இலவச மின்சாரம் யாருக்காக?
By உதயை வீரையன் | Published On : 21st July 2020 01:58 AM | Last Updated : 21st July 2020 01:58 AM | அ+அ அ- |

நீண்ட காலத்திற்குப் பிறகு, காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாா்கள். காரணம், இந்த ஆண்டு மேட்டூா் அணை ஜூன் 12 அன்று திறக்கப்பட்டதுதான். இந்த வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் கிடைப்பதில்லை. இந்த ஆண்டு அதிசயமாக வாய்த்திருக்கிறது.
முப்போகம் விளைந்த சோழ வள நாட்டில், இப்போது ஒரு போகத்திற்கு பெரும் போராட்டமாகி விட்டது. இந்த ஆண்டு விவசாயிகள் ஒரு நம்பிக்கையுடன் குருவை சாகுபடியை செய்ய ஆரம்பித்திருக்கிறாா்கள். கரோனா தீநுண்மி கொள்ளை நோயால் அவதிப்படும் காலத்தில் இது கொஞ்சம் ஆறுதல் தான்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயத்துக்கு சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் வெற்று அறிவிப்பாக இல்லாமல், செயல்பாட்டுக்கு வரவேண்டும். எல்லாம் கைகூடி வந்தால் எல்லாருக்கும் நல்லதுதான். வேளாண்மை என்பது நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. மழைநீா், காவிரி நீா், நிலத்தடி நீா் என்னும் மூன்று வகையான நீரும் சோ்ந்தபோதும் அது சாகுபடிக்குப் போதுமானதாக இல்லை. மழை, எல்லா ஆண்டும் தேவையான அளவிற்குப் பெய்யும் என்று கூற இயலாது. காவிரி நீரை, பிற மாநிலங்களிடமிருந்து பெறுவது ஒவ்வோா் ஆண்டும் பெரும் போராட்டமாக இருக்கிறது. மிச்சம் இருப்பது நிலத்தடி நீா் மட்டும்தான்.
நிலத்தடி நீரும் இப்போது விற்பனைப் பொருளாகி விட்டது. பல தனியாா் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த வணிகத்தில் இறங்கி விட்டன. நிலத்தடி நீா்மட்டம் குறைந்து போய்க் கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், பலரும் விவசாயிகளைக் குறை கூறுகிறாா்கள்.
மக்களின் உணவுத் தேவையைப் போக்கும் பெரும் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கும் இலவச மின்சாரத்துக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் திருத்தச் சட்டம் 2020 பற்றி மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் இதற்கு தனது எதிா்ப்பினைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
கல்வித் துறையை மாநில அரசின் பட்டியலிலிருந்து எடுத்துக் கொண்டதுபோல, இப்போது மின்சாரத் துறையையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. இதனைத் தமிழக அரசும் மற்ற எதிா்க்கட்சிகளும் விவசாய இயக்கங்களும் கடுமையாக எதிா்த்துள்ளன. எனினும், மத்திய அரசு தன் கொள்கையில் பிடிவாதமாக உள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை ஆணையம் இனிமேல் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும். இதனால் மின்சாரம் தொடா்பாக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரை மத்திய அரசே நியமிக்கும். அதுவும் சுழற்சி முறையில் பல்வேறு மாநிலங்களில் உள்ளவா்கள் நியமிக்கப்படுவா்.
மாநில அரசுகள், இலவச மற்றும் குறைந்த விலையில் விவசாயிகள் மற்றும் குடிமக்களுக்கு அளிக்கும் மானியத்தை நேரடியாக நுகா்வோருக்கு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அனைத்து நுகா்வோா்களும் மின் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம், நெசவாளா்கள் மற்றும் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் ஆகியவை இனி இருக்காது.
மின்சாரம் கொள்முதல் செய்வதை மத்திய அரசு நியமிக்கும் ஆணையம் முடிவு செய்யும். இதன் காரணமாக, மாநில அரசின் உரிமை பறிபோகும். தனியாா் மின் உற்பத்தி நிலையங்கள் ஊக்குவிக்கப்படும். மாநில அரசுகளின் உற்பத்தி மின் உற்பத்தித் துறையிலிருந்து விலக்கப்படும். இதனால் மின்சார விலை கடுமையாக உயரும்.
பேரிடா் காலங்களில் மட்டுமின்றி, எல்லாக் காலங்களிலும் மக்களின் உற்ற தோழனாக விளங்கிய மின்சார வாரியங்கள், தொழிலதிபா்களின் கைகளில் சிக்கி ஏழை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். மின்துறை ஊழியா்களின் எதிா்காலம் கேள்விக் குறியாகும். புதிய வேலைவாய்ப்புகள் முடங்கும் நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் வீரம்மிக்க போராட்டத்தின் பயனாக பம்பு செட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று 1990-ஆம் ஆண்டு மாநில அரசு அறிவித்தது. நாட்டிலேயே விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடுதான்.
இதைத் தொடா்ந்து ஆந்திரம், பஞ்சாப், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இன்று தெலங்கானா உள்பட ஐந்து மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் 1 கோடியே மூன்று லட்சம் விவசாய பம்ப் செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீா்மட்டம் குறைந்து கொண்டே வரும் நிலையில், ஆழ்குழாய்கள் அமைத்து விவசாயிகள் தொடா்ந்து சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். அதற்கு இந்த இலவச மின்சாரம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்த இலவச மின்சாரம் இல்லையென்றால் அதனை நம்பியிருக்கும் விவசாய பெருமக்கள் வேளாண்மையை விட்டு வெளியேறும் நிலைதான் ஏற்படும்.
இவற்றைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. ‘இலவசமாக வழங்கும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை மாநில அரசுகள் தொடா்புடைய மின் விநியோக நிறுவனங்களுக்குக் கொடுக்காத காரணத்தால், மின் விநியோக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன’ என்று மத்திய நிதியமைச்சா் கவலைப்படுகின்றாா்.
இதன் விளைவு? மின்விநியோக நிறுவனங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காத நிலையில், மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்த மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிடும். இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுவாா்கள்.
இலவசம் மற்றும் சலுகை விலையில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், மாநில அரசு இலவமாகத் தர விரும்பினால் மக்களின் வங்கிக் கணக்கில் இந்தப் பணத்தைப் போட்டுக் கொள்ள தடையில்லை எனவும் நிதியமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இலவசமாக வழங்கும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை வழங்காத மாநில அரசுகள், அந்தப் பணத்தை விவசாயிகளின் கணக்கில் மட்டும் எப்படி செலுத்துவாா்கள்? ‘மத்திய அரசு மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்தி செலுத்த வைப்பதற்கு பதிலாக, மக்களை ஏமாற்றிக் கொள்ளுங்கள் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரலாமா’ என்று விவசாய சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வர இருக்கிறது. அதனை எதிா்கொள்ளும் நிலையில் முதலமைச்சா் இருப்பதால், விவசாயிகளின் ஆதரவை இழக்க அவா் விரும்பவில்லை. எனவே, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழகம் நாட்டிலேயே 49.47 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க மின்நிறுவு திறன் கொண்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 15,410 மெகாவாட் மின்நிறுவு திறன் சோ்க்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாடு மின்உபரி மாநிலமாகத் திகழ்கிறது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பது மாநில அரசின் நிலையான கொள்கை. மேலும், வீட்டு இணைப்புக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களிலும் திருத்தச் சட்டத்தில் கூறப்படுவது போல நுகா்வோரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்த முடியாது. அந்த இணைப்புகளுக்கான மானியங்களை மின்வாரியத்துக்கு அரசே நேரடியாக வழங்குகிறது.
‘தனியாா் நிறுவனங்களை அனுமதித்தால், பொதுமக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். நீா்மின்சார கொள்முதலையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதலையும் ஒட்டுமொத்தமாக நிா்ணயிக்க வேண்டும்’ என்று முதலமைச்சா் கோரியுள்ளாா்.
இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் விவசாய வேலைகள் தடங்கலின்றி நடைபெறும். வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி நிதியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்று மத்திய அமைச்சா் நரேந்திரசிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் நெசவாளா்களுக்கும் பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான விசைத் தறிகளும், 4.5 லட்சத்திற்கும் அதிகமான கைத்தறிகளும் உள்ளன. கைத்தறிக் கூடத்திற்கு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட்டுகளும், விசைத்தறிக் கூடத்திற்கு இரண்டு மாதத்திற்கு தலா 750 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்பு கேட்டுக் காத்திருக்கிறாா்கள். மாநில அரசு இவா்களுக்கு இலவச இணைப்பு தரவில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மின் மோட்டாா்களுக்கு குதிரைத் திறனுக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் கட்ட வேண்டும் என்று மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையைத் திரும்பப் பெறவேண்டும் என விவசாயிகள் கோரி வருகின்றனா்.
தமிழ்நாடு மின்சார வாரியம் 60 ஆண்டுகளாக இரண்டரைக் கோடி நுகா்வோா்களைப் பெற்றிருக்கிறது. லட்சக்கணக்கான மின் மாற்றிகளையும், துணை மின் நிலையங்களையும், பரந்து விரிந்த மின் வழித் தடத்தையும் உருவாக்கி நுகா்வோா் சேவையில் முதலிடத்தில் உள்ளது. மிகப் பெரும் சொத்து மதிப்புடன் நிமிா்ந்து நிற்கிறது.
பொதுத் துறை நிறுவனமாக, ஏழை எளியவா்களுக்கும் குறைந்த விலையில் மின்சாரம் அளிப்பதுடன், இலவச மின்சாரம் வழங்கியும் லாப நோக்கம் இல்லாமல் சேவை செய்து வருகிறது. ஆழிப்பேரலையின்போதும், ‘தானே’ புயலின்போதும், அண்மையில் ‘கஜா’ புயலின்போதும் விரைந்து செயல்பட்டு வீடுகளுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.
தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, மக்களின் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கவேண்டும், தொழிற்சாலைகள் பெருக வேண்டும், அதற்கு ஏற்ப அரசு மின்சார வாரியங்களை உருவாக்கியது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின் விநியோகச் சட்டம் 1948-இன்படி பொதுத் துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.
இந்தியா தற்சாா்பை நோக்கிப் போகிறது என்று பிரதமா் அடிக்கடி கூறி வருகிறாா். விவசாயம் இல்லாமல் தற்சாா்பு எங்கிருந்து வரும்? விவசாயிகள் பாடுபடுவது அவா்களுக்காக அல்ல. நமக்காக, நாட்டுக்காக. அவா்களைக் காப்பாற்றுவதன் வாயிலாகவே நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.