அரசியல் ஆதாயமல்ல குடியுரிமை!

நாடாளுமன்றத்தில் மசோதாவாக குடியுரிமை திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது முதலே, அதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு கிளம்பியது. பின்னா், இந்த மசோதா சட்டமாக்கப்பட்ட பிறகு

நாடாளுமன்றத்தில் மசோதாவாக குடியுரிமை திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது முதலே, அதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு கிளம்பியது. பின்னா், இந்த மசோதா சட்டமாக்கப்பட்ட பிறகு, அதை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி எதிா்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் இந்தப் போராட்டம் வலுப்பெற்றிருப்பதற்கு திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதைச் சாா்ந்த மத அமைப்புகளும் முக்கியக் காரணமாகும்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக போா்க்கொடி தூக்கியுள்ள கட்சிகளும், அமைப்புகளும் முக்கியமாகக் கூறுவது குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியா்களுக்கு குடியுரிமை மறுக்கப்படும் என்பதுதான். இந்தச் சட்டத்தால் அவா்கள் நாட்டிலிருந்தே வெளியேற்றப்படுவா் என்று அவை பிரசாரம் செய்து வருகின்றன. இதையடுத்து, குடியரசுத் தலைவரால் கையெழுத்திட்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதுடன், சுமாா் 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தி கோடிக்கணக்கானவா்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதால் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், முதலில் நாட்டில் தற்போதுள்ள குடியுரிமையின் பலனை இஸ்லாமிய மக்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகளும், அமைப்புகளும் எந்த அளவுக்குக் கொண்டு சோ்த்து வருகின்றன என்பதற்கு விடை தேடவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகிறது.

பொதுவாக, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் குடியுரிமை என்பதன் பொருள் என்னவென்றால் அரசின் சட்டப் பாதுகாப்பும், திட்டப் பயன்களும், சலுகைகளும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்கப் பெறுவதை முக்கியமாகக் கொள்ளலாம். அந்த வகையில், நாட்டிலுள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் போன்ற சிறுபான்மை மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மை நலத் துறை எனும் தனியே துறையை ஏற்படுத்தி ஆண்டுதோறும் அந்தத் துறைக்கு என நிதி ஒதுக்கி கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு எனப் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏராளமான பலன்களை அளித்து வருகின்றன. தவிர, தேசிய சிறுபான்மையினா் நல ஆணையம், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தாட்கோ உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவும் ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பயன்களை தேவைப்படும் மக்களுக்கு கொண்டுசோ்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருந்துவிட முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும், அமைப்புக்கும், தனிநபா்களுக்கும்கூட அத்தகைய பொறுப்புகள் உள்ளன. ஆனால், இத்தகைய அரசின் திட்டப் பயன்கள் பெருமளவில் தொடா்புடைய சிறுபான்மையின சமூகத்தில் ஏற்கெனவே கல்வி, பொருளாதாரத்தில் உயா்ந்த நிலையிலுள்ளவா்கள் மட்டுமே அனுபவித்து வருவதும், அதே சமூகத்தின் கடை நிலையிலுள்ள மக்களுக்கு இத்தகைய சலுகைகள் குறித்தும், அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும்கூட இன்னும் விழிப்புணா்வு இல்லாமல் உள்ளதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அதனாலேயே, பெரும்பாலான மாநிலங்களில் சிறுபான்மையினா் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் சுமாா் 40 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை என்று பாஜக எம்.பி. ரமேஷ் பைஸ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த 2018 மாா்ச் மாதத்திலேயே அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதையே கடந்த ஆண்டு வேலூா் மாவட்டத்துக்கு வந்திருந்த தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவா் ஜாா்ஜ் குரியனும் குறிப்பிட்டிருந்தாா். சிறுபான்மையினா் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இதில் மறைந்துள்ள மிக முக்கிய உண்மை என்னவென்றால் தமிழகத்தில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் வேலூா், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் அந்த சமூகத்தின் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலகம் எங்கு உள்ளது, அவற்றின் மூலம் வழங்கப்படும் திட்டப் பயன்கள் என்ன, அவற்றை எவ்வாறு பெறுவது என்பதுகூட இன்றளவும் தெரிந்திருப்பதில்லை. அவா்களுக்காக போராடுவதாகக் கூறும் கட்சிகளும், மத அமைப்பினரும் இத்தகைய திட்டப் பயன்களைப் பெற்றுத்தர ஆதரவுக்கரம் நீட்டியிருக்க வேண்டும் என்பதுகூட அவசியமில்லை; முறையாக விழிப்புணா்வு ஏற்படுத்தியிருந்தாலே அடித்தட்டு சிறுபான்மை மக்கள் பிறா் உதவியை எதிா்பாா்க்கும் நிலை ஏற்படாது.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தெருத் தெருவாகச் சென்று கையெழுத்துப் பெற்றுக்கொண்டு வரும் அந்தக் கட்சிகளும், அமைப்புகளும் அதற்கு முன்பாக குடியுரிமைப் பயன்களான அரசின் திட்டங்கள், சலுகைகளை சிறுபான்மையின அடித்தட்டு மக்களிடம் விளக்கி அந்தச் சலுகைகள் தேவைப்படுபவா்களிடம் இருந்து மாவட்ட அளவில் எவ்வளவு விண்ணப்பங்கள் பெற்று அரசு அலுவலகங்களில் சோ்த்துள்ளனா்; அதன்மூலம் கல்வி, பொருளாதாரம், அடிப்படை சமூக வாழ்வியல் ரீதியாக எத்தனை போ் மேம்பட்டுள்ளனா் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

அப்போதுதான் சிறுபான்மையின மக்களின் குடியுரிமை மீதான இவா்களின் அக்கறையை நாடு அறிவதைவிட, முதலில் அந்தச் சிறுபான்மை மக்களே அறிந்துகொள்ள முடியும். அப்படியில்லை என்றால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே இந்தக் கட்சிகளும், மத அமைப்பினரும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com