நிரந்தரமானவர், அழிவதில்லை!

Updated on
3 min read

 நேற்று முன்தினம் (மே 17) மாலை நான்கு மணிக்கு எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் புதல்வர் பிரபி மூலமாக கி.ரா. அனுப்பிய கூரியர் தபால் ஒன்று வந்தது. அதில் கி.ரா. எழுதிய "கோபல்லபுரத்து மக்கள்', "கோபல்ல கிராமம்' ஆகிய இரு புத்தகங்கள் இருந்தன.
 அந்தப் புத்தகங்கள் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கின்ற தமிழ் இருக்கைக்கு அனுப்ப வேண்டியவை என்று ஏற்கெனவே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சந்தித்தபோது என்னிடம் கி.ரா. சொல்லியிருந்தார்.
 அதில் "ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு' என்று எழுதி அவர் கையொப்பமும் இட்டிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவரின் கையெழுத்து மிக நேர்தியாக இருந்தது.
 இதுதான் அவர் இறுதியாக இட்ட கையொப்பமும் எழுத்துமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றபோதும், உடல் நலிவுக்கு மத்தியிலும் தான் எடுத்துக் கொண்ட கடமையைச் சீராகச் செய்திருக்கின்றார்.
 தான் சொன்னதைச் சொன்னபடி செய்துவிட்டுத்தான் அன்று இரவு அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். அவரது மரணம் மனதை மிகவும் வாட்டுகின்றது.
 நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கி.ரா. மறைந்து விட்டார் என்ற செய்தி வந்து சேர்ந்தது. இரவு முழுவதும் அவருக்கு அரசு மரியாதை செய்யக்கூடிய பணிகளை கவனிக்க வேண்டி இருந்தது. நடிகர் சிவகுமார், அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றவர்களோடு இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
 கி.ரா. ஒரு விவசாயி, ஒரு பொதுவுடமைவாதி, இலக்கிய கர்த்தா, சாதாரண மக்களுடைய பாடுகளை பேசக்கூடியவர், மனிதநேய மிக்கவர் என்ற பல்வேறு கோணத்தில் அவரைப் பார்க்க வேண்டும். கி.ரா. இன்னும் ஓராண்டு இருந்திருந்தால் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று பல திட்டங்களை நாங்கள் அமைத்திருந்தோம். எதிர்பார்க்காத வகையில் இந்த செய்தி எட்டியது.
 கி.ரா. எந்த மண்ணின் பாடுகளை எழுதினாரோ அதே கரிசல் மண்ணில் சங்கமம் ஆகின்றார்.
 கி.ரா. இலக்கியத் தளத்தில் ஒரு வரலாறு. தனது இளமைப் பருவத்தில் ரசிகமணி டி.கே.சி., காருகுறிச்சி அருணாசலம், விளாத்திக்குளம் சுவாமிகள், கு. அழகிரிசாமி போன்றோரை நண்பர்களாக மட்டுமல்ல வழிகாட்டிகளாகவும் கொண்டவர். அவர் குறித்து பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அவருடைய நினைவுகளாக மிதந்து கொண்டிருப்பதில் எதைச் சொல்வது எதைத் தள்ளுவது என்றே தெரியவில்லை.
 கி.ரா.வின் ஆளுமையும் அவரது அணுகுமுறையும் சற்று மாறுபட்டவை. ரசிகமணி டி.கே.சி.யிடம் இதே பாணி இருந்தது. கள்ளம் கபடமற்ற முகபாவம், வெள்ளந்தியான சிரிப்பு, எதையும் ஒரு ரசனையோடு, ஈடுபாட்டோடு பேசும் விதம் - இவைதான் அவரது அணுகுமுறை.
 கி.ரா. இடைச்செவலில் வாழ்ந்த காலங்களில் வட்டார வழக்கு அகராதியை கொண்டு வந்த சிறப்புக்குரியவர். ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு வட்டார வழக்கு அகராதி தயாரிப்பது என்பது சாதாரண வேலை அல்ல. அந்தத் தயாரிப்பு பணிக்கு தேவையான பேனா மை வாங்க வேண்டும் என்றாலும் அதற்கான தாள்கள் வாங்க வேண்டும் என்றாலும் கூட கோவில்பட்டிக்குத் தான் செல்ல வேண்டும். சின்ன கிராமத்தில் இருந்து கொண்டு கோவில்பட்டி மாரீஸ் போன்ற தோழர்களோடு சேர்ந்து கொண்டு அந்த பணியை செய்து முடித்தார் கி.ரா.
 கரிசல் காட்டின் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளையும் கொண்டு வந்தார். இதுவும் தமிழகத்தில் ஒரு முன்முயற்சிதான். இப்படிப்பட்ட ஒரு முயற்சிக்கு, கு. அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் கரிசல் இலக்கியத்தை முன்வைத்து அடித்தளம் அமைத்தார்கள்.
 குன்று ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்தால் மரமும் செடியும் மண்ணும் சூழ்ந்த மாதிரி இருக்கும். அருகில் சென்று பார்த்தால்தான் அதில் உள்ள பல்வேறு வகையான மூலிகைச் செடிகளும் அபூர்வமான பழங்களும் பூக்களும் நம் கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் கி.ரா.வும்.
 கி.ராவுடன் எனக்குள்ள தொடர்பு 45 ஆண்டுகளுக்கும் மேலானது. நெருங்கிய தொடர்பு என்று வைத்துக் கொண்டால் எழுபதுகளில் தொடங்கிறது.
 நான் சென்னையிலிருந்து எனது கிராமத்திற்கு சென்றால், இடைச்செவலுக்குச் சென்று அவரைப் பார்க்காமல் ஒருபோதும் திரும்பியதில்லை. அவரது கையெழுத்து நேர்த்தியாக இருக்கும். அதேபோல் அவரது எழுத்துகளில் கரிசல்காட்டின் பேச்சு வழக்கு இயல்பாக இருக்கும்.
 "தனித்தமிழ் தேவைதான் என்றாலும், வட்டார மொழி, வட்டார வழக்கு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றையும் நாம் கவனிக்க வேண்டும்' என்று அவர் சொல்வார்.
 உழைக்கும் மக்களின் பாடுகளைச் சொல்லக்கூடிய பல கட்டுரைகளையும் கி.ரா. எழுதியுள்ளார்.
 "கரிசல் காட்டுக் கடுதாசி'யை அவர் ஓர் இதழில் தொடராக எழுதியபோது கரிசல்காட்டு வட்டார வழக்கு உலக தமிழ் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.
 இப்படியான பல்வேறு கோணங்களில் கி.ரா.வைப் பார்க்கவேண்டும். கி.ரா. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஒருமுறை கோவில்பட்டி சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது குமாரசாமி ராஜா சென்னை ராஜதானியின் முதலமைச்சர்.
 ரசிகமணி டி.கே.சி. முதலமைச்சரிடம் பேசிய பிறகு கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். மறைந்த கோவில்பட்டி அழகிரிசாமி, நல்லகண்ணு, படைப்பாளியும் வழக்குரைஞருமான நா. வானமாமலை போன்ற நெல்லை வட்டார கம்யூனிஸ்ட் தோழர்களோடு கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இருந்தவர்.
 1970-களில் விவசாயிகளுக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைக்கு ஸ்தாபன காங்கிரúஸாடும், நாராயணசாமி நாயுடுவோடும் இணைந்து போராடினார்.
 வெறும் இலக்கியகர்த்தாவாக மட்டுமல்லாமல் இன்றுபோல் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத காலத்திலும் மக்களின் நலனுக்காகச் செயல்பட்டவர். அவரது இடைச்செவல் கிராமத்திலிருந்து வெளியூர் செல்ல பேருந்து பிடிக்க வேண்டுமென்றால் கோவில்பட்டி - திருநெல்வேலி பிரதான சாலைக்கு வந்துதான் பேருந்து பிடிக்க வேண்டும்.
 அப்படிப்பட்ட கிராமத்திலிருந்து தமிழகத்திற்கு இலக்கியகர்த்தா கிடைத்தார் என்றால் அது நமக்குப் பெருமைதான். கேரளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளை போன்று தமிழகத்தில் கி.ரா.வை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். "மக்கள் தமிழ்' என்ற பேச்சுத் தமிழோடு மொழியும் வளர வேண்டும் என்றார்.
 விளாத்திகுளம் சுவாமிகள் மட்டுமல்ல, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையுடனும் இவருக்குத் தொடர்பு உண்டு. அவரையும் அடிக்கடி சந்திப்பார். அதேபோன்று திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவும் இவரோடு நெருக்கமான நட்பில் இருந்தார். கி.ரா. இசைப்பிரியர். அது மட்டுமல்ல, உணவுப் பிரியரும் கூட.
 அவர் நடத்திவந்த "கதை சொல்லி' இதழை நான்தான் எடுத்து நடத்த வேண்டும் என்று சொன்னார். நண்பர் கழனியூரனும் நானும் சேர்ந்து ஆரம்ப காலங்களில் கதைசொல்லியை நடத்தினோம். அந்த இதழ் தற்போது இலவசமாக காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
 கி.ரா. மருத்துவமனையில் இருந்தபோது என்னிடம் சொன்னார், ""இந்த "கதை சொல்லி' குறிப்பில் உங்களைப் பற்றி நான் எழுதியுள்ளேன். இனிமேல் எனக்கு எழுத வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை''. அப்படி அவர் சொன்னபோது எனக்கு வேதனையாக இருந்தது.
 பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழர்கள் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்காக தமிழக தலைவர்கள் அத்தனை பேரும் சென்றிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு நான் செல்லும்போது என்னை நெகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார்.
 "இந்திய நாடாளுமன்றத்திற்கு நீங்கள் செல்லவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. இப்போது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி' என்றார்.
 இப்படி என் பால் அன்பு கொண்ட கி.ரா., என்னை சொந்த மகனைப் போல எண்ணி தனது சொந்த விசயங்கள் அனைத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார். இப்படியாக கி.ரா.வைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
 அவருடைய படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எல்லாத் தகுதிகளும் கொண்ட அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழங்கப்படவில்லை.
 கி.ரா.வின் 60-ஆவது ஆண்டு மணிவிழாவை மதுரை காலேஜ் ஹவுஸில் நடத்திய கவிஞர் மீரா, வட்டார வழக்கு அகராதியையும் கரிசல்காட்டு எழுத்தாளர்களுடைய தொகுப்பையும் வெளியிட்டார். அவரது எழுபதாவது பிறந்த நாளை சென்னையில் நான் நடத்தினேன்.
 பின்னர் நான் நடத்திய அவரது 85ஆவது பிறந்தநாள் விழாவில் வைகோ போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அவரது 90-ஆவது பிறந்தநாளை "தினமணி' நாளிதழோடு இணைந்து தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. 95-ஆவது பிறந்தநாள் விழாவை புதுவையில் சிறப்பாக நடத்தினோம்.
 நூறாவது பிறந்தநாள் விழாவை எழுத்தாளர் நாஞ்சில் நாடன், திரைப்பட நடிகர் சிவகுமார் போன்றோர் நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டிருந்த நிலையில் கி.ரா. நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்.
 ஆனாலும் அவர் தனது படைப்புகள் மூலம் என்றும் நம்முடன் வாழ்வார்.
 மறைந்த கி.ரா.வின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரை கௌரவிக்கும் தமிழக அரசுக்கு கரிசல் மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
 கட்டுரையாளர்:
 இணையாசிரியர், "கதை சொல்லி'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com