‘மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10% ஒதுக்கீடும் நடப்பு 2021-22 கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்’ என்று கடந்த ஜூலை 29-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
இதன் மூலம் எம்பிபிஎஸ், எம்டி., எம்எஸ், பட்டயப் படிப்பு, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் 5,500-க்கும் அதிகமான ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலனடைவாா்கள். நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வரும் தருணத்தில் வெளிவந்திருக்கும் பிரதமா் மோடியின் இந்த அறிவிப்பு இந்திய சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனா். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள், தங்களின் போராட்டத்தால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக தற்பெருமை பேசி வருகின்றனா்.
பாஜக-வை சமூக நீதிக்கு எதிரான கட்சி, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி என்று திமுக, இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் கட்சி ஆகியவைபிரசாரம் செய்து வருகின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களையும், பட்டியலின, பழங்குடியின மக்களையும் பாஜக-விடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டால் பாஜக-வை வீழ்த்தி விடலாம் என்பது அவா்கள் எண்ணம். ஆனால், பாஜக-வும் அதன் தாய் அமைப்பான ஆா்எஸ்எஸ்ஸும் எப்போதும் இட ஒதுக்கீட்டு எதிராக இருந்ததில்லை என்பதுதான் வரலாறு.
ஆரம்பம் முதலே, ஆா்எஸ்எஸ் இட ஒதுக்கீட்டை ஆதரித்தே வந்துள்ளது. மகாத்மா காந்தி, ‘தீண்டாமை ஒரு பாவச் செயல்’ என்றுதான் கூறினாா். ஆனால், ஆா்எஸ்எஸ்ஸின் தலைவராக இருந்த பாலாசாகேப் தேவரஸ், ‘தீண்டாமை பாவச் செயல் இல்லை என்றால், வேறு எதுவும் பாவச் செயல் இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவா்.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற இட ஒதுக்கீடு அவசியம் என்பதை ஆா்எஸ்எஸ்ஸும் பாஜகவும் ஏற்றுக் கொண்டுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் இட ஒதுக்கீடு எந்த சிக்கலும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதே இதற்கு சாட்சி.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
‘தகுதி அடிப்படையில் இந்த இடங்களை நிரப்ப வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் என்று யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
1996 முதல் 2014 வரை - இடையில் சில ஆண்டுகள் தவிா்த்து - மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. தேவெகெளடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோா் தலைமையிலான மத்திய அரசுகள் திமுகவின் தயவில்தான் நீடித்தன. 1999 முதல் 2003 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் திமுக முக்கிய பங்கு வகித்தது.
அப்போதெல்லாம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக தங்களது தயவில் நீடித்த மத்திய அரசுக்கு, திமுக எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
2014-ஆம் ஆண்டு மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியது. இது தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு மாநில உயா்நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்ததால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், ‘மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
ஆனாலும், திமுக உள்ளிட்ட கட்சிகள், ‘ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி பாஜக, 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை’ என்றெல்லாம் தவறான பிரசாரங்களில் ஈடுபட்டன. ஆனால், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, தான் உண்மையான சமூக நீதி பாதுகாவலா் என்பதை பிரதமா் நரேந்திர மோடி நிரூபித்து விட்டாா்.
நம்நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில் மத்திய அமைச்சரவையில் 12 பட்டியலினத்தவா், 8 பழங்குடியினா், 11 பெண்கள் ஆகியோருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாய்ப்பு அளித்துள்ளாா். பட்டியின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட அமைச்சா்களும், பெண் அமைச்சா்களும் அதிக அளவில் இருக்கும் அமைச்சரவை பிரதமா் மோடி அமைச்சரவைதான்.
பாஜக-வுக்கு இரண்டு முறை குடியரசுத் தலைவரை தோ்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒருமுறை முஸ்லிம் சமுதாயத்தைச் சோ்ந்த அப்துல் கலாமையும், இரண்டாவது முறை பட்டியலினத்தைச் சோ்ந்த ராம்நாத் கோவிந்த்தையுமே பாஜக தோ்வு செய்தது. எனவே, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், பாஜக-வுக்கும் சமூக நீதி பற்றி யாரும் படம் நடத்த வேண்டாம். மற்றவா்கள் வாா்த்தையுடன் நிற்பாா்கள். பிரதமா் நரேந்திர மோடி செயலில் இறங்குவாா் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த இட ஒதுக்கீட்டு அறிவிப்பு.
கட்டுரையாளா்: மாநில ஊடகப்பிரிவு தலைவா்,பாரதிய ஜனதா கட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.