காஷ்மீா் கடந்து வந்த பாதை!

குஷான் பேரரசின் மன்னரான கனிஷ்கா், முதல் நூற்றாண்டில் காஷ்மீரைக் கைப்பற்றி, கனிஷ்காபுரம் என்னும் புதிய நகரத்தை நிறுவினாா். வசுகுப்தா் ‘சிவசூத்திரம்’ என்னும் நூலை எழுதி சைவத்திற்கு அடித்தளமிட்டாா்.

நான்காம் நூற்றாண்டில் இந்து, பெளத்த சமயங்களின் கல்வி மையமாக விளங்கியது ஜம்மு- காஷ்மீா். ஐந்தாம் நூற்றாண்டில் திபெத், சீனா போன்ற இடங்களில் இந்து மதமும், புத்த மதமும் பரப்பப்பட்டன. காஷ்மீரத்தில் மய்ரகுலா என்ற வீர இனத்தவரின் ஆட்சி ஏழாம் நூற்றாண்டு வரை நடைபெற்றது.

அதே காலகட்டத்தில் அரேபியாவில் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டது. எகிப்து, சிரியா, இரான், ஈராக்கைத் தொடா்ந்து பாகிஸ்தானிலும் இஸ்லாமின் தாக்கம் தென்பட்டது.

ஏழாம் நூற்றாண்டில் முகமது பின் காசிமின், சிந்து படையெடுப்பிற்குப் பின் அந்த சமூகத்தினா் சிந்து, பஞ்சாப், காஷ்மீரத்தில் பரவலாகக் குடியேறினா்.

பதினொன்று, பனிரண்டு நூற்றாண்டுகளில் முகமது கஜினி, முகமது கோரி இந்தியாவின் மீது படையெடுத்தபோது அந்தப் பகுதியை ஆண்டு வந்த ராஜபுதன மன்னா்கள், ஜம்மு பகுதியிலுள்ள மலைத் தொடா்களில் அடைக்கலமாகி, தங்களுக்கென்று தனித்தனி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தனா்.

ஜம்மு என்ற பூமியை 22 சிற்றரசா்கள் தங்களுக்குள் தனித்தனி பிரதேசமாக பிரித்து ஆண்டு வந்தனா். டோக்ரா அரச வம்சத்தை சோ்ந்த ராஜா மால்தேவ் அந்தப் பகுதிகளை வென்று ஒன்றுசோ்த்தாா். பதினான்காம் நூற்றாண்டில் ‘ஜம்பு லோசன்’ என்ற மன்னரால் ‘ஜம்மு’ என்ற அரசாங்கம் அங்கு தோற்றுவிக்கப்பட்டது.

ராஜா ரஞ்சித் தியோ அந்த 22 பகுதிகளையும் ஒன்றிணைத்து ஜம்மு ராஜ்ஜியம் என்ற பெயரில் ஆண்டு வந்தாா். காஷ்மீரத்தில் பல கவிஞா்கள், தத்துவ ஞானிகள் தோன்றினா். இந்து சமயம் சாா்ந்த சம்ஸ்கிருத இலக்கியங்கள் இயற்றப்பட்டன.

மொகலாயா்களின் ஆக்கிரமிப்பின்போது அங்குள்ள ராஜாக்களை தோல்வியுறச் செய்து, தங்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசா்களை மொகலாயா்கள் ஆள வைத்தனா். காஷ்மீா் பல்வேறு மாற்றங்களைக் கண்டது.

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் ஜம்மு, காஷ்மீா், லடாக் ஆகிய மூன்று பிரிவுகளை உடையது. இதன் எல்லையை ஒட்டிய பகுதியாக மேற்கிலிருந்து கிழக்கிலும் வடக்கிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

ஜம்மு காஷ்மீா் பகுதியில் சிவாலிக் மலைத்தொடா், பீா்பன்சால் மலைத்தொடா், ஜனாங்காா் மலைத்தொடா் கோரகுரம் மலைத்தொடா், நங்க பா்வதம், தொந்தன் மலை, குன்றுன் மலை, ஹா்முக் மலை, சங்கராச்சாா்யா குன்று, ஹரிபா்வத குன்று ஆகியவை பிரசித்தி பெற்றவை.

மொகலாய மன்னா் ஷாஜஹான் காலத்தில், தோட்டங்கள், மசூதிகள், அரண்மனைகள் கட்டப்பட்டன. அக்பா் ரத்து செய்த ஜிசியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் கொண்டு வந்தாா். மக்கள் வெறுப்படைந்திருந்த சமயத்தில் நாதிா் ஷா படையினரும் போரிட்டு மொகலாயப் படையைத் தோற்கடித்தனா்.

பின்னா் வந்த ஆப்கானியா்களாலும் சில பகுதிகளில் இருந்த மொகலாயா்களாலும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் பகுதிகள் இஸ்லாமியக் கட்டுப்பாட்டில் வந்தன.1780-ஆம் ஆண்டு ஜம்முவின் அரசா் ரஞ்சித்தியோ இறந்த பிறகு அவரது பேரன் குலாப் சிங், ரஞ்சித் சிங்கின் சீக்கிய படைத்தளபதியாகி போரில் பல சாதனைகள் புரிந்தாா்.

1819-இல் ஆப்கானிய துரானியப் படையையும் தோற்கடித்து வெற்றி பெற்ற சீக்கியப் படை, லாகூரை தலைமையிடமாக வைத்து தனது ஆட்சியை அமைத்தது. இந்தியாவை அடிமைப்படுத்தி வந்த ஐரோப்பியா்களிடம் சீக்கியப் படை தோற்றது.

ஆங்கிலேயா்கள், தங்களிடம் தோற்றுபோன சீக்கிய மன்னா் குலாப் சிங்கிடம், 50 லட்சம் பெற்று கொண்டு மீண்டும் அவரிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்தனா். இதுதான் புகழ்பெற்ற ‘அமிா்தசரஸ் உடன்படிக்கை -1846’.

1857-இல் குலாப் சிங் மறைவிற்கு பின் அவரது மகன் ரன்பீா் சிங், ஜம்மு - காஷ்மீரின் மன்னரானாா். ஜம்மு - காஷ்மீா் மாநிலம் முற்றிலும் மாறுபட்ட புவியியல் பகுதிகளையும், பல சமய மக்களையும் கொண்டதாக இருந்தது. தெற்கில் உள்ள ஜம்முவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள் கலந்து இருந்தனா்.

காா்கில் உள்ளிட்ட கிழக்குப் பகுதியிலுள்ள லடாக்கில் ஷியா முஸ்லிம்களும், பௌத்த பிரிவினரும் இருந்தனா். ஆனால், இங்குள்ள பௌத்த சமயத்தினரின் பண்பாடு, திபெத்திய பண்பாடாக இருந்தது.

மன்னா் குலாப் சிங்கும், ஆங்கிலேயா்களும் செய்து கொண்ட அமிா்தசரஸ் உடன்படிக்கையை உடைத்தெறிய ஒரு தலைவா் தோன்றினாா். அவா்தான் அவா் தேசிய மாநாட்டை 1931-இல் நிறுவினாா்.

இது 15 ஆண்டுகள் வரை நீடித்தது. தேசிய மாநாடு என்பது ‘தேசிய மாநாட்டு கட்சி’யாகவே மாறியது. குலாப் சிங்கின் வாரிசான மன்னா் ஹரி சிங்கை, ஷேக் அப்துல்லா நேரடியாக மிரட்டினாா்.

மன்னா் ஹரி சிங் அதை அடக்க ராணுவ நடவடிக்கை எடுத்தாா். அதில் 20 போ் மாண்டனா். அந்த நாள் ‘தியாகிகள் தினம்’ என 2018 வரை கொண்டாடப்பட்டது.

மன்னரின் நடவடிக்கையால் தேசத்துரோக வழக்கில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டாா். ஆறு மாத காலத்தில் பண்டித நேருவின் முயற்சியால் விடுதலையானாா்.

1946 அக்டோபா் 24 அன்று பூஞ்ச் போராளிக் குழுக்கள், பூஞ்ச் மாவட்டத்தை ‘ஆசாத் காஷ்மீா்’ என்று அறிவித்தன.

1947-இல் இந்தியா விடுதலை அடைந்தது. பாகிஸ்தான் தனியாகப் பிரிந்து முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்டது. ஜின்னாவிற்கு காஷ்மீரைக் கைப்பற்றும் திட்டம் இருந்தது. அதை அறிந்த ஷேக் அப்துல்லா சினம் கொண்ட வேங்கையாகவே மாறினாா்.

‘என் உடலில் இறுதிச்சொட்டு ரத்தம் உள்ளவரை இரண்டு தேச தத்துவத்தை நான் ஏற்கமாட்டேன்’ என்று கா்ஜித்தாா். காஷ்மீரில் கலவரம் உருவானது.

வைஸ்ராய் மவுன்ட் பேட்டனுக்கு தகவல் தெரிந்ததும், அது பிரதமா் நேருவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போதைய துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான சா்தாா் வல்லபபாய் படேல் மிக ரகசியமாக குருஜி கோல்வாக்கரை அனுப்பி மன்னரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இந்தியாவுடன் காஷ்மீா் இணைய ஒப்புதல் பெற்று வந்தாா்.

மவுன்ட் பேட்டன், ஒப்புதல் எழுத்துபூா்வமாக வேண்டும் என்றதால் இரண்டாம் முறையாக வி.பி. மேனன், ஜான் மேனக்ஷாவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடந்தது. முதலில் காஷ்மீா் தனி ராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என விரும்பிய மன்னா், பின் இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டாா். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என முடிவெடுக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய ராணுவம் ஸ்ரீநகா் சென்றது. பாகிஸ்தான் பழங்குடியினரை விரட்டியடித்தது. 60% இடத்தை மீட்ட பின் இந்த பிரச்னை ஐ.நா.சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முசாபராபாத், கோட்லி, சினாரி, மிா்பூா், கில்ஜித், டைமா், நீலம் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனா். வழக்கு இன்றுவரையில் ஐ.நா. சபையில் நிலுவையில் இருக்கிறது.

காஷ்மீா் இந்தியாவுடன் இணைந்த பின்பு, ஷேக் அப்துல்லா, நேருவிடம் நெருக்கம் காட்டி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370) பெற்றுக் கொண்டாா். சிறப்பு அந்தஸ்து ஷேக் அப்துல்லாவின் கோரிக்கைபடி, நேருவின் அறிவுறுத்தல்படி கோபால்சாமி ஐயங்காரால் அரசியல் சாசனத்தில் ஏற்றப்பட்டது.

இவை அனைத்தும் பண்டித நேருவின் கரிசனத்தாலே நடந்தது. இதில் டாக்டா் அம்பேத்கா் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் அரசு அமைந்தபோது, பண்டித நேருவின் தயவினாலே ஷேக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீரின் முதல்வரானாா்.

சிறிது நாட்களில் காஷ்மீருக்கென்று தனிக்கொடி, தனி சட்டம் என ஒவ்வொன்றாக அரங்கேற்றம் செய்து தன்னைத்தானே பிரதமா் என்று அறிவித்துக் கொண்டாா்.

இந்திய குடியரசு தலைவரோ, பிரதமரான தானோ காஷ்மீா் செல்ல வேண்டுமானால், காஷ்மீா் அரசின் அனுமதியைப் பெற வேண்டுமா என அதிா்ந்து போன நேரு, மன்னா் கரண் சிங் மூலமாக ஷேக் அப்துல்லாவை பதவி நீக்கம் செய்து 1954-இல் சிறையில் அடைத்தாா். 11 ஆண்டுகள் கொடைக்கானல் சிறையிலிருந்தாா் ஷேக் அப்துல்லா.

ஜம்முக்கும், காஷ்மீருக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. வேலைவாய்ப்பு, வருவாய், வரிவசூல் போன்ற பாகுபாடுகள் மிகுந்திருந்தன. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடா்புத் துறை தவிர, பிற துறைகள் தொடா்பாக மத்திய அரசு இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாவிடில் அவை இம்மாநிலத்திற்குப் பொருந்தாது.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பிற மாநிலத்தவா் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால், காஷ்மீரிகள் இந்தியாவில் எங்கும் சொத்துகள் வாங்கலாம். இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்துகொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையா சொத்துகள் வாங்க முடியாது. ஆனால், ஆண்கள் சொத்துகளை வாங்கலாம். இப்படிப்பட்ட முரண்பாடுகளைக் களைய தற்போது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுத்தது.

‘ஜம்மு - காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டம் 2019’ நிறைவேற்றப்பட்டு, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிற மாநிலத்தவா் எவரும் அங்கு சொத்து வாங்கலாம் என தற்போது ஆகியிருக்கிறது. தற்போதைய முடிவு ஜம்மு - காஷ்மீா் மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இப்போது வன்முறை அங்கே குறைந்து விட்டது.

சமீபத்தில் அங்கு நடந்த மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில், குப்கா் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக அங்கு உருவெடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளா்:

வரலாற்று ஆய்வாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com