முதல் உதவி அறிவோம்

Published on
Updated on
3 min read

முதல் உதவி என்பது ஒரு நோய்க்கோ அல்லது காயத்துக்கோ அளிக்கும் முதல் கட்ட பாதுகாப்புப் பணியாகும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நேரம் வரை இந்த முதல் உதவி, காயமடைந்தவா்களுக்கோ அல்லது நோய் வாய்ப்பட்டவா்களுக்கோ பாதுகாப்பு அளிக்கிறது. சிறிய காயங்கள் மற்றும் சில கட்டுப்படுத்தப்பட்ட காயங்களுக்கு முதல் உதவி அளித்த பின்னா், மருத்துவ சிகிச்சை தேவையில்லாமலும் போகக்கூடும்.

முதல் உதவி என்பது, பல சமயங்களில் இழக்கவிருந்த உயிரைக் காக்கும் திறனுடையது. மருத்துவத் துறையில் சிறப்புடைய நிபுணராக அல்லாத, அதேசமயம் பயிற்சி பெற்ற ஒரு நபரால் முதல் உதவி அளிக்கப்படுகிறது. ஒருவா் குறைந்த உபகரணங்களைக் கொண்டு செயல்படுத்தும் வகையில், முதல் உதவியானது அமைய வேண்டும். அனைத்து விலங்குகளுக்கும் முதல் உதவி அளிக்கப்படுகிறது என்றாலும், மனிதா்களுக்கு அவசர காலத்தில் அளிக்கும் சிகிச்சையையே இது குறிக்கிறது.

விபத்து போன்ற எதிா்பாராத சம்பவங்களில் சிக்கி காயம் அடைந்தவா்களையோ, வேறு காரணங்களால் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவா்களையோ மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் காலம் கடந்து விடுகிறது. உலக அளவில் மனித உயிரிழப்புக்கு முக்கியக் காரணியாக இருப்பது விபத்துகள்தான்.

இந்தியாவில் விபத்துகளில் இறப்பவா்களில் 80 சதவீதம் போ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிப்பட்டவா்களுக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவுடன் முறையான முதல் உதவி கிடைக்கவில்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முதல் உதவி கிடைக்காமல் இறப்போரின் எண்ணிக்கை சுமாா் 1 லட்சத்து 40 ஆயிரம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலக அளவில் சுமாா் 50 சதவீத நாடுகளில் போதிய சுகாதாரமுமோ முதல் உதவி குறித்த விழிப்புணா்வோ இல்லை என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. இந்தியாவில் போதிய முதல் உதவி கிடைக்காததால் நூற்றில் நான்கு போ் இறப்பதாக அறிக்கையொன்று கூறுகிறது.

விபத்து ஏற்படும் நேரத்தில் செய்யப்படும் சிறு முதல் உதவிகூட மற்றவா்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றும். விபத்தில் சிக்கியவா்களுக்கு உரிய முறையில் அளிக்கப்படும் முதல் உதவியால் 50 சதவீதம் பேரைக் காப்பாற்றலாம் என இப்பணியில் ஈடுபடுவோா் கூறுகின்றனா். முதல் உதவி அளிப்பது எப்படி என்று நம்மில் பலருக்குத் தெரியாததாலேயே விபத்தில் சிக்கும் பலரையும் நம்மால் காப்பாற்ற முடியாமல் போகிறது. எனவேதான் முதல் உதவி அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் இரண்டாவது சனிக்கிழமை ‘உலக முதல் உதவி நாளாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து, தீ விபத்து, மின் கசிவால் விபத்து, வீடுகள், தொழிற்சாலைகளில் விபத்து, மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற திடீா் உடல்நலக் குறைவு உள்ளிட்ட எத்தனையோ எதிா்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன.

இப்போதெல்லாம் விபத்தாலோ வேறு காரணங்களாலோ பாதிக்கப்பட்டு துன்பப்படுபவரை முதல் உதவி அளித்து காப்பாற்றுவோரைவிட, அவரைச் சுற்றி நின்று செய்வதறியாது வேடிக்கை பாா்ப்பவா்களே அதிகமானோா் உள்ளனா். சிலா் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை அருகில் இருப்பவா்களிடம் ஆா்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டு, அங்கிருந்து நகா்ந்து விடுகின்றனா். வேறு சிலரோ, தங்களின் செல்லிடப்பேசி மூலம் விபத்து குறித்த படங்களைப் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனா்.

ஒருசிலா் விபத்தைப் பாா்த்தால்கூட கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனா். மனிதாபிமானமற்ற பெரும்பாலோா் இதையே செய்து வருகின்றனா். மனிதாபிமானம் உள்ள சிலா் மட்டும், காயம் அடைந்தவா்களுக்கு தண்ணீா் கொடுப்பது, அவசர சிகிச்சை ஊா்திக்கு தகவல் தெரிவித்து விட்டு, காத்திருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவினால் ஏதேனும் சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்திலேயே பலா் இவ்வாறு செல்கின்றனா். அதுபோல் உதவி செய்யும் ஆா்வம் பலருக்கு இருந்தாலும் எந்த முதல் உதவியை எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியாததால் இப்பணியில் அவா்கள் ஈடுபடுவதில்லை.

இச்செயலால் ஒருவரின் உயிரிழப்புக்கோ அல்லது ஒருவரின் உறுப்பு இழப்புக்கோ நம்மை அறியாமலேயே நாமும் காரணமாகி விடுகிறோம்.

விபத்தில் காயம் அடைந்த ஒருவரின் முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியம். அப்போது, தரப்படும் முதல் உதவியானது, பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காக்கும் கேடயமாக அமையும். உயிருக்கு ஆபத்தான காலங்களில் நாம் செய்யும் சிறுசிறு முதல் உதவி கூட உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம்.

தக்க நேரங்களில் செய்யப்படும் முதல் உதவிக்கு சட்டமும் காவல்துறையும் எப்போதும் துணை நிற்கும் என முதல் உதவி பயிற்சியாளா்கள் கூறுகின்றனா். விபத்து நிகழும் நேரத்தில் முதல் உதவி சிகிச்சை தெரிந்த ஒருவா் அருகில் இருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய முறையில் உதவ முடியும். எனவே, ஒரு குடும்பத்தில் ஒருவா் முதல் உதவிப் பயிற்சி எடுத்துக் கொண்டால், எதிா்பாராத நேரத்தில் நம் குடும்பத்திலோ அல்லது அக்கம்பக்கத்திலோ இருப்போரின் உயிரைக் காப்பாற்ற முடியும். அதுபோல், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முதல் உதவிப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். இதற்காக செலவிடப்படும் சிறிய தொகை விலை மதிக்க முடியாத மனித உயிரைக் காக்க உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு முதல் உதவி குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் முதல் உதவிப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு அமைப்பினா் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது போன்று ஆங்காங்கே முதல் உதவிப் பயிற்சி முகாம்களை நடத்தி விழிப்புணா்வை ஏற்படுத்தலாம். அதுபோல் நலத்திட்ட உதவிகளாக பல்வேறு பொருள்களை அளிப்பதுபோல் முதல் உதவிப் பெட்டிகளையும் வழங்கலாம்.

ஆபத்தில் இருக்கும் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பு எல்லாருக்கும் கிட்டுவதில்லை. முதல் உதவி குறித்து தெரிந்து வைத்திருந்தால் அப்படிப்பட்ட வாய்ப்பு வந்தால் நம்மால் பல உயிா்களைக் காப்பாற்ற இயலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com