ஜனநாயகத்தின் வெற்றி!

 நான் சென்னை சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த 1971-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரிச்சர்ட் நிக்சன் வாட்டர்கேட் ஊழலில் சிக்கினார். அதிலிருந்து தப்புவதற்காகத் தன்னுடைய மதியூக மந்திரி ஹென்றி கிஸிஞ்சர் ஆலோசனையின் பேரில் 1972 பிப்ரவரி மாதம், பாகிஸ்தான் வழியாக சீனத் தலைநகரான பெய்ஜிங் சென்றார்.
 அந்த விஜயத்தால் அவருடைய பதவியைக் காப்பாற்ற முடியாமல் போனது மட்டுமல்ல அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கும், கம்யூனிஸ்ட் சீனாவின் வளர்ச்சிக்கும் அது மிகப்பெரிய காரணமாக அமைந்தது என்பது வரலாற்றுச் சோகம்.
 இன்று இல்லினாய்ஸ் மாகாணத்திலிருந்து கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜா கிருஷ்ணமூர்த்தி என்னுடைய நெருங்கிய உறவினர். துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டைத் தாய்வழி பூர்விகமாகக் கொண்ட பெண்மணி.
 அமெரிக்கர்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்தாலும் அதிபர் அந்த நேரடி வாக்கு, மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்த மாநிலத்தின் ஜனத்தொகையின் அடிப்படையில் "எலக்டோரல் காலேஜ்' எனப்படும் தேர்தல் வாக்காளர்கள் உண்டு.
 மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் 48 மாகாணங்களில் எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அந்த மாகாணத்தின் மொத்த அதிபர் வாக்குகளும் அவருக்குப் போய்விடும். அந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 538-இல் 270 வாக்குகளைப் பெறுபவர் அதிபராக அறிவிக்கப்படுவார்.
 இதனால் அமெரிக்கத் தேர்தலில் ஒரு விசித்திரமான நிலைமை சிலமுறை தோன்றியுள்ளது. மொத்த மக்களின் வாக்குகளில் அதிகம் பெற்ற நபரால் அதிபர் தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகம் பெற முடியாமல் போய்விடும். அப்பொழுது மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் கூட அதிபர் ஆக வாய்ப்பு உள்ளது. அப்படி பிரைஸ் அடித்துத்தான் கடந்த முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்.
 அதாவது, மக்களிடம் கூடுதலான வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெரும் வாய்ப்பை பெறமுடியாமல் போய் விட்டது. அதிகமான சிறு மாநிலங்களில் வாக்குகளைப் பெற்ற டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட, மனம் உடைந்த ஹிலாரி அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டார்.
 150 ஆண்டு வரலாறு உடைய சென்னை உயர்நீதிமன்றத்தில் கணவன் மனைவி இருவர் இப்போது நீதிபதி ஆகியிருக்கிறார்கள். 200 ஆண்டு வரலாறு உடைய அமெரிக்காவில் ஒரு கணவனும் மனைவியும் அதிபர் ஆகும் வாய்ப்பு இந்த சிக்கலான தேர்தல் நடைமுறையால் ஹிலாரிக்கு கிட்டாமல் போனது. அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. அரசியல் நிர்ணய சட்டத்திற்குத் தலைவணங்கி ஹிலாரி கிளிண்டன் போட்டியிலிருந்து விலகினார்.
 சென்ற தேர்தலிலேயே, அதாவது 2016 தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக மறைமுகமாக ரஷியா வேலை செய்தது என்ற புகார் எழுந்தது. பின்னர் இதை விசாரிக்க முற்பட்ட அதிகாரியை பதவியிலிருந்து நீக்கினார். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தன்னுடைய சகாக்களை அதிபரின் சிறப்பு பொது மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திக் காப்பாற்றினார்.
 தேர்தலின் போது அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் நடுவே சீனப் பெருஞ்சுவர் போல ஒரு சுவர் எழுப்புவேன் என்று டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா ஒரு வந்தேறிகளின் நாடு என்பதை செளகரியமாக மறந்துவிட்டு, இப்போதுள்ள அமெரிக்கர்களின் நலன் காக்க வெளிநாட்டு "விசா'க்களைக் குறைப்பேன் என அறிவித்தார். இதனால் இந்தியர்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை மாற்ற இந்திய பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டார்.
 ஆனால் அதே சமயம் இந்தியா கரோனா தீநுண்மிக்கான மருந்தை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார். தேர்தலுக்கு முன்னால், ஒரு கருப்பு அமெரிக்கரை ஒரு காவல்துறை அதிகாரி தன்னுடைய கால் முட்டியை அழுத்தி மரணம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களை டிரம்ப் கையாண்ட விதம் அவருக்கு நடுநிலையாளர்கள் மத்தியில் கெட்ட பெயரையே சம்பாதித்து தந்தது. இந்த வெள்ளை ஆதிக்க மனப்பான்மை தேர்தலிலும் எதிரொலித்தது.
 பொதுவாக அவர் சார்ந்த குடியரசுக் கட்சியின் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பார்கள். எதிர்த்து நின்ற ஜோ பைடன் கட்சியான ஜனநாயகக் கட்சியின் வாக்காளர்கள் பெருவாரியாக தபால் மூலம் வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 தன்னுடைய அதிகாரத்தையும் நட்பையும் பயன்படுத்தி தபால் வாக்குகள் எண்ணும் இடத்திற்குக் கொண்டு செல்வதை அவர் காலதாமதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் தபால் வாக்குகளைக் கணக்கில் எடுக்கக் கூடாது என அவர் கலகத்தை ஆரம்பித்தார்.
 தேர்தல் என்றால் தில்லுமுல்லுகள் இல்லாமலா? அமெரிக்கத் தேர்தலில் உலகறிய தெரிந்த முதல் தில்லுமுல்லு நாம் ஏற்கனவே பார்த்த வாட்டர்கேட் ஊழல். எதிர்க் கட்சி வேட்பாளரின் தேர்தல் உத்திகளைக் கண்டறிய நிக்சன் அனுப்பிய ஆட்கள் கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே செல்ல அந்த பிரச்னை ஊழலாக மாறி வெற்றி பெற்ற நிக்சனின் பதவியையே காவு கொண்டது.
 ஜார்ஜ் புஷ் 2000 ஆண்டு தேர்தலில் அல் கோரை எதிர்த்துப் போட்டியிட்டபோது ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக அவர் தம்பி இருந்தார். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பதுதானே பழமொழி! வாக்கு எண்ணிக்கையில் தம்பி தில்லுமுல்லு செய்து அண்ணனை ஜெயிக்க வைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அல் கோர் நீதிமன்றம் சென்றார். ஆனால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று சொன்னவுடன் அல் கோர் கெளரவமாக ஒதுங்கிக் கொண்டார்.
 2016 தேர்தலில் அதிக ஓட்டுகளைப் பெற்று வெற்றிக்கனியை பெறமுடியாத ஹிலாரி கிளிண்டன் பெருந்தன்மையாக அரசியலில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அண்ணன் டிரம்ப்பின் கதை என்ன?
 நம்முடைய திராவிடக் கட்சிகள் தமிழ், தமிழ் பாரம்பரியம், தமிழர் பெருமை என்று பெருமைகளைப் பேசுவதுபோல் அண்ணன் டிரம்ப்பும் அமெரிக்கா, அமெரிக்க பாரம்பரியம், அமெரிக்கர் நல்வாழ்வு என முழங்கினார்.
 அமெரிக்க வாழ் மக்களின் வேலையைப் பாதுகாக்க மெக்ஸிகோவில் இருந்து குடியேறிகள் வருவதை தடுக்கும் விதமாக எல்லையில் சீனப் பெருஞ்சுவரை போல ஒரு சுவர் கட்டுவேன் என உறுதியளித்தார். அப்படிச் செய்தால் அமெரிக்காவில் கடைநிலைப் பணியாளர் வேலைக்கு ஆள் இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட அவருடைய கட்சிக்காரர்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர்.
 அமெரிக்காவில் வாக்களிக்க கட்சிக் கட்டுப்பாடு கிடையாது. அங்கே நாடாளுமன்றத்திலும், மாகாண சட்டமன்றத்திலும் ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையிலும் தங்கள் தொகுதி, மாநிலம், மற்றும் வாக்காளர்களின் நலன் கருதியும் தீர்மானங்களை ஆதரிக்கவும் எதிர்க்கவும் செய்வார்கள்.
 டிரம்ப்பும் பிரச்னையும் இரட்டைப் பிறவிகள். அவரின் குணாதிசயங்களைப் பற்றி அவருடைய நெருங்கிய உறவினர், அதாவது அவருடைய சகோதரர் மகள் எழுதிய புத்தகத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.
 "ஒரு இலக்கை அடைய நோக்கம் மட்டும் முக்கியமல்ல, அதை அடையும் வழியும் முக்கியம்' என்றார் மகாத்மா காந்தி. ஆனால், லட்சியத்தை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று டிரம்ப்பின் தந்தை அடிக்கடி சொல்வாராம். தந்தை சொல்லைத் தட்டாத அந்த தனயன், அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அந்தத் தேர்தலில் பரம எதிரியான ரஷியாவின் தலையீடு அவருக்கு சாதகமாக இருந்தது என்ற புகார் எழுந்தது.
 இந்தத் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைவார் என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம்தான். ஆனால், அந்தத் தோல்வியை டிரம்ப்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
 தேர்தலில் தில்லுமுல்லு, தபால் வாக்குகள் வருவதில் காலதாமதம் என்றெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்னைகளைக் கிளப்பினார். மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து அங்கெல்லாமும் தோல்வியைத் தழுவினார்.
 ஜார்ஜியா மாகாணத்தில் அவர் சுமார் 11,779 வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தார். தோல்வி அடைந்த பின்னும் அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பதவியில் உள்ள தன் கட்சியைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, தனக்கு ஓட்டுகளைக் கண்டுபிடித்துத் தேர்தல் முடிவை மாற்றும்படி வற்புறுத்தினார் என்பது புகார். ஆனால், நேர்மையான அந்த கட்சிக்காரர் அதற்கு மறுத்துவிட்டார் என்பது தகவல்.
 பென்சில்வேனியா, விஸ்கான்சின், நியூ மெக்ஸிகோ, தெற்கு கரோலினா மாகாணங்களில் தனக்கு எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்காத நிலையில், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு தலைகீழாக நின்றார் டிரம்ப். சரமாரியாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.
 ஜனநாயகத்தின் மாட்சி என்பது பலம் வாய்ந்த ஆட்சியாளர்களின் தோல்வியில் காணப்படும். டிரம்பின் தோல்வி அவருடைய கொள்கைகளின் தோல்வி மட்டுமல்ல, அது அவருடைய வழிமுறை, செயல்பாடுகளின் தோல்வியும் ஆகும்.
 தென்காசியைச் சேர்ந்த நண்பர் அப்துல் ஹமீது இந்தியாவின் குடியரசுத் தலைவர் மூவருக்கு பத்திரிகைத் தொடர்பு செயலாளராகப் பணியாற்றியவர். ஒரு நாள் அவரிடம் "நீங்கள் ஏன் உங்களுடைய அனுபவத்தை புத்தகமாக எழுதக்கூடாது' என்று கேட்டேன். "எல்லாவற்றையும் எழுத முடியாது' என்று அவர் சொன்ன பதில் என்னுடைய காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
 அவர் மேலும் சொன்னார் "இந்தப் பதவியில் நான் சிறிய மனிதர்களின் பெருந்தன்மையையும், பெரிய மனிதர்களின் சின்னத்தனத்தையும் பார்த்திருக்கிறேன்' (ஐ ஹேவ் சீன் தி கிரேட்னஸ் ஆஃப் ஸ்மால் மென் அண்ட் ஸ்மால்னஸ் ஆஃப் கிரேட் மென் இன் திஸ் ஜாப்).
 ஆகவே, டொனால்ட் டிரம்ப்பின் தோல்வியை ஜனநாயகத்தின் வெற்றியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com