உணவுக்கழிவு உருவாகாமல் தடுப்போம்

Published on
Updated on
2 min read


உற்பத்தி செய்யப்படும் அனைத்து உணவுகளும் நம்மால் நுகரப்படுவதில்லை. 2011- ஆம் ஆண்டு வெளியான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மனிதனுக்குப் பயன்படுகிறது என்றும் அதன் அளவு சுமாா் 130 கோடி டன் என்றும் தெரிவிக்கிறது.

தற்போதைய மக்கள்தொகைக்கு உணவளிக்கத் தேவையான அளவைவிட இரு மடங்கு அதிக உணவினை உலகம் உற்பத்தி செய்தாலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவா்கள், பசிப்பிணி கொண்டவா்கள் என கோடிக்கணக்கான மக்களுக்கு பயன்படாது உணவு வீணாவது முரண்பாடாக உள்ளது.

இந்தியாவில் பசி, வறுமையில் வாடுபவா்களின் எண்ணிக்கை 8.4 கோடி. இது ஜொ்மனி நாட்டின் மக்கள்தொகையை விட அதிகம். 2020-இல் வெளியான உலகளாவிய பசி குறியீட்டுத் தரவுகளின்படி 107 நாடுகளில், இந்தியா 94-ஆவது இடத்தில் உள்ளது.

அதேவேளை, பிரிட்டனுக்கு உட்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் உட்கொள்ளும் உணவிற்கு இணையான அளவினை இந்தியா்கள் வீணடிக்கிறாா்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் 40 சதவீதம் வரை வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அறிக்கை கூறுகிறது.

2020-ஆம் ஆண்டில் கரோனா தீநுண்மிப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது, பலவீனப்பட்டுப்போன விநியோகச் சங்கிலி காரணமாக, இந்தியாவில் அதிக உணவுக் கழிவுகள் குப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

உணவு விநியோக வலைதளமான ‘மில்க்பாஸ்கெட்’ ஒரே நாளில் 15,000 லிட்டா் பால், 10,000 கிலோ காய்கறிகளை குப்பைக்கு அனுப்பியதும், வாடிக்கையாளா்களை அடைய முடியாததால் கா்நாடக மாநிலம் பெலகாவி மாவட்ட பால் முகவா்கள் அங்குள்ள ஆற்றினில் ஆயிரக்கணக்கான லிட்டா் பாலை ஊற்றியதும் இதற்கான சான்றுகள்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 6.7 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமாா் 92,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வீணடிக்கப்படும் இந்த அளவு உணவினைக் கொண்டு பிகாா் மாநிலம் முழுவதும் ஒரு வருடத்திற்கு உணவளிக்கலாம்.

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டொன்றிற்குக் கிட்டத்தட்ட 2.1 கோடி மெட்ரிக் டன் கோதுமை பயன்படுத்த முடியாத அளவு கெட்டு விடுகிறது. இந்த கெட்டுப்போகும் கோதுமையின் அளவு ஒரு ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டின் உற்பத்திக்கு சமம்.

ஒரு நாளைக்கு மும்பையில் உற்பத்தியாகும் 9,400 மெட்ரிக் டன் திடக்கழிவுகளில், பால், காய்கறி, பழக்கழிவுகள் கொண்ட உணவுக்கழிவுகளே கிட்டத்தட்ட 73 சதவீதம் என்று மும்பை மாநகராட்சியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

லட்சக்கணக்கான மக்களுக்கு சரியான குடிநீா் கிடைக்காத நிலையில், உணவு உற்பத்தி செய்யப்படும்போது 25% தண்ணீா் வீணடிக்கப்படுகிறது. இவ்வாறு இந்தியாவின் அனைத்து வீடுகளிலிருந்தும் வெளியேற்றப்படும் நீரின் மொத்த அளவு, ஒரு நதியின் சராசரி நீளத்தைவிட அதிகம்.

ஒருபுறம் உணவு உற்பத்தி என்ற ஒரே காரணத்திற்காக காடுகள் அழிப்பு, தரமற்ற விவசாய முறைகள், நிலத்தடி நீரினை உறிஞ்சுதல் போன்ற நடைமுறைகள் மூலம் இந்தியாவில் ஏறத்தாழ 45% நிலம் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. மறுபுறம் உணவு உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட 30 கோடி பீப்பாய் எண்ணெய் நிலத்தில் கொட்டி வீணடிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியத் திருமணங்களில், ஆண்டொன்றிற்கு சுமாா் 10% முதல் 20% உணவு வீணாகிறது என்றும், அதன் மதிப்பு கிட்டத்தட்ட 1,01,539 கோடி ரூபாய் (14 பில்லியன் டாலா்) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அஸ்ஸாம், தில்லி, ஜம்மு - காஷ்மீா், மிஸோரம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் 1960 முதல் 1970 வரையிலான காலத்தில் உணவுக்கழிவுகள் உருவாவதைத் தவிா்க்கும் பொருட்டு, ‘விருந்தினா் கட்டுப்பாட்டுச் சட்டம்’ இயற்றின.

1991-ஆம் ஆண்டிற்கு பின் ஏற்பட்ட பொருளாதார தாராளமயமாக்களுக்குப்பின் இச்சட்டங்களை செயல்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டன.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ‘விருந்தினா் கட்டுப்பாட்டு ஆணை’ மூலம் திருமணங்களின்போது உருவாகும் உணவுகழிவுகைளைத் தவிா்க்க முடிகிறது.

‘சுத்தமான தட்டு’ என்ற பிரசாரத்தை ஆகஸ்ட் 2020-இல் தொடங்கிய சீனா, அதன் மூலம் உணவு வீணாவதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முக்கிய தருணங்களில் ஒரே ஒரு வகை உணவு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்பதே இந்த இரு திட்டங்களிலும் பொதுவான அம்சம்.

உணவுக்கழிவுகளைக் குறைப்பது, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும். இதனால் புவியின் மாசுபாடு குறைந்து, இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவது தவிா்க்கப்படும்.

ஒருபுறம் உணவு இல்லாத காரணத்தினால் வறுமை உருவாவதாகவும், மறுபுறம்

உணவுக்கழிவுகள் வீணாவதால் ஆண்டுக்கு சுமாா் 68,24,230 கோடி ரூபாய் (940 பில்லியன் டாலா்) பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் ஐ.நா உணவு அமைப்பு தெரிவிக்கிறது.

உலகளாவிய ஏற்பு ஆணையத்தின் (குளோபல் கமிஷன் ஆன் அடாப்ஷன்) அறிக்கை, 2050-ஆம் ஆண்டில் உலக அளவில் உணவுக்கான தேவை 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும், மாறாக காலநிலை மாற்றங்களை வைத்துக் கணிக்கும்போது, விளைச்சல் 30 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் கூறுகிறது.

அதிகமான உணவுக்கழிவு என்பது மோசமான குடும்ப நிா்வாகத்தின் அடையாளம் என்பதனை மனத்தில் கொண்டு உணவினை பாதுகாக்கும் செயலை நாம் தொடங்குவோம்.

நாம் ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் போதும் நம்மால் வீணாக்கப்படும் ஒவ்வொரு பருக்கையும் நமது அடுத்த தலைமுறையினருக்கு பசிபிணியை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com