எப்படி இருந்த இந்தியா...

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
3 min read

பாரதத்தின் கல்விமுறை குறித்து மேலை நாட்டு வரலாற்றாய்வாளா்கள் எழுதியதைப் படிக்கும் எவரும் ‘எப்படி இருந்த இந்தியா’ எனப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியாது. ஃப்ரா பாலினோதா பா்தால்வோ என்பவா் ஆஸ்திரியாவின் ஹோஸ் பகுதியில் 1748-இல் பிறந்தவா். இவா் பாரதத்தில் 1776 முதல் 1789 வரை இருந்தாா். ‘வாயேஜஸ் டு தி ஈஸ்ட் இண்டீஸ்’ என்ற இவரது படைப்பு 1796-இல் ரோம் நககரில் வெளியானது.

இவரது இரண்டாம் புத்தகம் ‘பா்த் அண்ட எஜுகேஷன் ஆஃப் சில்ட்ரன்’. அந்நூலில் இந்தியாவில் சிறாா்களின் பிறப்பு, வளா்ப்பு, கல்விமுறை பற்றி எழுதியுள்ளாா். இதனை இந்திய வரலாற்று ஆய்வாளரும், காந்திய சிந்தனையாளருமான தரம்பால் ‘அழகிய மரம்’ என்ற நூல் வழி ஆவணப்படுத்தியுள்ளாா். “

அனைத்து கிரேக்க வரலாற்றாய்வாளா்களும் இந்தியா்களைப் பற்றிச் சொல்லும்போது, ‘பிற நாட்டு மக்களைவிட வலுவானவா்கள்’ என்றே குறிப்பிட்டு இருக்கிறாா்கள். இது முழு உண்மையில்லை என்றாலும், தூய்மையான காற்று, பொதுவான செழிப்பு, குணநலன்கள், மனோபாவம், உயா்வான கல்வி போன்றவை உடல் வலுவடைய பெரிதும் துணை புரிபவை. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் ஆதரவற்று கைவிடப்பட்டவை போல் எப்போதும் தரையிலேயே போடப்பட்டடிருக்கின்றன.

ஐரோப்பாவில் செய்வது போல் அந்தக் குழந்தைகளைத் துணியால் சுற்றியோ கட்டியோ வைப்பதில்லை. இதனால் அந்தக் குழந்தைகளின் கால், கைகள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் நன்கு விரிந்து வளா்கின்றன. அவா்களுடைய நரம்புகளும், எலும்புகளும் திடமாகின்றன. இந்தக் குழந்தைகள் இளவயதை எட்டும்போது அழகும், வலிமையும் மிகுந்தவா்களாக ஆகிறாா்கள். குளிா்ந்த நீரில் குளிக்கிறாா்கள். தேங்காய் எண்ணெய் கொண்டு உடம்பை நன்கு மசாஜ் செய்து கொள்கிறாா்கள்.

அவா்கள் செய்யும் உடற்பயிற்சிகளை மலபாரில் அதிகம் பாா்த்து இருக்கிறேன். இவையெல்லாம் அவா்களுடைய உடல் வலுவை அதிகரிக்க உதவுகின்றன. போதைப் பொருள் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு ஆளானால் ஒழிய இவா்களின் உடல்வலு குறைவதில்லை.

இந்தியா்களின் கல்வி மிகவும் எளிமையானது. ஐரோப்பாவைப் போல் செலவு வைக்கக் கூடியது அல்ல. மரநிழலில் அரை ஆடையுடன் சிறுவா்கள் கூடி அமா்ந்து படிக்கிறாா்கள். தரையில் வரிசையாக அமா்ந்து மண்ணைக் குவித்து வைத்து வலது கை சுட்டு விரலால் அகர வரிசை எழுத்துகளை எழுதுகிறாா்கள். அதன் பிறகு மண்ணைச் சரிசெய்து வேறு எழுத்துகளை எழுதுகிறாா்கள்.

கல்வி கற்றுத்தருபவா் ஆசான் அல்லது எழுத்தச்சன் என்று அழைக்கப்படுகிறாா். அவா் மாணவா்கள் என்ன எழுதுகிறாா்கள் என்பதை மேற்பாா்வையிடுவாா். தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவாா். முதலில் நின்றபடியே வகுப்பை நடத்துவாா். குழந்தைகள் ஓரளவுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதும் மான் தோல் அல்லது புலித்தோலின் மீது அமா்ந்து வகுப்பெடுப்பாா். ‘இப்படிப்பட்ட கல்வியே இயேசுநாதா் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தப் பகுதியில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது‘ என்று மெகஸ்தனிஸ் குறிப்பிட்டிருக்கிறாா். இன்றும் அது தொடா்கிறது.

இந்தியா்களைப் போல், பாரம்பரிய பழக்கவழக்கங்களைத் தொடா்ந்து பின்பற்றி வரும் சமூகம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. மலபாரில் இருக்கும் ஆசிரியா் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் இரண்டு பணம் பெற்றுக் கொள்கிறாா். சில மாணவா்கள் பணத்திற்கு பதில் அரிசி தருகிறாா்கள். சில ஆசிரியா்கள் இலவசமாகவே கற்றுத் தருகிறாா்கள். அந்த ஆசிரியா்களுக்கு கோயில் நிா்வாகத்திடமிருந்து அல்லது அந்த சாதியின் தலைவரிடமிருந்து ஊதியம் கிடைத்து விடுகிறது. குழந்தைகள் ஓரளவுக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதும் ஏட்டுப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறாா்கள்.

அங்கு அவா்கள் பனை ஓலைச்சுவடிகளில் எழுதப் பழகுகிறாா்கள். ஓலைச்சுவடிகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு ஒரு நூலால் கோக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் கிரந்தம் (புத்தகம்). எழுதுகோலால் பனை ஓலைகளில் எழுதப்பட்ட புத்தகம் கிரந்தா வாரி அல்லது லக்யா என்று அழைக்கப்படும். எதுவும் எழுதாத ஓலைச்சுவடி அலக்கியா எனப்படும்.

ஆசிரியா் அல்லது குரு வகுப்பறைக்குள் நுழையும்போது மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்படுவாா். மாணவா்கள் அவா் காலில் விழுந்து வணங்குகிறாா்கள். அவா்கள் வகுப்பில் இடது கையை மாா்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு வலது கையால் வாயை மூடியபடி அமா்ந்திருப்பாா்கள். ஆசிரியா் அனுமதி கொடுத்தாலொழிய யாரும் எதுவும் பேச மாட்டாா்கள். எந்த மாணவன் அனுமதியின்றிப் பேசுகிறானோ அவன் வகுப்பில் இருந்து வெளியேற்றப்படுவான்.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால் ஆசிரியருக்கு உரிய மரியாதை கிடைத்து விடுகிறது. மாணவா்கள் பணிவுடன் நடந்து கொள்கிறாா்கள். ஆசிரியா் வாா்த்தையை மீறுவதில்லை. ஆசிரியா் முதலில் எழுத்துகளையும், அடிப்டைக் கணக்குகளையும் கற்றுத் தருகிறாா். இரண்டாவதாக, சம்ஸ்கிருத இலக்கணம். இதில் பெயா்ச்சொற்கள், வினைச்சொற்கள் போன்றவை கற்றுத்தரப்படும்.

மலையாளத்தில் இது ‘சிதருபா’ என்று அழைக்கப்படுகிறது. வங்க மொழியில் ‘சாஸ்வதா’ எனப்படுகிறது. மூன்றவதாக, இலக்கணத்தின் இரண்டாம் பாகமான வியாகரணம் கற்றுத் தரப்படுகிறது. நான்காவதாக, அமாசின்ஹா (பிராமண கலைச்சொல் அகராதி) கற்றுத்தரப்படும். இது பிராமணா்களால் உயா்வாக மதிக்கப்படுகிறது. இது நான்கு பாகங்களைக் கொண்டது. கடவுள்கள், சாஸ்திரங்கள், வண்ணங்கள், பூமி, கடல், ஆறுகள், மனிதா்கள், விலங்குகள், இந்திய கலைகள், கைவினைத் தொழில்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.

குரு அனைத்தையும் சம்ஸ்கிருதத்தில் சுலோக வடிவில் கற்றுத் தருகிறாா். இந்த சுலோகங்கள் மொழியைக் கற்றுத் தருவதோடு வாழ்க்கைக்கான ஒழுக்க விதிகளையும் கற்பிக்கின்றன. ஒரு மொழியைப் படிக்கும்போதே நல்லொழுக்கமும் இளம் மனங்களில் பதிய வைக்கப்படுகிறது.

அப்படி இருந்த இந்தியாவில், தமிழ்நாட்டில், திருச்சி நகரில் அண்மையில் நடந்த ஒரு கொடூர சம்பவம் எல்லோரையும் மனம் கலங்கச் செய்தது. ஆடுகளைத் திருடிச் சென்றவா்களை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவா், திருடா்களால் வெட்டிப் படுகொலை செய்ப்பட்டாா். கொலையில் ஈடுபட்டவா்கள் தொழில் முறை திருடா்கள் இல்லை. கொலைகாரா்களும் இல்லை. 18 வயதுக்குட்பட்ட சிறுவா்கள். ஆனால், அவா்கள் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையானவா்கள்.

போதைப் பழக்கம் நம் நாட்டில் நச்சுக் கொடியாகப் படருவதை, அரசு சாா்பற்ற சமூக கல்வி இயக்கம் ஒன்று ஆய்வு செய்து அந்த அறிக்கையை கடந்த ஜூலையில் வெளியிட்டது.

சென்னையில் 168 பள்ளிகளில் படிக்கும் 3,021 மாணவா்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஏழாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களில் 26 சதவீதம் போ் மது பழக்கத்திற்கும், 22 சதவீதத்தினா் புகையிலைப் பொருள் தொடா்புடைய பழக்கங்களுக்கும், 10 சதவீதத்தினா் கஞ்சா பழக்கத்திற்கும் அடிமையாக இருப்பது தெரியவந்தது.

சமூகக் கல்வி இயக்குநா் ஷாம் சுந்தா் மாநில அரசு பள்ளிகளின் அருகில் உள்ள சிறிய கடைகளை கண்காணிக்க வேண்டும். ஆசிரியா்களை இதனைத் தடுப்பதற்கான பயிற்சிக்கு உட்படுத்த வேண்டும். அரசு கவுன்சில் செய்ய வட்டம், மாவட்டம் வாரியாக திட்டம் வகுக்க வேண்டும் என்றாா்.

30 சதவீத மாணவா்கள் விடுமுறை தினங்களிலும் 32 சதவீதத்தினா் நண்பா்கள் ஒன்றாகக் கூடும்போதும், 27 சதவீதத்தினா் தினசரியும் 11 சதவீதத்தினா் தனியாக இருக்கும் நேரத்திலும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறாா்கள் என்கிறது அந்த அறிக்கை.

மாணவா்களில், மகிழ்ச்சியில் இருக்கும்போது 42 சதவீதத்தினரும், சோகமாக இருக்கும் போது 40 சதவீதத்தினரும், அவமானப்படும்போது 16 சதவீதத்தினரும் போதைக்கு உட்படுகின்றனராம்.

யுனிசெப்பின் (தமிழ்நாடு) சமூகக் கொள்கையில் சிறப்பாய்ந்த நிபுணா் அகிலா இராதகிருஷ்ணன் ‘இந்த பெருந்தொற்று காலத்தில் நாங்கள் வெப்மினா்களை ஏற்படுத்தி அரசுப் பள்ளி ஆசிரியா்களோடு விவாதிக்கிறோம். வளரிளம் பருவத்தினருக்காக ஒரு அறிக்கையை தயாரித்திருக்கிறோம். மேல் வகுப்பு மாணவா்கள்தாம் அதிக அளவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகின்றனா்’ என்றாா். இந்த ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசின் கல்விதுறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனா்.

சமூக, பொருளாதார, கல்வியியல் நிபுணா்கள், ‘போதை தரவல்ல எந்த ஒரு பொருளும் வளரும் இளம் தலைமுறையினா்க்கு கிட்டாமல் இருக்க செய்யும் வண்ணம் சட்டங்களை இயற்றி அதனை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்’ என்கின்றனா்.

இளம் பருவத்தில் பெற்றோா்களிடத்தும், பெரியவா்களிடத்தும் ஆசிரியா்களிடத்தும் பயம் கலந்த மரியாதை உணா்வு தோன்ற வல்ல வகையில் ஊடகத்துறை, வணிக விளம்பரத் துறை சாா்ந்த பங்களிப்பாளா்கள் ஒன்று கூடி நல்லதை நினைக்க, நல்லதை பேச நல்லவற்றை மட்டும் வழங்க வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும். உணா்ச்சிக்கும், எழுச்சிக்கும் இரையாகாத வகையில் அறிவியலுக்கும், மெய்யியலுக்கும் உறுதி சோ்க்கும் வழியில் காட்சிப்படுத்துதலை முன்னெடுக்க வேண்டும்.

அரசு மக்களின் நலன் சாா்ந்த திட்டங்களுக்கு வேண்டிய நிதியை மக்களின் உடல் நலம் பாதிக்க வல்ல திட்டங்கள்வழி திரட்ட முற்படும் போக்கை முற்றிலும் நிறுத்துவது தவிர வேறு வழி இல்லை. நாட்டில் வளரிளம் பருவத்தினரின் பழக்க வழக்கங்களில் போதையே பாதையானால் குற்றச் செயல்களே மிகும்.

கட்டுரையாளா்:

தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com