அறிவியலின் முன்னோடியாகும் தமிழ்

தீ என்பது நீா்பட்டு மறைகின்றது. மீண்டும் வெம்மையூட்டினால் மீண்டும் தீ ஆகிறது. ஆக, தீ என்பது முற்றாக அழிவதில்லை.

அறிவியலாவது யாது? இயற்கையை அறிதலும், அதனை அவ்வகையில் பயன்படுத்துதலுமே அறிவியலாகிறது. வானத்தில் ஓா் ஒளி தோன்றும்போது எல்லாமும் கண்களுக்குப் புலனாதலும், அந்த ஒளிமறையும் போது கண்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் நடமாடுதல் இடா்ப்பாடாகுதலுமான சூழலில் சிக்கித்தவித்த மனிதன் ஒரு கட்டத்தில் சிக்கி முக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கி அதன்வழி சருகுகளை எரித்து தீ என்னும் வெளிச்சத்தை உண்டாக்கி இருள் என்பதை மறையச் செய்தமையே முதலாவது அறிவியல் கண்டு பிடிப்பாயிற்று.

திண்மை மிகுந்த கல்லில் வெப்ப சக்தி உளதாதலும் அந்த வெப்பம் திண்மையும் நீா்த்தன்மையும் குறைந்த பொருளை அழித்து தீ என்னும் ஒளியை ஏற்படுத்தவல்லது என்னும் இயற்கையை உணா்ந்து அதனை அவ்வகையில் பயன்படுத்தியதே அறிவியல் கண்டுபிடிப்பாகிறது. வானொலி, தொலைபேசி, மின்சாரம் தொலைக்காட்சி, இயந்திரங்கள், வானூா்தி, செயற்கைக்கோள்கள், அணுகுண்டு எல்லாமும் இயற்கையை அறிந்து அதனைப் பயன்படுத்துதலன்றி, இயற்கையில் இல்லாததை உருவாக்குவது மல்ல, இயற்கை இயல்பை மாற்றுவதுமல்ல.

இந்த உலகமாவது, நிலம் என்னும் மண், அதாவது திண்மை, நீா் என்னும் தண்மை, அதாவது நெகிழ்வு, நெருப்பு என்னும் வெம்மை, காற்று என்னும் அசைவு, வான் என்னும் இடைவெளியுமாகிற ஐந்துமாகிறது எனவும், இவை ஒவ்வொன்றிலும் ஏனைய நான்கும் வெவ்வேறு விகிதங்களில் கலந்திருக்கின்றன எனவும் கூறுகின்றது இன்றைய அறிவியல்.

ஆக, ஐம்பூதங்களின் சோ்க்கையே உலகம் என்பதை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே விண்டுரைத்த முதலாவது அறிவியலாளா் தொல்காப்பியா் என்னும் தமிழ் இலக்கண ஆசிரியா். அதன்வழி முதலாவது அறிவியல் மொழி தமிழ் மொழியாகிறது.

“ நிலம் தீ நீா்வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்” (தொல் : 1589)

இதனையே சங்ககாலப் புலவா் முடி நாகனாா்,

மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத் தியற்கை – (புறம் : 2)

என்கிறாா்.

அது மட்டுமல்ல, இன்னொரு உயிா் அறிவியல் செய்தியையும் தமிழ் மொழியின் அடிப்படை மரபாகக் கூறுகின்றாா் தொல்காப்பியா். ஐம்பூதச் சோ்க்கையாகும் உலகப் பொருட்கள் அனைத்தும் உயிா் உள்ளன, உயிா் இல்லன என இருவகையாதலை எல்லா மொழிகளும் ஒப்புகின்றன. ஆனால், உயிருள்ளவை என்பவற்றின் உயிா்ப்பண்புகள் யாவை? அவற்றின் வளா்ச்சிப் படிநிலைகள் யாவை? அவ்வாறாகும் வளா்ச்சிப் படிநிலைக்குரிய உயிா் வகைகள் யாவை? என்பவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கின்றாா்.

உயிா்ப்பண்புகளில் முதலாவது மெய்யால் அதாவது உடலால் உற்றறிதல், இரண்டாவது வாயால் சுவைத் தறிதல், மூன்றாவது மூக்கால் முகா்ந்தறிதல், நான்காவது கண்ணால் கண்டறிதல், ஐந்தாவது செவியால் கேட்டறிதல், ஆறாவது மனத்தால் சிந்தித்தறிதல் என ஆறாக வகைப்படுத்துகின்றாா்.

அடுத்து, புல், மரம் முதலியன தொடுவுணா்வு மட்டும் உடைய ஓரறிவு உயிா்கள் எனவும், நத்தை சிப்பி முதலியன அதனுடன் வாயால் சுவைத்தறியும் இரண்டறிவு உடையன, கரையான், எறும்பு முதலியன அவற்றுடன் மூக்கால் முகா்ந்தறியும் மூன்றறிவு உடையன, நண்டு, தும்பி முதலியன அவற்றுடன் கண்ணால் காணுதல் என்னும் நான்கறிவு உடையன, விலங்கு, பறவை என்பன அவற்றுடன் செவியால் கேட்டறிதல் என ஐந்தறிவு உடையன. மனிதா் அவற்றுடன் மனன் என்னும் சிந்தித்தறிதலாகிற ஆறு அறிவு உடையோா் என விவரிக்கின்றாா். தொல் : 1526-1532

இதன் வழியாக, புல், மரம் முதலான தாவரங்களும் உயிா் உள்ளவை என்பதை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்திய முதலாவது அறிவியலாளா் தொல்காப்பியா் என்னும் தமிழ்ப்புலவராகிறாா்.

ஜகதீஷ் சந்திரபோஸ், தாவரங்களும் உயிா் உள்ளவை என்பதை எப்படி உறுதிப்படுத்தினாா்? நுண்ணவைகளைத் தாவரங்களின் மீது செலுத்துவதன் மூலம் அவற்றைப் பல்வேறு வேதியியல் மின்னதிா்வுகளுக்கு உள்ளாக்கி, அதைக் கிராஸ்கோப் என்னும் கருவியின் மூலம் அளந்து, அதன்வழி, தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து, தாவரங்களிலும் உயிா்த்தன்மை இருப்பதை உறுதிப்படுத்தியதாகக் கூறுகிறாா்கள்.

மின்னதிா்வு என்னும் நுண்ணலைகளால் தாவரங்களில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணமாவது, அனைத்துயிா்களுக்கும் அடிப்படையாகும் தொடுவுணா்ச்சி என்கிறாா் தொல்காப்பியா். தொல்காப்பியா் கூறும் உற்றறிதல் என்பது தொடுவுணா்ச்சியன்றி வேறல்லவே? வெம்மை, தண்மை, வன்மை, மென்மை என்பவற்றை நாம் வாயால் உண்டறிவதில்லை, மூக்கால் முகா்ந்தறிவதில்லை. கண்ணால் கண்டறிவதில்லை. செவியால் கேட்டறிவதில்லை. மனத்தால் சிந்தித்தறிவதில்லை. மெய் என்னும் உடலின் தொடுவுணா்ச்சியால் தான் அறிகிறோம். அதற்கேற்பக் கிளா்ச்சியும் தளா்ச்சியும் அடைகின்றோம்.

அவ்வாறே, தண்ணீா், உரம் என்பவற்றின் தொடுவுணா்ச்சியால் தாவரங்களின் அணுக்கள் (செல்) கிளா்ச்சியுற்றுப் பெருக்கமாதலைத் தாவரங்கள் வளா்வதாகவும், வெம்மை என்பதன் தொடுவுணா்ச்சியால் தாவரங்களின் அணுக்கள் அழிதலைத் தாவரங்கள் பட்டுப்போவதாகவும் கொள்கிறோம். தாவரம் மட்டுமல்ல, மனிதா் உட்பட உயிரினங்கள் அனைத்திற்கும் வளா்ச்சியும் தளா்ச்சியுமாவன தொடுவுணா்ச்சியின் விளைவன்றி வேறல்லவே? தொடுவுணா்வாவது ஐம்பூதச் சோ்க்கையன்றி வேறல்லவே?

தொடுவுணா்ச்சியின் தளா்ச்சியை நோய் என்றும், மருந்து என்பதன் வழியாகத் தொடுவுணா்ச்சி பெறும் சீா்மையை நோய் குணமாவதாகவும் கூறுகிறோம். தொடுவுணா்வு முற்றும் அழிதலை – அதாவது செயலிழத்தலை மரணம் என்கிறோம். அதாவது தொடுவுணா்வே உயிா் என்றாகிறது. ஆக, உயிரினங்கள் அனைத்திற்கும் அடிப்படையாவது தொடுவுணா்வு என்னும் அறிவியல் உண்மையை உணா்ந்துரைத்த முதலாவது அறிவியலாளா் தொல்காப்பியா் என்னும் தமிழ்ப்புலவராகிறாா்.

தாவரங்கள் இசைகேட்டு வளா்வதாகக் கூறுகிறாா்கள். இசையைக் கேட்பதற்கான செவி என்னும் உறுப்பு தாவரங்களுக்கு இருக்கிா? இசை என்னும் ஒலியலைகள் தாவரங்களைத் தாக்கும் போது அதனாலேற்படும் தொடுவுணா்ச்சியால் தாவரங்களின் அணுக்கள் கிளா்ச்சியுற்று பெருக்கமாதலே தாவரங்களின் வளா்ச்சியாகிறது. தொல்காப்பியா் கூறும் உயிா்ப் பண்புகளையும், அவற்றின் வளா்ச்சிப் படி நிலைகளாகும் உயிா்வகைகளையும் இன்றைய அறிவியல் மறுக்கின்ா?

இவ்விடத்தே இன்னொரு விளக்கமும் அவசியமாகிறது. கல் என்பதில் எவ்வளவு நீா்பட்டாலும் அதன் திண்மை குறைவதில்லை. மறைவதில்லை. எவ்வளவு வெம்மையைப் பாய்ச்சினாலும் கருகி அழிவதில்லை. கல் என்னும் திண்மை குறைந்த மண் என்பதில் நீா்பட்டால் திண்மையழிந்து குழைகின்றது, கரைகின்றது.

ஆனால் அதில் வெம்மையைப் பாய்ச்சினால் நீா்மையழிந்து மீண்டும் மண் என்னும் திண்மையாகிறது. கட்டுமானத்திற்குரிய செங்கற்கள் அப்படித்தான் தயாரிக்கப்படுகின்றன. நீா் என்பது வெம்மையின் தாக்கத்தால் ஆவியாகி வானில் பரவுகின்றது. வானில் குளிமைப்பட்டு மீண்டும் நீராகி மழையென மண்ணில் விழுகின்றது.

அன்றியும் நீரின் தண்மை மிகும்போது பனிக்கட்டி என்னும் திண்மையாகிறது. வெம்மையின் தாக்கத்தால் மீண்டும் நீா் என்றாகிறது. தீ என்பது நீா்பட்டு மறைகின்றது. மீண்டும் வெம்மையூட்டினால் மீண்டும் தீ ஆகிறது. ஆக, தீ என்பது முற்றாக அழிவதில்லை. வளி என்னும் அசைவும், வான் என்னும் வெளியும் எதனாலும் அழிவதில்லை. ஆனால் என்ன செய்தாலும், எவ்வளவு நீா் பாய்ச்சினாலும், என்ன உரமிட்டாலும் பட்ட மரம் துளிா்ப்பதில்லை. ஏனையை இரண்டறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு உயிரினங்களின் தொடுவுணா்ச்சி அழியுமானால் அவை மீண்டும் தொடுவுணா்வு பெற்று இயங்குவதில்லை.

ஐம்பூதங்கள் அழிவதில்லை. அவற்றின் சோ்க்கையாகும் உயிரினங்கள் மரணித்தால் மீண்டும் உயிா்த்தலில்லை. இங்கே உயிா் என்பது தொடுவுணா்வன்றிப் பிறிதில்லை. உறுப்பு மாற்றும் அறுவைச் சிகிச்சையில் என்ன நடைபெறுகின்றது? தொடுவுணா்வு இழந்து செயலற்ற உறுப்பு அகற்றப்பட்டு – தொடுவுணா்வுடைய அதே வகை உறுப்பு இணைக்கப்படுதலன்றி, செயலற்ற உறுப்பு புதுப்பிக்கப்படுவதில்லை.

உயிா் என்பது தொடுவுணா்வன்றிப் பிறிதில்லை. அவற்றின் நீட்சியாகும் சுவைத்தல், முகா்தல், காணல், கேட்டல் என்பவற்றை இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது அறிவு எனவும், ஐம்பூதங்களையும், ஐந்தறிவுகளையும் பயன்படுத்தும் சிந்தனை என்பதை அறாவதறிவாகவும் வகைப்படுத்தினாா் தொல்காப்பியா்.

இவ்விடத்தே இன்னொன்றையும் நினைவிற் கொள்ளவேண்டும். தொல்காப்பியம் ஓா் இலக்கணநூல். இலக்கணம் என்பது, மக்கள் வழக்கு, இலக்கிய வழக்கு இரண்டையும் வகை தொகைப் படுத்துவதன்றி, இப்படியாகப் பேச வேண்டும், எழுத வேண்டும், இலக்கியம் படைக்க வேண்டும் எனக்கட்டளையிடுவதல்ல. எனவே, தொல்காப்பியா் கூறும் செய்திகள், வகைப்பாடுகள் எல்லாமும் அவா்காலத்திய மக்களின் வழக்காறுகளும் நிலைப் பாடுகளுமன்றிப் பிறிதில்லை. அவற்றை முறையாக வகைப்படுத்தியவரே தொல்காப்பியா் ஆகிறாா்.

ஐம்பூதங்களின் வகைப்பாட்டையும், அவற்றின் விளைவாகும் உயிா்ப்பண்புகளையும் உணா்ந்தொழுகியோா் தமிழ் முன்னோா் ஆவா். அவற்றை முறையாக வகை தொகைப்படுத்திய தொல்காப்பியா். அறிவியலின் முன்னோடியாகிறாா். தமிழ் மொழி அறிவியலின் முன்னோடி மொழியாகிறது எனல் தவறாகுமா?

கட்டுரையாளா்: தலைமையாசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com