குழந்தைத் தொழிலாளர் முறை கூடாது

நமது நாட்டில் மொத்த மக்கள்தொகையில் நாற்பது சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாமல் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



குழந்தைகள் உலகம் மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று குழந்தைகள் உலகம் பெரும்பாலும் இருள் நிறைந்து இருக்கிறது. நாடு முழுதும் கரோனா இரண்டாவது அலையின் தீவிரப் பரவலால், சிறு குழந்தைகளின் பெற்றோர் உயிரிழக்கும் மோசமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதனால் அக்குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

"நாளைய உலகம் இன்றைய குழந்தைகளிடமே உள்ளது' என்பர். இன்றைய உலகத்தைப் பாசமும் பரிவும் காட்டி வளர்க்கும் பெற்றோர், உற்றோர் இல்லாக் குழந்தைகள் வருங்காலத்தைக் காக்க இயலுமா? அதுவும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை 30,000}க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர். சிலர் கைவிடப்பட்டுள்ளனர். 

சிறார் சட்டம் 2015-இன் நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஆதரவற்ற சிறார்களைத் தத்துக் கொடுப்பதாகப் புகார்கள் வந்துள்ளதாக "தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம்' தெரிவித்துள்ளது. 

பொதுவாக ஏழ்மையால் சத்துணவு கிட்டாமல் நாடு முழுதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், குறிப்பாக, கிராமப்புற குழந்தைகள் அவதியுற்று பெற்றோர் இருந்தும் வலுவற்று இருத்தல் மிகக் கொடுமை.

நமது நாட்டில் மொத்த மக்கள்தொகையில் நாற்பது சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாமல் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் ஒரு சிலர் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்புகிறார்கள். 

சட்டத்தின் அடிப்படையில் அது பெரும் தவறு. ஏழ்மை, கல்வியறிவற்ற பெற்றோர், அறியாமை, முயற்சியின்மை, உடல் உழைப்பின்மை உட்பட பல காரணங்களால் சிறு வயதினரைப் பணிக்கு அனுப்புகின்றனர். 

தங்கள் எதிர்காலக் கனவுகள், உள்ளத்தின் ஆசைகள் இவற்றை மறைத்துக் கொண்டு உழைக்கும் சிறுவர்களைத்தான் "குழந்தைத் தொழிலாளர்கள்' என்று சட்டம் முன்னிலைப்படுத்துகிறது. "குழந்தைத் தொழிலாளர்' (சைல்ட் லேபர்) என்பது தொடர்ந்து நீடித்த பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது.

அன்பு தருவதிலே தெய்வமாய் விளங்குபவர்கள் குழந்தைகள். அவர்கள் ஓடி கூடி விளையாடும் பருவத்தில் கல்வியின் தேவையைக் கனிவுடன் சொல்லி, கதைகள் கூறி, அவர்கட்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுத்தல் பெற்றோர்கள் கடன் அன்றோ? ஆனால்,  அவர்களை நடுச்சாலையில் கையேந்தி நிற்க வைப்பது எவ்வளவு கொடுமை? 

இன்று ஊரடங்கு இருப்பதால் குழந்தைகளைச் சாலைகளில் பார்க்க முடியவில்லை. மற்றைய காலங்களில் நடுத்தெருவில் யாசித்துப் பெற்ற பொருளை நோயுற்ற பெற்றோர்க்கு அளித்துக் காலங் கழிக்கும் பிஞ்சுக் குழந்தைகளைக் கண்டால் மனம் பதறும். 

தேநீர்க் கடை முதல் கல்லுடைக்கும் பணிவரை எங்கும் குழந்தைத் தொழிலாளர்கள். வயிற்றில் உணவின்றி, வாடி வதங்கிப் பள்ளிக்குச் செல்லும் இளந்தளிர்கட்கு, உள்ளத்தில் ஆசிரியர்கள் கூறும் பாடம் மனத்திற் பதியாது. இதற்காகவே பேதமின்றி அனைவரும் கல்வி பெற வேண்டும் என்ற உயர் நோக்கிலே இலவசக் கல்வி, மதிய உணவு, சீருடை போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 

சாலையில் வாகன நெருக்கடியால் வண்டிகள் ஐந்து நிமிடம் நின்றால், சிறுவர்கள் கைகளில் வண்ணப் படங்களை, விற்பனைப் பொருட்களை எடுத்துக் கொண்டு  விற்க வருவதைப் பார்த்தால் உள்ளம் உருகுகிறது.

இந்திய நாட்டைத் தாங்கி நிற்கப் போகும் தூண்கள் இன்றைய சிறுவர்கள் என்று உரையாற்றினால் போதுமா? தூண்கட்கு வலு சேர்க்க வேண்டாமா? ஒரு வேளை உண்டு, ஒரு வேளை நீரைப் பருகி தெருவோரத்தில் ஒடுங்கிய நிலையில் காலந்தள்ளும் சிறுவர்கட்கு வலிமை எங்கிருந்து வரும்? 
குழந்தைத் தொழிலாளர் கொடுமை நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பல இடங்களில் கொத்தடிமைகளாக வதைக்கப்பட்டு, சீரழியும் இன்னல்களை, ஊடகங்கள் மூலமும் நேரிலும் கண்டறியும் போது உள்ளம் கொதிக்கின்றது. 

குழந்தைத் தொழிலாளர் நிலையை ஒடுக்க அரசும், தன்னார்வ அமைப்புகளும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டியவை பலவுள. நாமும் ஒன்று கூடி உழைக்க வேண்டும். உழைக்காமல் அன்பு செய்து கொண்டிருந்தால் சில பயிர்கள் வளரலாம். ஆடைகள், வீடுகள் தானே முளைக்குமா? 

"ஊருக்கு உழைத்தல் யோகம்' என்றார் பாரதியார். இளமைப் பருவத்தை வீணாக்கித் தொழில் செய்யும் அச்சிறுவர்கட்கு அன்பு காட்டி, கல்வியூட்டி ஆவன செய்ய ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.

நம் நாட்டில் மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் சட்ட விரோதமாகக் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஊடகங்களின் கண்களுக்கு எட்டாத வகையிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க வேண்டுமானால், காவல்துறையினர், தொழிற்சாலைகள், விவசாயம் தொடர்பான பணிகள், நெசவாலைகள், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள், உணவு விடுதிகள், மதுபானக் கடைகள் போன்ற இடங்கட்குச் சென்று கண்காணிக்க வேண்டும். 

சட்ட விதிகளை மீறி குழந்தைகளைப் பணியில் அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

கரோனா காலம் கடுமையான வேலையின்மையை உருவாக்கியுள்ளது. குழந்தைகட்குச் சிறப்புப் பள்ளிகளை நடத்தி கல்வி நிதியைக் கூடுதலாக்கினால்தான் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும். அவ்வாறு செய்யின், குழந்தைகள் எதிர்காலம் வளமாக இருக்கும். குழந்தைத் தொழிலாளர் என்ற சொற்றொடருக்கு இடமே இருக்காது.

இன்று (ஜூன் 12) குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com