இந்த நிலை மாறிவிடாது!

அண்மையில் டுவிட்டர் சிஇஓ ஆக இந்திய வம்சாவளியான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டவுடன் இந்தியாவே பரவசப்பட்டது
இந்த நிலை மாறிவிடாது!

அண்மையில் டுவிட்டர் சிஇஓ ஆக இந்திய வம்சாவளியான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டவுடன் இந்தியாவே பரவசப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவில் குடியேறியவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனங்களுள் (இமிக்ரான்ட் ஃபௌண்டட் கம்பெனீஸ்) 33% நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களால் நிறுவப்பட்டவை. 
1995-2005 வரை 25% மற்றும் 2006 - 2012 வரை 33% பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு இந்தியர்களால் நிறுவப்பட்ட நிறுவனங்களை அமெரிக்கர்கள் பல பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியும் உள்ளனர்.  

30% பார்சூன் 500 நிறுவனங்களின் சிஇஓ-க்கள், சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களின் மூன்றில் ஒரு பங்கு பொறியாளர்கள், என இந்தியர்கள் ஆதிக்கமே பரவியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்பு, மேலாண்மை, உழைப்பு, மனித வளம் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியர்களுக்குள்ள ஒருங்கிணைந்த திறனும், ஆற்றலுமே இதற்கான முக்கியக் காரணிகள் என்றும் தரவுகள் கூறுகின்றன.  

"அமெரிக்க மக்கள் தொகையில் 1% மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பணியாளர்களில் 6% இந்திய வம்சாவளியினர். 40 லட்சம் இந்தியர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் உள்ளனர். சியாட்டில் போன்ற நகரங்களிலுள்ள வெளிநாட்டில் பிறந்த பொறியாளர்களில் 40% இந்தியர்கள்தான். எனவே, நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இந்தியர்கள் அங்கம் வகிப்பதில் வியப்பேதும் இல்லை. 
கார்பொரேட் நிறுவனங்களுக்கான திட்டமிடல் வல்லுனர் சி கே பிரகலாத் கூறுகையில், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி இடம் கிடைக்கக் கடுமையான போட்டி, போதிய கட்டமைப்புகள் வசதிகள் கிடையாது, திறமைக்கு அங்கீகாரம் இல்லை, என இளம் வயது முதற்கொண்டே, பல்வேறு தடைக் கற்களை உடைத்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மேலாண்மைத் தன்மை இந்தியர்களுக்கு இயற்கையாவே அமைந்து விடுகிறது. 

போட்டியும் பிரச்னைகளுமே காலப்போக்கில் இந்தியர்களைச் சிக்கல்களின் தீர்வாளர்களாக உருமாற்றி விடுகிறது. வேறெந்த நாடும் இதுபோன்ற பயிற்சியைத் தருவதில்லை. அவர்களின் வெற்றிக்கும் இதுவே அடிப்படை' என்கிறார்.   

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இந்திய வம்சாவளி ஒருவர் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனத்தின் சிஇஓ / தலைவராகும் போது ஏதோ நாமே அமெரிக்க நிறுவனத்தையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை பெற்றவர்கள் போல் குதூகளிக்கிறோம். கொண்டாடுகிறோம். சம்பந்தப்பட்ட சிஇஓ-க்களும் இந்திய நலன்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால் நிலவரம் என்ன தெரியுமா? 
பெப்சி தொடங்கி சமீபத்திய டுவிட்டர் சிஇஓ வரை அனைவரும்  இந்திய வம்சாவளியினர். அவ்வளவே. ஒருவர் கூட இந்தியக் குடிமகன் இல்லை. அவர்கள் அனைவரும் நீண்ட காலம் முன்பே இந்தியக் குடியுரிமையை திரும்ப ஒப்படைத்துவிட்டு அமெரிக்கக் குடிமகன்களாகி விட்டனர் என்பதே  கசப்பான உண்மை.

இந்தியனாகப் பிறந்து, வளர்ந்து, படித்து, இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்களைத் தொடங்கி, தொழிலதிபர்களாக விளங்கும் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா, ராகுல் பஜாஜ், விப்ரோ அஜீம் பிரேம்ஜி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, டிவிஎஸ் வேணு ஸ்ரீநிவாசன், அமால்கமேஷன்ஸ் மல்லிகா ஸ்ரீநிவாசன், தோஹோ ஸ்ரீதர் வேம்பு, ஆனந்த் மகிந்திரா, ஹெச்சிஎல் ஷிவ் நாடார் உள்ளிட்ட இந்திய கார்பொரேட் தலைவர்களை நாம் கொண்டாடுவதும் இல்லை. போற்றிப் பாராட்டுவதுமில்லை.  

கணினி, தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு, உணவு, ஹோட்டல், வீட்டு உபயோகப் பொருள்கள், கட்டுமானம், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி என பல்வேறு துறைகளில் நிறுவனங்களைத் தொடங்கி கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் இந்தியக் கார்பொரேட் தலைவர்களை நாம் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. 
மாறாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக, ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் பெரு நிறுவன முதலாளிகள் என்றும், அரசுகளை வழிநடத்தும் மறைமுகச் சக்திகள் என்றும் இவர்களைத் தூற்றிக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய ஆய்வுகளின்படி டாடா குழுமம் 7 லட்சம், ஆதித்ய பிர்லா குழுமம் 1.5 லட்சம், இன்ஃபோசிஸ் குழுமம் 2 லட்சம், மகிந்திரா குழுமம் 2 லட்சம், ரிலையன்ஸ் குழுமம் 2.5 லட்சம், விப்ரோ குழுமம் 2 லட்சம், ஹெச்சிஎல் குழுமம் 1.5 லட்சம், டிவிஎஸ் குழுமம் 60,000, பஜாஜ் குழுமம் 50,000 என லட்சக் கணக்கான இந்தியர்களுக்கு இவை வேலை வாய்ப்புகளை வாரி வழங்கி வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும், மேற்கூறியவை உள்பட இந்தியக் கார்பொரேட்கள்  குறைந்தபட்சம் 30 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றன. 

ஆனால் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, இந்தியாவில் கல்வி கற்ற பன்னாட்டு சிஇஓ-க்கள் வெளிநாட்டுப் பணிகளை விரும்பி ஏற்றுக் கொண்டார்களா அல்லது இந்தியாவில் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் வெளிநாடுகளுக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்களா என்பது விவாதிக்க வேண்டிய விஷயம். ஃபார்சூன் 500 நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் பதவி வகிப்பதற்கான காரணிகளை மேற்கண்ட வல்லுனர்கள் பட்டியலிட்ட நிலையில் ஜி ஆர் கோபிநாத் வேறு கோணத்தில் அணுகியுள்ளார்.
"இது அமெரிக்கர்களின் வெற்றி, இந்தியர்களின் வெற்றி அல்ல. காரணம் இந்தியர்களின் திறமைகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. இந்தியா தவற விட்டு விட்டது. ஆனால் சீனாவோ தங்கள் நாட்டை விட்டுச் சீனர்கள் வெளியேறாதவாறு போதிய உயர்தரக் கல்வியோடு, அலிபாபா, டென்செண்ட், க்ஸியோமி, கிரேட் வால் மோட்டார்ஸ், ஹவேய், இசட்இ, ஃபாக்ஸ்கான் போன்ற மிகச் சிறந்த பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்கியதுடன், கணிசமான வேலை வாய்ப்புகளைச் சீனர்களுக்குச் சீனாவிலேயே வழங்கி உள்ளது. 

சீனாவைப்போல் இந்தியாவும் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவிலேயே உருவாக்கி இந்தியர்களின் அறிவுத் திறனை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சீனாவைப் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடம்' என்கிறார்.
அவரது கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத்தானே சொல்கிறார் என்று தோன்றும். ஆனால் அலசிப் பார்த்தால் மட்டுமே இதிலுள்ள பிரச்னைகள் தெரிய வரும். இந்தியா ஜனநாயக நாடு. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி தங்களை ஆள வேண்டியவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பல கட்சிகளின் கூட்டணி ஆட்சியும், தனிப் பெரும்பான்மையுடனான ஆட்சியும், இந்தியாவில் நடக்கிறது.
ஆனால் சீனாவில் இருக்கும் ஒரேயொரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான். ஒரே கட்சியின் அரசுதான். கம்யூனிஸ்ட் என்னும் சர்வாதிகார ஆட்சிதான். எட்டு மணி நேர வேலை, தொழிலாளர் நலச் சட்டங்கள், வேலை நிறுத்தம்,  போராட்டம், கடை அடைப்பு, கண்டனக் கூட்டம், அரசுக்கு எதிரான பிரசாரம்  என எதுவும் சீனாவில் இல்லை. 

இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், சீனாவில் திறமைக்கு மட்டுமே மதிப்பும் அங்கீகாரமும். எனவே படிப்பதற்கும், வேலை பெறுவதற்கும் இந்தியர்கள் போராடுவதுபோல் சீனர்கள் போராட வேண்டியதில்லை. வெளிநாட்டுக்குச் சென்று படிக்கவோ, வேலை தேடவோ அவர்களுக்கு அவசியமும் இல்லை. 

சீனாவைப் பொருத்தவரை ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே கட்சி, ஒரே ஆட்சி. ஆனால், இது இந்தியாவில் சாத்தியப்பட வாய்ப்பே இல்லை என்பதால் சீனாவுடன் எந்தக் காலத்திலும் இந்தியாவை ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியாது. எனவே பூக்கள் இருக்கும் இடம் தேடி வண்டுகள் பறப்பதைப்போல், வாய்ப்புகள் கிடைக்கும் இடம் நோக்கி இந்தியர்கள் செல்வதை இயற்கை விதியாகவே ஏற்க வேண்டும். 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் இந்தியர்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டன் பாஸ்போர்ட்டைத் தழுவி உள்ளனர். அவர்கள் ஏன் இந்தியாவை விட்டு வெளிநாடுகளின் கடவுச் சீட்டை தழுவினர் என்பதை ஆய்வு செய்தல் வேண்டும். அத்துடன் இந்தியாவில் தொழில் தொடங்காமல் ஏன் அமெரிக்காவில் நிறுவனங்களை ஆரம்பிக்கின்றனர் என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 

என்றைக்கு இந்தியாவில் கல்வியிலும், வேலையிலும், போதிய வாய்ப்புகளும், வசதிகளும், சரி சமமாக அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கிறதோ, என்றைக்குத் தொழில் தொடங்க சிவப்பு நாடா முறை ஒழிந்து, கையூட்டு இல்லாமல், ஒற்றைச் சாளரம் வழியே உடனடி உரிமம் கிடைக்கிறதோ, என்றைக்கு அரசியல் குறுக்கீடுகளும், எதிர்ப்புகளும் இன்றி அரசுகளால் மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி விரைந்து அமல்படுத்த முடிகிறதோ அப்போதுதான் இந்தியர்கள் வெளிநாடு செல்வதைத் தாங்களாகவே நிறுத்திக் கொள்வார்கள். 

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com