ஆன்மிக அரசியல் என்பது...

நடிகர் ரஜினிகாந்த், "ஆன்மிகஅரசியல்' என்றொரு சொல்லை முன்வைத்துத் தன் அரசியல் பார்வையை, விருப்பத்தை வெளிப்படுத்தினார். தமிழக அரசியல் களம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பேசுபொருளாகவும் இந்தச் சொல் அல்லோலகல்லோலப் பட்டது.
 அரசியல், ஆன்மிகத்தை உள்ளடக்கமாகக் கொள்ளுமா? ஆன்மிகத்தில் அரசியல் உண்டா? இந்த வினாக்களோடு, ஆன்மிகமும் அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டவை, ஒன்றிணைய முடியாத முரணான இரு தத்துவங்கள் என்பதாய் விமர்சனங்களும் உரக்க ஒலித்தன.
 வரலாற்றில் தமிழக அரசியல் சில விசித்திரங்களை முன்னரே கண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் "திராவிடம்' என்றொரு சொல் அரசியலானபோது, அதன் பொருள் என்ன? அன்றைய நாள் வரை அச்சொல் யாரைக் குறித்து வந்தது? அச்சொல் எங்கிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது?
 தமிழருக்காக "திராவிடம்' என்ற சொல்லை "சித்தாந்தம்' என்று முன்வைத்தவர்கள் கூட இதற்கான சரியான புரிதல் இல்லாமலேயே கையாளத் தொடங்கினார்கள். இன்று வரை அப்பாவித் தமிழர்களும் பாமர மக்களும் அதன் பொருள் இன்னதென்று அறியவில்லை. ஆனால், அப்பெயரிலான அரசியல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இங்கே கொடி கட்டிப் பறக்கிறது.
 தற்போது அதுபோலவே அரசியல் உலகில் முன்மொழியப்பட்ட ஆன்மிகஅரசியல் என்ற சொல்லுக்கான பொருளை உண்மையில் நம் தமிழகம் உணர்ந்திருக்கிறதா? மதம் சார்ந்த அரசியல் என்று இந்தச் சொல்லுக்குப் பொழிப்புரை தந்தன தமிழக அரசியல் கட்சிகள். உண்மையில் ஆன்மிக அரசியல் என்பது மதம் சார்ந்ததா? இந்த வினாவுக்கு விடை தேட முயன்றால் தெளிவு பிறக்கும்.
 சமயம் என்பது மக்களின் வாழ்வில் பிரிக்க இயலாத ஒன்று. அது மனிதனின் வாழ்வியல் முறை. தேசத்திற்கு தேசம் இது மாறுபடலாம். ஆனால் சமயம் என்ற நம்பிக்கை மாறுபடுவதில்லை. அரசியலில் இந்த சமயம் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது? தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று பார்த்தால் உலக வரலாற்றில் ஏறத்தாழ எல்லாக் காலத்திலும் சமயம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற உண்மை புலனாகும். எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
 சமயத்தைச் சுற்றி அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை அமைத்துக் கொள்வதும் உலகம் முழுவதும் காணக் கூடியதே. சில நேரங்களில் சமயங்களின் தோற்றமே அரசியல் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கின்றன. சில காலங்களில் அரசியலில் சமயம் கோலோச்சி இருக்கிறது.
 இந்தியாவைப் பொருத்தவரை வரலாற்றின் பக்கங்களில் அசோகர் காலம் தொடங்கி நாம் இதனைக் காண்கிறோம். தன் மக்களையே, மதம் பரப்ப, தூதர்களாய் கடல் கடந்த தேசங்களுக்கும் அனுப்பி வைத்தவர் அசோகர். சந்திரகுப்தர் முதல் பல மன்னர்கள் இந்தச் சுழலில் சிக்கிக் கொண்டதையும் சிலர் இச்சுழலை ஏற்படுத்தியதையும் காண முடியும். சமயத் தலைவர்களின் அரசியல் தலையீடும், மன்னர்களின் சமயப் பற்றுதல் அவர்களின் ஆட்சியில் தீவிரமாய் வெளிப்பட்டதையும் வரலாறு சுமந்து நிற்கிறது.
 தமிழகத்தின் வரலாற்றிலும் மதம் சார்ந்த அரசியலை மூவேந்தர்களும் முன்னெடுத்த காலங்களும் உண்டு. கூரத்தாழ்வார் குருடாக்கப்பட்டதும், பக்தர்களாக அறியப்பட்டவர்கள் யாருமறியாது பதுங்கி வாழ்ந்ததும் தமிழகத்தில் நிகழ்ந்ததுண்டு. அனல்வாத, புனல்வாத பரபரப்புகளும், அடியார்கள் சுண்ணாம்புக் காளவாயில் எறியப்பட்ட கொடூரங்களும், பின்னர் மன்னர்களே அடியார்கள் விருப்பத்தின் பேரில் மதம் மாறிய சம்பவங்களும் சரித்திரத்தின் அழியாத சுவடுகளாய் நிலைத்திருக்கின்றன.
 தான் விரும்பிய இறையை வழிபடும் உரிமை இங்கே மறுக்கப்பட்ட காலங்களையும் வரலாறும் இலக்கியமும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை புதிதல்ல என்னும் பொழுது மதம் சார்ந்த அரசியல் என்று சொல்லாமல் ஆன்மிக அரசியல் எனும் சொல்லைப் பயன்படுத்துவானேன்? ஆக, ஆன்மிக அரசியல் என்பது மதம் சார்ந்த அரசியலில் இருந்து மாறுபட்டது.
 அரசியல் என்பது சமுதாயத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறை. மக்கள் கூடிவாழும் பொழுது முடிவுகளை எடுக்கும் முறைமையை ஒழுங்கமைப்பதற்கான செயல்முறை. சமூகம் அமைதியாய், வசதியாய், பாதுகாப்பாய் வாழ ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பும் தத்துவமும் அரசியல். அது சமூக வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவை. அரசியல், அதன்வழி அரசாங்கம் இவற்றின் சிறந்த செயல்பாடுகளே ஒரு தேசத்தின் மேன்மைக்கான அளவுகோல்களாகத் தொன்று தொட்டு இருந்து வருகின்றன.
 ஆன்மிகம் என்பதன் சரியான பொருளை அறிந்து கொண்டால் ஆன்மிக அரசியல் யாது என்பதையும் கண்டு கொள்ளலாம். ஆன்மா + இகம் ஆன்மிகம் ஆகிறது. ஆன்மா என்பது என்னுள் இருப்பது. இகம் என்றால் இந்த உலகம். அதாவது, என்னுள் இருப்பதையே இந்த உலகிலும் காணும் பார்வை.
 சுருங்கச் சொல்வதானால் நான் மற்றும் இந்த உலகின் அனைத்து ஜீவன்களும் ஒன்று என்ற புரிதல். இந்தக் கருத்தை சமூகத்தில் பொருத்திச் சொல்வதானால் அனைவரும் சமம் என்ற உணர்வு. சமதர்மம் என்ற கருத்தாக்கம். அப்படிப் பார்த்தால் அரசியல் என்பதே ஆன்மிக வழிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
 இதனை ரஜினிகாந்த் தான் முதன்முதலில் பேசினாரா என்றால் இல்லை என்பதே பதில். இந்தியாவில் ஞான மரபில் வந்தவர்கள் இந்த ஆன்மிக அரசியலை முன்னெடுத்திருக்கின்றார்கள். ஆதிசங்கரர் தொடங்கி விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவ வழிகோலிய வித்யாரண்யர் தொட்டு ராமாநுஜர் வரை எத்தனையோ மகான்கள் தேசத்தின் நன்மைக்காக இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றனர். செயல்படுத்தியும் வென்றிருக்கின்றனர்.
 அண்ணல் காந்தியடிகள் கையிலெடுத்ததும் இந்த ஆன்மிகத்தைத்தான். மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிர்களும் ஒன்று என்னும் ஆன்ம ஒற்றுமையை காந்தியடிகள் பேசினார். அதனை இறுதிவரை சற்றும் மனம் தளராது தன் வாழ்வில் பின்பற்றிக் காட்டினார். அஹிம்சையைக் கடைப்பிடித்தே சமதர்ம சிந்தனையை நிலைநிறுத்த இயலும் என்று அவர் நம்பினார்.
 1947-ஆம் ஆண்டு அண்ணல் தன் கைப்பட எழுதியிருக்கும் குறிப்பைப் படித்தால் இந்த உண்மை புலப்படும்: "நான் உங்களுக்கெல்லாம் ஒரு மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள்.
 நீங்கள் பார்த்துள்ள ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம் அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?
 இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவை பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்' என்று எழுதியுள்ளார்.
 வள்ளலார் வாழ்ந்து காட்டிய ஆன்மிகம் கருணையின் வழியில் அமைந்தது. எத்தனையோ இடர்ப்பாடுகள் வந்த போதும், அரசியல் சிக்கல்கள் அலைக்கழித்தபோதும் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி' சுற்றியுள்ள ஜீவராசிகள் அனைத்திற்காகவும் காருண்யத்தைப் பொழிந்து சமதர்மத்தின் வாசல்களைத் திறந்து காட்டியவர்.
 அரசியல் அதிகாரம், அரசு அனைத்தும் தன் எதிர் நின்று இறுக்கிய போதும் "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று துணிவோடு நின்று அரசையே பணிய வைத்த அப்பர் ஸ்வாமிகளின் ஆன்மிகம் சத்திய வழியில் நிகழ்ந்த அரசியல் தானே!
 மற்றுமொரு கோணத்திலும் ஆன்மிக அரசியல் என்பதை நாம் பார்க்கலாம். பாரத தேசத்தின் தத்துவ ஞானிகள், ஆன்மிகம் என்பது சத்தியத்தின் வழியில் நிற்பது. எத்தனை தடைகள் இன்னல்கள் வந்த போதும் சத்திய வழியினின்றும் பிறழ்ந்து விடாமல் தர்மத்திற்காகவே வாழ்வது. உடல் அறிவு மனம் ஆன்மா அனைத்தையும் சத்திய நெறியில் நிறுத்துவது என்று வரையறுத்து வாழ்ந்தும் காட்டினார்கள்.
 இந்தத் தத்துவத்தின்படி நேர்மையாய், சத்தியமே லட்சியமாகக் கொண்டு அரசியல் களத்தில் பயணித்து நாட்டை சத்தியத்தின் பாதையில் அழைத்துச் செல்வதே ஆன்மிக அரசியல்.
 சமதர்மம் சார்ந்த பார்வையோ சத்தியத்தின் வழியிலான தர்மத்திற்கான பயணமோ இவ்விரண்டு பாதைகளில் பயணித்த நம் பெரியோர்களும் வரலாற்றில் பொற்காலங்களை உருவாக்கியதோடு காலத்தை வென்று சரித்திரமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இரண்டு பாதைகளும் சென்று சேருமிடம் ஒன்றே என்பதையும் உணர்த்திச் சென்றிருக்கிறார்கள்.
 சமதர்மம், சத்தியம், நேர்மையின் வழியிலான வெளிப்படைத் தன்மையோடு கூடிய துணிச்சல் மிக்க நடையே ரஜினிகாந்த் முன் வைத்த ஆன்மிக அரசியல் என்பது உண்மையானால் இந்த சத்திய மார்க்கம் நாளைய தலைமுறைக்கான வெளிச்சம். இந்த அற்புதத்தை நிகழ்த்த ரஜினிகாந்த் மட்டுமல்ல, எந்த ஒரு தனிநபராலும் இயலாது. இது சமூக மேன்மைக்கான அரசியல் தூய்மைக்கான வழி. இதற்கான புரிதலும் செயல்பாடும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
 மிகச்சிறந்த உயர்ந்த கருத்தொன்றை ரஜினிகாந்த் அரசியல் களத்தில் முன்மொழிந்திருக்கிறார். காலச்சூழல் அவரது தலைமையில் இந்தக் கருத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பைத் தரவில்லை. அதனால் அவர் முன்மொழிந்த கருத்தும் காற்றில் கரைந்து போக வேண்டுமென்ற அவசியமில்லை. ரஜினிகாந்த் தமிழ் மண்ணில் விதைத்த கருத்தின் ஆழமும் அவசியமும் உணர்ந்து அதனை வாழ்வியலாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் சமூகத்தின் கைகளில் தரப்பட்டிருக்கிறது.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com