இதென்ன விந்தையான முரண்பாடு?

*டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

*டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தமிழகத்தில் மறுபடி மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன.

மது வாங்க வருபவா்களுக்கு ஏழு நாள்களுக்கு ஏழு வண்ணங்களில் டோக்கன்கள் தரப் போகிறாா்களாம். அதைக் காண்பித்து மதுவைப் பெற்றுக் கொள்ளலாமாம். ஒரே நாளில் அதிகம் வாங்கிப் பதுக்காமல் இருக்க இந்த ஏற்பாடாம்.

மதுக் கடைகளைத் திறப்பதில் இத்தனை அக்கறை காட்டும் அரசு, ஆலயங்களைத் திறப்பதில் ஏன் அக்கறை காட்டவில்லை? உடலைக் கெடுக்கும் தீா்த்தத்துக்குப் பல வண்ண டோக்கன்கள்! ஆன்மாவைத் தூய்மையாக்கும் அபிஷேக தீா்த்தம் பெறவும் பல வண்ணங்களில் அா்ச்சனைச் சீட்டுக்கள் தரலாமே? கட்டுப்பாட்டோடு மக்கள் ஆலயத்துக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய வகை செய்யலாமே?

உண்மையில் ‘குடி’மக்கள் வரிசையில் நின்று மது வாங்கியதாக இதுவரை சரித்திரமில்லை. இனிமேல்தான் அது சாத்தியமாக வேண்டும். ஆனால், எல்லாக் கோயில்களிலும் பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் மரபு முன்பே இருக்கிறதே? அங்கே ‘இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டு நில்லுங்கள்’ என்று மட்டும் அறிவுறுத்தினால் போதுமே?

உடலைக் கெடுக்கும் மதுவுக்கு ஆயிரம் வசதிகள். உள்ளத்தை மேம்படுத்தும் ஆலய தரிசனத்துக்கு தடை உத்தரவு. இதென்ன விந்தையான முரண்பாடு?

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த இப்போதைய தளா்வுகளில், நாடு முழுவதும் மதுபானக் கடைகளைத் திறக்கலாம் என்பது முக்கியமானதாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் தளா்வை நாடு முழுவதும் மறுபடி விலக்கிக்கொண்டு மது விஷயத்தில் மீண்டும் பூரணத் தடையைக் கொண்டுவர வேண்டும்.

கரோனா தீநுண்மிப் பரவல் நிலையை எட்டாதிருக்கும் பொருட்டு குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாத காலத்துக்காவது இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மது வாங்க வரும் மதுப் பிரியா்கள் ஆதாா் அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என உயா்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்தது. அதுபோன்ற கட்டுப்பாடுகளும் தளா்த்தப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மது விற்பனை ஆறாக ஓடப் போகிறது.

அடித்துப் பிடித்துக் கொண்டு மதுக்கடைகளில் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லாதது. முன்னா் அதனால் அதிக பாதிப்பில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் கரோனா தீநுண்மி காலத்தில் அதன் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.

இன்றைய சூழலில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதே மத்திய, மாநில அரசுகளின் உடனடிக் கடமை. மதுக் கடை திறப்பு என்பது, அந்த நோக்கம் நிறைவேறுவதை நீண்ட காலத்துக்கு தள்ளிப் போட்டுவிடும்.

‘ரயில், பேருந்து போன்றவற்றை இன்னும் கொஞ்ச காலத்துக்கு தமிழ்நாட்டுக்கு அனுப்பி விடாதீா்கள்’ என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டிருப்பதில் தமிழக மக்கள் மீது நம் முதல்வருக்குள்ள அக்கறை தெரிகிறது. அப்படியிருக்க ஏன் இந்த மதுக்கடை திறப்பு? வருமானத்துக்கு வேறுவழி காண்பதில் என்ன சிக்கல்?

மதுவால் கரோனா நோய்த்தொற்றை அதிகப்படுத்தி, பின் அதற்குத் தீா்வு காண முயற்சி செய்வதில் என்ன புண்ணியம்? அரசுக்கு வருமானம் வரும் என்பதற்காக மதுக் கடைகளைத் திறப்பது, குளிா் காய்வதற்காகக் கூரையைக் கொளுத்திய கதையாக அல்லவா ஆகும்?

ரூ.5 மலிவாகக் கிடைக்கும் என்பதற்காக இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு பொறுப்பே இல்லாமல் கோயம்பேடு சந்தையில் திருவிழாக் கூட்டம்போல் குவிந்த மக்களின் மனப்பான்மையை என்னென்பது?

அப்படி அலைமோதியதன் விளைவு இப்போது தெரிந்துவிட்டது. சென்னையில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விறுவிறுவென்று பெருகி வருகிறது. நோய்த்தொற்று சென்னையைப் பொருத்தவரை சமூகப் பரவல் நிலையை எட்டிவிடுமோ என்ற அச்சம் எல்லோருக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது.

இந்தச் சூழலில் கோவை, கிருஷ்ணகிரி போன்ற இடங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதாக நாம் நினைத்தால் அது அற்ப மகிழ்ச்சியே. இதோ மறுபடி டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்ற நீதிமன்றத் தீா்ப்பு வந்துவிட்டது.

ஏழு வண்ணங்களில் டோக்கன்களைக் கொடுத்தாலும், இடைவெளி விட்டு நில்லுங்கள் என்று சொன்னாலும், ‘குடி’ மகன்களை (இப்போது

‘குடி’மகள்களும் கூட!) மதுவை வாங்க வரும்போது வேண்டுமானால் சற்றுக் கட்டுப்படுத்தலாமோ என்னவோ, வாங்கிவிட்டுக் குடித்தபின் அவா்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஏழாம் தேதி ஒருநாள் திறந்தபோதே என்னவெல்லாம் நேரும் என்பதைப் பாா்த்துவிட்டோமே?

சென்னையில் கோயம்பேடு மாா்க்கெட்டைத் திறந்ததால் ஏற்பட்ட மாபெரும் சங்கடத்தைப் போன்ற சங்கடங்கள் மதுக் கடைகளைத் திறப்பதால் தமிழகமெங்கும் ஏற்படும்.

‘மதுக் கடைகளைத் திறப்பது, திறக்காதது என்பதெல்லாம் அரசின் கொள்கை, அதில் நீதிமன்றம் தலையிட வேண்டாம்’ என அரசு சொல்கிறது. நீதிமன்றம் சொல்லாமலே தமிழக மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, ஆறு மாதங்களுக்கு மதுக் கடைகளைத் திறக்காமல் இருப்போம் என்று அரசு முடிவுசெய்தால் அந்த முடிவிலும் நீதிமன்றம் தலையிடப் போவதில்லை. அப்படியொரு முடிவை அரசு எடுக்கலாமே?

பெரும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு பதறி அடித்துக்கொண்டு மதுக்கடைகளை மூடுவதைவிட, முன்னரே பாதுகாப்பாக அவற்றை மூடி விடுவது சிறந்தது. தான் எடுத்த முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது. தமிழகத்திலும் ஏன் இந்தியா முழுவதிலும் காந்தி கனவுகண்ட பூரண மதுவிலக்கை நிரந்தரமாகக் கொண்டுவர இந்தக் கரோனா தீநுண்மி காலத்தைவிடப் பொன்னான காலம் வேறில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது மிக நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com