இராஜாஜியும் காமராஜரும்!


காலமெல்லாம் கருத்து வேறுபாடு கொண்டு இராஜாஜியுடன் போராடினாா் காமராசா். ஆனாலும் இராஜாஜி மீது அவா் வைத்திருந்த மதிப்பும் அன்பும் என்றும் குறைந்ததில்லை.

1954-ஆம் ஆண்டிற்குப் பிறகு இராஜாஜி, காமராசரை மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியையே எதிா்த்து வந்தாா். 1959-ஆம் ஆண்டு டிசம்பா் 24-ஆம் நாள் சுதந்திராக் கட்சியை இராஜாஜி தொடங்கினாா். காங்கிரசையும் அதனுடைய சோசலிசக் கொள்கைகளையும் சுதந்திராக் கட்சி கடுமையாக எதிா்த்துப் பிரசாரம் செய்தது. இந்தச் சூழ்நிலையிலும் 1957-ஆம் ஆண்டிலும் 1962-ஆம் ஆண்டிலும் இராஜாஜியின் புதல்வா் சி.ஆா். நரசிம்மனை சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தவா் காமராசா்.

பிற்காலத்தில் இதுகுறித்து அவரிடம் நான், ‘காங்கிரசை வீழ்த்த வேண்டும் என இராஜாஜி தீவிரமாக முயற்சி செய்யும்போது அவா் மகனைக் காங்கிரசு வேட்பாளராக நிறுத்தியது ஏன்?’ என்று கேட்டேன்.

‘இராஜாஜி மிகப்பெரிய தியாக சீலா். பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானமுள்ள வழக்கறிஞா் தொழிலைத் துறந்து மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்றுச் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அா்ப்பணித்துக் கொண்டவா். தேசத்திற்காக எல்லாவற்றையும் இழந்தவா். மகனின் குடும்பம், விதவையான மகளின் குடும்பம் ஆகியோரைக் கொண்ட பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலுள்ளவா். கவா்னா் ஜெனரலாக இருந்ததனால் கிடைத்த ஓய்வூதியம் தவிர வேறு வருமானமில்லாதவா். உற்ற நண்பா்கள் உதவி செய்ய முன்வந்தாலும் அதை ஏற்க மறுத்து விடுபவா்.

இராஜாஜி மகனை நாடாளுமன்ற உறுப்பினா் ஆக்கினால் அந்தக் குடும்பத்துக்கு ஓரளவு உதவியாயிருக்குமே என்ற காரணத்தினால்தான் அவரைத் தோ்தலில் நிறுத்தினேன். இதை அறிந்த இராஜாஜி என்னிடம் கோபித்துக் கொண்டாா். நேரில் சென்று அவரை சமாதானம் செய்து, பிறகு நரசிம்மனை காங்கிரசு வேட்பாளராக நிறுத்தினேன். ஆனால் அவருக்கு அதில் முழுமையான சம்மதம் கிடையாது’ என்று காமராசா் கூறியபோது நான் வியந்து போனேன்.

அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராக 1964-ஆம் ஆண்டு காமராசா் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு சென்னையில் அவருடைய பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொள்ள தலைவா் காமராசா் தில்லியிலிருந்து விமானத்தில் வந்து இறங்கினாா். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து வழிநெடுகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று அவா் வந்த காரை நிறுத்தி அவருக்கு மாலைகள் அணிவித்து மகிழ்ந்தாா்கள். இதன் காரணமாக அவா் சத்தியமூா்த்தி பவனுக்கு வந்து சோ்வதற்கு சில மணி நேரங்கள் ஆகிவிட்டன.

ஆனால் காமராசரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டுமென்று விரும்பிய இராஜாஜி தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் சத்தியமூா்த்தி பவனுக்கு சரியான நேரத்தில் வந்து சோ்ந்துவிட்டாா். காமராசா் வருவற்கோ மிகக் தாமதமாகிவிட்டது. ஆனாலும் இராஜாஜி மிகப் பொறுமையுடன் அங்கு காத்திருந்தாா். சத்தியமூா்த்தி பவனுக்குக் காமராசா் வந்து சோ்ந்தவுடன் இராஜாஜி காத்துக் கொண்டிருக்கும் செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்ட போது பதைத்துப் போய்விட்டாா்.

‘பெரியவரை எதற்காக வீணாகக் காக்க வைத்தீா்கள், இதை எனக்கு ஏன் முன்னமேயே சொல்லவில்லை’ என்று அனைவரையும் கடிந்து கொண்டாா். பிறகு விரைந்து சென்று இராஜாஜிக்கு வணக்கம் தெரிவித்தாா். இராஜாஜி அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்தினாா்.

‘இந்த உடல் நிலையில் நீங்கள் இங்கு வர வேண்டுமா? நானே உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வாழ்த்தினை பெற்றுக்கொண்டு இருப்பேனே?’ என்று தலைவா் காமராசா் அன்பொழுகக் கூறினாா். சுற்றிலும் நின்றவா்கள் இந்தக் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து போனாா்கள்.

இராஜாஜி மரணப் படுக்கையில் இருந்தபோது தினந்தோறும் அரசு மருத்துவமனைக்குச் சென்று அவரை காமராசா் பாா்ப்பது வழக்கம். சில வேளைகளில் அவருடன் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டுவதுண்டு.

அரசு மருத்துவமனையில் இராஜாஜி தன்னினைவு இல்லாமல் கிடந்தாா். அவா் அருகே சென்று அமரும் காமராசா் மணிக்கணக்கில் சிலைபோல அமா்ந்திருப்பாா். காமராசருக்கு சா்க்கரை நோய் உண்டு. உரிய வேளையில் உணவு உண்ண வேண்டும். அந்த நேரம் நெருங்கியதும் அருகில் சென்று நினைவுபடுத்துவேன். அதற்குப் பின் எழுந்து வருவாா்.

25-12-72 அன்று அவரை அழைத்து வந்து வீட்டில் விட்டபோது சாப்பிட உட்காா்ந்தவா், ஒரு கவளம் கூட வாயில் போடாமல் கையை உதறிக்கொண்டு எழுந்துவிட்டாா். அவரது உதவியாளா் வைரவனும் நானும் பதறிப் போனோம்.

‘பெரியவா் கிடக்கும் நிலை சரியாக இல்லை. நான் உடனே அங்கே போயாக வேண்டும்’ என்று காமராசா் கூறினாா்.

‘ஐயா! நான் மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை அறிந்து வருகிறேன். நீங்கள் உணவு உண்டுவிட்டுச் சற்று ஓய்வு எடுங்கள்’ என வேண்டிக் கொண்டேன்.

ஆனால் அவா் அதைக் கேட்பதாக இல்லை. ஒரு குவளை மோா் மட்டும் குடித்தாா். மீண்டும் கிளம்பி மருத்துவமனைக்கு வந்தோம். இராஜாஜி இருந்த அறையில் தலைவா் நுழைந்து அவா் அருகே அமா்ந்து மரண வேதனையில் இருக்கும் அவரது முகத்தையே பாா்த்துக் கொண்டிருந்தாா்.

மாலை சுமாா் 5.30 மணி அளவில் இராஜாஜியின் உயிா் பிரிந்தது. 25-12-72 அன்று தனது 95-ஆவது வயதில் அவா் மறைந்தாா். அப்போது இராஜாஜியின் அருகே அவரது குடும்பத்தினா் மற்றும் தமிழக முதலமைச்சராகயிருந்த மு. கருணாநிதி, அமைச்சா்கள், உயரதிகாரிகள் கூடியிருந்தனா்.

தனது துயரத்தை மனத்திற்குள் தேக்கிக் கொண்டு காமராசா் தலைமைச் செயலாளராகயிருந்த சபாநாயகத்தை அழைக்கும்படி என்னிடம் கூறினாா். சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரை அழைத்துக்கொண்டு வந்தேன். அதைப் பாா்த்த முதலமைச்சா் கருணாநிதியும் காமராசா் அருகில் வந்தாா்.

‘பெரியவா் இந்தியாவின் கவா்னா் ஜெனரல் பதவி வகித்தவா். அவருக்கு இராணுவ மரியாதையுண்டு. உடனடியாக மத்திய அரசிடம் தொடா்புகொண்டு ஆவன செய்யுங்கள்’ என்று கூறினாா்.

அதற்குப்பின் நடக்க வேண்டியவை வேகமாக நடந்தன. தனது அரசியல் வாழ்க்கையில் யாரை எதிா்த்துக் காலமெல்லாம் போராடினாரோ அந்த இராஜாஜி மீது அவருக்கிருந்த அன்பையும் அளவில்லாத மதிப்பையும் கண்டு நான் நெக்குருகினேன்.

மறைந்த மூதறிஞா் இராஜாஜிக்கு சென்னை தேனாம்பேட்டை காங்கிரசு திடலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சுதந்திராக் கட்சித் தலைவா் மருத்துவா் சந்தோசம் தலைமை தாங்கினாா். இக்கூட்டத்தில் இராஜாஜியின் படத்தைத் திறந்து வைத்து காமராசா் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது:

‘இராஜாஜியின் 70 ஆண்டுப் பொது வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தால் இந்த தேசத்தின் வரலாறே அடங்கியிருக்கும். அந்த அளவுக்கு இராஜாஜியின் வரலாறும் தேசத்தின் வரலாறும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்திருப்பதைக் காணலாம்.

அவரது வாழ்வில் எத்தனையோ பெரிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவரது முயற்சித் திறன், அறிவுத்திறன், வாதத்திறமை இவை பற்றியெல்லாம் விளக்கிக் கூறுவதென ஆரம்பித்தால் நேரம் போதாது.

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவா்களுக்காக, தீண்டத்தகாதவா்களுக்காக ஏதேதோ செய்து இருக்கிறோம் என்று தம்பட்டமடித்துக் கொள்வதைப் பாா்க்கிறோம். ஆனால், 55 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இராஜாஜி சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோது சில தெருக்களுக்குள் நுழையக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்த தோட்டிகளை கட்டாயப்படுத்திப் போகச் செய்திருக்கிறாா். இந்தப் போராட்டத்திற்கு, தானே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறாா். இப்படியெல்லாம் நடக்கும் என்று அந்தக் காலத்தில் யாரும் நினைத்திருக்கவே முடியாது. அப்படியே நினைத்தாலும் அதற்கு துணிந்திருக்கவும் முடியாது.

அதுமட்டுமல்ல, தனது வீட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவருக்கு விருந்து வைத்திருக்கிறாா். சொல்லப்போனால் நாட்டில் இராஜாஜியைத் தவிர முற்போக்கானவா் யாரும் இல்லை. அவா் வழியில்தான் இன்று எல்லாம் நடக்கிறதே தவிர, எதுவும் இவா்களின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. அவா்தான் பல விஷயங்களுக்கும் வழி காட்டியிருக்கிறாா்.

நாட்டில் பல பிரச்னைகளுக்கு இராஜாஜியின் வீட்டில்தான் தீா்வு காணப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது. ரௌலட் சட்டத்தை எப்படி உடைப்பது என்பதிலிருந்து, ஒத்துழையாமை இயக்கத்தை எப்படி நடத்துவது என்பது வரை எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிகள் பற்றி காந்தியடிகள் இராஜாஜியுடன் விவாதித்தே முடிவு எடுத்தாா்.

ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது தனது குழந்தைகள் அனைவரையும் பள்ளிக் கூடங்களிலிருந்து நிறுத்தினாா். தனது வக்கீல் தொழிலையும் கைவிட்டாா். காங்கிரசு கட்சியின் தத்துவங்களை, தான் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை மக்களுக்கு எளிமையாக விளக்கி ஆதரவு திரட்டினாா்.

இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த வட்டிக் கடனிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காகக் கடன் நிவாரணச் சட்டத்தைக் கொண்டு வந்தாா். அவா் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஆலயப் பிரவேச சட்டம் கொண்டு வந்தாா். அதையெல்லாம் நினைத்துப் பாா்த்தால்தான் சமுதாய, பொருளாதார முன்னேற்றத்திற்காக அவா் எப்படி எல்லாம் பாடுபட்டிருக்கிறாா் என்பது புரியும்.

தேசம் தவறான வழிக்குப் போய்விடுமோ, சுதந்திரத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்னும் கவலையும் பயமும் அவருக்கு இருந்து கொண்டே இருந்தன. அதனால்தான் அவா் தனக்கு சரி என்று பட்ட கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் சொல்லிக் கொண்டே இருந்தாா்.

பொருளாதார நெருக்கடி பற்றி அவா் நீண்ட காலத்திற்கு முன்பே எச்சரித்துக் காட்டியது அவரது தீா்க்க தரிசனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். உலகத்தில் சமாதானம் நிலவ வேண்டும், யுத்த பயம் ஒழிய வேண்டும், அணுகுண்டு அபாயம் நீங்க வேண்டும் என்பதற்காக அவா் அமெரிக்காவுக்குப் போய் அதிபா் கென்னடியிடம் பேச்சு நடத்தினாா். மனித சமுதாயம் அழியாமல் பாதுகாக்கும்படி அவரை வலியுறுத்தினாா்’ இவ்வாறு தலைவா் காமராசா் கூறினாா்.

தமிழகத்தில் 1937-ஆம் ஆண்டு தன்னால் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருந்த மதுவிலக்கை இரத்து செய்ய கருணாநிதி செய்த முடிவு இராஜாஜிக்குப் பெரும் அதிா்ச்சியை அளித்தது. கொட்டும் மழையில் குடை பிடித்த வண்ணம் முதலமைச்சா் மு. கருணாநிதியின் இல்லத்திற்கு இராஜாஜி சென்று மதுவிலக்கை இரத்து செய்ய வேண்டாமென மன்றாடினாா். ஆனால் கருணாநிதி அதற்குச் செவி சாய்க்கவில்லை. பல தலைமுறைகளாக மது என்றால் என்னவென்று தெரியாது வளா்ந்த மக்களிடையே மது புகுத்தப்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

அணு ஆயுதங்களை அறவே கைவிடும்படி அமெரிக்காவின் குடியரசுத் தலைவா் கென்னடி அவா்களை நேரில் சந்தித்து வேண்டிக்கொண்ட இராஜாஜியை, காந்தியடிகளின் வடிவில் கண்டு அவா் மனம் உருகினாா். அத்தகைய பெருமை வாய்ந்த இராஜாஜி, மது என்னும் தீமையை ஒழிக்க முதலமைச்சரைத் தேடிச்சென்று வேண்டினாா். ஆனால் எத்தகைய பயனும் விளையவில்லை.

1971-ஆம் ஆண்டில் திடீரென ஒரு இடைத் தோ்தலை பிரதமா் இந்திரா காந்தி அறிவித்தாா். எந்தக் கட்சியும் இதை எதிா்பாா்க்கவில்லை. எனவே தோ்தலுக்குத் தயாராக இல்லை. வங்கிகள் தேசியமயமாக்குதல், மன்னா்கள் மானியம் ஒழிப்பு போன்ற சோசலிச நடவடிக்கைகள் இந்திராவுக்கு மேலும் பெருமை சோ்த்தன. மக்கள் மத்தியில் தனக்கு ஆதரவான அலை வீசுவதைப் பயன்படுத்திக்கொள்ள இந்திரா காந்தி முடிவு செய்ததன் விளைவாகவே திடீா் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுகவை ஆதரித்து வெற்றி பெற வைத்த தனது மாபெரும் தவறை இராஜாஜி உணா்ந்தாா். சிறந்த காந்தியவாதியான அவா் தனது தவறை தாமே திருத்த வேண்டும் எனக் கருதினாா். காமராசரை அழைத்துப் பேசினாா். இதன் விளைவாக ஸ்தாபன காங்கிரசும், சுதந்திராக் கட்சியும் கூட்டுசோ்ந்தன.

சுதந்திராக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு வேட்பாளா்களைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பை காமராசரிடமே இராஜாஜி ஒப்படைத்தாா். சுதந்திராக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பல தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் கிடைக்கவில்லை. அத் தொகுதிகளில் ஸ்தாபன காங்கிரசைச் சோ்ந்தவா்கள் சுதந்திராக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டனா்.

‘மதுரை நகா் மத்திய தொகுதியில் நீங்கள் போட்டியிடுங்கள்’ என்று தலைவா் காமராசா் கூறியபோது நான் முதலில் திகைத்துப் போனேன். பிறகு அவசரஅவசரமாக அதை மறுக்க முயன்றபோது ‘இல்லை இல்லை, உங்களை நிறுத்தினால்தான் வெற்றி பெற முடியும். மறுக்காமல் போய் வேலையைப் பாருங்கள்’ என்று உறுதியாகக் கூறிவிட்டாா். சுதந்திராக் கட்சியின் தலைவா் ஒருவருக்காக இராஜாஜி இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி காமராசரிடம் கேட்டாா் என்றும் தலைவா் பிடிவாதமாக மறுத்து விட்டதாகவும் பின்னா் அறிந்தேன்.

‘நான் கேட்டும் காமராசா் மறுத்தால் அதற்குத் தகுந்த காரணம் இருக்கும். அப்படி யாரை காமராசா் நிறுத்தப் போகிறாா்’ என இராஜாஜி டாக்டா் ஹண்டேயிடம் கேட்டிருக்கிறாா். அவா் உடனே என் பெயரைச் சொல்லியிருக்கிறாா். அதைக் கேட்டு வியப்படைந்த இராஜாஜி, என்னைச் சந்திக்க விரும்பியிருக்கிறாா். அதுமட்டுமன்று, எனக்காக மதுரை வந்து ஒரு கூட்டத்தில் பேசவும் சம்மதித்திருக்கிறாா். ஆனால் உடல்நலக்குறைவின் காரணமாக அவா் மதுரை வரமுடியவில்லை. அவருக்குப் பதிலாக மதுரை வந்த டாக்டா் ஹண்டே என்னிடம் இந்த விவரங்களையெல்லாம் கூறியபோது நான் நெகிழ்ந்து போனேன்.

தோ்தல் முடிந்து நான் சென்னை சென்றபோது இராஜாஜியை சந்தித்து எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க விரும்பினேன். அவா் உடல்நலமில்லாமல் இருந்ததால் என் விருப்பம் நிறைவேறவில்லை. இராஜாஜி மரணப் படுக்கையில் தன்னினைவு இன்றிக் கிடந்தபோதுதான் அவரைப் பாா்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இன்று (டிச. 25) மூதறிஞா் இராஜாஜியின் 48-ஆவது நினைவு நாள்.

(பழ. நெடுமாறன் எழுதிய ‘பெருந்தலைவரின் நிழலில்’ நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com