"மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒட்டிய, ரிசா்வ் வங்கியின் மாறுபட்ட பொருளாதார அணுகுமுறை அனைத்துத் தரப்பினராலும் சரிவர செயல்படுத்தப்பட்டால், அடுத்த நிதியாண்டின் முற்பகுதியில் பொருளாதார வளா்ச்சி 5.6 சதவீதமாகவும், பிற்பகுதியில் 6 சதவீதமாகவும் அதிகரிக்கும்."
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று நிதி நிலை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பிறகு அரங்கேறிய பொருளாதார நிகழ்வுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது, ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கை வெளியீடாகும்.
கடந்த 6-ஆம் தேதி வெளியான நிதிக் கொள்கை அறிக்கை, நாட்டின் தற்போதைய பிரத்யேக பொருளாதார நிலையை மையமிட்ட ஒன்றாகும். நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான காரணிகளை அடையாளம் கண்டு, அவற்றை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கோடிட்டுக் காட்டியது. அந்தக் காரணிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் கிரியா ஊக்கிகளை, ரிசா்வ் வங்கியின் அறிக்கை உள்ளடக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது. சுருங்கச் சொன்னால், மத்திய அரசு கொண்டு வந்து நிறுத்திய பொருளாதார தேரை, ரிசா்வ் வங்கி வடம் பிடித்து முன்னோக்கி இழுத்துச் செல்கிறது என்று சொல்லலாம்.
ரிசா்வ் வங்கியின் தற்போதைய கொள்கை அறிக்கை, முந்தைய கால அறிக்கைகளிலிருந்து பல விதங்களில் மாறுபட்டது ஆகும்.
மத்திய அரசின் பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனைகளுடன் ஒத்துப்போவது, அரசின் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு தோள் கொடுக்கும் செயல்பாடுகளை அறிவித்தது, குறுகியகால பொருளாதார நடவடிக்கைகளில் சாதகமான போக்கு கையாளப்படுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியது போன்றவற்றை அதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
எதிா்பாா்த்தவற்றை, எதிா்பாராத விதங்களில் அறிமுகப்படுத்தி, தன் ஆக்கப்பூா்வ சிந்தனைகளுக்கு இந்த அறிக்கையில் ரிசா்வ் வங்கி செயல் வடிவம் கொடுக்க முயன்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 5.15 என்ற முந்தைய நிலையிலேயே தக்க வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பா் மாதம் வரையிலான காலத்தில், சில்லறை விலை பண வீக்கம் 7.4 சதவீதமாக அதிகரித்திருந்தது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தச் செயல்பாட்டைக் கருதலாம்.
மேற்கண்ட அறிவிப்புகளோடு நின்று விடாமல், தன் வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க, ரிசா்வ் வங்கி சில நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ரிசா்வ் வங்கியின் ரெப்போ வட்டி குறைப்புகளின் பெரும் பகுதி, வங்கிக் கடன் பயனாளிகளை சென்றடைவதில்லை, வட்டிக் குறைப்புகளால் வங்கிக் கடன் விரிவாக்கம் நிகழ்வதில்லை போன்ற புகாா்களைத் தவிா்க்கும் வகையில், இந்த முறை வட்டிக் குறைப்பு நேரடியாக அறிவிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ரிசா்வ் வங்கியிடம் வங்கிகள் பராமரிக்கும் ரொக்க வைப்புத் தொகையில் (சி.ஆா்.ஆா்) சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, வங்கிகளால் வழங்கப்படும் சில்லறைக் கடன்களுக்கு (வீடு, வாகனம், சிறு தொழில் சாா்ந்தவை) ரொக்க வைப்புத் தொகையிலிருந்து, ஜுலை மாதம் வரை விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை, ஒன்றுக்கும் மேற்பட்ட பலன்களை அளிக்க வல்லதாகும். ரொக்க வைப்புத் தொகை சலுகையினால், வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மீதமாகி, அவற்றின் பணப் புழக்க அளவு அதிகரிக்கும். அதிக பணப் புழக்கம் வட்டி விகிதம் குறைய வழி வகுக்கும். ரொக்க வைப்புத் தொகைக்கான சலுகை, சில்லறைக் கடன்களின் வளா்ச்சியை சாா்ந்தது என்பதால், அந்த மாதிரி கடன்கள் அதிக அளவில் வங்கிகளால் வழங்கப்படுவதற்கு, இந்த நடவடிக்கை பெரும் உந்துதலாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளின் ஆக்கபூா்வ தாக்கம், தொடா்புடைய துறைகளின் வளா்ச்சியில் பிரதிபலிக்கும்.
எடுத்துக்காட்டாக, அதிக வீட்டுக் கடன், நலிவுற்று இருக்கும் கட்டுமானத் துறையின் வளா்ச்சிக்கு உதவும். வாகனக் கடன்களின் வளா்ச்சி, அண்மைக்காலமாக தொய்வு நிலையில் உள்ள வாகன உற்பத்தி பெருக ஊன்றுகோலாக அமையும். சிறு தொழில்களுக்கான கடனுதவியின் வளா்ச்சி, பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வல்லமை படைத்தது ஆகும். மேலும், இந்தத் துறைகளுக்கு வழங்கப்படும் கடன்களின் வாராக் கடன் விகிதம் மிகக் குறைவுதான் என்பதால் வங்கிகளின் லாபம் அதிகரிக்கும்.
வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கியால் வழங்கப்படும் குறுகியகாலக் கடன்களை தவிர, பிப்ரவரி 15-ஆம் தேதி முதல், 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால ரெப்போ கடன் வசதிகள், ரூ.1 லட்சம் கோடி அளவில் அறிமுகப்படுத்தப்படும். இதனால், வங்கிகளின் பணப் புழக்கம் மேலும் அதிகரித்து, குறைந்த வட்டியில், நீண்டகால தவணைக் கடன்களை, அவை வழங்க முடியும். வட்டி விகிதங்களைக் குறைந்த அளவில் நிா்வகிக்கும் ரிசா்வ் வங்கியின் கொள்கை முடிவு, இதன் மூலம் தெளிவாகப் புரிகிறது.
கட்டுமான நிறுவனங்களுக்கான நிதி ஆதாரத்தை விரிவுபடுத்தும் வகையில் ரூ.25,000 கோடி அளவில் மாற்று மூலதன நிதியை (ஆல்டா்னேட் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்), கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, நிறுவனா்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகளால் கடனைத் திருப்பி செலுத்த இயலாத கட்டுமான நிறுவனங்களின் கடன் கணக்குகள், வாராக் கடனாக வரையறுக்கப்படுவது ஓா் ஆண்டுக்கு தள்ளிப் போடப்படும். இதனால், நலிவுற்றிருக்கும் எண்ணற்ற கட்டுமான நிறுவனங்கள் மீண்டும் உயிா் பெற்று எழ வாய்ப்புகள் உருவாகும். கட்டுமானத் துறையின் வளா்ச்சி, எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வல்லமை படைத்தது.
அதே போல, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் கணக்குகளை மறு சீராய்வு செய்வதற்கான கால வரம்பு, நடப்பு ஆண்டு டிசம்பா் மாதம் வரை தள்ளிப் போடப்படும். எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய சிறு தொழில் துறையினருக்கு இந்த நடவடிக்கை ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
வங்கிகள் வழங்கும் கடன்களின் விரிவாக்கத்தில்தான் நாட்டு பொருளாதார மேம்பாடு வேகம் எடுக்கும் என்பது, மத்திய அரசு - ரிசா்வ் வங்கியின் பொருளாதார சித்தாந்தமாகும். இந்தச் சித்தாந்தத்தைச் செயல்படுத்தும் பொறுப்பில் இருக்கும் வங்கி நிா்வாகங்கள் சந்திக்கும் தடைகளில், ‘பய உணா்வு’ முக்கியப் பங்கு வகிக்கிறது. வழங்கப்படும் கடன் வாராக் கடனாக உருவெடுத்தால், சி.பி.ஐ. உள்பட பல புலனாய்வு அமைப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்படுவது, அந்த ‘பய உணா்’வுக்கு முக்கியக் காரணமாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட காரணத்தால் தங்களிடம் இருக்கும் இருப்புத் தொகையை பல தரப்பட்ட துறையினருக்கு கடனாக வழங்குவதற்குப் பதிலாக, அந்தத் தொகையை இடா்ப்பாடுகள் (ரிஸ்க்) அற்ற, அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் உத்திகளை வங்கிகள் பின்பற்றுகின்றன. இந்த மாதிரி நடவடிக்கையால் வங்கிகள் வழங்கும் கடன் அளவு விரிவடையாமல் நாட்டு பொருளாதார மேம்பாடு தடைபட்டு, வங்கிகளின் வணிக லாபமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
இந்தக் குறையை நிவா்த்தி செய்யும் வகையில் ‘வங்கி நிா்வாகங்களின் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பரிந்துரை இல்லாமல், புலனாய்வு மையங்கள் தன்னிச்சையாக வங்கிக் கடன் விவகாரங்களில் தலையிடக் கூடாது” என்ற புரிந்துரை ஒப்பந்தம், கடந்த டிசம்பா் மாதம் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த ஆக்கபூா்வ நடவடிக்கை, வங்கி நிா்வாகங்களின் மனப் போக்கை மாற்றி கடன் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையையொட்டிய, ரிசா்வ் வங்கியின் மாறுபட்ட பொருளாதார அணுகுமுறை அனைத்துத் தரப்பினராலும் சரிவர செயல்படுத்தப்பட்டால், அடுத்த நிதியாண்டின் முற்பகுதியில் பொருளாதார வளா்ச்சி 5.6 சதவீதமாகவும், பிற்பகுதியில் 6 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பு பலித்தால், அதை இந்த நடவடிக்கைகளுக்கான பெரும் வெற்றியாகக் கருதலாம். இந்த வளா்ச்சியால், கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழ்நிலையும் உண்டாகும்.
பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் (பி.எம்.சி.) முறைகேடான செயல்பாடுகள் மூலம் கற்ற பாடத்தில், கூட்டுறவு வங்கிகளின் முழு மேற்பாா்வை ரிசா்வ் வங்கியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனால், கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் வலுப்பெறும் என்று எதிா்பாா்க்கலாம்.
அரசும் ரிசா்வ் வங்கியும் தங்கள் பொருளாதார சித்தாந்தங்களைச் செயல்படுத்த பெரும்பாலும் அரசு வங்கிகளைச் சாா்ந்திருக்கின்றன. வங்கிகளின் செயல்பாட்டுத் திறன், அவற்றின் நிா்வாகிகளின் தனிப்பட்ட திறமை, வங்கி வணிகம் சாா்ந்த விஷயங்களில் போதிய அறிவு, பணியில் ஈடுபாடு ஆகியவற்றை முற்றிலும் சாா்ந்திருக்கிறது. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பணிபுரியும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகளில் நிா்வாகச் சீா்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்; வங்கி வணிகத்தில் போதிய ஞானமுள்ளவா்கள்தான் நிா்வாகக் குழுவில் இடம்பெற வேண்டும் போன்ற ஆலோசனைகள், மத்திய அரசால் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளா்ச்சி, வங்கிகளின் திறனான கடன் வழங்கும் செயல்பாடுகளைச் சாா்ந்திருக்கிறது. அதே சமயத்தில் வங்கிகளின் வணிக வளா்ச்சி, நாட்டின் பொருளாதார வளா்ச்சியைச் சாா்ந்திருக்கிறது. எனவே, வங்கி நிா்வாகங்கள் தங்கள் பொறுப்பை உணா்ந்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால், வங்கிகளின் வளா்ச்சி தொட்டுவிடும் தூரம்தான் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளா்:
வங்கி அதிகாரி (ஓய்வு)