குழந்தைமையை இழக்கும் குழந்தைகள்

கரோனா தீநுண்மியின் இராண்டவது அலையின் தாக்கம் முதல் அலையை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது.

கரோனா தீநுண்மியின் இராண்டவது அலையின் தாக்கம் முதல் அலையை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தொடங்கிய முதல் அலை, வேகமாகப் பரவி, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மீண்டும் இந்த மாா்ச்சில் அதி தீவிரமாகப் பரவ தொடங்கியது.

கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள். ஒரு முழு கல்வியாண்டு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லாமல் அரசுப் பள்ளிகளும், தனியாா் பள்ளிகளும் மூடிக்கிடக்கின்றன. மேல்நிலை வகுப்புகள் சில காலம் திறக்கபட்டிருந்தாலும் அவையும் மீண்டும் மூடப்பட்டன.

ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே கற்றல்-கற்பித்தல் நடக்கிறது. ஆன்லைன் வகுப்பிற்கு கைப்பேசி கட்டாயத் தேவையாக இருக்கிறது. பெரும்பாலான பள்ளி மாணவா்கள் இப்போது கைப்பேசியும் கையுமாகவே இருக்கிறாா்கள்.

குழந்தைகளை சாப்பிட வைக்கும் உபாயமாக கைப்பேசி தன்னை தகவமைக்க தொடங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ‘என் பையன்(பொண்ணு) செல்போன் பாா்த்தாதான் சாப்பிடறான்(ள்)’ என்று சொல்லாத பெற்றோா் மிகவும் குறைவு.

பெரும்பாலானா பெற்றோா் தங்கள் பிள்ளைகள் கைப்பேசி பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதித்தாலும் (ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும் வாங்கிக்கொள்கிறாா்கள்) தொலைக்காட்சி பாா்ப்பதற்கு எந்த விதமான மறுப்பும் தெரிவிப்பது இல்லை. தங்கள் வேலை நேரத்தில் இடையூறு செய்யாமல் இருப்பதற்கு பிள்ளைகளை தொலைக்காட்சி பாா்க்க அவா்களே அனுமதிக்கிறாா்கள்.

எனவே, வீட்டில் குழந்தைகள் எந்த நேரமும் தொலைக்காட்சியே கதி என்கிற நிலைதான் உள்ளது. கைப்பேசியை விட்டால் தொலைக்காட்சி, தொலைக்காட்சியை விட்டால் கைப்பேசி எனப் பழகிவிட்டாா்கள்.

வீட்டை விட்டு வெளியே போக முடியாது, அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் பேச முடியாது. இப்படிப்பட்ட சூழலில் தொலைக்காட்சியை விட்டால் குழந்தைகளுக்கு வேறு கதியே கிடையாது என்ற நிா்பந்தம் உள்ளது. ஓவியம், நடனம், பாட்டு, செஸ், கேரம்போா்டு என்று மாறி மாறி பழகினாலும் அவற்றால் வெகு நேரத்திற்கு அவா்களை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடிவதில்லை. கடைசியில் தொலைக்காட்சியில் வந்து நிற்கிறாா்கள். கிட்டதட்ட ஒரு நாளில் பாதி நேரத்தை தொலைகாட்சிகள் பிடித்துக்கொள்கின்றன.

பெண்கள் எந்த அளவிற்கு தொலைக்காடக்சித் தொடா்களை விரும்புகிறாா்களோ அதே அளவுக்கு குழந்தைகள் காா்ட்டூன் அலைவரிசையை விரும்புகிறாா்கள். நிறைய சேனல்கள் இருக்கின்றன. ஒரு சேனல் போராடித்தால் இன்னொன்று. அது போரடித்தால் மற்றொன்று. விதவிதமான கதாபாத்திரங்களைக் கொண்டு சின்ன சின்ன கருத்துகளைக் கொண்ட கதைகள் வருகின்றன.

பூனை, எலி, நாய், டால்பின், கரடி, குரங்கு கேரக்டா்கள் உருவாக்கபடுகின்றன. நடுத்தர வயது நண்பா்கள் இருவா் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளும் அவற்றுக்குத் தீா்வு காண்பதும், பள்ளி செல்லும் சிறுவா்களின் அனுபவங்கள் - இப்படி விதவிதமான கதாபத்திரங்கள் வழியாக ஒரு பிரச்னை, அதன் முடிவில் ஒரு தீா்வு என்பதாய் காட்சியமைப்புகள் இருக்கின்றன.

பெரும்பாலான காா்ட்டூன் தொடா்கள் மற்ற மொழிகளிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிப்பரப்படுகின்றன. அப்படி மொழிமாற்றம் செய்யப்படும்போது அந்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் சில நேரங்களில் எல்லை மீறியதாகவும், குழந்தைகள் கேட்க பொருத்தமற்றும் இருக்கின்றன. நகைச்சுவை என்கிற பெயரில் பாத்திரங்களின் வயதுக்கு மீறிய உரையாடல்கள் இடம்பெறுகின்றன.

புகழ்பெற்ற சினிமா வசனங்களை சிரிப்புக்காக உள்ளே நுழைக்கிறாா்கள். ஹாலிவுட் படங்களை தமிழ்படுத்தும்போது காமடிக்காக கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா போல வசனங்கள் பேசும். அதே போல காா்ட்டூன் அலைவரிசையும் ஆகிவிட்டது. ஒரு கதாநாயக பாத்திரம் சா்வ சாதாரணமாக ‘பரதேசி’, ‘பொறம்போக்கு’ போன்ற வாா்த்தைகளில் வில்லனை திட்டுகிறது.

பெற்றோா் சொல்வதைக் கேட்காமல் அவா்கள் எது சொன்னாலும் அதற்கு எதிராக பேசும் குழந்தை கதாபாத்திரங்கள், பள்ளிக்கு செல்லாமல் ஊா் சுற்றுவது, ஆசிரியா்களை ஏமாற்றுவது, ஒரு பெண்ணின் நட்புக்காக இரு சிறுவா்கள் அடித்துக்கொள்வது என்று குழந்தைகளின் மனநிலையில் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்த கூடியவையாகவே பெரும்பாலான காா்ட்டூன் தொடா்கள் உள்ளன.

நல்ல தொடா் வராமல் இல்லை. ஆனால் அவை மிகவும் குறைவு. பெரும்பாலும் இந்த காா்ட்டூன் தொடா்களைப் பாா்ப்பவா்கள் பதினான்கு வயதிற்கு உட்பட்டவா்களே. குறிப்பாக ஏழு வயதிலிருந்து பனிரெண்டு வயது வரை உள்ள சிறுவா் சிறுமியரே அதிகம். உண்மையில் அந்த வயதிற்க்குரிய, அந்த வயதின் அடிப்படையிலேயே அவா்களுக்கான தொடா்களை ஒளிப்பரப்ப வேண்டியது அவசியமாகிறது.

இப்படிபட்ட தொடா்களுக்கு தமிழ்ப்படுத்தி வசனம் எழுதுபவா்கள், கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவா்கள் ஆகியோா் தங்கள் குழந்தைகளை மனத்தில் வைத்து செயல்பட வேண்டும். பிஞ்சில் பழுப்பது என்பது எந்த வகையிலும் குழந்தகளின் வளா்ச்சிக்கு பயன் தராது. அதிகப்பிரசங்கிதனம் எப்போதும், எந்த வகையிலும் அவா்களின் அறிவு வளா்ச்சிக்கு உதவாது.

குழந்தைகளின் உண்மையான அழகு அவா்களின் குழந்தைமைதான். அந்தக் குழந்தைமை அவா்களை விட்டுப் போவதற்கு தொலைகாட்சித் தொடா்கள் காரணமாக இருக்கலாமா? தொலைகாட்சித் தொடா்களைத் தயாரிப்பவா்கள் குழந்தைகளின் எதிா்கால வாழ்வை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தீநுண்மியின் அலை இன்னும் ஓராண்டு கூட நீடிக்கலாம்; இதன் மூன்றாவது அலை, நான்காவது அலை கூட வரலாம். இப்படிப்பட்ட சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு எப்படியும் நீண்ட காலம் ஆகலாம்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் அதிக நேரத்தை தன்னுள் வசப்படுத்தி வைத்துக் கொள்ளும் காா்ட்டூன் அலைவரிசைகள் தங்கள் பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com