Enable Javscript for better performance
புலவர் போற்றுதும்!- Dinamani

சுடச்சுட

  

  புலவர் போற்றுதும்!

  By டி.எஸ். தியாகராசன்  |   Published on : 29th December 2020 04:27 AM  |   அ+அ அ-   |    |  


  அண்மையில், செங்கற்பட்டுக்கு கிழக்கே பாலாற்றங்கரையில் உள்ள பி.வி. களத்தூர் என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். பி.வி. களத்தூர் என்றால் "பொன் விளைந்த களத்தூர்' என்பதை அறிந்து மனம் வேதனை அடைந்தது.  இவ்வூரில் உள்ள ஆதிகுடிகள் எல்லா ஊர்களையும்போல வந்தேறிய மதத்தில் இணைந்து விட்டார்கள். மற்றவர்கள் அரசியல் கட்சிகளில் சிக்குண்டார்கள். கால வெள்ளத்தில் தொல் நாகரிகச் சிறப்புகளும், இன்ன பிற ஒழுகலாறுகளும் தொலைந்து போயின.  

  மகாபாரதத்தில் வரும் "நளோபாக்கியானம்' என்ற பகுதியை தேன் தமிழில் "நளவெண்பா' என்று பாடிய புகழேந்திப் புலவர் அவதரித்த மண்தான் பொன் விளைந்த களத்தூர். "சடைச் செந்நெல் பொன் விளைவிக்கும் தன்னாடு' என்று இலக்கியங்கள் பேசும். "நளவெண்பா' 431 செய்யுள்களைக் கொண்டது. இரண்டாம் குலோத்துங்க சோழன் வாழ்ந்த 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புகழேந்திப் புலவர். துளுவ வேளாளர் மரபினர், வைணவ நெறியாளர்.  

  இவரது சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தரும் இவரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் அன்னைக்குத் தத்தம் நூல் வகையால் அணி சேர்த்தனர். "வெண்பாவிற் புகழேந்தி' என்று பாராட்டப் பெற்றவர். இவரின் பெருமையையோ இவர் பிறந்த ஊரின் சிறப்பையோ அறிந்தவர் இற்றை நாளில் இவ்வூரில் எவரும் இலர். ஆனால் எல்லா ஊர்களைப் போலவே ஊரின் நடுவில் பல கட்சிகளின் கொடிகள் உயரப் பறக்கின்றன.    

  புகழேந்திப் புலவரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் "தக்கயாக பரணி' பாடிய பெரும் புலவர். இவர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவெறும்பூரில் சைவ மரபில் செங்குந்தர் பிரிவில் பிறந்தவர். இவர் விக்கிரம சோழன், குலோத்துங்கன், ராஜராஜன் என்ற மூன்று மன்னர்கள் பேரிலும் உலா பாடிய கவிஞர். இவரின் நாவன்மைக்கு, கூத்தனூரில் கோயில் கொண்டுள்ள கலைமகளின் அருளே என்று அவரது வரலாறு பேசும். இவர் தம் சமூக மக்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் வீர தீரச் செயல்களை சிறப்பித்து "ஈட்டி எழுபது' என்ற நூலை படைத்தார்.

  இவரது நினைவாக தாராசுரம் கோயில் முன்பாக ஒரு மண்டபம் இருக்கிறது. ஆனால் இவர் தோன்றிய திருவெறும்பூரில் இன்று இவரை எவருக்கும் தெரிய நியாயம் இல்லை. தொழிற்சாலைகள் பல்கிப் பெருகி உள்ள நகராக அது மாறியுள்ளது. 

  ஆனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ளோர் தத்தம் மழலைகட்கு கூத்தனூர் சென்று ஒட்டக்கூத்தருக்கு கவிபாடும் ஆற்றல் அருளிய கலைமகளின் அருள் பெற சரசுவதி பூசையின்போது கல்வி பயிற்சி கொடுக்கின்றனர்.  

  ஒட்டக்கூத்தரின் சமகாலப் புலவரான செயங்கொண்டார் யாத்தது "கலிங்கத்துப் பரணி'. இந்நூலை "தென் தமிழ் தெய்வப் பரணி' எனப் புகழ்ந்துள்ளார் ஒட்டக்கூத்தர். முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சரும் படைத்தலைவருமான கருணாகரத் தொண்டைமான், வடகலிங்க மன்னன் அனந்தவர்மனைப் போரில் வென்ற வரலாற்றை விரிவாக பேசுவதுதான் "கலிங்கத்துப் பரணி'. இது கலித்தாழிசையாற் பாடப்பெற்றது.  இதில் 599 தாழிசைகள் உள்ளன. பரணி என்பது தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகை பிரபந்தங்களில் ஒன்று.  

  இதனைப் பாடிய செயங்கொண்டார் தீபங்குடியில் பிறந்தவர். தமிழ் நாவலர் சரிதையின் 117-ஆவது பாடலால் இவர் தோன்றிய ஊர் கொரடாச்சேரியை அடுத்துள்ள தீபங்குடியே என்றனர் வரலாற்றாளர்கள். இவ்வூரிலும் புகழாய்ந்த தண்டமிழ்ப் புலவர் வாழ்ந்திருந்தார் என்பதற்கு கடுகளவேனும் சாட்சி இல்லை.

  புகழேந்தி, ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார் காலத்திற்கு முன்பாக வாழ்ந்து புகழ்முடி சூடியவன் கம்பன் என்றொரு மானுடன். சோழவள நாட்டின்கண் உள்ள தேரழுந்தூர் என்னும் சிறிய கிராமத்தில் உவச்சர் குலத்தில் தோன்றியவர். வைணவ சமய நெறியாளர்.  இளமையில் இவரது கவித்திறன் உணர்ந்து இவரைப் புரத்தவர் வெண்ணை நல்லூர் சடையப்பன் என்ற பெரும் நிலக்கிழார். இவரது அறிவின் ஆழம் கருதி சோழ மன்னன் இவரைத் தனது அவைக்களப் புலவராக்கி, "கவிச்சக்கரவர்த்தி' என்ற பட்டமும் சூட்டினான்.

  பாரதத்தின் தொல் மொழிகளான தென்மொழி, வடமொழி இரண்டிலும் தன்னிகரற்ற புலமை பெற்றிருந்த கம்பர், வால்மீகியின் ஆதி காவியமான இராமாயணத்தின் 24 ஆயிரம் செய்யுள்களை, தூய தமிழில் தமிழ்நாட்டு மரபில் 11 ஆயிரம் விருத்தப் பாக்களாக யாத்தார். 

  திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில், வைணவக் கல்விமான்கள் குழுமியிருந்த அவையில், வைணவ ஆசார்யர் ஸ்ரீநாதமுனி முன்னிலையில் அரங்கேற்றினார். கோயிலில் தாயார் சந்நிதிக்கு அருகில் கம்பர் அரங்கேற்றிய இராமாயண மண்டபம் இன்றும் இருக்கிறது. 

  மேலும் இவர் அந்தாதி முறையில் "சரசுவதி அந்தாதி', "சடகோபர் அந்தாதி',  "திருக்கை வழக்கம்' "கொங்கு நாட்டு வேளாளர்களின் மங்கல வாழ்த்து' போன்றவற்றைப் பாடியுள்ளார். இவர் பிறந்த ஊரில் அரசு ஒரு மணிமண்டபம் கட்டியுள்ளது. இன்று அது ஆடு, மாடுகளுக்கு வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்கும் கூடமாக உள்ளது.  

  அங்கு "கம்பர் மேடு' என்ற அறிவிப்புப் பலகையொன்று காட்சியளிக்கிறது.  புல், பூண்டு, புதர் தழைத்தோங்கியுள்ளன. மேல்நாட்டில் வாழ்ந்த கவிஞர்களை எப்படி அரசும், மக்களும் வாழ்த்தி மகிழ்ந்து போற்றுகிறார்கள் என்பதை நினைந்தும் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்களின் பெருமை உணராது வாழும் நம் மீது நமக்கே சீற்றம் ஏற்படுகிறது.  

  லண்டனில் இருந்து நூறு மைல் தூரம் உள்ள ஸ்ட்ராட் போர்டு என்ற ஊரில் 1564-இல் வில்லியம் ஷேக்ஸ்பியர் தோல் கையுறை தயாரிக்கும் ஒருவருக்கு மகனாக பிறந்தார். இளமையில் லண்டனில் ஒரு நாடக அரங்கில் பணியாளராகப் பணியாற்றினார்.  பின்னர் நடிகர், நாடக அமைப்பாளர், கவிஞர், எழுத்தாளர் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றார். நகைச்சுவை நாடகங்கள் 16, வரலாற்று நாடகங்கள் 11, துன்பியல் நாடகங்கள் 11, கவிதை 3 என மொத்தம் 41 படைப்புகளைச் செய்தார்.  

  இவர் ஆங்கில மொழிக்கு பல ஆயிரம் புதுச்சொற்களை வழங்கிய மேதை. கிரேக்கம், லத்தீன் போன்ற முது மொழிகளின் வளமான நடையோடு ஆங்கிலத்தை அகிலம் புகழ அலங்கரித்தார். இவரது புகழை ஆங்கில மொழி வர்க்கத்தினர் உலக அளவில் கொண்டு சென்றனர்.  

  இவரது உருவச் சிலைகள் வெண்கலம், பளிங்கு கற்களால் செய்யப்பட்டு, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் ஆபே, கிளாஸ்கோ தியேட்டர், ஹாம்டன், பிரிட்டிஷ் மியூசியம், கிளரிக்கிளப், சிகாகோ லிங்கன் பார்க், நியூயார்க் சென்ட்ரல் பார்க், காங்கிரஸ் லைப்ரரி போன்ற இடங்களிலும், ஆஸ்திரேலியா, டென்மார்க், வட அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் அமைந்து இருக்கின்றது. இந்தியாவில் கொல்கத்தா நகரில் மத்திய வணிக மாவட்டத்துக்கு ஷேக்ஸ்பியர் சாரணி என்று பெயர் சூட்டப்பட்டது. இது இவரது நான்காவது நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக அமைக்கப்பட்டது.  

  ஸ்டார்ட்போர்டு ஷேக்ஸ்பியர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நவம்பர் வரை கனடாவில் அண்டாரியோவில் நடைப்பெறுகிறது. இவரது உலகப் புகழ்பெற்ற "ஜூலியஸ் சீசர்', "மெர்ச்சண்ட் ஆஃப் வெனீஸ்', "மேக்பத்', "ஹாம்லட்', "ஒத்தல்லோ', "ரோமியோ- ஜூலியட்' போன்ற நாடகங்களை நடத்தாத கல்லூரிகளே உலகில் இல்லை எனலாம்.  

  இவரைப் போன்றே, இங்கிலாந்து நாட்டில் காக்கர்மவுத் என்ற இடத்தில் பிறந்து கவிதைகளால் உலக புகழ் பெற்றவர், வேர்ட்ஸ் வொர்த். இவர் கல்லூரியில் படிக்கும் போதே தனது முதல் படைப்பை ஐரோப்பாவின் இதழ் ஒன்றுக்கு அனுப்பி பரிசு பெற்றவர்.  

  இவரது "பேலாட்டுஸ்' 1798-இல் வெளிவந்தது.  இக்கவிதையின் நடை, ஆங்கில கவிதை வரலாற்றில் புதிய பரிமாணத்தை தொடங்கி வைத்தது. இவர் இங்கிலாந்தில் உள்ள கிராஸ்மீர் என்ற கிராமத்தில் குடிபுகுந்தார். இதன் அருகிலுள்ள விண்டிமீரில் மிக அழகிய ஏரி ஒன்று உள்ளது. எல்லோரையும் கவர்ந்திருக்கும் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது.  

  இவரது சிறப்பு மிக்க கவிதையான "இளமஞ்சள் நிற மலர்' 1807-இல் வெளிவந்து உலகப்புகழ் ஈட்டியது. இவர் தான் வாழ்ந்த இடத்தில்  ஊசியிலை மரக்கன்றுகள் எட்டு நட்டார். இவரை ஆங்கில அரசு அரசவைக் கவிஞராக அமர்த்தியது. இவருக்கு இவரது வாழ்நாள் வரை ஓய்வூதியம் வழங்கியது. இவர் தனது 80-ஆவது வயதில் மறைந்தார். ஏழாம் நூற்றாண்டு செயின்ட் ஆஸ்வால்டு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

  இவர்பால் அன்பு கொண்ட ஆங்கில மக்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 5-ஆம் நாள் ரஷ்பேரிங் என்றதொரு விழாவை எடுத்து மகிழ்கின்றனர். உலகின் அதிக பார்வையாளர்களை கொண்ட இடமாக இது திகழ்கிறது. 

  மேலை நாடுகளில் இறவாப் புகழ் வாய்ந்த படைப்புகளைத் தந்த கவிஞர்களை, நாடக ஆசிரியர்களை கொண்டாடி மகிழ்கிறார்கள். நம் நாட்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞர்களையும், புலவர்களையும் அவர்கள் பிறந்த ஊரிலேயேகூடத் தெரிவதில்லை. 

  தமிழுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சேர்த்த புலவர்களும், கவிஞர்களும் அவதரித்த மண்ணில் அவர்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தி, மக்கள் பெருமிதப்பட வழிகோல வேண்டியது அரசின் கடமை. 

  சங்ககாலப் புலவர்களை விட்டுவிடுவோம். நம் காலத்தில் வாழ்ந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தவர், நாமக்கல்லுக்குப் பெருமை சேர்த்தவர். அவருக்கு நாமக்கல்லில் சிலையும் இல்லை - நினைவுகளும் இல்லை. தமிழனென்று சொல்லடா, தலைகுனிந்து நில்லடா! 
  கட்டுரையாளர்: தலைவர்,  திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp