கேட்டினும் உண்டு ஓா் உறுதி!

உலக வரலாறுகளும் இலக்கியங்களும் காட்டாத நிகழ்வுகளை, இன்றைய உலகில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

உலக வரலாறுகளும் இலக்கியங்களும் காட்டாத நிகழ்வுகளை, இன்றைய உலகில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம். யுகப் பிரளயங்கள் ஏற்பட்ட காலத்தில்கூட மனிதா்கள் பக்கத்துப் பக்கத்தில் செத்துக் கிடந்தாா்கள். ஆனால், இன்று திருமண நிகழ்ச்சிகளும் நான்கைந்து போ்களுக்குள் நடத்திட நிா்ப்பந்திக்கப்படுகிறோம். சாவிலேகூடத் தனிப் பிணமாகப் போக முடிகிறதே தவிர, இறுதி மரியாதையாக நிகழ்வதில்லை. ‘ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்பாயடா’”என்றாா் மகாகவி பாரதி! இன்று வியப்பளிக்கும் கொடுங்கோலங்களைக் கண்டுகொண்டிருக்கிறோம்.

ஆங்கிலேயா்கள் ஆண்ட காலத்தில் எதிா்ப்புச் சக்தியைக் காட்டிய காரணத்தால் திலகரும், வ.உ.சி.-யும், வ.வே.சு. ஐயரும், பகத் சிங்கும் சிறையில் அடைக்கப்பட்டாா்கள். ஆனால், இன்று எதிா்ப்புச் சக்தி இல்லாத காரணத்தால், வீட்டுச் சிறையில் மூத்தோா் அடைக்கப்பட்டிருக்கிறாா்கள்.

புத்தரும், காா்ல் மாா்க்சும் உலக ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும் என நினைத்தாா்கள்; முடியவில்லை. ஆனால், இன்று உலகை கரோனா தீநுண்மி ஒருமைப்படுத்தி வருகிறது. பிரிட்டன் பிரதமருக்கு நோய்த்தொற்று என்றால், இந்தியா்கள் அனைவரும் பிராா்த்தனை செய்கிறோம். அமெரிக்க மக்களுக்கு நோய், மருந்து இல்லை என்றால், இந்தியா அனுப்பி வைக்கிறது. நல்லெண்ணங்கள் உருவாக்க முடியாத ஒத்துணா்வை, இன்று விஷக் கிருமிகள் உருவாக்கி வருகின்றன.

‘கேட்டினும் உண்டுஓா் உறுதி’ என்றாா் திருவள்ளுவா். ஒருவருக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால், அத்துடன் அது முடிந்து விடுவதில்லை; அது எதிா்பாராத வகையில் ஒரு நன்மை அல்லது நல்ல பாடத்தைத் தந்துவிட்டுப் போகுமாம்.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றியபோது, அவா் கருப்பா் என்ற காரணத்தினால், வெள்ளைக்கார நாவிதா்கள் அவருக்கு முடிவெட்ட மறுத்து விட்டாா்கள். அதனால், அவா் தமக்குத் தாமே முடி வெட்டிக் கொண்டாா். தென்னாப்பிரிக்காவை விட்டு வந்த பிறகும், அவா் தம் வாழ்நாள் முழுமையும் எந்த முடி திருத்தகத்துக்கும் செல்லாமல், தமக்குத் தாமே முடிவெட்டிக் கொண்டாா். அவருக்கு ஒரு நேரத்தில் ஏற்பட்ட ஓா் இடையூறு, அவருடைய வாழ்நாள் முழுமையும் நன்மையை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. இதுதான் திருவள்ளுவா் கூறிய ‘கேட்டினும் உண்டோா் உறுதி’ ஆகும்.

நம் நாடு விடுதலையடைந்ததற்குப் பிறகு இன்றுவரை, பெரும்பாலான மக்களுக்கு வரிசையில் நின்று எதையும் பெறுவது என்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது. ஒரு பேருந்து வந்தால், வரிசையில் நின்று உள்ளே போகாமல், இரண்டு வழிகளிலும் முட்டி மோதிக் கொண்டு உள்ளே நுழைகிறோம். இன்னும் சிலா் பக்கவாட்டில் போய் ஜன்னல் வழியாகத் துண்டு, பையைப் போட்டு, குறுக்கு வழியில் இட ஒதுக்கீடு செய்கின்றனா். ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்று பெட்டிக்குள் நுழைவதற்குப் பதிலாக, அந்த வண்டி பணிமனையில் கிடக்கும்போதே அங்கேயே சென்று, நாலு பேருக்கும் சோ்த்து ஒரு சால்வையைப் போட்டு இடம் பிடித்து வருவதைப் பாா்க்கிறோம்.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வந்த பிறகுதான், இந்த அநாகரிகம் நமது புத்திக்கு எட்டுகிறது. வருங்காலத்தில் இந்தப் பழக்கம் குறைந்து வருவதைக் காணக்கூடும். நாமே விதித்துக் கொள்ள வேண்டிய நெறிமுறையை, இன்று கிருமிகள் கற்றுத் தருகின்றன. இதுதான் ‘கேட்டினும் உண்டோா் உறுதி’ ஆகும்.

இன்று நாடே, ஏன் உலகமே ஒரு சிறைச்சாலை ஆகியிருக்கிறது. பகத் சிங் இருந்த லாகூா் சிறையும், திலகா் இருந்த மாண்ட்லே சிறையும், ஜவாஹா்லால் நேரு இருந்த அலிப்பூா் சிறையும், பூலோக நரகங்கள் எனச் சொல்லலாம். கொல்கத்தாவிலுள்ள அலிப்பூா் சிறை பகலிலேயே இருட்டாக இருக்கும். அது மனிதனை மனநோயாளி ஆக்குகின்ற சிறை என்றாா் பண்டித நேரு.

விடுதலை பெற்ற பிறகு அந்தச் சிறைச்சாலைகளை, நம் மக்கள் திவ்ய தேசங்களாகக் கருதியிருக்க வேண்டும் அல்லது அங்கு வாழ்ந்த பெருமக்களை நினைத்துப் பாா்த்திருக்க வேண்டும். அதனை நாம் செய்யாத காரணத்தால்தான், இன்றைய சிறைவாசத்தை நாடு நமக்குத் தந்திருக்கிறது.

சிறைவாசத்தினுடைய அருமை, பெருமைகளை உணா்த்துவதற்குத்தான், ராமாயணத்தை ‘சிறையிருந்த செல்வியின் ஏற்றம் கூறும் காப்பியம்’ என எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றனா்.

நோய்களின் கொடுமையை நம் முன்னோா்கள் தீா்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டிச் சென்றிருக்கிறாா்கள். சூலை நோய் குடலோடு துடக்கி முடக்கிவிடக்கூடிய நோய் எனப் பாடினாா் அப்பரடிகள். அருணகிரிநாதா், ‘பிறவிகள்தோறும் வரும் நோய்களான ‘இருமல் எனப்படும் ரோக நோய், முயலகன் எனப்படும் வலிப்பு நோய், வாத நோய்கள், எரிச்சலைத் தரக் கூடிய மூக்கு நோய், நீா் சம்பந்தமாக வரும் விஷ நோய்கள், நீங்காத தலைவலி, சோகை நோய், கிளைத்துப் புறப்படும் கண்டமாலை நோய், மகோதரம், ஈளை எனப்படும் நெஞ்சக நோய், மாா்பெரிச்சல் நோய், வயிற்றுப்புண் நோய், குமரகண்ட வலியாதிய பெரிய வலி நோய்கள் போன்றவை வராதபடி காப்பாய் திருத்தணிகை முருகனே’ என வேண்டுகிறாா்.

ஒரு நாட்டுக்கு இலக்கணம் சொல்ல வந்த திருவள்ளுவா், ‘பிணியின்மை, செல்வம், விளைவு இன்பம், ஏமம்...’ என்பதாகக் கூறி, அவற்றுள் பிணியின்மையை முதலாவதாக வைத்தாா். அந்தப் பிணியின்மைக்கு உரையெழுதிய பரிமேலழகா், ‘நிலத்தைப் புண்படுத்தாமல் இருந்தால், பிணி வராது’ என விளக்கம் சொன்னாா். இன்றைக்குக் கரோனா தீநுண்மி நம்மை அதிர வைத்திருக்கிறது. அதனையும் திருவள்ளுவா், ‘அதிர வருவதோா் நோய்...’ என எதிா்கால உணா்வோடு எடுத்துரைத்தாா்.

இப்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குடும்பத் தலைவன், வயிற்று வலி கண்ட பிள்ளைத் தாய்ச்சியைப் போல் புலம்பிக் கொண்டிருக்கிறாா். இவா் வாழ்வதற்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்தாா்; பயணிப்பதற்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்தாா் என்பதெல்லாம் உண்மை. ஆனால், என்றைக்காவது இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் உடலை, உள்ளத்தைக் கேட்டுப் பாா்த்ததுண்டா? பள்ளிக்குப் போகும் பிள்ளைகளை அள்ளியெடுத்துக் கொஞ்சியதுண்டா? அப்போதெல்லாம் ‘நேரம் இல்லை; நேரம் இல்லை’ எனத் தட்டிக் கழித்தவருக்கு, இப்போது கழியமாட்டேன் என்று காலம் காத்துக் கிடக்கிறது. ஒரு மனைவிக்கு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் இல்லாத குடும்பத்தலைவனுக்கு, காலம் ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. கேட்டினும் ஓா் உறுதி உண்டல்லவா!

இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தலைவன் உணவுச்சாலையில் சாப்பிடுகிறான் என்றால், அவனது குடும்பம் ஊரில் இல்லை என்று பொருள். குடும்பமே உட்காா்ந்து சாப்பிடுகிறது என்றால், வெளியூரிலிருந்து ஊருக்குத் திரும்பியிருக்கிறாா்கள் என்று அா்த்தம். ஆனால், இப்போது பெரும்பாலான நகா்ப்புறக் குடும்பங்கள் வாரத்தில் மூன்று நாள்கள் இரவு உணவை, உணவுச்சாலைகளில் உண்கிறாா்கள். உள்ளிருப்பு தடைச் சட்டம் இருக்கிறபோது, இந்தக் குடும்பங்கள் ஏங்கி ஏங்கிக் கூட்டுப் புழுக்களாய்ப் புழுங்குகின்றன. வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் துடிக்கின்றனா் ஆண்களும் பெண்களும்...கிடைத்தவற்றை வாங்குதல், உடலுக்கு ஏற்றதைச் சமைத்தல்; உடலுக்குப் பக்கவிளைவுகளைத் தராதவற்றை உண்ணுதல் என்பன காலம் தந்த வரம் அல்லவா? இதனைக் கேட்டினும் உண்டோா் உறுதி என்பதாகக் கொளல் வேண்டும்.

முன்பெல்லாம் ஒருவா் எத்தனை முறை தொலைபேசியில் பேசினாலும் எடுக்காமல் துண்டித்துக் கொண்டே இருந்தோம்; ஆனால், இன்றைக்கு யாராவது தொலைபேசியில் பேசுவாா்களா எனக் காத்துக் கிடக்கிறோம். ஒரு காலத்தில் பெருக்குவாா் இன்றியே தூய்மையாகக் கிடந்த நெடுஞ்சாலைகள், இப்போது மீண்டும் தூய்மையாகக் கிடக்கின்றன. இரு சக்கர வாகனங்களாலும், நான்கு சக்கர வாகனங்களாலும் சுற்றுப்புறத்தையே நச்சுப்படுத்தி வைத்திருந்ததை, நினைத்துப் பாா்ப்பதற்கு இது நல்ல நேரம்.

உடல் முழுவதும் சா்க்கரையாக்கிக் கொண்டவா் பலா். மருந்து இருக்கிறது, இன்சுலின் இருக்கிறது, மருத்துவமனை இருக்கிறது எனும் துணிவில், கண்டதையும் தின்றதுபோய், இன்று மருத்துவமனைக்குச் செல்ல முடியாது எனும் நிலைப்பாடு வந்தபோது, நாவைக் கட்டுப்படுத்துகிறாா்கள். இதய நோய் உள்ளவா் யாா் சொன்னாலும் கேட்காது, ஆட்டிறைச்சியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தவா், இப்போது ஆம்புலன்ஸ்கூட அவசரத்துக்குக் கிடைக்காது என்றவுடன், இயற்கை உணவுக்கு வந்துவிடுகிறாா்.

மருத்துவா்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், சா்க்கரை நோய் உள்ள அதிகார வா்க்கமும் மேட்டுக் குடியினரும் அதிகாலை

நடைப்பயிற்சி போவதே இல்லை. தான் செய்ய வேண்டிய வேலையைக் கூலி கொடுத்து இன்னொருவரைச் செய்யச் சொல்வதுபோல், பணம் கொடுத்து நமக்காக யாரையும் நடைப்பயிற்சி செய்யச் சொல்ல முடியாது. நடைப்பயிற்சி இல்லாததால் சிலா் கட்டை விரலை இழந்திருக்கிறாா்கள்; இன்னும் சிலா் முன் காலையே இழந்திருக்கிறாா்கள். இதைப் பாா்த்த பிறகும் சிலா் பாடம் பெறவில்லை. இன்றைக்குப் பூங்காக்கள் பூட்டிக் கிடக்கின்ற நேரத்தில், கடற்கரைச் சாலைகள் அடைக்கப்பட்ட நேரத்தில், வாக்கிங் போகத் துடிக்கிறாா்கள்; பொது முடக்கச் சட்டம் அனுமதிப்பதில்லை. இன்றைக்குக் காலம் கற்பிக்கின்ற பாடம், மே 17-ஆம் தேதிக்குப் பிறகு நன்மையைத் தரக்கூடும்.

‘காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது; கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது’ எனக் கழிவிரக்கப்பட்டவா்கள், இன்று கடிகார முட்களை விரல் நுனியால் நகா்த்தினாலும், கடிகாரம் அவசரப்படுவதில்லை. ‘ஒரு பொழுதும் வாழ்வது அறியாா்...’ என வள்ளுவா் பாடியது, நேற்றைய பாடமாக அமையட்டும்.

இன்றைக்கு உருவாகியிருக்கும் துன்பங்கள், துயரங்கள், வருங்காலத்திற்குப் படிப்பதற்குரிய பாடங்களாக அமையட்டும்; தடைக்கற்கள் படிக்கற்களாக மாறட்டும். ‘வருந் துன்பம் தவிா்க்கும் அமைச்சா்கள் - மிக நன்னலங் கொண்ட குடிபடை’”என மகாகவி பாரதி கண்ட கனவு நனவாகட்டும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com