3 நாள்களில் கூடுதலாக மழைப் பொழிவு - வானிலை ஆய்வு மையம்ஆயுத பூஜை, விஜயதசமி நன்னாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்வர் விஜய் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஆயுத பூஜை : பூக்கள், பழங்கள், காய்கறிகள் விலை அதிகரிப்புஅக்.23ல் மீண்டும் கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்

எப்பொழுது வாக்களிக்க பணம் பெறுகிறோமோ, அப்போதே ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் தார்மிக உரிமையை நாம் இழந்து விடுகிறோம். பின்னர் ஆட்சியாளர்கள் செய்யும் அத்தனை ஊழல்களுக்கும் துணை போகிறவர்களாக ஆகிறோம். 

Updated On :



சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஓயும்வரை தமிழகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வேட்பாளர்களின் இலவச அறிவிப்புகளும் சலுகை அறிவிப்புகளும் வாக்காளர்களை திக்குமுக்காடச் செய்தன. கட்சிகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசியதால் மக்கள் குழப்பமடைந்தனர். 

இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது நமது "வாக்கு'. சாமானியன் முதல் கோடீஸ்வரன் வரை அனைவருக்கும் பொதுவான, சமமான ஓர் உரிமை இந்த வாக்குரிமை. அதனைப் பெற அத்தனை வழிகளிலும் முயலும் அரசியல்வாதிகளை நாம் எவ்வாறு, எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? 

தேர்தல் அறிக்கை என்பது வாக்காளர்களை மயக்கும் வெற்று அறிக்கை. அது ஒரு தூண்டில்.  இலவசங்கள் என்பவை சமூக வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தடை. மக்களைச் சிந்திக்க விடாமல் அதே தளத்தில் வைத்திருக்கும் உத்தி. இலவசத்தையும் பணத்தையும் பெற்று வாக்களித்து நமது சந்ததியினருக்கு நாம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறோம்.

காலையில் ஒரு கட்சியில் இருப்போர் மாலையில் வேறு கட்சியில். சிலர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்றே தெரியாத அளவில் பல கட்சிகளிலும் இருந்துள்ளனர். கூட்டணிக் கதை அதற்கும் மேல். கடந்த தேர்தலில் அன்பொழுகப் பேசிக்கொண்டவர்கள் இன்று எதிரெதிராக நிற்கிறார்கள். சென்ற தேர்தலில் எதிரெதிராக இருந்தவர்கள் இன்று ஒன்றாய் இருக்கிறார்கள். இந்த நிலையில் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்வது வாக்காளருக்குப் பெரும் சவால்தான்.தங்களுடைய ஆட்சியில் செய்த சாதனைகளைக் கூறி வாக்குக் கேட்பதை விட்டுவிட்டு, தங்களது தவறுகளை மறைக்க சினிமா நட்சத்திரங்களை முன்னிறுத்தி பெரும் பொருள் செலவிட்டு வாக்கு சேகரிக்கின்றனர். இதனால், நல்லவர்களும் படித்தவர்களும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொள்கின்றனர்.

எப்பொழுது வாக்களிக்க பணம் பெறுகிறோமோ, அப்போதே ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் தார்மிக உரிமையை நாம் இழந்து விடுகிறோம். பின்னர் ஆட்சியாளர்கள் செய்யும் அத்தனை ஊழல்களுக்கும் துணை போகிறவர்களாக ஆகிறோம். 

சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்வோர், வாக்களிக்க மட்டும் தயக்கம் காட்டுகின்றனர். தனது அபிமான திரைநட்சத்திரம் நடித்து வெளியாகும் மூன்று மணி நேரத் திரைப்படத்தைக் காண அதிகாலை முதல் காத்திருக்கும் ரசிகக் கண்மணிகள், ஐந்து ஆண்டுகள் நம்மை ஆளப்போகிறவரைத் தேர்ந்தெடுக்க சிறிது நேரம் வரிசையில் நிற்பதற்குத் தயங்குகின்றனர். 

எவருமே சரியில்லை என நொண்டிச்சாக்கு கூறுவதையும், நான் ஒருவன் வாக்களிக்கச் செல்லாததால் என்ன ஆகிவிடப்போகிறது, எனது வாக்கால் மட்டும் மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறதா என்று சமாளிப்பதையும் மாற்றி ஒவ்வொருவரும் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருள்களும் ஆயிரம் ரூபாய் பணமும் வாங்கக் குவியும் கூட்டம், வாக்களிக்க மட்டும் சுணங்குவது ஏன்? நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி, அரசும் தன்னார்வலர்களும் ஏற்படுத்தும் விழிப்புணர்வு வெறும் விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது.

ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைப்பது, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது போல, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார்அட்டை அல்லது குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம், வாக்களிப்பது உறுதி செய்யப்படும். 

செல்லிடப்பேசி மூலம் அனைத்துப் பயன்பாடுகளும் வந்துவிட்ட பிறகு, செல்லிடப்பேசியைக் கொண்டு வாக்களிக்க வழிவகை செய்யலாமே? அதாவது, தேர்தல் நாளன்று வாக்களிக்கும் இணைப்பில் (லிங்க்) வாக்காளர் அடையாள எண்ணை உள் இட்டால், ஒரு முறை உபயோகிக்கும் வகையில் ஒரு கடவுச் சொல்லை அனுப்பலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே செல்லுபடியாகும் அந்த கடவுச் சொல்லைக் கொண்டு, வேட்பாளரைத் தேர்வு செய்து வாக்களிக்கலாம். 

இதனால், வெளியூர், வெளி மாநிலங்களில் இருப்போர் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கத் தேவையில்லை. இருந்த இடத்திலிருந்தே வாக்களிக்க முடியும். இதன்மூலம் பணவிரயமும் காலவிரயமும் தவிர்க்கப்படுவதோடு, பாதுகாப்பான முறையில் வாக்களிப்பதும் உறுதி செய்யப்படும். 

படிப்படியாக இம்முறையை அமலுக்குக் கொண்டு வரலாம். ஏனெனில், தற்போது மாதந்தோறும் எரிவாயு உருளை பெற செல்லிடப்பேசி மூலம் பதிவு செய்தல், பின்னர் உருளை பெறும் போது ஒரு முறை செல்லுபடியாகும் கடவுச் சொல்லை உள் இடுவது போன்ற பயன்பாட்டை மக்கள் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். 

அதனால், இவ்வாறு வாக்களிக்கும் முறையைக் கொண்டு வருவதில் சிக்கலில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்க வேண்டும்.
வாக்களிக்கும்போது ஜாதி, இனம், மதம், மொழி போன்றவற்றின் மீதான அபிமானங்களைத் தள்ளிவைத்துவிட்டு, அரசியல் கட்சிகளின் கொள்கை, செயல் திட்டம், அவை கடந்து வந்த பாதை ஆகியவற்றைப் பரிசீலித்து,  அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய கட்சியை -தலைவரை அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டும். 

முதல்முறை வாக்களிக்க இருக்கும் இளைஞர்களுக்கு அரசியல்  கட்சி, தலைவர் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் தகுதி, குணம் ஆகியவற்றைப் பார்த்து வாக்களிக்கலாம்.

வாக்களிப்பது நமது உரிமை; ஜனநாயகக் கடமை. நம்மிடம் இருக்கும் ஒரே அதிகாரம் வாக்குரிமை. எனவே, அனைவரும் தவறாமல் வாக்களித்து நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.