வெற்றி வசப்பட என்ன செய்ய வேண்டும்?

 என்னுடைய 31ஆவது வயது வரை எனக்கு விளையாட்டில் மிகப்பெரிய ஆர்வம் கிடையாது. 1982 நவம்பர் 19-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை ஏசியாட் - 82 என்கிற விளையாட்டுத் திருவிழாவை புதுதில்லியில் பார்த்த பிறகு விளையாட்டில் ஆர்வம் கொண்டேன். நேருவின் கனவான அந்த 9-ஆவது ஆசிய விளையாட்டு, 33 நாடுகளிலிருந்து, 4 ஆயிரத்து 595 ஆசிய விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள, இந்திரா காந்தியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
 அன்றைய தொடக்க விழாவில் ராணுவத்தை சேர்ந்த சாந்த் ராம் என்ற விளையாட்டு வீரர், 20 கிலோ மீட்டர் சாலை நடைப்பயணத்தில் வென்று அரங்கில் நுழைந்தபோது, முதல் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய வீரராக அவர் பெயர் அறிவிக்கப்பட, அரங்கமே ஆர்ப்பரித்தது. குவைத் நாட்டின் பரிசாகக் கட்டப்பட்டு, இன்று இந்திரா காந்தியின் பெயர் தாங்கி நிற்கும் விளையாட்டு உள்ளரங்கில் இருந்த எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு அடங்க வெகுநேரம் ஆயிற்று.
 நேரு விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலாவதாக வந்து கொண்டிருந்த இந்திய வீராங்கனை நாலாவது நபரிடம் குச்சியை மாற்றும் சமயம் பதற்றத்தில் அதை அவர் தவறவிட, அரங்கமே "பிக் அப் அண்ட் ரன்' என கூச்சலிட, ஓட்டப்பந்தய வீராங்கனையான கேரளத்தைச் சேர்ந்த வலசம்மா குனிந்து குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி இந்தியாவுக்காக தங்கப்பதக்கங்களை வென்றார்.
 இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19-இல் தொடங்கிய ஏசியாட்-82, பின்னர் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமனின் பிறந்தநாளான டிசம்பர் 4-இல் முடிவடைந்தது.
 "ஏன் இன்றைய தலைமுறையினரால் உலக அரங்கில் பதக்கங்களைக் குவிக்க முடியவில்லை? சிறந்த பயிற்சியாளருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்குவதோடு தனது கடமை முடிவடைந்ததாக அரசு கருதுகிறதா? அரசியல் காரணங்களுக்காக ஆர்வமில்லாதவர்களையும், விருப்பமில்லாதவர்களையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்கினால் அந்தத்துறை எப்படி முன்னேறும்? இன்று உலகின் ஆதிக்க சக்தியாக, ராணுவ வலிமையும், பொருளாதார வலிமையும் மட்டுமல்லாமல், விளையாட்டு வெற்றிகளும் ஒரு நாட்டின் பலத்தை பறைசாற்றும் குறியீடாக மாறிவிட்டது.
 செயற்கைக்கோள் மூலம், உலகின் எந்த மூலையில் நடக்கும் விளையாட்டு போட்டியிலும், வென்றவருக்கு முதல் பரிசு அளிக்கப்படும்போது அவருடைய தேசிய கொடி ஏற்றப்பட்டு, அவருடைய நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படும். எப்போது நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டு நமது தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற சராசரி இந்தியனின் ஏக்கம், ஏன் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் புரியவில்லை' என்றெல்லாம் எனக்குள் பல்வேறு கேள்விகள்.
 மறுநாள் சென்னை திரும்ப நான் தில்லி ரயில் நிலையம் வந்தபோது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நான் பயணித்த பெட்டியில், என்னுடன் பயணித்தவர்கள், 82-ஆவது ஆசிய விளையாட்டில் அதிக தங்கப்பதக்கம் வென்ற எம்.டி. வலசம்மாவும், அவருடைய பயிற்சியாளரான குட்டியும். அந்தப் பயணம் முழுவதும் எங்களுடைய பேச்சு விளையாட்டைப் பற்றியே இருந்தது.
 இந்தியாவில் அரசும், அதிகாரிகளும், ஏன் மக்களும் கூட விளையாட்டை விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இங்கே படிப்பவனுக்குத்தான் மதிப்பு. விளையாட்டிலும், சங்கீதத்திலும், கலைகளிலும் ஈடுபட விரும்புபவர்களை இரண்டாம் தர குடிமகனாக குடும்பம் மட்டுமல்ல, அரசும், அரசு அதிகாரிகளும் பார்ப்பது இந்தியாவின் முதல் சோகம். விளையாட்டின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக இருப்பவர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் என்று நான் சொன்னால் நீங்கள் என்மீது வருத்தப்படக்கூடும்.
 பி.டி. உஷாவுக்கு வாய்த்த நம்பியார் போலும், வலசம்மாவுக்கு அமைந்த குட்டி போலும் பயிற்சியாளர்கள் அமைவது இறைவன் தந்த கொடை. தன் மகன் கிருஷ்ணன் டென்னிஸ் சிறப்பாக விளையாடுகிறான் எனப் புரிந்து கொண்டு மகனை தென்காசியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்ற ராமநாதன் போன்றோர் இங்கு கிடையாது.
 நான் சட்டப்பேரவை உறுப்பினராகி ராமநாதன் கிருஷ்ணனுக்கு, தென்காசியில் விழா எடுக்க வேண்டும் என அழைத்தபோது, அவர் அதை மென்மையாக மறுத்துவிட்டார். இந்த சமுதாயம் தன்னை இத்தனை நாள் புறக்கணித்ததால் அந்த சாதனையாளர் மனம் புண்பட்டிருக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
 ஒத்த விளையாட்டில் உள்ள வீரர்களுக்கு இடையேயுள்ள போட்டி, பயிற்சியாளர்களுக்கு இடையில் நடக்கும் பனிப்போர் பற்றி தனியாக வியாசமே எழுதலாம். ஒரே மாநிலத்தைச் சேர்ந்த வலசம்மாவின் பயிற்சியாளர் குட்டிக்கும், பி.டி. உஷாவின் பயிற்சியாளர் நம்பியாருக்கும் நடந்த துவந்த யுத்தத்தில் குட்டியும், வலசம்மாவும் கிட்டத்தட்ட காணாமலே போய் விட்டனர்.
 இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்புதான். வேலையும், அது தரும் சம்பளமும், அதனால் வரும் சுக போகமும், விளையாட்டை வேலை தேடி தரும் சர்டிஃபிகேட்டாக மட்டுமே பார்க்க வைக்கிறது. நீட் தேர்வுக்கு முன்னர், மருத்துவக் கல்லூரியில் சேர சமூக சேவை சான்றிதழும், விளையாட்டுத்துறை சான்றிதழ்களும் தகுதி இல்லாதவர்களுக்கு சீட்டை பெற்று தரும் அட்சய பாத்திரமாக விளங்கியதால், விளையாட்டு இந்தியாவில் தேய்பிறை சந்திரனாக மங்கியதில் வியப்பில்லை.
 விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேரள அரசு பரிசு வழங்குவதால் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக குட்டி என்னிடத்தில் தெரிவித்தார். ரயில்வேயில் வேலை பார்க்கும் வலசம்மாவுக்கும், குட்டிக்கும் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் டிக்கெட் கிடைக்காமல் கேரள அரசின் தலையீட்டால் மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இடம் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.
 அதே ரயிலில் தனி கோச்சில் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் தன்னுடைய மனைவியுடன் அவருக்குரிய பெட்டியில் வந்து கொண்டிருந்தது துரதிருஷ்டம் என்று நீங்கள் நினைத்தால், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் நம்முடைய விளையாட்டு வீரர்களை கொத்தடிமைகளாக நடத்தியதைக் கேட்டால் ரத்தக் கண்ணீர் வடிப்பீர்கள்.
 வெளியில் சொல்ல முடியாத பாலியல் தொல்லைகள், அதிகாரிகளின் அராஜகம், ஊழல் என்று விளையாட்டு தலை எடுக்காமல் போனதற்கு குட்டி பல சம்பவங்களை என்னிடத்தில் சொன்னார். வெளிநாடு செல்லும் அதிகாரிகள் ஸ்டார் ஹோட்டலில் சௌகரியமாக தங்கியிருக்க விளையாட்டு வீரர்கள் நடுங்கும் குளிரில் கம்பளி உடை இல்லாமல் பெட்ஷீட் விரித்து தூங்கிய நாள்கள் பல என்றார்.
 சரியான ஊட்டச்சத்தோ, டிராக் சூட்டோ, சத்துணவோ, தரம் வாய்ந்த காலணிகளோ அவர்களுக்குத் தரப்படுவதில்லை. ஆப்பிரிக்காவின் மாரத்தான் வீரர் வெறுங்காலுடன் தங்கம் வென்றது வறுமையாலும், வசதியில்லாமையாலும் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் விளையாட்டுக்காக கொட்டப்பட்ட கோடிகள்அதிகாரிகளின் படாடோபங்களுக்காகவும், இன்பச் சுற்றுலாக்களுக்கும் செலவிடப்பட்டது என்பதுதான் உண்மை. இதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்த புண்ணியம், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நட்பு தேசங்களான கம்யூனிஸ நாடுகளைச் சேரும்.
 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற பந்தய வீரர் ஒருவர், வலது காலை முதலில் எடுத்து வைக்கவேண்டுமா, இடது காலை முதலில் எடுத்து வைக்க வேண்டுமா என்பதில் தொடங்கி 100 மீட்டருக்குள் கால் எத்தனை தடவை தரையில் படவேண்டும், ஒரு கால் தடத்துக்கும், மற்றொரு கால் தடத்துக்கும் எத்தனை தூரம் இருக்க வேண்டும் என்றெல்லாம் குட்டி சொல்லிக்கொண்டே போக, பாமரனாக நான் வாயைப் பிளந்தபடி கேட்டது இன்றும் என் நினைவில் உள்ளது. விளையாட்டுத்துறையில் உள்ள அரசியல் என்னை அதிர வைத்தது.
 ஒரு நாள், என்னை பார்க்க வந்த இளைஞரைப் பார்த்தவுடனேயே, அவர் உடலமைப்பு, ஒரு விளையாட்டு வீரர் என சொல்லாமல் சொல்லியது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு பளு தூக்குவதில் இருந்த ஆர்வத்தைக் கண்ட அவர் குடும்பம், தங்களது உணவை தியாகம் செய்து அவரை ஊட்டி வளர்த்தனராம். மாநில அளவில் வென்ற அவர், பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு ஆணையத்திற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்.
 பழக்க வழக்கங்களும், மொழியும், உணவும் மாறியிருந்த பஞ்சாபில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பயிற்சி எடுத்தார். இருந்தும் அவரால் தேர்வுபெற முடியவில்லை. ஆனால், தான் வெளிநாடு போக வேண்டும் என்ற பேராசையில் இருந்த ஒரு அதிகாரி, படிப்பறிவில்லாத அந்தப் பளுதூக்கும் வீரருக்கு ஊக்க மருந்துகளைக் கொடுத்து, அவருடைய தகுதியை பெருக்கி டீமில் சேர்த்துக் கொண்டார்.
 போன இடத்தில் அவர் அபார வெற்றியடைய தமிழ்நாடே அவரைக் கொண்டாடியது. 24 மணி நேரத்தில் சிறுநீர் பரிசோதனை, பயிற்சியாளரின் துரோகத்தைப் பறைசாற்ற, அந்த வீரரின் வெற்றிகள் பறிக்கப்பட்டு இந்தியாவுக்கு அவமானம் தேடி தந்தவர் எனப் பழிக்கப்பட்டார்.
 அவருடைய மாநில வெற்றியின் காரணமாக கிடைத்த பெரம்பூர் ரயில் தொழிற்சாலையில் பெயிண்ட் அடிக்கும் உத்தியோகம் மட்டுமே அவருக்கு இருந்த வாழ்வின் ஆதாரம். தன் தரப்பு நியாயத்தைச் சொல்லி, தன்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி, அபராதத்தை விலக்க உதவ வேண்டுமென அவர் என்னிடம் கேட்டார். இதேபோல், பாதிக்கப்பட்ட ஒரு வீராங்கனைக்காக பஞ்சாப் மாநில அரசு வரிந்து போராடி அவளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்ததைப் பற்றிய ஆதாரங்களை காட்டினார்.
 அன்று எனக்கு தெரிந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பேசி உதவுமாறு சொல்லி கடிதம் கொடுத்து தில்லிக்கு அனுப்பினேன். என் பேச்சை நம்பி தில்லி சென்ற அந்த இளைஞரை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளவே இல்லை என்று பின்னர் என்னிடம்அவர் சோகத்துடன் வருந்தினார்.
 விளையாட்டில் வென்ற வீராங்கனை ஆணா, பெண்ணா, மூன்றாம் பாலினத்தவரா என்ற பிரச்னையை கிளப்பி அந்த வீரரின் வெற்றிகள் பறிக்கப்பட்டு பொதுவெளியில் அவர் கூனிக்குறுகி நின்று, கட்டட வேலைக்கு மீண்டும் சென்றது தமிழகத்தின் சமீபத்திய பரிதாபம்.
 கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என பைத்தியமாக அலையும் இந்த நாட்டில், அது கோடிகளை கொட்டும் ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. எனக்கு சீனாவுடன் பல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி உலக அரங்கில் இன்று அமெரிக்கா மற்றும் ரஷியாவுடன் போட்டி போட்டு தங்கங்களை வாரி குவிப்பதை பார்த்து பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சீனா ஒலிம்பிக் போட்டிகளையே நடத்தி விட்டது.
 ஜூலை 23-ல் டோக்கியோவில் மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இன்று, விளையாட்டு வெற்றிகள் கோடிகளை குவிக்கும் சூதாட்டமாக மாறிவிட்டது என்றாலும், வெற்றிகள் கடுமையான பயிற்சிக்கும், உழைப்புக்கும் பிறகே கிடைக்கின்றன. விளையாட்டல்ல விளையாட்டு என ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்து விளையாட்டை ஆதரிக்காத வரையில் வெற்றிகள் நமக்கு வசப்பட போவதில்லை.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com