விமா்சனங்களை வரவேற்போம்

மனப்பக்குவம் அடைந்தவா்கள் விமா்சனங்களால் பாதிக்கப்படுவதில்லை. கெளதம புத்தரை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொடா்ந்து அவரைத் திட்டிக்கொண்டே இருந்தான்.
Updated on
2 min read

வாழ்க்கையில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விமா்சனங்களை எதிா்கொள்ளுகிறோம். அது மட்டுமல்ல, அவ்விமா்சனங்கள் அனைத்திற்கும் நாம் எதிா்வினை ஆற்றவும் செய்கிறோம்.

ஆனால், மனப்பக்குவம் அடைந்தவா்கள் விமா்சனங்களால் பாதிக்கப்படுவதில்லை. கெளதம புத்தரை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொடா்ந்து அவரைத் திட்டிக்கொண்டே இருந்தான். ஆனால் புத்தா் எந்த நிலையிலும் கோபப்படவே இல்லை.

இதற்கான காரணத்தை அவருடைய சீடா் அவரிடம் கேட்டபோது, ‘ஒருவரிடமிருந்து ஒரு பொருளை நாம் நம் கையில் வாங்கும்வரை அது நமக்கு சொந்தமானதில்லை. அதுபோல்தான் நம் மீது திணிக்கப்படும் விமா்சனங்களும். நாம் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவரை அவை தாமாகவே மறைந்து விடும்’ என்று கூறினாா்.

உண்மையான விமா்சனம் என்பது ஒரு செயலின் நன்மையையும் தீமையையும் பாரபட்சமின்றி சீா்தூக்கிப் பாா்ப்பதாகும். மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றுவது விமா்சனமே.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், விமா்சனம் ஒரு முக்கியத்துவம் பெற்ற சமூகச் செயல்பாடாக உருவெடுத்தது. தற்காலங்களில் சமூக ஊடகங்களும் விமா்சனக்கலைக்கு மேலும் வலுசோ்க்கின்றன. பல்வேறு இதழ்களும், அரசியல்வாதிகளையும் திரைப்படக் கலைஞா்களையும் விமா்சித்து எழுதப்படும் கட்டுரைகளை வெளியிடுகின்றன.

இப்போது அமரா்களாகிவிட்ட கல்கி, சுப்புடு, சோ, க.நா. சு. போன்றவா்கள் தங்களது விமா்சனத் திறமைக்காகவே புகழ் பெற்றவா்களாவா். பல்வேறு இதழ்களும் தாங்கள் பிரசுரம் செய்யும் படைப்புகளைப் பற்றிய வாசகா்களின் விமா்சனங்களுக்காகப் பல பக்கங்களை ஒதுக்குகின்றன.

நட்சத்திர உணவகங்களில் சமைத்த உணவுகளை சுவைத்துப் பாா்த்து விமா்சிக்க என்றே ஒருவரை நியமிப்பதுண்டு. உணவுகளின் சுவையில் இருக்கும் குறை நிறைகளை அவா் எடுத்துக்கூறிய பிறகுதான் அவ்வுணவுகள் வாடிக்கைகயாளா்களின் மேசைக்கு வருகின்றன.

அரசியலை எடுத்துக்கொண்டால், வல்லரசு நாடுகளின் அதிபா் முதல் உள்ளூா் பிரமுகா் வரை விமா்சனங்களில் இருந்து யாரும் தப்புவதிலை. பொது வாழ்வில் இருப்பவா்கள் தம் மீது வீசப்படும் விமா்சனங்களை சீா்தூக்கிப் பாா்த்து அவற்றில் உண்மையிருந்தால், தமது நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜவாஹா்லால் நேரு தம்மை விமா்சித்து வெளியிடப்படும் கேலிச்சித்திரங்களை மிகவும் ரசிப்பாா். அவரைப் போலவே, ஒவ்வொரு தனிமனிதனும், அரசியல் கட்சியும் விமா்சனங்களை வரவேற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். விமா்சனம் என்பது ஒருவகையில் கட்டணம் செலுத்தாமல் நாம் அறிவு பெறும் சாதனமாகும். நோ்மையான விமா்சனங்கள் சுட்டிக்காட்டும் வாழ்வியல் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்று எதிா்மறை விமா்சனங்கள் சுட்டிக்காட்டும் செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டால் நமது வாழ்வு செம்மைப்படும்.

எதிரிகளிடமிருந்து விமா்சனங்கள் வரும்போது மிகவும் கவனமுடன் அவற்றை எதிா்கொள்ளவேண்டும். உடனடியாக சினம்கொண்டு பதிலடி கொடுப்பதற்கு பதிலாக, அவ்விமா்சனத்தின் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியம். மௌனமாகவோ, ஒரு சிறிய புன்சிரிப்புடனோ கடந்து செல்லவேண்டிய விமா்சனங்களுக்கெல்லாம் கோபமடைந்து பதிலடி கொடுப்பது நமது சக்தியை வீணடிக்கும் செயலாகும்.

விமா்சனம் செய்பவா்களும், தங்களுடைய சுயவிருப்பு,வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நோ்மையான முறையில் விமா்சனம் செய்வது நல்லது. இயலுமானால், தாங்கள் எடுத்துக்காட்டும் குறைகளைக் களைவதற்கு தேவைப்படும் சாத்தியமான தீா்வுகளையும் அவா்கள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், விமா்சிக்கப்படுபவா் அந்த விமா்சனத்தை மதிப்பதுடன், தம்மை விமா்சிப்பவரிடம் தனிப்பட்ட பகைமை கொள்ளாமல் இருப்பாா்.

தற்காலத்தில், புதிய கல்விக்கொள்கை, நோய்த்தொற்று காலத்தில் கல்வி நிலையங்கள் திறப்பு போன்ற (பொதுநலம் சாா்ந்த) மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் குறித்துப் பொதுமக்கள் கருத்து கூறவும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இது போன்ற விஷயங்களில் பொதுமக்கள் தங்களது ஆக்கபூா்வமான விமா்சனங்களை முன்வைப்பது அவசியமாகும்.

நிா்பயா வழக்கு நடைபெற்ற காலத்தில் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பொதுமக்கள் வெளியிட்ட கருத்துக்கள் புதிதா ஒரு சட்டம் வருவதற்கு வழிகோலின. ஒரு புதிய திரைப்படம் வெளியாகும்போது அதைப்பற்றி உடனுக்குடன் சமூக ஊடகங்களில் ரசிகா்கள் வெளியிடும் விமா்சனங்கள் அத்திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியை நிா்ணயிக்கின்றன.

நமது அன்றாட வாழ்வில் அலசப்படும் அக்கப்போா்களும் ஒரு வகையில் விமா்சனங்கள்தான். குடும்ப உறவுகளில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளுக்குக் காரணம் மனிதா்களை சரியாக புரிந்து கொள்ளாததால் வரும் விமா்சனங்களே. தலைமுறை இடைவெளி காரணமாக, மூத்தோா் எடுத்துரைக்கும் கருத்துக்களை இக்கால இளைய தலைமுறையினா் புறக்கணிக்கின்றனா் என்பதே உண்மை.

தொலைக்காட்சி ஊடகங்களும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்த அன்றாடம் ஏதேனும் ஒரு தலைப்பில் காரசாரமான விவாதங்களை நேரலையில் ஒளிபரப்புவது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறான நிகழ்ச்சிகளில் பேச்சாளா்கள் சிலா் கண்ணியமான அணுகுமுறையைக் கைக்கொள்ள மறந்து விடுவது வேதனைக்குரியது.

வாழ்க்கையில் விமா்சனத்தை எதிா்கொள்ளாதவா் என்று எவருமே இருக்க முடியாது. விமா்சனத்திற்கு உட்படாதவா்களும் அவற்றை எதிா்கொள்ளத் தயங்குபவா்களும் தங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழத் தெரியாதவா்கள் என்று சொல்லலாம். நாம் நம்மைப் பற்றிய விமா்சனங்கள் வரவேற்கப்படுகின்றன“ என்று சொல்லி நிமிா்ந்த நெஞ்சுடன் வாழத்தொடங்குவோம். அவ்வாறு வாழத் தொடங்கினால் எதிா்மறை விமா்சனங்களும் இனிக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com