உரவிலை உயர்வு: கவலையில் விவசாயிகள்

மத்திய அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
Updated on
2 min read

மத்திய அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. 2021-22- நிதியாண்டு பட்ஜெட்டில் ரசாயன உரங்களுக்கான மானியத் தொகை குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இதற்கிடையே, உர நிறுவனங்கள், உரங்களின் விலையைக் கடுமையாக உயர்த்தி அறிவித்தன. உரங்களின் உபயோகம் அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-இல் உரம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அதன்பின் 1985-இல் உரங்கள் உற்பத்தி, உரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. 
1987-இல் மத்திய அரசு உரங்களின் உற்பத்தி, விலை நிர்ணயம், தரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து, அவற்றை மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 
1982-இல் உரங்களின் தயாரிப்பில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால் அது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை விற்கும் வகையில் உர நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கும் திட்டம் அப்போது உருவாக்கப்பட்டது. 
2005-இல் உர மானியம் வழங்கும் முறையைக் கண்காணித்து, உரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை மேம்படுத்தும் வகையில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், உர நிறுவனங்களுக்கு வழங்கி வந்த மானியத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததால், 2010 ஏப்ரல் முதல் தேதி முதல் புதிய உரக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. 
அதன்படி யூரியா உரத்தின் விலையை மட்டும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற உரங்களின் விலையை  உற்பத்தி செலவுக்கு ஏற்ப அந்தந்த நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. 
அத்துடன், அத்தியாவசிய பட்டியலில் இருந்து உரத்தை நீக்கியது. மத்திய அரசின் இந்த முடிவால் ரசாயனங்கள் உரங்கள் ஆகியவற்றின் விலை இரு மடங்காக உயர்ந்தது. ஆண்டுதோறும் உர நிறுவனங்கள் உரங்களின் விலையை  உயர்த்தி வந்தன. 
2018-ஆம் ஆண்டு வரை யூரியா மூட்டை ஒன்று ரூ.268 முதல் ரூ.283 வரையும், 
டிஏபி மூட்டை ஒன்றுக்கு ரூ.900 முதல் 1,100 வரையும் விற்றன. 2010-ஆம் ஆண்டு வெளியான உரக் கொள்கை அறிவிப்புக்கு முன்பிலிருந்து கடந்த ஆண்டு வரை, 30 சதவீதம் அதிகமாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ. 81 ஆயிரத்து 124 கோடியை உர மானியமாக ஒதுக்கிய மத்திய அரசு, நடப்பு ஆண்டு ரூ. ஒரு லட்சத்து 33ஆயிரத்து 947 கோடி உர மானியம் அளிக்க திட்ட மதிப்பீடு தயார் செய்தது. ஆனால், 2021-22 பட்ஜெட்டில் உர மானியத் தொகை ஒதுக்கீடு குறைக்கப்பட்டு ரூ.79 ஆயிரம் கோடி மட்டும் உர மானியமாக ஒதுக்கீடு செய்தது. 
இந்நிலையில், டிஏபி 58 சதவீதமும், நைட்ரஜன், பாஸ்பேட் பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் 46 சதவீதம் முதல் 51 சதவீதம் வரையும் விலை உயர்த்தி உர நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
வரலாறு காணாத இந்த விலை உயர்வு காரணமாக, டெல்டா மாவட்டங்களில் டிஏபி உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,900, என்பிகே உரங்கள் ரூ.1,775 முதல் ரூ.1,800 வரையும் உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வு விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உரத் தயாரிப்பு நிறுவனமான இப்கோ, டிஏபி உர விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. மூட்டை ஒன்றுக்கு ரூ.700 விலை உயர்த்தப்பட்டுள்ளது. உரம் விலை உயர்த்தப்பட்டதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் விவசாயிகளின் குரல் வலுத்து வருகிறது. 
உரங்கள் விலையேற்றத்துக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும், விவசாய சங்க நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பரவலாக எதிர்ப்பு எழுந்ததையடுத்து மத்திய அரசு இப்போது உர விலை உயர்வுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை, டிஏபி மூட்டை ஒன்றுக்கு ரூ.1,200 என்றும், கலப்பு உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.925 என்றும், என்பிகே -1 உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,175 என்றும், என்பிகே -2 உரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,175 என்றும் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. 
மத்திய அரசு, உரத்துக்கான மானியத்தைக் குறைத்து விட்டதாலும், உர நிறுவனங்கள் உரங்களின் விலையை கடுமையாக உயர்த்தியதாலும், விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். அடுத்த (2022) ஆண்டுக்குள் விவசாய உற்பத்தி இரு மடங்காக உயர்த்தப்படும். விவசாயிகளின் வருமானம் மும்மடங்காக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், உரங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டால் விவசாயிகளின் வருமானம் ஒரு மடங்காகக்கூட உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே, உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தருவதை விடுத்து, விவசாயிகளுக்கு நேரடியாக தர ஆவன செய்ய வேண்டும். 
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் உர மானியத்தைக் குறைத்து உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகள் மீது மேலும் ஒரு தாக்குதலை மத்திய அரசு தொடுத்துள்ளது. 
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் சட்டப்போரவைத் தேர்தல் முடிந்த உடனேயே விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே உடனடியாக மீண்டும் மும்முனை மின்சாரம் வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். 
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், உர நிறுவனங்கள், உரங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், விலை உயர்வுக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது என்றும், உரங்களின் விலையைக் குறைக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 
அவர்கள் கூறியதுபோல் நடக்குமா? விவசாயிகள் கவலை தீருமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com