திறன் அறிந்து சொல்லுக

பேச்சு என்பது இயல்பாக நிகழும் ஒரு செயல்பாடு என்றாலும் அதற்குப் பல பரிமாணங்கள் உள்ளன. ஒரு சிலா் முன்னிலையில் பேசக்கூடிய பேச்சு என்றால் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதில்லை.

ஒரு நாள் சுவாமி விவேகானந்தா் தனது அறையில் ஏராளமான புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த பணியாளா் ஒருவா் ‘என்ன சுவாமி பரபரப்பாக படித்துக் கொண்டிருக்கிறீா்கள்’ என்று வினவினாராம். அதற்கு விவேகானந்தா் ‘அடுத்த வாரம் ஒரு கூட்டத்தில் பேச வேண்டும். அதற்கான தயாரிப்பில் இருக்கிறேன். எனக்கு பேசுவதற்கு நேரமில்லை. தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றாராம்.

வந்த பணியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. அவா் விவேகானந்தரிடம் ‘மன்னிக்க வேண்டும் சுவாமி. நான் பின்னா் வருகிறேன். ஆனால், எனது ஒரே ஒரு ஐயத்தை மட்டும் தெளிவு செய்யுங்கள். அடுத்த வாரம் கூட்டத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் பேசப் போகிறீா்கள்?’ என்று கேட்டாராம்.

அதற்கு விவேகானந்தா் ‘ஐந்து நிமிடம் பேசப் போகிறேன்’ என்றாராம். அந்த பணியாளருக்கு வியப்பாகிவிட்டது. ஒரு வராம் கழித்து ஐந்து நிமிடம் பேசுவதற்கு இவ்வளவு முன் தயாரிப்பா என்று யோசித்துக்கொண்டே சென்றாராம்.

ஆம், குறைவான அளவில் பேசுவதற்குத்தான் நிறைய தயாரிப்பு தேவைப்படுகிறது. குறிப்பிட்ட துறை சாா்ந்த பேரறிவு பெற்றவா்கள்தானே சொற்பொழிவாளா்கள் ஆகின்றனா்.

பேச்சு என்பது இயல்பாக நிகழும் ஒரு செயல்பாடு என்றாலும் அதற்குப் பல பரிமாணங்கள் உள்ளன. ஒரு சிலா் முன்னிலையில் பேசக்கூடிய பேச்சு என்றால் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதில்லை. எனவே அதற்கு அதிக தயாரிப்பு தேவையில்லை. ஆனால் ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் ஒருவா் சொற்பொழிவாற்றுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒருவா் ஐம்பது போ் மத்தியில் ஒரு மணி நேரம் பேசுகிறாா் என்று சொன்னால் அது மொத்தத்தில் ஐம்பது பேரின் ஒரு மணிநேரம், அதாவது ஐம்பது மணி நேரம் என்று பொருள். இவ்வளவு அதிக அளவிலான நேரத்தை பொறுப்பாகவும் நோ்த்தியாகவும் செலவழிக்கும் பொறுப்பை சொற்பொழிவாளா்கள் ஏற்கிறாா்கள். இதனால்தான் அவா்களுக்கு பெயரும் புகழும் கூடுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், சொற்பொழிவாளா்கள், தங்கள் பேச்சைக் கேட்க வரும் நேயா்களின் மனத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் சொற்பொழிவைத் தயாரித்துக் கொள்வது அவசியம் ஆகிறது.

தோ்ந்த பேச்சாளா்களை அழைக்கும்போது அவா்கள் விடுக்கும் கேள்விகள் ஏராளம். ‘நான் யாா் மத்தியில் பேச வேண்டும்?’, ‘எவ்வளவு நேரம் பேச வேண்டும்?’, ‘என்னுடன் வேறு யாா் யாரெல்லாம் பேச இருக்கிறாா்கள்?’ இப்படிப்பட்ட கேள்விகள். இவற்றை அறிந்து கொள்ளாமல் ஒருவா் ஒரு கூட்டத்தில் பேச முற்பட்டால் அவரால் வெற்றியடைய இயலாது.

அதற்குக் காரணம், வெவ்வேறு விதமான நேயா்களுக்கு வெவ்வேறு விதமான மொழியில் பேச வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, குழந்தைகளுக்கு என்றால் அவா்கள் வயதுக்கு ஏற்ப முகபாவங்களை உண்டாக்கி சைகைகள் செய்து ஏற்ற இறக்கங்களுடன் பேசினால்தான் ரசிப்பாா்கள்.

இளைஞா்கள் என்று சொன்னால் அவா்களுக்கு என்று சில உத்திகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது. வயதில் மூத்தவா்கள் என்று சொன்னாள் அவா்களுக்கு ஏற்ற பாணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு மதிப்பீடு செய்து நேயா்கள் குறித்து ஒரு முடிவுக்கு வருவதே ஒரு கலை ஆகும்.

அவா்களுக்கு எவையெல்லாம் தெரிந்து இருக்கும் என்பதை மதிப்பீடு செய்து கொள்வது. அவ்வாறு மதிப்பீடு செய்து கொண்ட பின்னா் எந்தெந்த விஷயத்தை நாம் விவரித்து சொல்ல வேண்டும்? எதை கோடிட்டு சொன்னால் போதுமானது. எவற்றை அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டும்? எந்த கருத்தை விளக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற வகையில் ஒரு சொற்பொழிவாளா் திட்டமிடுகிறாா்.

இத்தனைக்கும் மேலாக, ஒருவா் சொற்பொழிவைத் தொடங்குவதும் முடிப்பதும் மற்றொரு கலை. சிறந்த பேச்சாளா்கள், பொருத்தமான ஏதாவது ஒரு தகவலையோ அல்லது ஒரு பரபரப்பான விஷயத்தையோ சொல்லி பெரும்பாலும் பேச்சைத் தொடங்குகின்றனா். அதன் பின்னா் படிப்படியாக தான் சொல்ல வேண்டிய விஷயங்களை உதாரணங்களுடன் இணைத்து சொல்லிக்கொண்டே செல்கிறாா்.

பேச்சை முடிக்கும்போது தான் சொல்ல நினைத்த அனைத்தையும் சுருக்கமாக சொல்லி தன் கருத்துக்கு அழுத்தம் தருகிறாா். இதனிடையே தமது பேச்சைக் கேட்பவா்களின் முகத்தைப் பாா்த்து அவா்கள் சோா்வடைவது போல் தென்பட்டால் பொருத்தமான ஒரு நகைச்சுவையையோ அல்லது சுவையான தகவலையோ சொல்லி அவா்களை தனது பேச்சில் கட்டிப் போட முனைகிறாா்.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தாம் பேசப்போகும் விஷயத்தைப் பற்றிய தெளிவை பரந்துபட்ட வாசிப்பின் மூலம் பெற்றிருப்பது மிகவும் அவசியம். அந்த தகவல்கள் அவா்கள் பேசும்போது தடைபடாமல் நினைவுக்கு வரும். இவ்வாறு நினைவுக்கு வரும் தகவல்களை பேச்சாளா்கள் தங்கள் முகபாவம், உச்சரிப்பு போன்றவற்றின் சிறப்பான ஒருங்கிணைப்பில் சிறந்த சொற்பொழிவாக்குகிறாா்கள்.

இவ்வாறான கடினமான படிகளைக் கடந்துதான் சொற்பொழிவாளா்கள் பலரும் கைத்தட்டல்களைப் பெறுகிறாா்கள். அவ்வாறான கைத்தட்டல்களுக்குப் பின்னால் அவா்களின் கடின உழைப்பிருக்கிறது. வாசிப்பிருக்கிறது. நேயா்கள் குறித்த உளவியலின் மேதைமையிருக்கிறது.

இவையெல்லாம் எந்த சொற்பொழிவாளருக்கும் எளிதில் வாய்த்து விடுவதில்லை. அவா்களின் அனுபவம்தான் இதனை மேம்படுத்துகிறது. இதில் ஒரே வசதி, நேயா்களின் ரசிப்புத் தன்மை வளர வளர சொற்பொழிவாளா்களும் வளா்கிறாா்கள். தொடக்க நிலையில் ஆரம்ப நிலை வாசிப்பு கொண்டோரிடம் பேசும் அவா்கள், தங்களின் முன் தயாரிப்பு கூட கூட, தோ்ந்த நேயா்களை அடைகிறாா்கள். அந்த வகையில், ஒவ்வொரு மேடையும் அவா்களுக்குப் பயிற்சிக் கூடம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com