அம்பேத்கரும் ஈ.வெ.ரா.வும்

 பாபாசாஹேப் அம்பேத்கர் ஆரிய - திராவிட இனவாதத்தை ஒப்புக்கொண்டவரல்ல. "ஆரிய - திராவிட இனவாத கொள்கைகளுக்கு சரித்திர ஆதாரம் எதுவும் இல்லை, ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவுமில்லை, திராவிட இனவாதக் கொள்கைகளுக்கு சரியான இடம் குப்பைத் தொட்டிதான்' என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
 ஆனால், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், கால்டுவெல் பாதிரியாரால் தமிழகத்தில் பரப்பப்பட்ட ஆரிய - திராவிட இனவாதக் கொள்கையை ஒப்புக்கொண்டதோடு, ஆரிய எதிர்ப்புக்கும் திராவிட இனவாதக் கொள்கைக்கும் தனி திராவிட நாடு கோரிக்கைக்கும் ஆதரவாகச் செயல்பட்டவர்.
 அம்பேத்கர் தலைசிறந்த கல்வியாளர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர். உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அவர்தான். ஈ.வெ.ரா., தனக்குப் படித்தவர்கள் தேவையில்லை, தான் சொல்வதை நம்பி செயல்படுகின்ற முட்டாள்கள்தான் தேவை என்று கூறியவர். அதன்படி செயல்பட்டவர்.
 அம்பேத்கர் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிரானவர். முஸ்லிமாக மதம் மாறுவது தவறு என்று மக்களுக்கு அறிவுறுத்தியவர். ஆனால் ஈ.வெ.ரா., "முஸ்லிமாக மதம் மாறினால்தான் ஜாதி ஒழியும்' என்று பரப்புரை செய்தவர்.
 "சாதியக் கொடுமைகள் நிறைந்த இந்து மதத்தில் நான் பிறந்தேன். ஆனால், நான் இந்துவாக சாகமாட்டேன். நான் மதம் மாறப்போகிறேன்' என்று அம்பேத்கர் அறிவித்தார்.
 உடனடியாக இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் அம்பேத்கரை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வேண்டினர். கிறிஸ்தவ மதத்திற்கு வர வேண்டுமென்று மிஷனரிகளும் பாதிரிமார்களும் அம்பேத்கரை நேரில் சந்தித்து வேண்டினர். ஆனால் அம்பேத்கர் அவற்றை ஏற்காமல் 1956-இல் இந்து மதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள புத்த மதத்திற்குத்தான் மாறினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
 சிறுபான்மை, பெரும்பான்மை என்று இல்லாமல் அனைவரும் ஒருபான்மையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர். ஆனால், சிறுபான்மையினரை மகிழ்விக்க, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத விழாக்களில் பங்கேற்று இந்து மதத்தை சிறுமைப்படுத்திப் பேசுவதே ஈ.வெ.ரா.வுக்கும் அவரின் வாரிசுகளுக்கும் வாடிக்கை.
 சிறுபான்மையினர் எனும் பெயரில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு சலுகைகள் வழங்கி மகிழ்விப்பதை முழுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். அரசியல் சாசனப்பிரிவு 370 காஷ்மீருக்கு வழங்கக்கூடாது என்றவர் அம்பேத்கர்.
 மதம் மாறிச் செல்பவர்களை ஊக்குவிப்பவர் ஈ.வெ.ரா. மதமாற்றம் செய்பவர்களுக்கு எதிரானவர் அம்பேத்கர். அதோடு மட்டுமல்ல, தாய் மதம் திரும்புவோரை ஆதரித்து பாதுகாப்பு கொடுத்தவர் அம்பேத்கர். இந்திய - பாகிஸ்தானின் பிரிவினையின்போது பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பட்டியல் இன மக்களை தாய் சமயம் திரும்ப வலியுறுத்தியதோடு "பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு வாருங்கள்' என்று அறைகூவல் விடுத்தவர் அம்பேத்கர்.
 சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தினார். அவர் தனது தாய்மொழியான மராத்தி மொழியை இழிவுபடுத்திப் பேசியதோ எழுதியதோ கிடையாது. மேலும், இந்தியாவின் இணைப்பு மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் அம்பேத்கர்.
 ஈ.வெ.ரா.வின் கொள்கைகள் என்றுமே தமிழ் மொழிக்கு விரோதமாகவே இருந்தன. "அனைவரும் ஆங்கிலம் கற்றுக் கொண்டு தங்கள் வீட்டு வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும்' என்று கூறி ஆங்கில மொழி கல்விக்கு ஆதரவு கொடுத்தவர் ஈ.வெ.ரா. மேலும், தமிழ் மொழியை "காட்டுமிராண்டி மொழி' என்றும் சம்ஸ்கிருதத்தை "செத்த மொழி' என்றும் இழிவுபடுத்தி வெறுப்பு பிரசாரம் செய்தவர் அவர்.
 இப்போது அவரது அரசியல் வாரிசுகள், பெரியார் தமிழை இழிவுபடுத்திப் பேசியதையெல்லாம் சாதுர்யமாக மறந்துவிடுகிறார்கள், மறைத்து விடுகிறார்கள். சாமர்த்தியமாக, அதற்குக் காரண காரியங்களை இட்டுக்கட்டி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
 "இந்தியா' என்கிற பெயரைவிட "பாரதம்' என்கிற பெயரில் அதிக ஈடுபாடு கொண்டவர் அம்பேத்கர். தன்னுடைய பத்திரிகைகளுக்கு "பஹிஷ்கிருத் பாரத்', "ப்ரபுத்த பாரத்' என்ற பெயர்களையும், அச்சகத்திற்கு "பாரத் பூஷண் பிரிண்டிங் பிரஸ்' என்ற பெயரையும், தான் தொடங்கிய பெளத்த அமைப்பிற்கு "பாரதிய புத்த ஜனசங்கம்' என்ற பெயரையும் வைத்தார்.
 அரசியலமைப்பு சட்டத்தில் கூட "இந்தியா என்கிற பாரதம்' என்றுதான் குறிப்பிட்டார், "பாரத் ரத்னா' பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.
 பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தவர் ஈ.வெ.ரா. மும்பையில் அம்பேத்கரை சந்தித்த ஈ.வெ.ரா. "நீ பட்டியலின மக்களுக்காக தனி நாடு கோரிக்கையை முன்னெடுத்து செல், நான் தனி திராவிட நாடு கோரிக்கையை முன்னெடுத்துச் செல்கிறேன், ஜின்னா பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லட்டும், நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தனிநாடு கோரிக்கையை ஆதரித்து ஒன்றுபட்ட இந்தியா ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்குப் பிரசாரம் செய்வோம் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஈ.வெ.ரா.வின் கோரிக்கையை அம்பேத்கர் புறக்கணித்தார்.
 ஈ.வெ.ரா. தேசபக்தர் அல்ல, தேசிய அளவிலான தலைவரும் அல்ல. தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் ஈ.வெ.ரா.வைத் தெரியாது. அம்பேத்கர் தேச பக்தர், தேசியத் தலைவர். இந்தியா முழுதும் நன்கு அறிமுகமான தலைவர். அம்பேத்கர் தேசியவாதி; ஈ.வெ.ரா. பிரிவினைவாதி.
 இருவருக்கும் இரண்டு விஷயத்தில் ஒற்றுமையுண்டு. ஒன்று, மநு தர்ம, வருணாஸ்ரம கொள்கைகளை எதிர்ப்பது, இன்னொன்று கம்யூனிஸத்தை எதிர்ப்பது. அம்பேத்கர், கம்யூனிஸ்டுகளை தன்னுடைய முதல் எதிரி என்று அறிவித்தார். ஈ.வெ.ரா. கம்யூனிஸ்டுகளை "நக்கிப் பிழைப்பவர்கள்' என்று இழிவுபடுத்தினார்.
 ஒரே நிலைப்பாடு கொண்டிருந்தாலும் அம்பேத்கர், சாதி ஏற்றத் தாழ்வுகள் ஒழிய, தீண்டாமை ஒழிய மநு தர்மத்தை எதிர்த்தார். பிராமணியத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
 பட்டியல் இன மக்கள் பொது குளத்தில் நீர் எடுக்கவும், பொது தடங்களில் நடமாடவும் ஆலயங்களுக்குள் சென்று வழிபாடு நடத்தவும் பல போராட்டங்களை நடத்தியவர் அம்பேத்கர். ஆனால், ஈ.வெ.ரா. தீண்டாமை ஒழிய ஒருபோதும் பாடுபட்டதில்லை.
 காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கட்சியின் கட்டளைப்படி வைக்கம் சென்று போராட்டத்திற்கு தலைமை தாங்கி "வைக்கம் வீரர்' என்று தனக்குப் பெயர் சூட்டிக் கொண்டவர் ஈ.வெ.ரா. காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிறகு, தீண்டாமை ஒழிப்புக்காக எந்தவொரு போராட்டத்தையும் ஈ.வெ.ரா. நடத்தவில்லை என்பதுதான் உண்மை.
 பட்டியல் இனப் பெண்கள் மேலாடை அணிவதை கொச்சைப்படுத்தினார். கீழ்வெண்மணி உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் ஈ.வெ.ரா. பட்டியல் இன மக்களுக்கு எதிர்நிலையில் செயல்பட்டார் என்பது வரலாற்று உண்மை. இதை பலமாக எடுத்தியம்ப யாருமில்லை என்பதால், ஈ.வெ.ரா. பட்டியலின மக்களின் நலனுக்குப் பாடுபட்டவர் என்கிற தோற்றம் பரப்புரை செய்யப்படுகிறது.
 ஒருமுறை சென்னை வந்திருந்த அம்பேத்கருக்கு, ஜஸ்டிஸ் கட்சி மற்றும் சில இயக்கங்களின் சார்பில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகமும் பங்கேற்றது. ஈ.வெ.ரா.வும் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அம்பேத்கர், ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனியக் கொள்கைகளை பின்பற்றுகிறது என்று விமர்சித்தார்.
 பட்டியல் இன மக்களுக்காக அம்பேத்கர் நடத்திய எந்தப் போராட்டத்திலும் ஈ.வெ.ரா. பங்கேற்றதில்லை என்பதை நாம் உணர வேண்டும். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, இட ஒதுக்கீடு, கல்வி கற்கும் உரிமை ஆகியவற்றிற்காக போராட்டங்கள் நடத்தியதோடு, அவற்றுக்கான சட்டங்களையும் கொண்டு வந்தவர் அம்பேத்கர். இந்த சீர்திருத்த சட்டங்கள் வருவதற்கு எந்த வகையிலும் ஈ.வெ.ரா. காரணம் அல்ல. ஆனால் ஏதோ ஈ.வெ.ரா. வந்த பிறகுதான் இந்த சட்டங்கள் எல்லாம் வந்தது போல் ஒரு மாயத் தோற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
 1952-இல் நடந்த இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பேத்கரைத் தோற்கடித்தவர்கள் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும். அம்பேத்கரைத் தோற்கடிக்க நேருவே பிரசாரத்தில் ஈடுபட்டார். பிறகு ஜனசங்கத்தின் ஆதரவுடன்தான் அம்பேத்கர் ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரும், இந்து மகா சபையும் அம்பேத்கருக்கு உறுதுணையாக இருந்ததும், ஆதரவு அளித்ததும் வரலாறு.
 1939-இல் புணே-யில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய பயிற்சி முகாமிற்கு நேரடியாக வந்து பார்த்து, "ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு நான் வருவது இதுதான் முதல் தடவை. ஹரிஜனங்களுடன் மற்ற எல்லா ஜாதியினரும் சரிசமமாக இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எந்தவித வித்தியாசத்தையும் இங்கு நான் பார்க்கவில்லை' என்று கூறினார் பாபாசாஹேப் அம்பேத்கர்.
 திராவிடர் கழகமோ, ஜஸ்டிஸ் கட்சியோ அம்பேத்கருக்கு உறுதுணையாக இருந்ததில்லை. அம்பேத்கரின் மநு தர்ம எதிர்ப்பு கொள்கைகளை ஈ.வெ.ரா. ஒரு புத்தகமாக வெளியிட்டார். அதைக் காரணமாக்கி "அம்பேத்கரையே தமிழ்நாட்டிற்கு நாங்கள்தான் அறிமுகப்படுத்தினோம்' என்று திராவிட இயக்கத்தினர் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.
 உண்மை நிலை இப்படியிருக்க, தமிழகத்தில் மட்டும் அம்பேத்கரை விட ஈ.வெ.ரா.தான் பெரிய தலைவர் என்கிற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அம்பேத்கர் செய்த சாதனைகளை எல்லாம் ஈ.வெ.ரா. செய்த சாதனைகளாக திரித்துக் கூறுகிறார்கள். அம்பேத்கர் முகமூடி அணிந்துகொண்டு, ஈ.வெ.ரா. துதிபாடும் தலித்திய கட்சிகள், தங்கள் போலித்தனத்தை விடுத்து நேரிடையாகவே திராவிடர் கழகத்தில் இணைந்து விடலாம்.
 மநு வாத எதிர்ப்பில் மநு தர்ம எரிப்பில் இருவரும் ஒரே நிலைப்பாடு கொண்டிருந்தாலும், அம்பேத்கரின் கொள்கைகள் வேறு, ஈ.வெ.ரா.வின் கொள்கைகள் வேறு. அம்பேத்கர் தேசியவாதி, ஈ.வெ.ரா. பிரிவினைவாதி!
 
 கட்டுரையாளர்:
 தலைவர், இந்து மக்கள் கட்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com