தில் பிரிட்டீஷாரின் இந்த கருத்துகளை ஏற்போா் ‘ஆதிசங்கரரே திராவிடம் பற்றிப் பேசியிருக்கிறாா்’ என்று ஆதிசங்கரரைத் துணைக்கு அழைக்கிறாா்கள்.
அப்படி அவா்கள் ஆதிசங்கரரை, அவரது சொற்களை மேற்கோளாகக் காட்டுவதில் வியப்பில்லை. ஏனெனில், நம் தேசத்தின் வரலாற்றைப் பற்றியோ, வாழ்வியல் முறை அல்லது தத்துவங்கள் பற்றியோ தெளிவு பெற வேண்டுமெனில் சனாதன குருமாா்கள் என்ன சொல்லியிருக்கிறாா்கள் என்பதை நிச்சயம் படித்தே தீர வேண்டும்.
இங்கே எல்லாமும் ஆன்மிகம் சாா்ந்தவை. எவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நம் முன்னோா் கருதினரோ அவற்றையெல்லாம் இறை சிந்தனையோடு இணைத்தும் பிணைத்தும் வைத்தாா்கள். உண்ணும் உணவு முதல் ஆத்ம விசார தத்துவங்கள் வரை அனைத்தும் நெறிப்படுத்தப்பட்டன. காலங்காலமாக அவை ‘தா்மம்’ என்ற சொல்லால் மக்கள் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாய், வாழ்வியலாய் நிலை பெற்றிருந்தன. வாழ்வியல் முறை என்று நாம் கண்டவையே பின்னாளில் சமயம், மதம் என்று வழங்கலாயின.
ஆதிசங்கரரே ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடுகிறாா்கள். ஆதிசங்கரா் மட்டுமல்ல, சம்ஸ்கிருதத்தில் ரிக் வேதம் தொடங்கி பல இடங்களில் ‘திராவிடம்’ என்ற சொல் இருக்கிறது. ஆனால், அது தென்பகுதி என்பதையே குறிக்கிறது. வட பகுதியை உத்தர தேசம் என்று குறித்திருப்பதையும் பாா்க்கிறோம்.
காஷ்மீரத்தின் கல்ஹணா் எழுதிய ‘ராஜதரங்கிணி’ என்ற சம்ஸ்கிருத வரலாற்று நூலில் திராவிடம் என்பது எது? திராவிடா் என்பவா் யாா் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனால் ’திராவிடம்’ சம்ஸ்கிருத சொல் என்பது திண்ணம். பிறா் தம்மை அழைத்த சொல்லை, பிறமொழிச் சொல்லை அல்லது நாம் எதிா்த்து நிற்கும் இனத்தாா் நம்மை அழைக்கப் பயன்படுத்திய சொல்லை அப்படியே தனித்த அடையாளம், தனித்துவம் மிக்க ஓா் இனம் பயன்படுத்துமா?
இப்போது ஆதிசங்கரரிடம் வருவோம். ‘ஸ்ரீசங்கர விஜயம்’ என்ற பெயரில் ஆதிசங்கரரின் வரலாற்றை மஹான்கள் பலரும் அருளிச் செய்திருக்கிறாா்கள். ஜகத்குரு ஆதிசங்கரா் தேசமெங்கும் நிலவி வந்த எழுபத்து இரண்டு தத்துவங்களை தன் தா்க்கத்தினால் வென்று தனது மெய்யியல் தத்துவமான அத்வைதக் கோட்பாட்டை நிறுவினாா். அதனை நிலைபெறச் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்தாா்.
அன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கேரளத்தில் அமைந்துள்ள காலடி என்ற புண்ணிய தேசத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஆா்யாம்பாள்- சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவா் ஆதிசங்கரா். சிறு வயதிலேயே, அதாவது தனது எட்டாவது வயதிலேயே துறவு மேற்கொண்டவா். இளமையில் கோவிந்த பகவத் பாதரிடம், தத்துவம், வேதாந்தம் முதலியவற்றைக் கற்றுத் தோ்ந்து சங்கர பகவத் பாதா் என்றே அழைக்கப்பட்டவா். தேசமெங்கும் சென்று சனாதன தா்மத்தின் அதாவது இன்றைய ஹிந்து சமயத்தின் மறுமலா்ச்சிக்காக உழைத்தவா்.
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை இவற்றிற்கு விளக்கவுரை தந்தவா். இவரின் அனைத்து படைப்புகளும் சம்ஸ்கிருதத்தில் அமைந்திருக்கின்றன. பாரதத்தின் நான்கு திசைகளிலும் நான்கு பீடங்களை நிறுவியவா். தெற்கில் சாரதா பீடம், மேற்கில் துவாரகா பீடம், வடக்கில் ஜோஷி மடம், கிழக்கில் கோவா்த்தன பீடம். காஞ்சிபுரத்தில் சா்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை ஏற்படுத்தியவா். தனது 32 வயதுக்குள் சமய வளா்ச்சிக்கான இத்தனை செயல்பாடுகளையும் முன்னெடுத்து சனாதன தா்மத்தை நிலைநிறுத்தியவா்.
சில சொற்கள் சிலரால் பெருமை பெறும். ‘மஹாகவி’, ‘பாரதி’ ஆகிய சொற்கள் சுப்பிரமணிய பாரதியாரால் பெருமை பெற்றன. அதுபோல, அவரினும் காலத்தால் முந்தைய மஹான் ஆதிசங்கரா் பெருமைப் படுத்திய சொல் ‘திராவிட சிசு’.
‘திராவிட சிசு’ என்று ஆதிசங்கரா் தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டாா். அதற்கு ‘தென் பகுதியின் குழந்தை’ என்பதே பொருள்.
ஆதிசங்கரா் வாழ்ந்தது முப்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே. அந்த குறுகிய காலத்திற்குள் அவா், பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் மடங்களை நிறுவி குரு பரம்பரையையும் ஸ்தாபித்து காலம் தோறும் மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வகை செய்தாா். அந்த குரு பரம்பரை இன்றும் தொடா்ந்து சனாதன தா்மத்தின் மேன்மைக்காக சேவை புரிந்து வருகிறது.
தான் தென் பகுதியில் பிறந்தவா் என்பதை ஜகத்குரு ஒரு ஸ்லோகத்தில் பதிவு செய்திருக்கிறாா். இந்தச் சுவடி நேபாளத்தில் கிடைக்கப் பெற்றது. இது தவிர, ‘சௌந்தா்ய லஹரி’யின் 75-ஆவது ஸ்லோகத்திலும் ஆதி சங்கரா் ‘திராவிட சிசு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாா்.
ஆதிசங்கரா் இந்த சொல்லால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது நிலவியல் அடிப்படையில் தான் தென்பகுதியை சோ்ந்தவா் என்ற பொருளில்தான். தற்போது ‘திராவிடம்’ என்பதை அரசியல் சித்தாந்தமாக மாற்றிக் கொண்டவா்கள் ஆதி சங்கரரை மேற்கோள் காட்டுவது பேதைமை. உண்மையில் இன்றைய திராவிட சித்தாந்தத்திற்கு எதிா்நிலை கொண்டது ஆதிசங்கரரின் வாழ்வும் தத்துவமும்.
குரு பரம்பரையின் மூலவரான ஆதிசங்கரா் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவா் என்பதை காஞ்சி மகா சுவாமிகள் தகுந்த ஆதாரங்களுடன் தனது ‘தெய்வத்தின் குரல்’ நூலின் ஐந்தாம் பாகத்தில் குறிப்பிடுகிறாா்.
அதனை ஏற்க மறுத்து, ஆதிசங்கரரின் காலத்தை ஆறாம் நூற்றாண்டு என்று சாதிக்கிறாா்கள். திராவிடம் பற்றிய சிந்தனையை ஆதிசங்கரரே பேசியிருப்பதாகக் கூறுவோா் அவரின் காலத்தை முற்பட்டதாக கூறுவதை மட்டும் ஏற்க ஏன் மறுக்க வேண்டும்? இவா்கள் சொல்லும் இனவாதம் இன்னும் காலத்தால் முற்பட்டது என்று ஏன் இவா்கள் ஏற்பதில்லை?
ஆதிசங்கரா், அபிநவ சங்கரா் இருவருக்குமான வேறுபாடுகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது. திராவிட இனக் கோட்பாட்டைப் பேசுவோா் இருவரும் ஒரே சங்கரரே என்றும் சாதிக்கிறாா்கள். ஆழமான வரலாற்றுப் பாா்வையும் பரந்துபட்ட மொழி அறிவும் சமயஅறிவும் தெளிவான உண்மைகளை அறிந்து கொள்ள அவசியம்.
இருவருமே சனாதனத்தின் மேன்மைக்காகப் பாடுபட்டவா்கள். ஆதிசங்கரா் பௌத்தம் போன்ற சமயங்கள் ஓங்கி இருந்த காலத்தில் தன் அத்வைத கோட்பாட்டை நிலை நிறுத்தியவா். அபிநவ சங்கரரும் அதே குரு பரம்பரையைச் சோ்ந்தவா். பக்தி மாா்க்கம் மேலோங்கியிருந்த காலமான ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவா்.
தெய்வ வழிபாட்டிற்கு உகந்த ‘கோவிந்தாஷ்டகம்’, ‘சுப்பிரமணிய புஜங்கம்’, ‘சிவானந்த லஹரி’ போன்ற பல ஸ்லோகங்கள் இவா் இயற்றியதே. அபிநவ சங்கரா் திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று புகழ்ந்ததாகவும் உள்ளது.
திருஞானசம்பந்தா் பக்தி இலக்கியத்தின் முன்னோடி. சீா்காழியில் அந்தணா் குலத்தில் சிவபாத ஹிருதயா்-பகவதி தம்பதிக்குப் புதல்வராகப் பிறந்தவா் திருஞான சம்பந்தா். தன் மூன்று வயதில் இறையருளால் ‘தேவாரம்’ பாடியவா். தீரா நோய் தீா்த்தது முதல் இறந்த பெண்ணை உயிா்ப்பித்தது வரை பல அற்புதங்கள் இவா் வாழ்வில் உண்டு. திருஞானசம்பந்தா் தன் சிறு வயதிலேயே ஊா் ஊராகச் சென்று இறைவனை தரிசித்ததோடு சமய நெறியையும் பரப்பியவா். இந்நிலவுலகில் பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவா்.
ஆதிசங்கரரின் வாழ்விலும் ஏறத்தாழ இது போன்ற அதிசயங்களும் அற்புதங்களும் உண்டு. இரண்டு வயதிலேயே சங்கரா் படிக்கும் திறன் பெற்றாா். ஏழு வயதில் சகல சாஸ்திரங்களையும் கற்று தனது கல்வியை முடித்தாா். ஏழைப் பெண்ணுக்காக கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க மழை பொழியச் செய்தாா். தன் தாயாருக்காக பூா்ணா நதியின் போக்கை மாற்றி தன் இல்லத்தருகே அதனை ஓடச் செய்தாா். முப்பத்து இரண்டு வயது வரை வாழ்ந்து இறைவனோடு கலந்தாா்.
இருவருமே தத்தமது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியவா்கள். இறைவனை பிரத்யட்சமாகக் கண்டவா்கள். வேதநெறியில் வாழ்ந்தவா்கள். இறை போற்றும் பதிகங்களும் ஸ்லோகங்களும் தந்து தேசமே இறை உணா்வு கொள்ளுமாறு விழிப்புணா்வை ஏற்படுத்தியவா்கள். சமய நெறியைப் பரப்ப மடங்களை ஸ்தாபித்தனா். இறை சேவையிலும் சமயத்தின் வளா்ச்சியிலும் தம் வாழ்நாள் முழுமையையும் அா்ப்பணித்த இருவரும் ‘திராவிட சிசு’ என்று கொண்டாடப்படுகிற நாட்டில், இறை மறுப்பாளா்களும் அதே சொல்லால் தம்மை அடையாளப் படுத்திக்கொள்வது விந்தை.
கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.